நன்றிபொங்க ஏற்றுக்கொள்ளுங்கள் இதயம்பொங்க கொடுத்திடுங்கள்
அன்பே உருவான பரம தகப்பனாகிய யெகோவா, நம் ஒவ்வொருவர்மீதும் கரிசனை காட்டுகிறார். தமக்கு ஊழியம் செய்கிற எல்லார் மீதும் அவர் ஆழ்ந்த அக்கறையோடு இருக்கிறார் என்று அவருடைய வார்த்தை கூறுகிறது. (1 பே. 5:7) நம்மீது அக்கறை வைத்திருப்பதை அவர் பல வழிகளில் வெளிக்காட்டுகிறார்; அதில் ஒரு வழி, அவரது சேவையில் நாம் உண்மையோடு நிலைத்திருப்பதற்கு உதவியாகப் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருப்பதே. (ஏசா. 48:17) முக்கியமாய், நிலைகுலைய வைக்கும் பிரச்சினைகளை நாம் சந்திக்கும்போது, அத்தகைய உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். இந்த உண்மையை மோசேயின் மூலம் அவர் கொடுத்திருந்த திருச்சட்டத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
அநாதைகள், விதவைகள், பரதேசிகள் போன்ற ‘எளியோருக்கு’ அந்தச் சட்டத்தின் மூலம் யெகோவா அன்புடன் உதவி அளித்தார். (லேவி. 19:9, 10; உபா. 14:29) தம் ஊழியர் சிலருக்குச் சக வணக்கத்தாரிடமிருந்து உதவி தேவைப்படலாமென்று அவர் அறிந்திருந்தார். (யாக். 1:27) எனவே, அவருடைய ஊழியர்கள் யாரும் உதவி பெறத் தயங்க வேண்டியதில்லை; ஏனென்றால் உதவி செய்கிறவர்கள் யெகோவாவின் தூண்டுதலாலேயே அதைச் செய்கிறார்கள். என்றாலும், உதவியை ஏற்றுக்கொள்கிறவர்கள் அதைச் சரியான மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்வது அவசியம்.
உதவி பெறுவதற்கு மட்டுமல்ல உதவி அளிப்பதற்கும் கடவுளுடைய மக்களுக்கு வாய்ப்பு இருக்கிறதென அவருடைய வார்த்தை காட்டுகிறது. எருசலேம் ஆலயத்தில் காணிக்கை போட்ட ‘ஏழை விதவையின்’ பதிவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். (லூக். 21:1-4) விதவைகளுக்கான திருச்சட்ட ஏற்பாட்டிலிருந்து அவள் உதவி பெற்றிருப்பாள். என்றாலும், பெற்ற உதவிக்காக அல்லாமல் கொடுத்த காணிக்கைக்காகவே அந்த ஏழை விதவை நம் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கிறாள். கொடுக்கும் மனப்பான்மையால் அவள் மிகுந்த சந்தோஷத்தை அடைந்திருப்பாள்; ஏனென்றால், இயேசு சொன்ன விதமாக, “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது.” (அப். 20:35) அப்படியானால், ‘கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டு,’ அதிகச் சந்தோஷத்தை நீங்கள் எவ்வாறு பெறலாம்?—லூக். 6:38.
‘யெகோவாவுக்கு என்ன கைமாறு செய்வேன்?’
“யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்?” என்று சங்கீதக்காரன் யோசித்தார். (சங். 116:12, NW) என்ன நன்மைகளை அவர் பெற்றிருந்தார்? அவர் “இக்கட்டையும் சஞ்சலத்தையும்” சுமந்து தவித்த காலத்தில் யெகோவா அவருக்கு உதவியிருந்தார். அதோடு, அவரை ‘மரணத்திலிருந்து காப்பாற்றியிருந்தார்.’ அதனால், யெகோவாவுக்கு “கைமாறு” செய்ய அவர் ஆசைப்பட்டார். அதை அவர் எப்படிச் செய்ய நினைத்தார்? ‘நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை . . . நிறைவேற்றுவேன்’ என்று அவர் சொன்னார். (சங். 116:3, 4, 8, 10-14; NW) உள்ளப்பூர்வமாக யெகோவாவிடம் செய்திருந்த எல்லாப் பொருத்தனைகளையும், அவருக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு அவர் உறுதிபூண்டார்.
