யெகோவா—அறிய வேண்டிய கடவுள்
வாழ்க்கையில் முக்கியமான ஏதோவொன்றை நீங்கள் இழந்துவிட்டிருக்கிறீர்களா? கடவுளைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாதிருந்தால், நிச்சயமாகவே இழந்துவிட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஏன்? பைபிளின் கடவுளை அறிந்துகொள்வது வாழ்க்கையில் பெரும் நன்மைகளைத் தருகிறது என்பதை லட்சோப லட்சம்பேர் கண்டிருக்கின்றனர். இந்த நன்மைகள் உடனடியாகவே பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன, அவை தொடர்ந்து வருங்காலத்திலும் பெருக்கெடுக்கும்.
பைபிளின் ஆசிரியராகிய யெகோவா தேவன், நாம் அவரை நன்றாக அறிந்துகொள்ளும்படி விரும்புகிறார். ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர’ வேண்டுமென சங்கீதக்காரன் எழுதினார். அவரை அறிந்துகொள்வது நம்முடைய சொந்த நன்மைக்காக என கடவுள் சொல்கிறார். ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்கிற உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] நானே.’ உன்னதமானவராகிய யெகோவா தேவனை அறிந்துகொள்வதால் நாம் எவ்வாறு பலனடைகிறோம்?—சங்கீதம் 83:17; ஏசாயா 48:17.
யெகோவாவுடன் நன்கு பரிச்சயமாகும்போது வரும் ஒரு நன்மை என்னவென்றால், அன்றாட வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க வழிநடத்துதல் கிடைக்கிறது, அதோடு எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையும் மலர்கிறது, மன நிம்மதியும் தவழ்கிறது. இவற்றைத் தவிர, இன்று உலகம் பூராவும் மக்கள் எதிர்ப்படும் மிக முக்கியமான கேள்விகளின் பேரில் வித்தியாசமான மனநிலையை வளர்த்துக்கொள்ளவும் நம்மைத் தூண்டுகிறது. என்ன கேள்விகள்?
உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமுண்டா?
தொழில்நுட்பத்தில் மனிதனுடைய வளர்ச்சி மலைக்க வைத்தாலும், ‘நான் ஏன் பிறந்தேன்? எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ என்ற அடிப்படை கேள்விகளைத்தான் இன்றும் ஆட்கள் கேட்கிறார்கள். ஒருவருக்கு திருப்தியான பதில்கள் கிடைக்கவில்லையென்றால், அவருடைய வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் இருக்காது. இந்தக் குறையை அநேகர் உணருகிறார்களா? 1990-களின் பிற்பகுதியில் ஜெர்மனியில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது, பதிலளித்தவர்களில் பாதிப்பேர் வாழ்க்கை நோக்கமற்றதாய் இருப்பதாக பல சமயங்களில் அல்லது சில சமயங்களில் உணர்ந்ததை அந்த ஆய்வு வெளிப்படுத்தியது. நீங்கள் வாழும் இடத்திலும் ஒருவேளை இதுபோன்ற நிலைமை இருக்கலாம்.
