இயேசுவைப் போலவே தைரியமாகப் பிரசங்கியுங்கள்
‘நற்செய்தியை உங்களுக்குச் சொல்வதற்காக . . . தைரியத்தை வரவழைத்துக்கொண்டோம்.’ —1 தெ. 2:2.
1. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி மனதிற்கு ஏன் இனிமையாக இருக்கிறது?
நல்ல செய்திகளைக் கேட்கும்போது மனதிற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அப்படிப்பட்ட செய்திகளில் மிகச் சிறந்த செய்தி எது தெரியுமா? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்திதான்! அந்த அரசாங்கத்தில் துக்கம், துன்பம், துயரம், நோய், மரணம் என எதுவுமே மக்களுக்கு இருக்கப்போவதில்லை. இது உண்மையிலேயே நற்செய்தி, அல்லவா? இயேசு அறிவித்த இந்த நற்செய்தி மக்களை முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிறது, கடவுளுடைய நோக்கத்தைத் தெரியப்படுத்துகிறது, அவரோடு இனிய உறவுக்குள் வருவதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கிறது. இப்பேர்ப்பட்ட அருமையான நற்செய்தியை எல்லாருமே வரவேற்பார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அதுதான் இல்லை!
2. “பிரிவினையை உண்டாக்க வந்தேன்” என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? விளக்குங்கள்.
2 இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு சொன்னார்: “பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையை உண்டாக்க வந்தேன். தகப்பனுக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன். சொல்லப்போனால், ஒரு மனிதனுக்கு அவனுடைய வீட்டாரே எதிரிகளாக இருப்பார்கள்.” (மத். 10:34-36) இதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்; பெரும்பாலோர் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அதை உதறித்தள்ளுகிறார்கள். அதை அறிவிக்கிறவர்களைச் சிலர் எதிரிகள்போல் நடத்துகிறார்கள், சொந்தக் குடும்பத்தாராக இருந்தாலும் அப்படி நடத்துகிறார்கள்.
3. பிரசங்க வேலையில் ஈடுபட நமக்கு என்ன தேவைப்படுகிறது?
3 அன்று இயேசு அறிவித்த அதே சத்தியங்களை இன்று நாம் அறிவித்து வருகிறோம்; அவற்றைக் கேட்டு, மக்கள் அன்று எப்படி அவரை நடத்தினார்களோ அப்படியே இன்றும் நம்மை நடத்துகிறார்கள். இதை நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும். ஏனென்றால், “அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் அல்ல. அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்” என்று இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். (யோவா. 15:20) பல நாடுகளில் மக்கள் நம்மை நேரடியாகத் துன்புறுத்தாவிட்டாலும் நம்மை ஏளனமாகப் பார்க்கிறார்கள், அதோடு நம் செய்தியை அசட்டை செய்கிறார்கள். ஆகவே, பயப்படாமல் நற்செய்தியைப் பிரசங்கித்துவர நமக்கு விசுவாசமும் தைரியமும் தேவைப்படுகிறது.—2 பேதுரு 1:5-8-ஐ வாசியுங்கள்.
4. பிரசங்கிப்பதற்கு பவுல் ஏன் ‘தைரியத்தை வரவழைத்துக்கொள்ள’ வேண்டியிருந்தது?
