எது சரி, எது தவறு எப்படி தீர்மானிப்பீர்கள்?
எது சரி, எது தவறு என்பது சம்பந்தமாக தராதரங்களை வகுக்க யாருக்கு உரிமை இருக்கிறது? இந்தக் கேள்வி மனித வரலாற்றின் தொடக்கத்திலேயே எழுப்பப்பட்ட ஒன்று. பைபிள் புத்தகமாகிய ஆதியாகமம் சொல்கிறபடி, ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தை ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்’ என்று கடவுள் குறிப்பிட்டார். (ஆதியாகமம் 2:9) அந்த மரத்தின் பழத்தை சாப்பிடக் கூடாது என முதல் மனித ஜோடியான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர் கட்டளையிட்டார். என்றபோதிலும், அவர்கள் அந்தப் பழத்தை சாப்பிட்டால் அவர்களுடைய “கண்கள் திறக்கப்படும் என்றும்” அவர்கள் “நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல்” இருப்பார்கள் என்றும் கடவுளுடைய எதிரியான பிசாசாகிய சாத்தான் சொன்னான்.—ஆதியாகமம் 2:16, 17; 3:1, 5; வெளிப்படுத்துதல் 12:9.
அந்தச் சமயத்தில் ஆதாமும் ஏவாளும் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியிருந்தது; நன்மை தீமை சம்பந்தமாக கடவுளுடைய தராதரங்களை ஏற்றுக்கொள்வதா அல்லது சொந்தத் தராதரங்களை வகுத்துக்கொள்வதா என்பதே அந்தத் தீர்மானம். (ஆதியாகமம் 3:6) கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் அந்த மரத்தின் பழத்தை சாப்பிடவே அவர்கள் தீர்மானித்தனர். இந்தச் சின்ன விஷயத்தில் அவர்கள் கீழ்ப்படியாமல் போனது எதை அர்த்தப்படுத்தியது? கடவுள் வைத்த வரம்புகளுக்கு மரியாதை காட்ட மறுத்ததை அர்த்தப்படுத்தியது; மேலும், தாங்களும் தங்கள் சந்ததியரும், எது சரி எது தவறு என்பதற்கு சொந்தமாக தராதரங்களை வகுத்துக்கொண்டு இன்னும் நன்றாக வாழ முடியும் என வலியுறுத்தியதை அர்த்தப்படுத்தியது. அப்படியானால், கடவுளுக்கு பதிலாக தாங்களாகவே தராதரங்களை வகுத்துக்கொண்ட முயற்சியில் மனிதர்கள் எந்தளவு வெற்றி கண்டிருக்கின்றனர்?
மாறுகின்ற கருத்துகள்
பிரபல தத்துவ ஞானிகளின் போதனைகளை பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்த பிறகு என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு குறிப்பிட்டது. கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸின் காலம் முதற்கொண்டு 20-வது நூற்றாண்டு வரை, “நற்குணம் என்பதையும், எது சரி எது தவறு என்பது பற்றிய தராதரத்தையும் சரியாக வகுப்பதன் பேரில் திரும்பத் திரும்ப விவாதங்கள்” எழும்பிக் கொண்டே இருந்திருக்கின்றன.
உதாரணத்திற்கு, கிரேக்க தத்துவ மேதைகளின் ஒரு தொகுதியான சோஃபிஸ்ட் என்பவர்கள் பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பெரும்புகழ் பெற்று விளங்கினர். ஒரு கருத்தை பலர் ஏற்றுக்கொண்டால் அது சரியானது, அப்படி ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது தவறானது என அவர்கள் போதித்தனர். அவர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “ஒவ்வொரு நகரத்திற்கும் தார்மீக ரீதியாக சரி/நல்லது என்று தோன்றுகிற விஷயங்கள் எதுவாயிருந்தாலும், அந்நகரில் உள்ளவர்கள் அதை அவ்வாறே ஏற்றுக்கொள்ளும் வரை, அதுவே அந்நகரத்திற்கு தார்மீக ரீதியில் சரியானது/நல்லது.” இந்தத் தராதரத்தின்படி, முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஜோடீ என்பவர் அந்தப் பணத்தை சுருட்டியிருக்க வேண்டும். ஏனெனில் அவருடைய சமுதாயத்தில், அதாவது “நகரில்” வாழும் பெரும்பாலோர் அப்படித்தான் செய்திருப்பார்கள்.
