கிறிஸ்துவின் போதனைகள் கடைப்பிடிக்கப்படுவது எங்கே?
இ யேசு கிறிஸ்து—இதுவரை வாழ்ந்திருக்கும் சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பது பெரும்பாலோருடைய கருத்து. அதேசமயத்தில், அவர் மட்டுமே தலைசிறந்தவர் என அநேகர் நினைக்கிறார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, அவருடைய போதனைகள் அநேகருடைய வாழ்க்கையில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. “தயவும் அன்பும் நிறைந்த சிறுசிறு செயல்களைச் செய்யும் எளியவர்களின் வாழ்க்கையிலும், பெரியபெரிய மனிதாபிமான செயல்களைச் செய்பவர்களின் வாழ்க்கையிலும்” அவை செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்று ஆங்கில எழுத்தாளரான மெல்வன் பிரக் எழுதுகிறார்.
கிறிஸ்தவ மதத்தைப் பற்றி என்ன?
கிறிஸ்தவ மதத்தைப் பற்றி என்ன? “மனிதகுலத்தின் மிகப் பெரிய ஆன்மீக வளர்ச்சிகளில் ஒன்று” என அது விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கெல்ஸோ என்பவர் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்: “கலை உலகிலும், கட்டடத் தொழில்நுட்பத்திலும், தத்துவத்திலும், இசையிலும், சமூகத் தொண்டுகளிலும் அதனுடைய ஒப்பற்ற சாதனைகள் அதன் இரண்டாயிர வருட சரித்திரம் முழுக்க நிரம்பியிருக்கின்றன.”
வேறு பலருக்கோ வித்தியாசமான அபிப்பிராயம் இருக்கிறது. ஓர் அகராதி (க்ரியா) விளக்குகிறபடி, கிறிஸ்தவம் என்பது “கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் வாழ்க்கை நெறியாகக்கொண்ட மதம்” என்பதை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், கிறிஸ்தவத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாய்ச் சொல்லிக்கொள்கிற மத அமைப்புகளின் நடத்தையைப் பார்த்துதான் அவர்கள் வெறுப்படைகிறார்கள்.
உதாரணத்திற்கு, இந்த இரண்டாவது அர்த்தத்திலேயே, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் தத்துவஞானி ஃபிரிட்ரிக் நீச்சீ என்பவர் கிறிஸ்தவ மதத்தை, “மனிதகுலத்தின் மீது ஏற்பட்டுள்ள ஒரு நித்திய கறை” என்று விவரித்தார். அதுமட்டுமல்ல, அது “மாபெரும் ஒரு சாபக்கேடு, ஆழமாக ஊடுருவியிருக்கும் மிகப் பெரிய ஒரு முறைகேடு, . . . நினைத்ததை அடைய எந்தவொரு கொடிய வழியையும், குறுக்கு வழியையும், இரகசிய வழியையும், கீழ்த்தரமான வழியையும் பயன்படுத்தத் தயங்காதது” என்றும் அவர் எழுதினார். அவரது கருத்துகள் மிதமிஞ்சியவையாக தொனிப்பது உண்மைதான், ஆனால், நியாயத்தன்மையுள்ள மற்ற அநேகரும்கூட அதேபோன்ற முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். ஏன்? கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றாமல், “ஒழுக்கங்கெட்ட நடத்தையிலும், பயங்கரக் குற்றச்செயல்களிலும், தேவதூஷணச் செயல்களிலும்” பெருமளவு ஈடுபடுகிறார்கள் என்பதாலேயே.
இன்றைய கிறிஸ்தவர்களோடு கிறிஸ்து இருக்கிறாரா?
எனவே, “கிறிஸ்து இன்னமும் கிறிஸ்தவர்களோடு இருக்கிறாரா?” எனக் கேட்பதில் தவறேதும் இல்லை. அதற்குச் சிலர், “அதிலென்ன சந்தேகம்!” என உடனடியாக பதிலளித்துவிட்டு, “தம்மைப் பின்பற்றுபவர்களோடு ‘உலகத்தின் முடிவுபரியந்தம்’ இருக்கப்போவதாக அவர் வாக்குறுதி அளிக்கவில்லையா?” என்று கேட்பார்கள். (மத்தேயு 28:20) ஆம், இயேசு அப்படித்தான் வாக்குறுதி அளித்தார். ஆனால், தம்மைப் பின்பற்றுவதாய் சொல்லிக்கொண்டு இஷ்டப்படி நடந்துகொள்ளும் ஆட்களுடன் இருக்கப்போவதாக அவர் சொன்னாரா?
இயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்கள் சிலர், தாங்கள் எப்படி நடந்துகொண்டாலும் கடவுள் தங்களோடு இருந்ததாக நினைத்தார்கள். இஸ்ரவேலரை ஒரு விசேஷ நோக்கத்திற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்திருந்ததால், அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என சில மதத் தலைவர்கள் நம்பினார்கள். (மீகா 3:11) ஆனால் காலப்போக்கில், கடவுளுடைய சட்டங்களையும் தராதரங்களையும் இஸ்ரவேலர் ஒரேயடியாய் ஒதுக்கித்தள்ளினார்கள். விளைவு? “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என நேரடியாகவே இயேசு கிறிஸ்து அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 23:38) அந்த மத அமைப்பு முழுவதும் கடவுளுடைய தயவை இழந்துபோனது. கடவுள் அதைப் புறக்கணித்து, பொ.ச. 70-ல் அதன் தலைநகரான எருசலேமையும் அதிலிருந்த ஆலயத்தையும் அழித்துப்போடும்படி ரோமப் படைகளை அனுமதித்தார்.
அதுபோன்ற சம்பவம் கிறிஸ்தவ மதத்துக்கும் நடக்குமா? தம்மைப் பின்பற்றுபவர்களோடு “உலகத்தின் முடிவுபரியந்தம்” தாம் இருக்கப்போவதாய் வாக்குறுதி அளித்த இயேசு, அதற்காக என்ன நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்தார்? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
[பக்கம் 2, 3-ன் படங்கள்]
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உலகெங்கும் கோடிக்கணக்கானோருடைய வாழ்க்கையில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன