தொண்ணூறு வருடங்களாக ‘என் சிருஷ்டிகரை நினைத்துவருகிறேன்’
எட்வின் ரிஜ்வெல் சொன்னபடி
அன்று நவம்பர் 11, 1918. ஆர்மிஸ்டிஸ் டே என்று அழைக்கப்படும் போர் நிறுத்த நாள் அது. முதல் உலகப் போர் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அந்த மாபெரும் போர் முடிவுக்கு வந்த நாளைக் கொண்டாடுவதற்காக என் பள்ளியிலுள்ள பிள்ளைகள் எல்லாரும் திடீரென ஒன்றுகூட்டப்பட்டார்கள். அப்போது எனக்கு ஐந்து வயதுதான், எதற்காக எல்லாரும் கூடிவந்திருக்கிறார்கள் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. இருந்தாலும், கடவுளைப் பற்றி என் அப்பா அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்திருந்ததால் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்று மட்டும் புரிந்தது. நான் கடவுளிடம் ஜெபம் செய்தேன். ஆனால், பயத்தில் ஓவென அழ ஆரம்பித்துவிட்டேன். என்றாலும், அந்த விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. அன்றிலிருந்துதான் ‘என் சிருஷ்டிகரை நினைக்க’ ஆரம்பித்தேன்.—பிர. 12:1.
இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் குடும்பமாக ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகருக்கு அருகில் குடிமாறி வந்திருந்தோம். “இப்பொழுது வாழும் லட்சக்கணக்கானோர் மரிக்கவே மாட்டார்கள்” என்ற பொதுப் பேச்சை என் அப்பா அந்தச் சமயத்தில் கேட்டார். அது அவருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியது. அப்பாவும் அம்மாவும் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் அதில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் அடிக்கடி பேசிக்கொண்டார்கள். கடவுளை நேசிக்கவும் அவரையே நம்பியிருக்கவும் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்; அதற்காக உண்மையிலேயே கடவுளுக்கு நன்றிசொல்கிறேன்.—நீதி. 22:6.
முழுநேர ஊழியத்தில் காலெடுத்து வைத்தேன்
அப்போது எனக்கு 15 வயது; மேற்படிப்புக்கு ஏற்ற வயது; என்றாலும், முழுநேர ஊழியம் செய்யவே நான் ஆசைப்பட்டேன். ஆனால், நான் இன்னும் சின்னப் பையன் என்று அப்பா நினைத்தார். அதனால், கொஞ்ச நாளைக்கு ஓர் அலுவலகத்தில் நான் வேலை செய்தேன். இருந்தாலும், யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது; ஆகவே, சகோதரர் ஜே. எஃப். ரதர்ஃபர்டுக்குக் கடிதம் எழுதினேன். அந்தச் சமயத்தில் உலகெங்கும் நடந்துவந்த பிரசங்க வேலையை அவர்தான் மேற்பார்வை செய்துவந்தார். என்னுடைய திட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டு எழுதியிருந்தேன். சகோதரர் ரதர்ஃபர்ட் அதற்குப் பதில் கடிதம் எழுதியிருந்தார்: “வேலை செய்கிற வயது உனக்கு வந்துவிட்டதென்றால், நம் எஜமானருடைய சேவையைச் செய்வதற்கும் உனக்கு வயது வந்துவிட்டதென்றே அர்த்தம்! . . . அவருக்கு உண்மையாய்ச் சேவை செய்ய நீ எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.” மார்ச் 10, 1928-ல் அவர் எழுதிய அந்தக் கடிதம் என் குடும்பத்தாருக்கு உத்வேகத்தை அளித்தது. சீக்கிரத்தில் நான், என் அப்பா, அம்மா, அக்கா எல்லாரும் முழுநேர ஊழியர்களாக ஆனோம்.
1931-ஆம் வருடம் லண்டனில் நடந்த ஒரு மாநாட்டில் சகோதரர் ரதர்ஃபர்ட், வெளிநாடுகளுக்குச் சென்று நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். நானும் ஆன்ட்ரூ ஜாக் என்ற சகோதரரும் லிதுவேனியாவின் அன்றைய தலைநகரான கௌனஸுக்கு நியமிக்கப்பட்டோம். அப்போது எனக்கு 18 வயது.
