இதயம் ஏங்கும் சந்திப்பு
என் இதயம் மிக முக்கியமான ஒரு சந்திப்புக்காக ஏங்கித் தவிக்கிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளம் தாயான நான் யாருடைய வரவுக்காக இப்படி ஏங்கிக் காத்திருக்கிறேன் என்பதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.
எப்போதும் போர்க்களமாக இருக்கும் குடும்பத்தில்தான் நான் வளர்ந்தேன். என்னுடைய தம்பி நான்கு வயதில் ஒரு கோர விபத்தில் பலியானபோது எங்கள் குடும்பம் சோக வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், என்னுடைய அப்பாவின் கெட்ட பழக்கவழக்கங்களால் மணவாழ்வில் சந்தோஷம் என்று பெரியதாக எதையும் என் அம்மா அனுபவிக்கவில்லை. இந்தப் பிரச்சினைகளெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், எனக்கும் என் அண்ணனுக்கும் நல்ல பழக்கவழக்கங்களை என் அம்மா தவறாமல் சொல்லித் தந்தார்.
காலப்போக்கில், என் அண்ணன் திருமணம் செய்துகொண்டார், நானும் திருமணம் செய்துகொண்டேன். அதன் பிறகு சீக்கிரத்திலேயே, என் அம்மாவிற்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது கடைசியில் அவருடைய உயிரையே குடித்தது. ஆனால், அவர் இறப்பதற்கு முன் ஒரு பொக்கிஷத்தை எங்களுக்குச் சொத்தாகக் கொடுத்துச் சென்றார்.
அம்மாவுக்குத் தெரிந்த ஒருவர் பைபிளிலிருந்து உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப்பற்றி அவரிடம் பேசியிருந்தார்; அதன் பிறகு அம்மா பைபிள் படிக்க சம்மதித்தார். அவருடைய கடைசி காலத்தில் பைபிள் செய்தி அவருக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தை அளித்தது.
பைபிள் படித்ததால் அவரிடம் ஏற்பட்ட நல்ல மாற்றத்தைப் பார்த்து, நானும் என் அண்ணனும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தோம். எனக்கு இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முழுக்காட்டுதல் பெற்று யெகோவாவின் சாட்சியானேன். அந்த அழகான குழந்தைக்கு லூசீயா என்று பெயர் வைத்தோம்.
நான் முழுக்காட்டுதல் எடுத்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என்றென்றும் யெகோவாவுக்குச் சேவை செய்ய நான் ஒப்புக்கொடுத்திருந்ததால், அன்றிலிருந்து நான் அவருக்குச் சொந்தமானேன் என்பது அதற்கு முதல் காரணம். என் மத நம்பிக்கைகளைப்பற்றி என் செல்ல மகனுக்கும் மகளுக்கும் சொல்லிக்கொடுக்க முடிந்தது இரண்டாவது காரணம்.
என்றாலும், பிள்ளைகளுக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கும் சந்தோஷம் எனக்கு நெடுநாள் நீடிக்கவில்லை. ஏனெனில், லூசீயா நான்கு வயது பிள்ளையாக இருந்தபோது, அடிக்கடி வயிற்றுவலி தாங்க முடியாமல் துடிக்க ஆரம்பித்தாள். ஏராளமான பரிசோதனைகளுக்குப் பின்பு, அவளுடைய கல்லீரலை ஒட்டி ஆரஞ்சு பழ அளவில் ஒரு கட்டி இருப்பதாக மருத்துவர் கூறினார். நியூரோபிளாஸ்டோமா என்ற புற்றுநோய்க் கட்டி லூசீயாவுக்கு இருப்பதாக மருத்துவர் விளக்கினார்; இந்த வகை புற்றுநோய்க் கட்டி வேகமாய் வளரும். அவள் புற்றுநோயை எதிர்த்து ஏழு வருடங்கள் போராடினாள், அந்தச் சமயத்தில் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருக்க நேர்ந்தது.
