ஒத்துழைப்பே ஆன்மீகச் செழிப்புக்கு வழி
உங்கள் குடும்பம் ஓர் ஆன்மீகக் குடும்பமாகச் செழித்தோங்க வேண்டுமா? அதற்குத் தேவை ஒத்துழைக்கும் மனப்பான்மை! முதல் மானிட ஜோடியைப் படைத்தபோது யெகோவாவே இதை வலியுறுத்திக் காட்டினார். ஆதாமுக்கு ‘ஏற்ற துணையாக’ உண்டாக்கப்பட்ட ஏவாள், அவனோடு சேர்ந்து ஒத்துழைக்க வேண்டியிருந்தது. (ஆதி. 2:18) ஆகவே, மணவாழ்க்கையில் ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டும்; அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருக்க வேண்டும். (பிர. 4:9-12) அதேசமயம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும்கூட ஒத்துழைக்கும் மனப்பான்மை தேவை. ஏன்? அப்போதுதான், யெகோவா எதிர்பார்க்கிற காரியங்களை அவர்களால் சரியாகச் செய்ய முடியும்.
குடும்ப வழிபாடு
பாரி, ஹைடி தம்பதியருக்கு ஐந்து பிள்ளைகள். குடும்ப பைபிள் படிப்புக்காக எல்லாரும் ஒத்துழைப்பது ஆன்மீக ரீதியில் செழித்தோங்க தங்கள் குடும்பத்திற்கு உதவுகிறது என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள். பாரி சொல்வதைக் கேளுங்கள்: “குடும்பப் படிப்புக்காகத் தயாரித்துவரப் பிள்ளைகளுக்குச் சின்னச்சின்ன ‘ஹோம்வொர்க்கை’ அவ்வப்போது கொடுக்கிறேன். விழித்தெழு! பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகளிலிருந்து ஏதாவது குறிப்புகளைத் தயாரித்து வரும்படி சிலசமயம் சொல்கிறேன். அதோடு, வெளி ஊழியத்தில் வீட்டுக்காரர்களிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்றுகூட நாங்கள் ஒத்திகை பார்க்கிறோம்; இப்படிச் செய்வதால், பிள்ளைகள் அவரவருக்கு ஏற்ற விதத்தில் வீட்டுக்காரர்களிடம் பேசத் தயாராகிவிடுகிறார்கள்.” இப்போது ஹைடி சொல்வதைக் கவனியுங்கள்: “நாங்கள் ஒவ்வொருவரும் நிறைய ஆன்மீக இலக்குகளை வைத்திருக்கிறோம்; அந்த இலக்குகளையெல்லாம் எந்தளவுக்கு எங்களால் எட்ட முடிந்ததென்று குடும்பப் படிப்பின்போது கலந்துபேசுகிறோம்.” வாரத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் இரவு நேரம் டிவி பார்க்காமல் இருப்பதால், அந்த நேரத்தில் குடும்பத்திலுள்ள எல்லாராலுமே கவனம் சிதறாமல் வாசிக்க முடிகிறது என இந்தத் தம்பதியர் அனுபவப்பூர்வமாகச் சொல்கிறார்கள்.
சபைக் கூட்டங்கள்
மைக், டனிஸ் தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள். இவர்கள் குடும்பமாக ஒன்றுசேர்ந்து உழைத்ததால் என்ன பலனைப் பெற்றார்கள்? மைக் சொல்கிறார்: “எவ்வளவு முயற்சி எடுத்தாலும் நாங்கள் சில சமயம் கூட்டங்களுக்குத் தாமதமாகவே போனோம்; ஆனால், எல்லாரும் சேர்ந்து ஒத்துழைத்தபோது எங்களால் சரியான நேரத்திற்குப் போக முடிந்தது.” டனிஸ் சொல்கிறார்: “பிள்ளைகள் வளரவளர அவர்களுக்கென்று சில வேலைகளைக் கொடுத்தோம். எங்கள் மகள் கிம் சமையலிலும் சாப்பாட்டு மேஜையை ரெடி செய்வதிலும் எனக்கு ஒத்தாசையாக இருந்தாள்.” மகன் மைக்கேல் சொல்கிறார்: “செவ்வாய்க் கிழமைகளில் எங்கள் வீட்டில் கூட்டம் நடந்தது. அதனால் நாங்கள் வீட்டை ஒழுங்குபடுத்தி, வேக்யூம் செய்து, சேர்களையெல்லாம் எடுத்துப் போட்டோம்.” இன்னொரு மகன் சொல்கிறார்: “கூட்டம் நடக்கிற நாட்களில் அப்பா வேலையிலிருந்து சாயங்காலம் சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுவார்; நாங்கள் எல்லாரும் ரெடியாவதற்கு உதவிசெய்வார்.” இப்படியெல்லாம் செய்ததால் கிடைத்த பலன்கள் என்ன?
கைமேல் பலன்
மைக் தொடர்கிறார்: “1987-ல் நானும் டனிஸும் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம். அந்தச் சமயம் எங்களுடைய மூன்று பிள்ளைகள் எங்களோடு இருந்தார்கள்; அவர்களில் இரண்டு பேர் பிற்பாடு பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார்கள்; மற்ற இரண்டு பிள்ளைகள் பெத்தேல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இன்னொரு சந்தோஷமான விஷயம், நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து 40 பேர் சத்தியத்திற்கு வர உதவியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, குடும்பமாகச் சேர்ந்து கட்டுமானப் பணியில் ஈடுபடும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறோம்; இதற்காக வெளி நாடுகளுக்கும்கூடச் சென்றிருக்கிறோம்.”
ஆம், குடும்பமாக ஒத்துழைத்தால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். உங்கள் குடும்பத்தைப் பற்றியென்ன? இன்னும் சில காரியங்களில் நீங்கள் குடும்பமாக ஒத்துழைக்க முடியுமா? ஒத்துழைக்கும் மனப்பான்மையைக் காட்டும்போது, உங்கள் குடும்பம் நிச்சயமாகவே ஓர் ஆன்மீகக் குடும்பமாகச் செழித்தோங்கும்!
[பக்கம் 28-ன் படம்]
வெளி ஊழியத்தில் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்ப்பது வீட்டுக்காரர்களிடம் நன்றாகப் பேச உதவும்