வெளிநாட்டில் பிரசங்க வேலை
விவசாயத்தை நம்பியிருந்த லிதுவேனியா நாடு அந்தச் சமயத்தில் ஏழை நாடாக இருந்தது. கிராமப்புறங்களில் ஊழியம் செய்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. தங்குவதற்கு இடம் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நாங்கள் தங்கிய சில இடங்களை இப்போதுகூட எங்களால் மறக்கவே முடியாது. உதாரணத்திற்கு, ஒரு நாள் இரவு தூக்கத்தில் எனக்கும் ஆன்ட்ரூவுக்கும் உடம்பெல்லாம் என்னவோ செய்ததால், சட்டென எழுந்துகொண்டோம். விளக்கைக் கொளுத்திப் பார்த்தால் எங்களுடைய படுக்கையெங்கும் மூட்டைப்பூச்சிகள் ஊறிக்கொண்டு இருந்தன. உச்சிமுதல் உள்ளங்கால்வரை ஒரு இடம் பாக்கியில்லாமல் எங்களைக் கடித்திருந்தன! வலியைத் தணிப்பதற்காக ஒவ்வொரு நாள் காலையிலும், பக்கத்திலிருந்த ஆற்றின் ‘ஜில்’ தண்ணீரில் தலை மட்டும் வெளியே தெரியும்படி நாங்கள் நிற்க வேண்டியிருந்தது; இப்படியே ஒரு வாரம் செய்தோம். இந்தத் தொந்தரவுக்கெல்லாம் நாங்கள் அசரவில்லை, எங்கள் ஊழியத்தைத் தொடர்ந்தோம். அதன்பின் சீக்கிரத்தில், தங்குவதற்கு ஒரு நல்ல இடம் எங்களுக்குக் கிடைத்தது. சத்தியத்தை ஏற்றிருந்த ஓர் இளம் தம்பதியரை நாங்கள் சந்தித்தபோது, அவர்கள் வீட்டிலேயே எங்களைத் தங்க வைத்துக்கொண்டார்கள்; அது சிறிய வீடாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. நாங்கள் தரையில் தூங்க வேண்டியிருந்தாலும் நிம்மதியாகத் தூங்கினோம்!
அந்தச் சமயம் லிதுவேனியாவில் ரோமன் கத்தோலிக்கக் குருமாரும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் குருமாருமே ஆதிக்கம் செலுத்திவந்தார்கள். பணக்காரர்களால் மட்டும்தான் பைபிளை வாங்க முடிந்தது. எங்களுடைய பிராந்தியத்தில் எவ்வளவு பேரைச் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரைச் சந்தித்துப் பிரசுரங்களை அளிக்க வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோளாக இருந்தது. பொதுவாக நாங்கள் ஓர் ஊருக்குச் சென்று முதலில் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம். பிறகு அந்த ஊரின் ஒதுக்குப்புறப் பகுதிகளில் சர்வ ஜாக்கிரதையாக ஊழியம் செய்வோம். அதன்பின் ஊருக்குள்ளும் மளமளவென்று ஊழியம் செய்து முடிப்போம். அங்கிருந்த பாதிரிமார்கள் பிரச்சினையைக் கிளப்புவதற்குள் இப்படி முழு பிராந்தியத்தையும் செய்து முடித்துவிடுவோம்.
சலசலப்பால் பரவிய நற்செய்தி
1934-ல் கௌனஸிலுள்ள கிளை அலுவலகத்தில் சேவை செய்ய ஆன்ட்ரூ நியமிக்கப்பட்டார். ஜான் செம்பி என்னுடைய பயனியர் பார்ட்னராக ஆனார். மறக்க முடியாத சில அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தன. ஒரு நாள் ஒரு சிறிய ஊரில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது நான் ஒரு வக்கீலை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினேன். அவருக்குக் கோபம் தலைக்கேறியது, தன் மேஜை டிராயரிலிருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இடத்திலிருந்து நடையைக்கட்டும்படி என்னை மிரட்டினார். நான் உடனே மனதிற்குள் ஜெபம் செய்தேன். “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்” என்ற வசனம் என் நினைவுக்கு வந்தது. (நீதி. 15:1) அதனால் நான் அவரிடம், “ஒரு நண்பனாக உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லத்தான் வந்தேன்; நீங்கள் என்னைச் சுட்டுக்கொல்லாமல் விட்டதற்கு ரொம்ப நன்றி” என்றேன். அப்போது, துப்பாக்கியை இறுக்கிப் பிடித்திருந்த அவருடைய கைகள் மெல்ல தளர்ந்தன. உடனே நான் பின்னோக்கி நடந்தவாறு உஷாராக அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன்.