சங்கீதக்காரனைப் போலவே நீங்களும் கடவுளுக்குக் கைமாறு செய்யலாம். எப்படி? கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் இசைவாக எப்போதும் வாழ்வதன் மூலம். ஆகவே, உங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா என்றும், அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடு எல்லாக் காரியங்களையும் செய்கிறீர்களா என்றும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். (பிர. 12:13; கலா. 5:16-18) உண்மையைச் சொன்னால், யெகோவா உங்களுக்குச் செய்திருக்கிற எல்லாக் காரியங்களுக்கும் உங்களால் கைமாறு செய்யவே முடியாது. என்றாலும், முழு இருதயத்தோடு அவருடைய சேவைக்காக உங்களையே கொடுத்தீர்களென்றால், அது ‘அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும்.’ (நீதி. 27:11) இப்படி உங்களையே கொடுத்து யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
சபையின் நலனுக்காகக் கொடுத்திடுங்கள்
கிறிஸ்தவ சபையிலிருந்து நீங்கள் நிறைய நன்மைகளைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை மறுக்க மாட்டீர்கள். இந்தச் சபையின் மூலமாக யெகோவா ஆன்மீக உணவை அள்ளி வழங்கியிருக்கிறார். இப்படி நீங்கள் பெற்ற சத்தியம், பொய்மதப் போதனைகளிலிருந்தும் ஆன்மீக இருளிலிருந்தும் உங்களுக்கு விடுதலை அளித்திருக்கிறது. (யோவா. 8:32) “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் ஏற்பாடு செய்கிற சபைக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் மூலமாக ஆன்மீக அறிவை நீங்கள் பெற்றீர்கள்; ஆம், துன்ப துயரம் எதுவுமே இல்லாத பூஞ்சோலை பூமிக்கு உங்களை வழிநடத்தும் அறிவைப் பெற்றீர்கள். (மத். 24:45-47) கிறிஸ்தவ சபையின் மூலமாக நீங்கள் எத்தனை நன்மைகளைப் பெற்றிருக்கிறீர்கள்! இன்னும் எத்தனை எத்தனை நன்மைகளைப் பெறப்போகிறீர்கள்! இவற்றுக்கெல்லாம் கைமாறாகச் சபைக்கு நீங்கள் என்ன கொடுக்கலாம்?
அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “உடலுறுப்புகள் அனைத்தும், அவற்றுக்கு உதவியளிக்கிற எல்லா மூட்டுகளாலும் ஒன்றோடொன்று இசைவாக இணைக்கப்பட்டு ஒற்றுமையாய் இயங்குகின்றன; ஒவ்வொரு உறுப்பும் அதனதன் முக்கிய வேலையைச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடைந்து அன்பினால் பலப்படுத்தப்படுகிறது.” (எபே. 4:15, 16) இந்த வசனம், பரலோக வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மனதில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், இதிலுள்ள நியமம் இன்றைய கிறிஸ்தவர்கள் எல்லாருக்குமே பொருந்துகிறது. ஆம், சபையின் அங்கத்தினர் ஒவ்வொருவருமே அதன் நலனுக்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்கலாம். எவ்வழிகளில்?
மற்றவர்களுக்கு உற்சாக ஊற்றாகவும், ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சி அளிப்பவர்களாகவும் இருக்க எப்போதும் முயற்சியெடுப்பதன் மூலம் பங்களிக்கலாம். (ரோ. 14:19) அதோடு, சக வணக்கத்தாரிடம் பழகும்போது கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களை வெளிக்காட்டுவதன் மூலம் பங்களிக்கலாம். (கலா. 5:22, 23) அதுமட்டுமல்ல, ‘எல்லாருக்கும் நன்மை செய்ய, முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய’ கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொள்வதன் மூலமும் பங்களிக்கலாம். (கலா. 6:10; எபி. 13:16) சபையாகிய ‘உடல் அன்பினால் பலப்படுத்தப்படுவதற்கு’ சகோதரர்கள், சகோதரிகள், சிறியவர்கள், பெரியவர்கள் எனச் சபையிலுள்ள ஒவ்வொருவருமே தங்களது பங்கை அளிக்கலாம்.