வாழ்க்கையில் நோக்கமில்லாவிட்டால், ஒருவர் தன் இலட்சியங்களைக் கட்டுவதற்கு எந்தவொரு அஸ்திவாரமும் இருக்காது. வாழ்க்கையில் வெற்றிகரமான ஒரு தொழிலையோ சொத்து சேர்ப்பதையோ தேடுவதன் மூலம் இந்தக் குறையைப் போக்க அநேகர் முயலுகிறார்கள். இருந்தாலும், வாழ்க்கை வெறும் சூன்யமாக இருப்பது அவர்களுடைய மனதை அலைக்கழிக்கலாம். வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாததால் சிலர் விரக்தி அடைந்து வாழ்க்கையையே துறக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள். ஓர் அழகிய இளம் பெண்ணின் அனுபவம் இதுதான். “ஆச்சரியத்தில் வாய்பிளக்கும் அளவுக்கு செல்வம் குவிந்திருந்தது, வசதி வாய்ப்புகளுக்கு எல்லையே இல்லை, இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான்” அவள் வளர்க்கப்பட்டாள் என இன்டர்நேஷனல் ஹெரல்டு டிரிப்யூன் கூறுகிறது. சுகபோக வாழ்க்கை வாழ்ந்தபோதிலும், தனிமை அவளை வாட்டியது, வாழ்க்கை எந்தத் திக்குமின்றி போய்க்கொண்டிருப்பதாக உணர்ந்தாள். அதனால் தூக்க மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு ஒரேயடியாக தூங்கிவிட்டாள். தனிமையிலிருந்து விடுபட அவல மரணத்தைத் தழுவிய வேறுசிலரைப் பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
வாழ்க்கையைப் பற்றிய அனைத்தையும் விஞ்ஞானம் நமக்கு கற்பிக்க முடியும் என மக்கள் உரிமை பாராட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டீ வோக்கே என்ற ஜெர்மனி வாராந்தரி இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது: “விஞ்ஞானம் உண்மையாக இருந்தாலும், ஆன்மீக விஷயத்தில் அது பலவீனமாக இருக்கிறது. பரிணாமம் இன்னும் வளர்ச்சியடையாமலேயே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கும் குவாண்டம் இயற்பியல்கூட ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிப்பதில்லை.” பல்வேறு வடிவங்களில் காணப்படும் உயிரைப் பற்றியும் உயிரைக் காப்பதற்கு நிகழும் இயற்கை சுழற்சிகளைப் பற்றியும் செயல்முறைகளைப் பற்றியும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிறைய வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால் நாம் ஏன் பிறந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விஞ்ஞானம் பதிலளிக்க முடியாது. நாம் முழுக்க முழுக்க விஞ்ஞானத்தையே நம்பியிருந்தால், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலேயே போய்விடும். அதன் விளைவு, ஸூயெடோய்ச்ச ட்ஸைடுங் என்ற பத்திரிகை அறிவித்தபடி, “வழிகாட்டுதல் அவசரத் தேவை” என்பதே.
படைப்பாளரைவிட வேறு யாரால் இத்தகைய வழிகாட்டுதலை கொடுக்க முடியும்? அவரே ஆதியில் மனிதரை இந்தப் பூமியில் வைத்தவர், ஆகவே அவர்கள் ஏன் இங்கே வாழ்கிறார்கள் என்பது அவருக்குத்தான் தெரிந்திருக்கும். இந்தப் பூமியை மனித சந்ததியால் நிரப்பி, அதைப் பண்படுத்திக் காப்பதற்கு அவர்களை யெகோவா படைத்தார் என பைபிள் விளக்குகிறது. மனிதர் தங்களுடைய எல்லா நடவடிக்கைகளிலும் நீதி, ஞானம், அன்பு போன்ற அவருடைய பண்புகளை வெளிக்காட்ட வேண்டியிருந்தது. நம்மை யெகோவா ஏன் படைத்தார் என்பதற்குரிய காரணத்தை அறியும்போது, நாம் ஏன் இங்கே வாழ்கிறோம் என்பதை தெரிந்து கொள்கிறோம்.—ஆதியாகமம் 1:26-28.
நீங்கள் என்ன செய்யலாம்?
‘நான் ஏன் பிறந்தேன்? எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?’ போன்ற கேள்விகளுக்கு திருப்திகரமான எந்தப் பதிலும் இதுவரை உங்களுக்கு கிடைத்திராவிட்டால் என்ன செய்வது? யெகோவாவை பற்றி நெருக்கமாக அறிந்துகொள்ளும்படி பைபிள் சிபாரிசு செய்கிறது. சொல்லப்போனால், “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று இயேசு கூறினார். தேவ பக்திக்கேற்ற பண்புகளை முக்கியமாக அன்பை வளர்க்கும்படியும், வரவிருக்கும் கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தில் வாழ்வதை இலக்காக வைக்கும்படியும் உங்களுக்கு உற்சாகம் அளிக்கப்படுகிறது. அப்பொழுது வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கும், அற்புதமான எதிர்கால நம்பிக்கையும் பிறக்கும். இதுவரை உங்களை அலைக்கழித்த அடிப்படை கேள்விகளுக்கு பதில்களும் பெரும்பாலும் கிடைத்துவிடும்.—யோவான் 17:3; பிரசங்கி 12:13.