ஜானுக்கும் இதேபோன்ற பயங்கரமான அனுபவம் ஏற்பட்டிருந்தது. ஊழியத்தில் அவர் சந்தித்த ஒரு பெண்ணிடமிருந்து அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு ஒன்றை அவர் திருடிவிட்டதாகப் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, போலீசாரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கே உடைகளெல்லாம் கழற்றப்பட்டு, சோதனை செய்யப்பட்டார். அவர் திருடவில்லை என்பது ஊர்ஜிதமானது. பிற்பாடு உண்மைக் குற்றவாளி பிடிபட்டான்.
இவ்விரண்டு சம்பவங்களும் அந்த அமைதியான ஊரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. நாங்கள் அதிக முயற்சி எடுக்காமலேயே ஊரெல்லாம் நற்செய்தி பரவியது.
ரகசிய நடவடிக்கைகள்
லாட்வியாவில் ஊழியத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் அங்கு பைபிள் பிரசுரங்களை எடுத்துச் செல்வது ஆபத்தான வேலையாக இருந்தது. மாதத்திற்கு ஒருமுறை லாட்வியாவுக்கு இரவு ரயிலில் பயணம் செய்து, பிரசுரங்களை அங்கு இறக்கினோம். சில சமயங்களில் அப்படி இறக்கிய பிறகு அதிக பிரசுரங்களை எடுத்து வர எஸ்டோனியாவுக்குப் பயணம் செய்தோம். அவற்றை மீண்டும் லாட்வியாவில் இறக்கிவிட்டு லிதுவேனியாவுக்குத் திரும்பினோம்.
ஒரு சமயம், எப்படியோ இந்த விஷயம் சுங்க அதிகாரிக்குத் தெரிந்துவிட்டது. உடனடியாக என்னையும் ஜானையும் ரயிலைவிட்டு இறங்கச் சொன்னார், அந்தப் பிரசுரங்களைத் தன்னுடைய மேலதிகாரியிடம் எடுத்துக்கொண்டு வரும்படி உத்தரவிட்டார். உதவிக்காக யெகோவாவிடம் நாங்கள் ஜெபித்தோம். ஆச்சரியம் என்னவென்றால், நாங்கள் பிரசுரங்களை எடுத்து வந்திருப்பதைப் பற்றி சுங்க அதிகாரி தன் மேலதிகாரியிடம் எதுவுமே சொல்லவில்லை; “இவர்கள் கொண்டுவந்திருக்கிற சரக்கு பற்றி ஏதோ சொல்கிறார்கள்” என்று மட்டுமே சொன்னார். இந்த “சரக்கு” என்னவென்று நான் அந்த மேலதிகாரியிடம் சொன்னேன்; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமான பிரசுரங்கள்தான் இவை என்றும், தொல்லை மிகுந்த இவ்வுலகில் நடக்கிற சம்பவங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை இவை விளக்குகின்றன என்றும் சொன்னேன். இதைக் கேட்டதும் அந்த மேலதிகாரி எங்களை விட்டுவிட்டார், நாங்களும் அந்தப் பிரசுரங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் பத்திரமாகச் சேர்த்துவிட்டோம்.
பால்டிக் நாடுகளில் அரசியல் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போனதால், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்தது, லிதுவேனியாவிலும் பிரசங்க வேலைக்குத் தடை போடப்பட்டது. ஆன்ட்ரூவும் ஜானும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்; இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், பிரிட்டிஷ் குடிமக்கள் லிதுவேனியாவைவிட்டு வெளியேறும்படி சொல்லப்பட்டார்கள். நானும் அங்கிருந்து வெளியேறினேன், ஆனால் வேதனையோடு!
வட அயர்லாந்தில் பொறுப்புகளும் ஆசீர்வாதங்களும்
அதற்குள் என் பெற்றோர் வட அயர்லாந்துக்குக் குடிமாறி இருந்தார்கள். 1937-ல் நானும் அவர்களிடம் போய்விட்டேன். போர் பீதியின் காரணமாக அங்கும் நம்முடைய பிரசுரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது; ஒரு பக்கம் போர் நடந்துகொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் பிரசங்க வேலையை நாங்கள் விடாமல் செய்துகொண்டிருந்தோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரசங்க வேலை எந்தத் தடையுமின்றி சுமுகமாக நடந்தது. ஹெரால்டு கிங் என்ற அனுபவமுள்ள பயனியர் (இவர் பின்னர் சீனாவில் மிஷனரியாகச் சேவை செய்தவர்) திறந்தவெளியில் பொதுப் பேச்சுகளைக் கொடுப்பதில் முன்னின்று செயல்பட்டார். அவர் என்னிடம், “இந்தச் சனிக்கிழமை முதல்முறையாக திறந்தவெளியில் நான் பேச்சு கொடுக்கிறேன், அடுத்த சனிக்கிழமை நீங்கள் கொடுக்க வேண்டும்” என்றார். எனக்குப் பகீரென்றது!