இவற்றோடுகூட, சபை செய்கிற உயிர்காக்கும் பிரசங்க வேலைக்காக நம் திறமை, பலம், பொருள் வளம் ஆகியவற்றைச் செலவிடுவதன் மூலமும் பங்களிக்கலாம். “இலவசமாய்ப் பெற்றீர்கள்” என்று இயேசு கிறிஸ்து கூறினார்; இதற்குக் கைமாறாக நாம் என்ன செய்ய வேண்டும்? “இலவசமாய்க் கொடுங்கள்” என்று அவரே சொன்னார். (மத். 10:8) ஆகவே, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கித்துச் சீடராக்கும் முக்கியமான வேலையில் முழுமையாக ஈடுபடுங்கள். (மத். 24:14; 28:19, 20) உங்களால் முழுமையாக ஈடுபட முடியவில்லையா? அப்படியானால், இயேசு குறிப்பிட்ட ஏழை விதவையை நினைத்துப் பாருங்கள். அவள் கொடுத்தது சொற்பமே. ஆனாலும், மற்ற எல்லாரையும்விட அதிகமாகக் கொடுத்தாள் என இயேசு அவளைப் பாராட்டினார். அவளுடைய சூழ்நிலைக்கேற்ப எந்தளவுக்குக் கொடுக்க முடிந்ததோ அந்தளவுக்கு எல்லாவற்றையும் கொடுத்தாள்.—2 கொ. 8:1-5, 12.
நன்றிபொங்க ஏற்றுக்கொள்ளுங்கள்
சபையிடமிருந்து நீங்கள் உதவி பெறுகிற சந்தர்ப்பங்களும் வரலாம். இந்தப் பொல்லாத உலகத்தினால் வரும் பிரச்சினைகள் உங்களைத் திணறடிக்கும்போது சபை எந்தவொரு உதவி அளித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கவே தயங்காதீர்கள். “சபையை மேய்ப்பதற்கு,” அதாவது, நீங்கள் சோதனைகளையும் துன்பங்களையும் எதிர்ப்படுகையில் உங்களுக்கு உதவுவதற்கு, அக்கறையுள்ள, தகுதியுள்ள ஆண்களை யெகோவா நியமித்திருக்கிறார். (அப். 20:28) நீங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும்போது, சபையிலுள்ள மூப்பர்களும் மற்றவர்களும் உங்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக, பாதுகாப்பாக இருப்பார்கள்.—கலா. 6:2; 1 தெ. 5:14.
என்றாலும், தேவையான உதவி உங்களுக்குக் கிடைக்கும்போது, அதைச் சரியான மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; ஆம், எப்போதுமே நன்றிபொங்க ஏற்றுக்கொள்ளுங்கள். சக வணக்கத்தாரிடமிருந்து கிடைக்கிற உதவியை, யெகோவா உங்களிடம் காட்டுகிற அளவற்ற கருணை என்றே நினைத்துக்கொள்ளுங்கள். (1 பே. 4:10) ஏன் அப்படி நினைக்க வேண்டும்? ஏனென்றால், இந்த உலக மக்கள் பலரைப் போல் நாம் நன்றிகெட்டவர்களாய் இருக்க விரும்புவதில்லை.