4 ஊழியத்தில் கலந்துகொள்வது சில சமயம் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம், அல்லது ஊழியத்தின் சில அம்சங்களில் ஈடுபட நீங்கள் பயப்படலாம். கவலைப்படாதீர்கள், அநேக சகோதரர்களும் உங்களைப் போலவே உணருகிறார்கள். அப்போஸ்தலன் பவுல் தைரியத்தோடும் துணிச்சலோடும் பிரசங்கித்தார்; கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களை அவர் மிக நன்றாக அறிந்திருந்தார். என்றபோதிலும், பிரசங்கிப்பது அவருக்கும்கூடச் சில சமயம் சவாலாக இருந்தது. தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “முன்பு பிலிப்பியில் நாங்கள் துன்பப்பட்டதையும், அவமதிக்கப்பட்டதையும், மிகுந்த போராட்டத்தின் மத்தியில் நம் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்வதற்காக அவருடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டதையும் அறிந்திருக்கிறீர்கள்.” (1 தெ. 2:2) பிலிப்பியில், பவுலையும் அவருடைய தோழரான சீலாவையும் அதிகாரிகள் தடியால் அடித்திருந்தார்கள், சிறையில் அடைத்திருந்தார்கள், கால்களைத் தொழுமரங்களில் பூட்டி வைத்திருந்தார்கள். (அப். 16:16-24) ஆனாலும், அவர்கள் இருவரும் ‘தைரியத்தை வரவழைத்துக்கொண்டு’ தொடர்ந்து பிரசங்கித்தார்கள். நாமும் அவர்களைப் போலவே எப்படித் தைரியத்தை வரவழைத்துக்கொள்ளலாம்? பதிலைத் தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவைப் பற்றித் தைரியமாகப் பேச பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களுக்கு எது உதவியது என்பதைச் சிந்திக்கலாம், அவரைப் போலவே நாம் எப்படி நடந்துகொள்வது என்பதையும் சிந்திக்கலாம்.
பகையைச் சந்திப்பதற்குத் தைரியம் தேவை
5. யெகோவாவின் உண்மை ஊழியர்களுக்கு ஏன் தைரியம் எப்போதுமே தேவைப்பட்டிருக்கிறது?
5 தைரியம் காட்டுவதற்கும் துணிந்து செயல்படுவதற்கும் தலைசிறந்த உதாரணம் இயேசு கிறிஸ்து. என்றாலும், மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து யெகோவாவின் உண்மை ஊழியர்கள் எல்லாருக்குமே தைரியம் தேவைப்பட்டிருக்கிறது. ஏன்? தம்மைச் சேவிப்பவர்களுக்கும் சாத்தானைச் சேவிப்பவர்களுக்கும் இடையே பகை இருக்குமென்று ஏதேனில் கலகம் வெடித்த சமயத்திலேயே யெகோவா முன்னறிவித்தார். (ஆதி. 3:15) நீதிமானாய் இருந்த ஆபேலை அவருடைய சகோதரன் கொலை செய்தபோதே அந்தப் பகை வெட்டவெளிச்சமானது. பெருவெள்ளம் வருவதற்குமுன் வாழ்ந்த மற்றொரு உண்மையுள்ள மனிதனான ஏனோக்கும்கூட மக்களின் பகைக்கு ஆளானார். தேவபக்தியற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்காகக் கடவுள் லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு வருவார் என்று ஏனோக்கு தீர்க்கதரிசனம் சொன்னார். (யூ. 14, 15) ஆனால், அவர் சொன்ன செய்தி அநேகருக்குப் பிடிக்கவில்லை. யெகோவா மட்டும் தலையிட்டு ஏனோக்கின் வாழ்நாளைக் குறைத்திருக்காவிட்டால், மக்களின் கையில் சிக்கி அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பார். ஏனோக்கிற்கு எப்பேர்ப்பட்ட தைரியம்!—ஆதி. 5:21-24.
6. பார்வோனிடம் பேச மோசேக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது?