அது உங்கள் மீது எப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? ஹான்ஸ் என்பவர் அதை அனுபவத்தில் கண்டார்.a சில வருடங்களுக்கு முன்பு கடவுள் மீது அவருடைய நம்பிக்கை தெளிவற்றதாகவே இருந்தது, அது அவருடைய வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. போதைப் பொருட்களை உட்கொள்வதிலும் ஒழுக்கங்கெட்ட பெண்களுடன் உல்லாசமாய் உறவாடுவதிலும் சிறுசிறு குற்றச்செயல்களிலும் மோட்டார் பைக்குகளில் சவாரி செய்வதிலுமே திளைத்திருந்தார். “ஆனால் வாழ்க்கை சூன்யமாகவே இருந்தது, எந்தத் திருப்தியும் இல்லை” என அவர் கூறுகிறார். சுமார் 25 வயதானபோது, பைபிளை கவனமாக வாசிப்பதன் மூலம் கடவுளைப் பற்றி ஹான்ஸ் நெருக்கமாக அறிந்துகொள்ள தீர்மானித்தார். யெகோவாவைப் பற்றி நெருக்கமாக அறிந்து வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்துகொண்டதும், ஹான்ஸ் தனது வாழ்க்கை பாணியை மாற்றி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டுதல் பெற்றார். கடந்த பத்து வருடங்களாக முழுநேர ஊழியம் செய்து வருகிறார். “யெகோவாவை சேவிப்பதே வாழ்க்கையில் மிகச் சிறந்த வழி. வேறெதுவும் இதற்கு ஈடாகாது. யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டதால் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடித்தேன்” என வெளிப்படையாக சொல்கிறார்.
வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி அறிந்துகொள்வது மட்டுமே பலருடைய மனதில் இருக்கும் ஒரே கேள்வி அல்ல. உலக நிலைமைகள் மோசமாகி வருவதால், மற்றொரு முக்கியமான கேள்வியும் அநேகரை அலைக்கழிக்கிறது.
ஏன் துன்பம் வந்தது?
வாழ்க்கையில் துன்பம் புயலாக தாக்கும்போது, அது ஏன் வந்தது? என்ற கேள்வியின் மீதே பாதிக்கப்பட்டவருடைய மனம் பெரும்பாலும் ஊன்றியிருக்கிறது. இந்தக் கேள்விக்கு தகுந்த பதிலை கண்டுபிடித்தால்தான் துன்பத்தை உணர்ச்சி ரீதியில் தாங்கிக்கொள்ளும் சக்தி உண்டாகும். திருப்திகரமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லையென்றால், வேதனைதான் தொடரும், மனமும் சோர்ந்துவிடும். உதாரணமாக, புரூனி என்ற தாயின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
“சில வருஷங்களுக்கு முன்பு, எனக்குப் பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டது” என நடுத்தர வயதுடைய புரூனி விளக்குகிறார். “நான் கடவுளை நம்பினேன், எனவே ஆறுதல் தேடி அங்கிருந்த பாதிரியாரை அணுகினேன். சூசானாவை கடவுள் பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டார், இப்பொழுது அங்கே அவள் ஒரு ஏஞ்ஜலாக இருக்கிறாள் என்று கூறினார். அவள் என்னைவிட்டு ஒரேயடியாக பிரிந்துவிட்டதால் என் உலகமே சுக்கு நூறானது போல உணர்ந்தேன்; அது மட்டுமல்ல, அவளை ஏன் கடவுள் எடுத்துக்கொண்டார் என நினைத்து அவரை வெறுக்க ஆரம்பித்தேன்.” புரூனியின் வேதனையும் துன்பமும் பல வருடங்களுக்கு நீடித்தது. “பின்பு யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், கடவுளை பகைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை எனக்கு பைபிளிலிருந்து காண்பித்தார். சூசானாவை யெகோவா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை, அவள் ஒரு ஏஞ்ஜலாகவும் இல்லை. அவளுக்கு ஏற்பட்ட வியாதி மனித அபூரணத்தின் விளைவுதான். சூசானா மரணத்தில் தூங்குகிறாள், யெகோவா அவளுக்கு உயிர் தந்து எழுப்புவதற்காக காத்துக் கொண்டிருக்கிறாள். அதோடு, பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழவே மனிதரை கடவுள் படைத்தார் என்பதையும் இது வெகு சீக்கிரத்தில் நிறைவேறப் போகிறது என்பதையும் கற்றுக்கொண்டேன். உண்மையில் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்ள தொடங்கியதும், நான் அவரிடம் நெருங்கிவர ஆரம்பித்தேன், அதனால் என்னுடைய வேதனையும் தணிய ஆரம்பித்தது.”—சங்கீதம் 37:29; அப்போஸ்தலர் 24:15; ரோமர் 5:12.