18-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தத்துவஞானி இம்மானுவேல் கான்ட் என்பவர் வித்தியாசமான கருத்தைத் தெரிவித்தார். இது தொடர்பாக இஷ்யூஸ் இன் எதிக்ஸ் என்ற பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “இம்மானுவேல் கான்ட்டும் அவரைப் போன்ற மற்றவர்களும், . . . அவரவரே தெரிவு செய்துகொள்ளும் தனிப்பட்ட உரிமையின் பேரிலேயே கவனத்தை ஒருமுகப்படுத்தினர்.” கான்ட்டின் தத்துவப்படி பார்த்தால், ஜோடீ மற்றவர்களுடைய உரிமைகளை மீறாதவரை, அவர் என்ன செய்கிறார் என்பது முற்றிலும் அவருடைய இஷ்டம். பெரும்பாலான ஆட்களுடைய தராதரங்களையே அவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
குழப்பத்திலிருந்த ஜோடீ கடைசியாக என்ன செய்தார்? அவர் மூன்றாவதாக ஒரு தெரிவைச் செய்தார். இயேசு கிறிஸ்துவின் ஒரு போதனையை கடைப்பிடித்தார். கிறிஸ்தவர்களாலும் மற்றவர்களாலும் மெச்சப்படும் தார்மீக தராதரங்களைக் கொண்ட இயேசுவின் அந்தப் போதனை இதுதான்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) 82,000 டாலர்களை அந்தப் பெண்மணியிடம் ஜோடீ ஒப்படைத்தபோது, அவருக்கு ஒரே ஆச்சரியம். ஏன் அந்தப் பணத்தை வைத்துக்கொள்ளவில்லை என்று கேட்டபோது, தான் ஒரு யெகோவாவின் சாட்சி என ஜோடீ விளக்கினார். அதோடு, “நான் வைத்துக்கொள்ள அது என்னுடைய பணம் கிடையாது” என அவர் சொன்னார். “களவு செய்யாதிருப்பாயாக” என மத்தேயு 19:18-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது முக்கியம் என்று ஜோடீ நினைத்தார்.
பிரபல கருத்து ஒரு நம்பகமான வழிகாட்டியா?
நாணயமாக நடந்துகொண்டது ஜோடீயின் முட்டாள்தனம் என சிலர் சொல்லலாம். ஆனால் பிரபலமாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்து ஒரு நம்பகமற்ற வழிகாட்டி. உதாரணத்திற்கு, பழங்காலத்திலிருந்த சில சமுதாயங்களைப் போன்று உங்கள் சமுதாயத்திலும் வசிக்கும் பெரும்பாலோர் பிள்ளைகளை பலி கொடுப்பது சரியென்று நம்பினால், நீங்களும் அதை சரியென்று ஏற்றுக்கொண்டிருப்பீர்களா? (2 இராஜாக்கள் 16:3) ஒருவேளை நரமாமிசம் சாப்பிடுவது ஒரு தார்மீகச் செயலாக கருதும் சமுதாயத்தில் நீங்கள் பிறந்திருந்தால் என்ன நினைத்திருப்பீர்கள்? நரமாமிசம் சாப்பிடுவது உண்மையில் தவறல்ல என்று நினைத்திருப்பீர்களா? ஒரு பழக்கம் பலரால் பின்பற்றப்படுவதால் அது சரியானதாக ஆகிவிடாது. இதிலிருக்கும் ஆபத்தைப் பற்றி நீண்ட காலத்திற்கு முன்பே பைபிள் இவ்வாறு எச்சரித்தது: “தீமை செய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக.”—யாத்திராகமம் 23:2.
எது சரி, எது தவறு என்பது சம்பந்தமாக பிரபலமான கருத்தை பின்பற்றாமல் ஜாக்கிரதையுடன் இருப்பதற்குரிய மற்றொரு காரணத்தை இயேசு கிறிஸ்து சுட்டிக் காண்பித்தார். சாத்தானே “இந்த உலகத்தின் அதிபதி” என்பதை அவர் அம்பலப்படுத்தினார். (யோவான் 14:30; லூக்கா 4:6) “உலகமனைத்தையும்” மோசம்போக்க சாத்தான் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறான். (வெளிப்படுத்துதல் 12:9) ஆகவே, எது பிரபலமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதன்படி மட்டுமே உங்களுடைய தராதரங்களை வகுத்துக்கொண்டால், தார்மீக ரீதியில் சாத்தானுடைய கருத்தையே ஒருவேளை நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பீர்கள், அது படுநாசத்தையே ஏற்படுத்தும்.
நம் சொந்த தீர்மானத்தை நம்பலாமா?