6 மோசேயின் தைரியத்தையும் சற்று யோசித்துப் பாருங்கள்; பார்வோனிடம் நேருக்கு நேர் பேச வேண்டுமென்றால் அவருக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்! அதுவும், மக்கள் பார்வோனைக் கடவுளுடைய பிரதிநிதியாக மட்டுமே கருதாமல், ரா என்ற சூரியக் கடவுளின் மகனாக, ஒரு கடவுளாகவே கருதினார்கள். மற்ற பார்வோன்களைப் போல, அவனும் தன் உருவத்தையே ஆராதனை செய்திருப்பான். அவன் அதிகாரம் படைத்தவனாக, ஆணவம் பிடித்தவனாக, பிடிவாதக்காரனாக இருந்தான்; அதனால், அவன் வைத்ததுதான் சட்டம் என்ற சூழ்நிலை அன்று நிலவியது. இப்படிப்பட்ட ஒரு ராஜா எங்கே, ஒரு சாதாரண மேய்ப்பனான மோசே எங்கே! பார்வோனின் அழைப்பு இல்லாமலேயே மோசே திரும்பத் திரும்ப அவனுடைய முகத்திற்குமுன் போய் நிற்க வேண்டியிருந்தது. அதுவும், அதிர்ச்சியூட்டும் வாதைகள் பற்றிய செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், பார்வோனிடம் என்ன கோரிக்கையை அவர் முன்வைத்தார்? பார்வோனின் அடிமைகளாய் இருந்த பல லட்சக்கணக்கானோரை நாட்டிலிருந்து அழைத்துக்கொண்டுபோக அனுமதி கேட்டார்! இப்படிக் கேட்க மோசேக்குத் தைரியம் தேவைப்பட்டிருக்குமா? நிச்சயம் தேவைப்பட்டிருக்கும்!—எண். 12:3; எபி. 11:27.
7, 8. (அ) பூர்வகால உண்மை ஊழியர்கள் என்னென்ன கஷ்டங்களைச் சந்தித்தார்கள்? (ஆ) மெய் வணக்கத்தின் பக்கம் தைரியமாய் நிற்க எது அவர்களுக்கு உதவியது?
7 மோசேயின் காலத்திற்குப் பின்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளும் கடவுளுடைய உண்மை ஊழியர்களும்கூட மெய் வணக்கத்தின் பக்கம் தொடர்ந்து தைரியமாய் நின்றார்கள். சாத்தானின் உலகம் அவர்களை மோசமாக நடத்தியது. அவர்கள் “கல்லெறிபட்டார்கள், சோதிக்கப்பட்டார்கள், அறுத்துக் கொல்லப்பட்டார்கள், வாளால் வெட்டப்பட்டார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் அணிந்திருந்தார்கள், வறுமையில் வாடினார்கள், உபத்திரவத்தை அனுபவித்தார்கள், கொடுமைக்கு ஆளானார்கள்” என்றெல்லாம் பவுல் சொன்னார். (எபி. 11:37) ஆனாலும், அந்த ஊழியர்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்றார்கள்; அந்தக் கஷ்டங்களையெல்லாம் அவர்களால் எப்படிச் சகித்துநிற்க முடிந்தது? ஆபேல், ஆபிரகாம், சாராள் போன்றோருக்கு எது உதவியது என்று அப்போஸ்தலன் பவுல் சில வசனங்களுக்குமுன் குறிப்பிட்டார்: “வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை அவர்கள் பார்க்கவில்லை என்றாலும், [விசுவாசத்தினால்] தொலைவிலிருந்து அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்.” (எபி. 11:13) ஆகவே, மெய் வணக்கத்தின் பக்கம் தைரியமாய் நின்ற எலியா, எரேமியா போன்ற தீர்க்கதரிசிகளும் பூர்வகால உண்மை ஊழியர்களும் யெகோவாவின் வாக்குறுதிகளில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்ததால்தான் அவர்களாலும் சகித்துநிற்க முடிந்தது.—தீத். 1:3.