நான் கொடுத்த அந்த முதல் பேச்சு என் நினைவில் பசுமையாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். ஒரு பெட்டிமீது நின்றுகொண்டு ஒலிபெருக்கி எதுவும் இல்லாமல் அந்தப் பொதுப் பேச்சைக் கொடுத்தேன். நான் பேச்சைக் கொடுத்து முடித்தபின், ஒருவர் என்னிடம் வந்து கைகுலுக்கி, பில் ஸ்மித் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ஏகப்பட்ட கூட்டம் இருந்ததால் என்ன நடக்கிறதென்று பார்க்க வந்திருந்ததாகச் சொன்னார். என் அப்பா இதற்கு முன்பே அவரைச் சந்தித்திருந்தார், ஆனால் அப்பாவும் அவருடைய இரண்டாவது மனைவியும் பயனியர்களாய்ச் சேவை செய்ய டப்ளினுக்குச் சென்ற பிறகு அவரைச் சந்திக்க முடியாமல்போன விஷயம் பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. அவருடன் நாங்கள் பைபிள் படிப்பை ஆரம்பித்தோம். காலப்போக்கில், பில்லின் குடும்பத்திலிருந்து ஒன்பது பேர் சத்தியத்திற்கு வந்தார்கள்.
பின்னர், பெல்ஃபாஸ்ட்டின் புறநகர்ப்பகுதிகளில் இருந்த பெரிய பங்களா வீடுகளுக்குச் சென்று ஊழியம் செய்தேன்; அப்போது லிதுவேனியாவில் வசித்திருந்த ஒரு ரஷ்யப் பெண்மணியைச் சந்தித்தேன். அவரிடம் நான் சில பிரசுரங்களைக் கொடுத்தபோது அவர் ஒரு புத்தகத்தைக் காட்டி, “இந்தப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. கௌனஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் என் பெரியப்பா இதை எனக்குக் கொடுத்தார்” என்று சொன்னார். அது போலிஷ் மொழியிலிருந்த படைப்பு புத்தகம். அதைப் புரட்டிப் பார்த்தபோது அதன் ஓரங்களிலெல்லாம் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. கௌனஸ் நகரில் அவருடைய பெரியப்பாவுக்கு இந்தப் புத்தகத்தைக் கொடுத்தது நான்தான் என்று சொன்னபோது அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்!—பிர. 11:1.
நான் வட அயர்லாந்துக்குப் போவதைக் குறித்து ஜான் செம்பி கேள்விப்பட்டபோது, பைபிள் விஷயங்களில் ஆர்வம்காட்டிய தன் தங்கை நெல்லியைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் என்னுடைய சகோதரி கானியும் அவளுக்கு பைபிள் படிப்பு நடத்தினோம். நெல்லி கிடுகிடுவென்று முன்னேற்றம் செய்து யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்தாள். பிற்பாடு, நாங்கள் ஒருவரையொருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம்.
நெல்லியும் நானும் மொத்தம் 56 வருடங்கள் யெகோவாவின் சேவையில் ஈடுபட்டோம்; நூற்றுக்கும் அதிகமானோர் சத்தியத்திற்கு வர உதவும் பாக்கியத்தைப் பெற்றோம். நாங்கள் இருவருமாக அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்து, புதிய உலகத்தில் கால் வைப்போம் என்று கனவுகண்டிருந்தோம்; ஆனால், 1998-ல் மரணம் என்ற கொடூர எதிரி என் அன்பு மனைவியை என்னிடமிருந்து பறித்துவிட்டது. அது என்மேல் விழுந்த பெரிய இடியாக இருந்தது; அதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
பால்டிக் நாடுகளுக்கு மீண்டும் விஜயம்
நெல்லி இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம்தான் ஆகியிருக்கும், எனக்கு ஓர் அருமையான ஆசீர்வாதம் கிடைத்தது. எஸ்டோனியாவில் டல்லின் நகரிலுள்ள கிளை அலுவலகத்திற்கு விஜயம் செய்யும்படி எனக்கு அழைப்பு வந்தது. அதில் எஸ்டோனியச் சகோதரர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்கள்: “1920-களிலும் 1930-களிலும் பால்டிக் நாடுகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த பத்துச் சகோதரர்களில் இப்போது நீங்கள் மட்டும்தான் உயிரோடு இருக்கிறீர்கள்.” எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளில் செய்யப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளைப் பற்றிய விவரங்களைக் கிளை அலுவலகம் சேகரித்துவருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த வேலையில் உதவ “உங்களால் வரமுடியுமா?” என்றும் கேட்டிருந்தார்கள்.