அப்படியானால், எது சரி எது தவறு என்பதை அவரவரே தீர்மானித்துக் கொள்ளலாமா? பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல் இரு.’ (நீதிமொழிகள் 3:5) ஏன்? ஏனெனில் எல்லா மனிதர்களும் ஓர் அடிப்படைக் குறைபாட்டை சுதந்தரித்திருப்பதால் அவர்கள் எடுக்கும் முடிவு தவறாக ஆகிவிடலாம். ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்தபோது, சுயநல துரோகியான சாத்தானின் தராதரங்களை ஏற்றுக்கொண்டு அவனையே தங்கள் ஆன்மீக தந்தையாக தேர்ந்தெடுத்தார்கள். அப்போது அவர்கள் தங்களுடைய சந்ததிக்கு ஒரு குறைபாட்டைக் கடத்தினார்கள். அதுவே வஞ்சனையான இருதயம்; எது சரி என்பதைப் புரிந்துகொள்கிற திறமை அந்த இருதயத்திற்கு இருந்தாலும் தவறான போக்கிலேயே சாய்கிறது.—ஆதியாகமம் 6:5; ரோமர் 5:12; 7:21-24.
அறவியலைப் பற்றி கலந்தாராய்கையில், என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறாக குறிப்பிடுகிறது: “தார்மீக ரீதியில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்திருந்தாலும், அதைச் செய்யாமல் தங்கள் சுய நாட்டங்களுக்கு இசைவாக செய்வதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏன் சரியானதை செய்ய வேண்டும் என்பதற்குரிய காரணத்தை அப்படிப்பட்டவர்களுக்கு விளக்குவதே மேற்கத்திய நாடுகளில் உள்ள பெரும் பிரச்சினை.” இதை பைபிள் சரியாகவே இவ்வாறு சொல்கிறது: “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது, மிகவும் கெட்டுப்போனது; அதை அறிபவன் யார்?” (எரேமியா 17:9, திருத்திய மொழிபெயர்ப்பு) வஞ்சகனாகவும் கெட்டவனாகவும் அறியப்படுகிற ஒருவனை நீங்கள் நம்புவீர்களா?
கடவுள் மீது நம்பிக்கையற்றவர்களும்கூட தார்மீக ரீதியில் செம்மையாக நடக்கவும் பயனுள்ள மற்றும் கண்ணியமான அறவியல் நெறிமுறைகளை வளர்த்துக்கொள்ளவும் திறம் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான். பெரும்பாலும் அவர்களுடைய நெறிமுறைகளில் பொதிந்திருக்கும் மிகச் சிறந்த நியதிகள் பைபிளின் தார்மீக தராதரங்களின் பிரதிபிம்பமாகவே இருக்கின்றன. அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னாலும் கடவுளுடைய ஆள்தன்மையை பிரதிபலிக்கும் இயல்பான திறமையை கொண்டுள்ளனர் என்பதையே அவர்களுடைய கருத்துகள் காட்டுகின்றன. மனிதர்கள் ஆதியில் ‘தேவ சாயலில்’ படைக்கப்பட்டார்கள் என்ற பைபிளின் கூற்றை இது மேலுமாக நிரூபிக்கிறது. (ஆதியாகமம் 1:27; அப்போஸ்தலர் 17:26-28) அப்போஸ்தலன் பவுல் சொல்கிறபடி, இவர்கள் “நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.”—ரோமர் 2:15.
சரியானதை அறிந்திருப்பது ஒரு விஷயம், ஆனால் சரியானதைச் செய்வதற்கு அவசியமான தார்மீக பலத்தைப் பெற்றிருப்பது வேறொரு விஷயம். தேவையான தார்மீக பலத்தை ஒருவர் எப்படி பெற முடியும்? ஒருவரின் செயல்கள் இருதயத்தால் தூண்டப்படுவதால் பைபிளின் நூலாசிரியர் யெகோவா தேவன் மீது அன்பை வளர்த்துக் கொள்கையில், ஒருவர் அந்தப் பலத்தை பெற முடியும்.—சங்கீதம் 25:4, 5.
சரியானதைச் செய்ய பலம் பெறுதல்
கடவுள் மீது அன்புகூருவதில் உட்பட்டுள்ள முதல் படி, அவருடைய கட்டளைகள் எவ்வளவு நியாயமானவை மற்றும் நடைமுறையானவை என்பதைக் கண்டறிவதாகும். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) உதாரணத்திற்கு, இளைஞர்கள் பைபிள் கொடுக்கும் நடைமுறை அறிவுரையைப் பயன்படுத்தி, எது சரி எது தவறு என்பதை பகுத்துணரலாம். மதுபானம் அருந்தலாமா, போதைப் பொருட்களை உட்கொள்ளலாமா, திருமணத்திற்குமுன் உடலுறவு கொள்ளலாமா போன்ற விஷயங்களைத் தீர்மானிக்க அது அவர்களுக்கு உதவும். தம்பதியர் பைபிளின் ஆலோசனையைப் பயன்படுத்தி கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்வது எப்படி என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். மேலும் பிள்ளைகளை வளர்ப்பதற்கான வழிநடத்துதல்களை பெற்றோர்களுக்கு பைபிள் தருகிறது.a பைபிளின் தார்மீக தராதரங்கள் சிறியவர்களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி பயனளிக்கின்றன; அவர்களுடைய சமூகப் பின்னணி, படிப்பு, அல்லது கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் அவை பயனளிக்கின்றன.