8 அவர்கள் எல்லாருமே ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஆவலோடு காத்திருந்தார்கள். ஏனென்றால், பூமியில் அவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு, இயேசு கிறிஸ்து மற்றும் 1,44,000 பேரின் குருத்துவச் சேவை மூலம் “அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு” பரிபூரண நிலையை அடைவார்கள். (ரோ. 8:21) யெகோவாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் எரேமியாவுக்கும், அவரைப் போன்ற ஊழியர்களுக்கும் தைரியமூட்டின; உதாரணமாக எரேமியாவிடம், ‘அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்’ என்று யெகோவா சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவர் தைரியமடைந்தார். (எரே. 1:19) அவ்வாறே, எதிர்காலத்தைக் குறித்து யெகோவா அளித்திருக்கிற வாக்குறுதிகளையும், ஆன்மீகப் பாதுகாப்பை அளிப்பதாகச் சொல்லியிருக்கிற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் நினைத்துப் பார்க்கும்போது நாமும் இன்று பலப்படுத்தப்படுகிறோம்.—நீதி. 2:7; 2 கொரிந்தியர் 4:17, 18-ஐ வாசியுங்கள்.
தைரியமாகப் பிரசங்கிக்க இயேசுவைத் தூண்டியது அன்பே
9, 10. பின்வரும் சந்தர்ப்பங்களில் இயேசு எவ்விதத்தில் தைரியத்தைக் காட்டினார்? (அ) மதத் தலைவர்களுக்குமுன் (ஆ) போர்ச் சேவகர்களுக்குமுன் (இ) தலைமைக் குருவுக்குமுன் (ஈ) பிலாத்துவுக்குமுன்
9 நமக்குச் சிறந்த முன்மாதிரியாய் இருக்கும் இயேசு பல விதங்களில் தைரியத்தைக் காட்டினார். உதாரணத்திற்கு, பலம் படைத்தவர்கள் அவரை எதிர்த்தபோதிலும், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்தியை அவர் பூசிமெழுகாமல் உள்ளதை உள்ளபடியே சொன்னார். நீதிமான்களாக வேஷம் போட்டுக்கொண்டு பொய்ப் போதனைகளைப் பரப்பிய மதத் தலைவர்களின் முகமூடியைக் கிழித்தார். சுற்றி வளைக்காமல் நேரடியாக அவர்களைக் கண்டித்தார். ஒரு சமயம் அவர்களிடம், “வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருக்கிறீர்கள்; அவை வெளியே அழகாக காட்சி அளிக்கின்றன, உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளாலும் எல்லா விதமான அசுத்தங்களாலும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே, நீங்கள் மனிதர்களுக்குமுன் நீதிமான்களாகக் காட்சி அளிக்கிறீர்கள், உள்ளேயோ போலித்தனமும் அக்கிரமமும் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள்” என்று சொன்னார்.—மத். 23:27, 28.
10 இயேசு கெத்செமனே தோட்டத்தில் இருந்தபோது, அவரைப் பிடிக்க வந்த போர்ச் சேவகர்களிடம், தாமே அவர்கள் தேடுகிற நபர் எனத் தைரியமாகச் சொன்னார். (யோவா. 18:3-8) பின்பு அவர் நியாயசங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தலைமைக் குருவால் விசாரிக்கப்பட்டார். மரணதண்டனை அளிப்பதற்கு அவர் வகைதேடுகிறார் என்று இயேசு நன்கு அறிந்தபோதிலும் தாமே கிறிஸ்துவென்றும், கடவுளுடைய மகன் என்றும் துளிகூடப் பயப்படாமல் சொன்னார். அதோடு, “மனிதகுமாரன் வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும் வானத்து மேகங்களுடன் வருவதையும்” அவர்கள் பார்ப்பார்கள் என்றும் சொன்னார். (மாற். 14:53, 57-65) சிறிது நேரத்திற்குள் கைகள் கட்டப்பட்டு பிலாத்துவுக்குமுன் அழைத்துச் செல்லப்பட்டார். தம்மை விடுதலை செய்ய பிலாத்துவுக்கு அதிகாரம் இருக்கிறது என்று தெரிந்திருந்தும் தம்மீது குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. (மாற். 15:1-5) இதற்கெல்லாம் எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்!
11. தைரியத்தோடு அன்பு எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது?