வாழ்க்கையில் ஏற்படும் சோகம், போர், பஞ்சம் அல்லது இயற்கை பேரழிவு போன்ற ஏதோவொரு துன்பத்தால் இன்று லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். துன்பத்திற்கு யெகோவாவை குற்றம்சாட்ட முடியாது என்பதையும், மனிதர் துன்பப்பட வேண்டுமென்பது ஒருபோதும் அவருடைய நோக்கமல்ல என்பதையும், துன்பத்திற்கு விரைவில் அவர் முடிவுகட்டுவார் என்பதையும் பைபிளிலிருந்து புரூனி கற்றுக்கொண்டதால் அவளுக்கு நிம்மதி கிடைத்தது. அக்கிரமம் அதிகரித்து வருவதுதானே இந்த ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. நாம் அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கும் மேம்பட்ட வாழ்க்கைக்கான மிகப் பெரிய மாற்றம் வெகு விரைவில் நடக்கப்போகிறது.—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:7, 8.
கடவுளை அறிந்துகொள்ளுதல்
ஹான்ஸுக்கும் புரூனிக்கும் கடவுளைப் பற்றி தெளிவற்ற கருத்துதான் முதலில் இருந்தது. அவரைப் பற்றி அதிகம் தெரியாமலேயே அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் யெகோவாவைப் பற்றி திருத்தமாக தெரிந்துகொள்வதற்கு நேரம் செலவழித்தபோது, அவர்களுடைய முயற்சி பலனளித்தது. இன்று பொதுவாக கேட்கப்படும் முக்கிய கேள்விகளுக்கு தகுந்த பதில்களைப் பெற்றார்கள். இது அவர்களுக்கு மனசமாதானத்தையும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும் தந்தது. லட்சக்கணக்கான யெகோவாவின் ஊழியர்கள் இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
யெகோவாவைப் பற்றியும் அவர் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றியும் பைபிள் சொல்கிறது, ஆகவே அதை கவனமாக படிப்பதன் மூலம் அவரை பற்றி அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். முதல் நூற்றாண்டில் இதைத்தான் சிலர் செய்தார்கள். பெரோயா என்ற கிரேக்க நாட்டில் வாழ்ந்த யூத சபை அங்கத்தினர்கள் “மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.”—அப்போஸ்தலர் 17:10, 11.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சபைகளாக கூடிவந்தார்கள். (அப்போஸ்தலர் 2:41, 42, 46; 1 கொரிந்தியர் 1:1, 2; கலாத்தியர் 1:1, 2; 2 தெசலோனிக்கேயர் 1:1) இதுவே இன்றைக்கும் உண்மையாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளும் சபையாக ஒன்றுகூடி வருகின்றனர்; ஆட்கள் யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கும் அவரை சேவிப்பதில் மகிழ்ச்சி காண்பதற்கும் உதவும் விதத்தில் விசேஷமாக அந்த சபைக் கூட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்வது உங்களுக்கு கூடுதலான நன்மையைத் தரும். பொதுவாக மனிதர்கள் தாங்கள் வணங்கிவரும் கடவுளைப் பிரதிபலிப்பது போலவே யெகோவாவின் சாட்சிகளும் யெகோவா வெளிப்படுத்துகிற நற்குணங்களை ஓரளவுக்குப் பிரதிபலிக்கிறார்கள். ஆகவே சாட்சிகளுடன் ஒன்றுகூடி வருவது யெகோவாவை இன்னும் நன்றாக அறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.—எபிரெயர் 10:24, 25.