எனக்கும் என்னுடைய பயனியர் பார்ட்னருக்கும் அந்தக் காலத்தில் கிடைத்திருந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதினேன். லாட்வியாவில் ஆரம்பத்திலே கிளை அலுவலகமாக இயங்கிவந்த அப்பார்ட்மென்ட்டைச் சகோதரர்களுக்குக் காட்டினேன், போலீசாரால் கண்டுபிடிக்க முடியாதபடி பிரசுரங்களைக் கூரைக்குக் கீழே நாங்கள் ஒளித்து வைத்திருந்த ரகசிய இடத்தையும் காட்டினேன். பின்னர், லிதுவேனியாவில் நான் பயனியராகச் சேவை செய்திருந்த ஸௌலா என்ற சிறிய ஊருக்குச் சகோதரர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த சகோதரர்கள் கூடிவந்திருந்த சமயத்தில் ஒரு சகோதரர் என்னிடம், “பல வருடங்களுக்கு முன் இந்த ஊரில் நானும் என் அம்மாவும் ஒரு வீட்டை வாங்கினோம். மாடியிலிருந்த சிறு அறையைச் சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது த டிவைன் ப்ளான் ஆஃப் தி ஏஜஸ் மற்றும் த ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகங்கள் என் கண்ணில் பட்டன. அவற்றை வாசித்ததும் இதுதான் சத்தியமென்று எனக்குப் புரிந்துவிட்டது. எத்தனையோ வருடங்களுக்கு முன் நீங்கள்தான் அந்தப் புத்தகங்களை அங்கே விட்டுச் சென்றிருக்க வேண்டும்!” என்று சொன்னார்.
நான் பயனியராகச் சேவை செய்திருந்த ஓர் ஊரில் நடைபெற்ற வட்டார மாநாட்டிலும் கலந்துகொண்டேன். 65 வருடங்களுக்கு முன் அதே இடத்தில் ஒரு மாநாடு நடந்தது. அப்போது 35 பேர் வந்திருந்தார்கள். ஆனால் இப்போது, 1,500 பேர் வந்திருந்தார்கள்! அப்படியே மலைத்துப்போய்விட்டேன். யெகோவா எந்தளவுக்கு ஆசீர்வதித்திருக்கிறார்!
சமீபத்தில், பி என்ற ஓர் அருமையான கிறிஸ்தவ சகோதரி என்னைத் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டார்; இது நான் நினைத்தே பார்க்காத ஓர் ஆசீர்வாதம்! நாங்கள் நவம்பர் 2006-ல் திருமணம் செய்துகொண்டோம்.
‘யெகோவா என்னைக் கைவிடவில்லை’
எதிர்காலத்தைக் குறித்து யோசித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று பைபிள் சொல்கிற அதே அறிவுரையை நானும் சொல்வேன்; அதன்படி நடப்பது மிகமிக ஞானமானது! சங்கீதக்காரனைப் போலவே என்னாலும் இவ்வாறு சந்தோஷமாகச் சொல்ல முடிகிறது: “தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.”—சங். 71:17, 18.
[பக்கம் 25-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
லாட்வியாவுக்கு பைபிள் பிரசுரங்களை எடுத்துச் செல்வது ஆபத்தான வேலையாக இருந்தது
எஸ்டோனியா
டல்லின்
ரிகா வளைகுடா
லாட்வியா
லிதுவேனியா
ரிகா
வில்னியஸ்
கௌனஸ்
[பக்கம் 26-ன் படம்]
15 வயதாக இருந்தபோது ஸ்காட்லாந்தில் நான் பயனியராக (கால்பார்ட்டராக) சேவை செய்ய ஆரம்பித்தேன்
[பக்கம் 26-ன் படம்]
1942-ல் நெல்லியைக் கரம்பிடித்த சமயத்தில்