11 ஆனால் பிலாத்துவிடம் இயேசு, “சத்தியத்திற்குச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தேன்” என்று சொன்னார். (யோவா. 18:37) நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை இயேசுவுக்கு யெகோவா கொடுத்தார்; இயேசுவும் அதைப் பிரியத்தோடு செய்தார், ஏனென்றால் தம் பரம தகப்பன்மீது அவருக்கு அன்பு இருந்தது. (லூக். 4:18, 19) மக்கள் மீதும் அன்பு இருந்தது. அந்த மக்களின் பிரச்சினைகளையெல்லாம் அவர் அறிந்திருந்தார். அவரைப் போலவே, நமக்கும்கூட கடவுள் மீதும், சக மனிதர் மீதும் அன்பு இருப்பதால்தான் எதற்கும் அஞ்சாமல் தைரியமாகப் பிரசங்க வேலையில் ஈடுபடுகிறோம்.—மத். 22:36-40.
தைரியமாகப் பிரசங்கிக்க கடவுளுடைய சக்தியின் உதவி
12. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏன் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்கள்?
12 இயேசு இறந்து சில வாரங்களுக்குப்பின், பெந்தெகொஸ்தே பண்டிகையைக் கொண்டாட பல நாடுகளிலிருந்து ஆட்கள் எருசலேமுக்கு வந்திருந்தார்கள்; யூதர்கள், யூத மதத்திற்கு மாறியவர்கள் என அவர்களில் சுமார் 3,000 பேர் ஒரே நாளில் ஞானஸ்நானம் பெற்றார்கள்! இப்படி ஏராளமான சீடர்களை யெகோவா கூட்டிச்சேர்த்ததைப் பார்த்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்கள். எருசலேமெங்கும் இதே பேச்சாக இருந்தது. “அப்போஸ்தலர்கள் மூலமாகப் பல அற்புதங்களும் அடையாளங்களும் நிகழ ஆரம்பித்தன; அனைவருக்கும் பயம் உண்டானது” என்று பைபிள் சொல்கிறது.—அப். 2:41, 43.
13. சகோதரர்கள் தைரியத்திற்காக ஏன் மன்றாடினார்கள், அதன் பலன் என்ன?
13 இவற்றைக் கண்டு கொதித்தெழுந்த மதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் கைதுசெய்து மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்; பின்பு, இயேசுவைப் பற்றிப் பேசவே கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவ்விருவரும் விடுதலையான பின்பு, நடந்ததையெல்லாம் சகோதரர்களிடம் சொன்னார்கள்; இதைக் கேட்டதும் அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து, “யெகோவாவே, . . . உங்கள் வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு அருள்புரியுங்கள்” என்று மன்றாடினார்கள். அதன் பலன்? “அவர்கள் அனைவரும் கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டு அவருடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச ஆரம்பித்தார்கள்.”—அப். 4:24-31.
14. பிரசங்க வேலையில் கடவுளுடைய சக்தி நமக்கு எப்படி உதவுகிறது?
14 ஆம், யெகோவாவின் வார்த்தையைக் குறித்துத் தைரியமாகப் பேச அவருடைய வலிமைவாய்ந்த சக்தியே சீடர்களுக்கு உதவியது. நாம் தைரியமாகச் சத்தியத்தை மற்றவர்களிடம் சொல்வதற்கு, அதுவும் அதை எதிர்ப்பவர்களிடம் சொல்வதற்கு, நம் சொந்த பலத்தையே சார்ந்திருக்க முடியாது. கடவுளுடைய சக்திக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும்; அப்படிச் செய்யும்போது அதை அவர் நிச்சயம் நமக்குத் தருவார். ஆகவே, யெகோவாவின் உதவியோடு எப்பேர்ப்பட்ட எதிர்ப்பையும் நம்மால்கூட தைரியமாகச் சந்திக்க முடியும்.—சங்கீதம் 138:3-ஐ வாசியுங்கள்.