சத்துள்ள உணவை சாப்பிடும்போது வேலை செய்ய உங்களுக்கு எப்படி தெம்பு கிடைக்கிறதோ, அது போலவே கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும்போது அவருடைய தராதரங்களின்படி வாழும் பலத்தை நீங்கள் பெறுவீர்கள். கடவுளுடைய வார்த்தைகளை உயிர்காக்கும் உணவோடு இயேசு ஒப்பிட்டார். (மத்தேயு 4:4) ‘என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்வதே என்னுடைய போஜனமாயிருக்கிறது’ என்றும் அவர் சொன்னார். (யோவான் 4:34) கடவுளுடைய வார்த்தையிலிருந்து இயேசு போஷாக்கைப் பெற்றது, சோதனைகளை எதிர்த்து நிற்கவும் ஞானமான தீர்மானங்களை எடுக்கவும் அவருக்கு உதவியது.—லூக்கா 4:1-13.
கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் அவருடைய தராதரங்களை ஏற்றுக்கொள்வதும் ஆரம்பத்தில் உங்களுக்கு கடினமாக தோன்றியிருக்கலாம். ஆனால் இதை யோசித்துப் பாருங்கள். உங்களுடைய சிறு வயதில், உங்கள் உடல் நலத்திற்கு சிறந்த உணவின் சுவை உங்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கும். திடகாத்திரமாக இருப்பதற்கு, அதுபோன்ற சத்தான உணவு வகைகளை ருசித்துச் சாப்பிட பின்னர் பழகிக்கொள்ள வேண்டியிருந்திருக்கும். அது போலவே, கடவுளுடைய தராதரங்களை ருசிக்க பழகுவதற்கு நேரம் எடுக்கலாம். நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், அவற்றை நேசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்; ஆன்மீக ரீதியில் திடகாத்திரமாக இருப்பீர்கள். (சங்கீதம் 34:8; 2 தீமோத்தேயு 3:15-17) யெகோவா மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்வீர்கள்; ‘நன்மை செய்ய’ தூண்டப்படுவீர்கள்.—சங்கீதம் 37:3.
ஜோடீ எதிர்ப்பட்டதைப் போன்ற சூழ்நிலையையே நீங்களும் எதிர்ப்படுவீர்கள் என சொல்ல முடியாது. இருந்தாலும், ஒவ்வொரு நாளும் சிறிய விஷயங்களிலும் பெரிய விஷயங்களிலும் தார்மீக அடிப்படையில் நீங்கள் தீர்மானங்களை எடுக்கிறீர்கள். ஆகையால், பைபிள் உங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது: ‘உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.’ (நீதிமொழிகள் 3:5, 6) யெகோவா மீது சார்ந்திருக்க கற்றுக் கொள்ளும்போது இப்போதே நன்மை அடைவீர்கள். அதோடுகூட எதிர்காலத்தில் என்றும் வாழும் வாழ்க்கைக்கான வாய்ப்பையும் பெறுவீர்கள். ஏனெனில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவர் காட்டும் பாதையில் நடப்பது ஜீவனுக்கு வழிநடத்தும்.—மத்தேயு 7:13, 14.
[அடிக்குறிப்பு]
a இது போன்ற விஷயங்களிலும் மற்ற முக்கிய தலைப்புகளின் பேரிலும், பைபிள் தரும் நடைமுறை அறிவுரையை யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகங்கள் அளிக்கின்றன.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
பிரபல கருத்து பேய்களால் செல்வாக்கு செலுத்தப்படலாம்
[பக்கம் 5-ன் படங்கள்]
எது சரி, எது தவறு என்பதைப் பற்றி நீண்ட காலமாக தத்துவஞானிகள் விவாதித்திருக்கிறார்கள்
சாக்ரடீஸ்
கான்ட்
கன்பூசியஸ்
[படங்களுக்கான நன்றி]
கான்ட்: From the book The Historian’s History of the World; சாக்ரடீஸ்: From the book A General History for Colleges and High Schools; கன்பூசியஸ்: Sung Kyun Kwan University, Seoul, Korea
[பக்கம் 7-ன் படங்கள்]
எது சரி, எது தவறு என்பதைப் பகுத்துணர பைபிள் நமக்கு உதவுகிறது, அதோடு சரியானதைச் செய்யவும் அது நம்மைத் தூண்டுகிறது