உதவும் இதயம்
நான் துவண்டு போயிருந்த இந்த வருடங்களில் லூசீயா அடிக்கடி என்னை அன்பாகக் கட்டியணைத்து, முத்தம் கொடுத்து ஊக்கப்படுத்தினாள். நோயை அவள் பொறுமையாகச் சமாளித்த விதத்தைப் பார்த்து மருத்துவமனை பணியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள். நர்ஸ்களுக்கு உதவி செய்ய எப்போதும் அவள் ஓடோடி வருவாள். பக்கத்து அறைகளிலுள்ள குழந்தைகளுக்கு தயிர், பழச்சாறு போன்றவற்றைக் கொடுக்க உதவுவாள். வெள்ளை கோட் ஒன்றையும், “குட்டி நர்ஸ்” என்று எழுதப்பட்ட அடையாள அட்டையையும்கூட அங்கிருந்த நர்ஸ்கள் லூசீயாவுக்குக் கொடுத்திருந்தார்கள்.
“லூசீயாவை என்னால் மறக்கவே முடியாது, படு சுட்டி, கெட்டிக்காரி, படம் வரைவதென்றால் அவளுக்குக் கொள்ளைப் பிரியம். துருதுருவென வளைய வருவாள், சின்ன வயதானாலும் யோசித்துச் செயல்படுவாள்” என்று மருத்துமனையில் பணியாற்றும் ஒருவர் கூறுகிறார்.
கடவுளுடைய வார்த்தை லூசீயாவுக்கு பலத்தையும் அமைதியையும் தந்தது. (எபி. 4:12) புதிய உலகத்தில், “சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது” என்ற கடவுளுடைய வாக்குறுதியை அவள் முழுக்க முழுக்க நம்பினாள். (வெளி. 21:4, பொது மொழிபெயர்ப்பு) மற்றவர்களிடம் கரிசனை காட்டினாள்; பைபிள் செய்தியைச் சொல்ல எப்பொழுதும் தயாராய் இருந்தாள். உயிர்த்தெழுதலில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. எனவே, நோய் குணமாக வாய்ப்பில்லாத சூழ்நிலையிலும், அமைதியாக, சிரித்த முகத்துடன் இருந்தாள். (ஏசா. 25:8) சாகும்வரை அதேபோல்தான் இருந்தாள்.
அவள் என்னைவிட்டுப் பிரிந்த அந்த நாளில்தான், என் இதயம் ஏங்கும் அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துகொண்டேன். அன்று லூசீயாவால் கண்களைத் திறக்க முடியவில்லை. அவளுடைய அப்பா அவளுடைய ஒரு கையைப் பிடித்துக்கொண்டிருக்க நான் மற்றொரு கையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். “கவலைப்படாதே, நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன். மெதுவாக மூச்சுவிடு. நீ தூங்கி எழுந்திருக்கும்போது ஆரோக்கியமாய் இருப்பாய். அதன் பிறகு உனக்கு வலியே இருக்காது, நான் உன்னோடு இருப்பேன்” என்று மெல்லிய குரலில் அவளிடம் சொன்னேன்.
அவளைச் சந்திப்பதற்குக் கொடுத்த வாக்கை நான் கட்டாயம் காப்பாற்ற வேண்டும். காத்திருப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் பொறுமையோடு, யெகோவாமீது நம்பிக்கை வைத்து, கடைசிவரை அவருக்கு உத்தமமாய் இருந்தால், உயிர்த்தெழுதலில் அவள் வரும்போது நான் அங்கே இருப்பேன் என்பதும் எனக்குத் தெரியும்.