தைரியமாகப் பிரசங்கிக்கும் இன்றைய கிறிஸ்தவர்கள்
15. சத்தியத்தின் காரணமாக மக்களிடையே இன்று எவ்வாறு பிரிவினை ஏற்பட்டுவருகிறது?
15 அன்று போலவே இன்றும், சத்தியத்தின் காரணமாக மக்களிடையே பிரிவினை ஏற்பட்டுவருகிறது. நாம் சொல்கிற செய்தியைச் சிலர் மனதார ஏற்றுக்கொள்கிறார்கள்; சிலர், அதை ஏற்றுக்கொள்வதும் இல்லை புரிந்துகொள்வதும் இல்லை. இன்னும் சிலர், நம்மைக் குறைகூறுகிறார்கள், கேலிகிண்டல் செய்கிறார்கள், இயேசு சொன்னதைப் போல நம்மை வெறுக்கவும் செய்கிறார்கள். (மத். 10:22) சில சமயங்களில், மீடியா மூலம் நம்மைப் பற்றிப் பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள், இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறார்கள். (சங். 109:1-3) என்றாலும், யெகோவாவின் மக்கள் உலகெங்கும் நற்செய்தியைத் தைரியமாக அறிவித்து வருகிறார்கள்.
16. நற்செய்தியை நாம் தைரியமாக அறிவித்து வந்தால், மக்களின் மனோபாவம் மாறலாம் என்பதற்கு ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
16 நற்செய்தியை நாம் தைரியமாக அறிவித்து வந்தால், மக்களின் மனோபாவம் மாறலாம். கிர்கிஸ்தானில் உள்ள ஒரு சகோதரி சொல்கிறார்: “வெளி ஊழியத்தில் நான் ஒரு வீட்டிற்குப் போயிருந்தபோது ஒருவர் என்னிடம், ‘கடவுள் நம்பிக்கையெல்லாம் எனக்கு இருக்கிறது, ஆனால் கிறிஸ்தவர்களின் கடவுள்மேல் எனக்கு நம்பிக்கை கிடையாது’ என்று சொல்லி, ‘இன்னொரு முறை இந்தப் பக்கம் வந்தால், என் நாயை அவிழ்த்துவிடுவேன்!’ என்று மிரட்டினார். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய நாய், சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. அதன்பிறகு, ‘மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?’ (ராஜ்ய செய்தி எண் 37) என்ற துண்டுப்பிரதியை விநியோகித்த சமயத்தின்போது, அந்த வீட்டில் வேறு யாரையாவது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமென்று நினைத்து மீண்டும் அங்கு போனேன். ஆனால், அதே ஆள்தான் கதவைத் திறந்தார். உடனே, மனதிற்குள் ஜெபம் செய்துவிட்டு, ‘வணக்கம் சார், மூன்று நாளைக்கு முன்னால் நாம் பேசியபோது நீங்கள் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, உங்கள் நாயைப் பற்றிச் சொன்னதும் நினைவிருக்கிறது. ஆனாலும் இந்தத் துண்டுப்பிரதியை உங்களிடம் கொடுக்காமல் போக எனக்கு மனம் வரவில்லை. உண்மைக் கடவுள் ஒருவர் இருக்கிறாரென்று நீங்கள் நம்புவதைப் போலவே நானும் நம்புகிறேன். கடவுளை அவமதிக்கிற மதங்களைச் சீக்கிரத்தில் அவர் தண்டிக்கப்போகிறார். நீங்கள் இதை வாசித்தால் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வீர்கள்’ என்றேன். அந்தத் துண்டுப்பிரதியை அவர் வாங்கிக்கொண்டார், எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பின்பு அடுத்த வீட்டிற்குப் போனேன். சில நிமிடங்களுக்குப் பிறகு கையில் துண்டுப்பிரதியோடு அவர் என்னிடம் ஓடோடி வந்தார்! ‘நான் இதை வாசித்துப் பார்த்தேன், கடவுள் என்னைத் தண்டிக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். அவரோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அவர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்.”