தனிநபராக கடவுளை அறிந்துகொள்வதற்கு அதிக முயற்சி தேவைப்படுவது போல தோன்றுகிறதா? நிச்சயமாகவே முயற்சி தேவை. வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க விரும்பும் அநேக விஷயங்களிலும் இது உண்மை அல்லவா? பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் பயிற்சி பெற எடுக்கும் முயற்சியை சற்று சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, ஷான் கிளோடு கில்லி என்பவர் பிரான்சு ஒலிம்பிக்கில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் தங்க மெடல் தட்டிச் சென்றவர். சர்வதேச அளவில் ஒரு வெற்றிகரமான வீரராக போட்டியிட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் கூறுகிறார்: “நீங்கள் 10 வருடங்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்க வேண்டும், வருஷக்கணக்காக திட்டமிட வேண்டும், ஒவ்வொரு நாளும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் . . . மனோ ரீதியிலும் சரீர ரீதியிலும் வருஷம் 365 நாளும் அதற்காக உழைக்க வேண்டும்.” வெறும் 10 நிமிடங்களே நடைபெறும் ஒரு பந்தயத்திற்காகத்தான் இத்தனை நேரமும் முயற்சியும்! அப்படியென்றால், யெகோவாவை நன்கு அறிந்துகொள்வதன் மூலம் நாம் இன்னும் எத்தனை எத்தனை காரியங்களை சாதிக்க முடியும்!
அதிகமதிகமாய் நெருங்கிவரும் ஓர் உறவு
வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை யாராவது இழந்துவிட விரும்புவார்களா? யாருமே விரும்ப மாட்டார்கள். ஆகவே, உங்களுடைய வாழ்க்கைக்கு உண்மையான நோக்கம் இல்லை என உணர்ந்தால் அல்லது ஏன் துன்பம் வருகிறது என்பதற்கு விளக்கத்தைப் பெற ஏங்கினால், பைபிள் சொல்லும் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள உறுதியான தீர்மானம் எடுங்கள். அவரைப் பற்றி அறிந்துகொள்வது உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும், நித்தியத்திற்குமாக.
யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதை நாம் என்றாவது நிறுத்திவிடுவோமா? பல ஆண்டுகளாக அவருக்கு சேவை செய்து வருகிறவர்கள் அவரைப் பற்றி கற்றுக்கொண்டவற்றை எண்ணி இன்றும் மலைக்கிறார்கள், அவரைப் பற்றி புதுப் புது விஷயங்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருவதை எண்ணியும் பிரமிக்கிறார்கள். இத்தகைய காரியங்களைக் கற்றுக்கொள்வது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது, நம்மை அவரிடம் இன்னும் நெருக்கமாக கொண்டுவருகிறது. “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?” என்று கூறிய அப்போஸ்தலன் பவுலின் கருத்துக்களையே நாமும் எதிரொலிப்போமாக.—ரோமர் 11:33, 34.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
‘நான் ஏன் பிறந்தேன்? எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?’ என்ற அடிப்படை கேள்விகளைத்தான் இன்றும் ஆட்கள் கேட்கிறார்கள்
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“உண்மையில் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்ள தொடங்கியதும், நான் அவரிடம் நெருங்கிவர ஆரம்பித்தேன்”
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
“யெகோவாவை சேவிப்பதே வாழ்க்கையில் மிகச் சிறந்த வழி. வேறெதுவும் இதற்கு ஈடாகாது. யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டதால் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடித்தேன்”