நியாயத்தோடும் சமநிலையோடும் இருங்கள்
பிலிப்பியருக்கு பவுல் எழுதிய கடிதத்தில், தீமோத்தேயுவைக் குறித்து அவர் இவ்வாறு நற்சான்று அளித்தார்: “உங்களுக்குரிய காரியங்களை அக்கறையோடு கவனிப்பதற்கு அவரைப் போன்ற மனமுள்ளவர் வேறு யாரும் என்னோடு இல்லை.” ஆனால், மற்றவர்களைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “[அவர்கள்] எல்லாரும் தங்களுக்குரிய விஷயங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள், கிறிஸ்து இயேசுவுக்குரிய விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.” (பிலி. 2:20, 21) எனவே, எப்போதும் ‘நம்முடைய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறவர்களாய்’ இருப்பதை இன்று நாம் எப்படித் தவிர்க்கலாம்?
நம்முடைய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காகச் சபையிலுள்ள மற்றவர்களிடம் உதவி கேட்கையில், அவர்கள் நமக்காகவே அதிக நேரம் செலவிடும்படியும், நம்மீதே கவனம் செலுத்தும்படியும் நாம் வற்புறுத்தக் கூடாது. ஏன்? இதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்: நமக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை ஏற்பட்டிருக்கிறது.. ஒரு சகோதரர் நமக்குப் பண உதவி செய்கிறார்.. நாம் அவருக்கு உள்ளப்பூர்வமாக நன்றி சொல்வோம், அல்லவா? ஆனால், அந்த உதவியைச் செய்யும்படி நாம் அவரை வற்புறுத்துவோமா? நிச்சயமாக மாட்டோம். அதுபோலவே, நமக்கு உதவி தேவைப்படுகையில் நம்மை நேசிக்கிற நம் சகோதரர்கள் ஓடோடி வருவார்களென்றாலும், நமக்காக அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட வேண்டுமென நாம் எதிர்பார்க்கக் கூடாது; இந்த விஷயத்தில் நாம் நியாயத்தோடும் சமநிலையோடும் இருக்க வேண்டும். சொல்லப்போனால், சக வணக்கத்தார் நமக்கு எந்த உதவி செய்தாலும், அதை அவர்களாகவே மனமுவந்து செய்ய வேண்டும் என்றுதானே நாம் எதிர்பார்ப்போம்!
உங்களுக்கு உதவி அளிக்க உங்கள் சகோதர சகோதரிகள் எப்போதும் தயாராய் இருப்பார்கள், அதை மனப்பூர்வமாய்ச் செய்வார்கள் என்பது உண்மையே. என்றாலும், நீங்கள் எதிர்பார்க்கிற எல்லாவற்றையும் சிலசமயம் அவர்களால் செய்ய முடியாமல்போகலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், சங்கீதக்காரனுக்கு யெகோவா உதவியதைப் போலவே உங்களுக்கும் உதவுவாரென்று நிச்சயமாய் இருங்கள்.—சங். 116:1, 2; பிலி. 4:10-13.
எனவே, உங்களுக்காக யெகோவா செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளையும் நன்றிபொங்க ஏற்றுக்கொள்ளுங்கள்; முக்கியமாக, நீங்கள் துன்ப துயரங்களைச் சந்திக்கையில் அவற்றை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்காதீர்கள். (சங். 55:22) நீங்கள் அப்படிச் செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதே சமயம், நீங்கள் ‘சந்தோஷமாகக் கொடுக்க’ வேண்டுமென்றும் அவர் எதிர்பார்க்கிறார். எனவே, உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காக உங்கள் “மனதில் தீர்மானித்தபடியே,” உங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் கொடுத்திடுங்கள். (2 கொ. 9:6, 7) அப்போது, நீங்கள் நன்றிபொங்க ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருப்பீர்கள், இதயம்பொங்க கொடுப்பவர்களாகவும் இருப்பீர்கள்.
[பக்கம் 31-ன் பெட்டி/படங்கள்]
“யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்?”—சங். 116:12, NW.
▪ ‘எல்லாருக்கும் . . . நன்மை செய்ய’ சந்தர்ப்பம் தேடுங்கள்
▪ மற்றவர்களுக்கு உற்சாக ஊற்றாக இருங்கள், ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சி அளியுங்கள்
▪ சீடராக்கும் வேலையில் உங்கள் சூழ்நிலைக்கேற்ப முழுமையாக ஈடுபடுங்கள்