17. ஒரு சகோதரி காட்டிய தைரியத்தால் ஒரு பெண்ணுக்கு இருந்த மனிதபயம் எவ்வாறு விலகியது?
17 நம்முடைய தைரியத்தைப் பார்த்து மற்றவர்களும் தைரியம் அடைவார்கள். ரஷ்யாவிலுள்ள ஒரு சகோதரி பஸ்சில் சக பயணி ஒருவரிடம் ஒரு பத்திரிகையைக் காட்டினார். அதைப் பார்த்த ஓர் ஆள் தன் இருக்கையைவிட்டுத் தடாலென்று எழுந்தார், சகோதரியின் கையிலிருந்த பத்திரிகையை வெடுக்கென்று பிடுங்கினார், அதைக் கசக்கி, வீசியெறிந்தார். அந்தச் சகோதரியைப் பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு, அவருடைய வீட்டு விலாசத்தைத் தருமாறு வற்புறுத்தினார், இனி அந்தக் கிராமத்தில் பிரசங்கிக்கக் கூடாது என்றும் எச்சரித்தார். அந்தச் சகோதரி ஒரு கணம் யெகோவாவிடம் ஜெபம் செய்தார்; அப்போது, “உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல முடியாதவர்களைக் கண்டு பயப்படாதீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொண்டார். (மத். 10:28) அதன்பின், அவர் எழுந்து அந்த ஆளிடம், “என் விலாசத்தை நான் தரப்போவதுமில்லை, இந்தக் கிராமத்தில் பிரசங்க வேலையை நிறுத்தப்போவதுமில்லை!” என்று பதட்டப்படாமல் சொல்லிவிட்டு பஸ்சிலிருந்து இறங்கினார். அவருடைய பைபிள் மாணாக்கராயிருந்த ஒரு பெண் அதே பஸ்சில் இருந்தார், நடந்ததையெல்லாம் அந்தச் சகோதரிக்கே தெரியாமல் கவனித்துக்கொண்டிருந்தார். மனிதபயம் காரணமாக அவர் கூட்டங்களுக்கு வராமல் இருந்தார். சகோதரியின் தைரியத்தைக் கண்ட பின்பு கூட்டங்களுக்குப் போக அவர் முடிவுசெய்தார்.
18. இயேசுவைப் போலவே தைரியமாகப் பிரசங்கிக்க நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?
18 கடவுளைவிட்டு வெகுதூரம் விலகியிருக்கிற இந்த உலகில் இயேசுவைப் போலவே பிரசங்கிக்க நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது. இதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்? ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஆவலோடு காத்திருங்கள். கடவுள் மீதும் சக மனிதர் மீதும் ஆழமான அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தைரியத்திற்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் தனியாக இல்லையென்றும், இயேசு உங்கள் கூடவே இருக்கிறாரென்றும் எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள். (மத். 28:20) கடவுளுடைய சக்தி உங்களைப் பலப்படுத்தும். யெகோவாவும் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். ஆகையால், “யெகோவாவே எனக்குத் துணை; நான் பயப்பட மாட்டேன், மனுஷன் எனக்கு என்ன செய்துவிட முடியும்?” என்று மிகுந்த தைரியத்துடன் சொல்வோமாக!—எபி. 13:6.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• கடவுளுடைய ஊழியர்களுக்கு ஏன் தைரியம் தேவை?
• தைரியத்தைக் குறித்து இவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்:
கிறிஸ்துவுக்குமுன் வாழ்ந்த உண்மை ஊழியர்கள்?
இயேசு கிறிஸ்து?
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்?
இன்றைய கிறிஸ்தவர்கள்?
[பக்கம் 21-ன் படம்]
இயேசு தைரியத்தோடு மதத் தலைவர்களின் முகமூடியைக் கிழித்தார்
[பக்கம் 23-ன் படம்]
பிரசங்கிக்க யெகோவா தைரியத்தைத் தருகிறார்