லூசீயா விட்டுச்சென்ற சொத்து
லூசீயா தைரியமாக இருந்ததைப் பார்த்ததும், சபையார் கொடுத்த அருமையான ஆதரவும் சத்தியத்தில் இல்லாத என்னுடைய கணவரை அடியோடு மாற்றியது. அவள் இறந்த அன்று, தன்னுடைய வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்ததைப்பற்றிக் கூறினார். சில வாரங்களுக்குப் பிறகு, சபையிலுள்ள மூப்பர் ஒருவரிடம் தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். சீக்கிரத்தில், என் கணவர் எல்லா கூட்டங்களுக்கும் வரத்தொடங்கினார். யெகோவாவின் உதவியால், மீள முடியாதிருந்த புகைப்பழக்கத்திலிருந்து மீண்டார்.
லூசீயாவை இழந்த துக்கம் இன்னும் முழுமையாய் மறையவில்லை; என்றாலும், அவள் விட்டுச்சென்ற சொத்திற்காக யெகோவாவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். உயிர்த்தெழுதல் நம்பிக்கையால் நானும் என் கணவரும் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்கிறோம்; துருதுருவெனவிருக்கும் பெரிய கண்களோடு, சிரிக்கும்போது குழி விழும் கன்னங்களோடு, லூசீயாவை மீண்டும் சந்திக்கும் அந்தத் தருணத்தை நாங்கள் அடிக்கடி கற்பனை செய்து பார்க்கிறோம்.
என் மகளின் சோக மரணம், அயலகத்தார் ஒருவரையும் மாற்றியது. ஒருநாள் சனிக்கிழமை காலையில் மழை பெய்துகொண்டிருக்கும்போது, பெண்மணி ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவருடைய மகனும் லூசீயா படித்த அதே பள்ளியில்தான் படித்தான். அவருடைய இன்னொரு மகன் 11 வயதில் இதே நோயால் இறந்துபோயிருந்தான். லூசீயாவுக்கு நேர்ந்ததை அவர் அறிந்தபோது எங்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து எங்களைக் காண வந்தார். லூசீயாவின் இழப்பை எவ்வாறு சமாளிக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள அவர் விரும்பினார்; இதுபோன்று பிள்ளைகளைப் பறிகொடுத்துத் தவிக்கும் தாய்மார்களுக்கு ஆறுதல் அளிக்க சுய உதவிக் குழுவை அமைக்கலாமென்று அவர் ஆலோசனை சொன்னார்.
பைபிளிலுள்ள ஒரு வாக்குறுதி, எந்த மனிதரும் அளிக்க முடியாத மிகப் பெரிய ஆறுதலை எனக்கு அளித்திருப்பதாக அவரிடம் சொன்னேன். யோவான் 5:28, 29-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை நான் வாசிக்க வாசிக்க அவருடைய கண்களில் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது. என்னோடு சேர்ந்து பைபிள் படிக்க அவர் சம்மதித்தார், ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை’ உணர ஆரம்பித்தார். (பிலி. 4:7) பைபிள் படிப்பின்போது, அடிக்கடி இடையே சற்று நிறுத்திவிட்டு, புதிய உலகத்தில் நாங்கள் இருப்பது போலவும், உயிர்த்தெழுந்து வரும் எங்கள் பிரியமான செல்லங்களை வரவேற்று ஆரத்தழுவுவது போலவும் கற்பனை செய்வோம்.
ஆம், லூசீயா கொஞ்ச நாட்களே வாழ்ந்தாலும் அழியாத சொத்தை எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறாள். அவளுடைய விசுவாசம், கடவுளுக்குச் சேவை செய்வதில் எங்கள் குடும்பத்தை ஒன்றிணைத்திருக்கிறது; அதோடு, கடைசிவரை விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டுமென்ற என் தீர்மானத்தையும் பலப்படுத்தியிருக்கிறது. அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்து, உயிர்த்தெழுதலில் அவர்களைக் காணத் துடிக்கும் நம் அனைவருடைய இதயமும் அப்படிப்பட்ட சந்திப்பிற்காக ஏங்கிக் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
[பக்கம் 20-ன் படம்]
லூசீயா வரைந்த பரதீஸ்