கடவுளை நினைக்க இளைஞருக்கு உதவும் புத்தகம்
“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று ஞானியாகிய சாலொமோன் சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பு எழுதினார். (பிர.12:1) அப்படி நினைக்க, கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இப்போது உதவும் மற்றொரு புத்தகம், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி 2 ஆகும். இந்த ஆங்கில புத்தகம், “கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல்” என்ற தலைப்பில் மே 2008 முதல் ஜனவரி 2009 வரை உலகெங்கும் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்டது.
புத்தகத்தினுடைய முன்புற அட்டையின் மறுபக்கத்தில், இளைஞர்களுக்கு ஆளும் குழுவினர் எழுதிய கடிதம் உள்ளது. அதன் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிடுகிறது: “இந்தப் புத்தகத்திலுள்ள தகவல், இளைஞர்களாகிய நீங்கள் இன்று எதிர்ப்படுகிற அழுத்தங்களையும் சோதனைகளையும் சமாளிப்பதற்கு உதவ வேண்டும் என்றும், கடவுளுடைய சித்தத்திற்கு இசைய தீர்மானங்களை எடுப்பதற்கு உதவ வேண்டும் என்றும் நாங்கள் உள்ளப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறோம்.”
பிள்ளைகளை ‘யெகோவாவுக்கு ஏற்ற முறையில் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வர’ பெற்றோர் உண்மையிலேயே விரும்புகிறார்கள். (எபே. 6:4) ஆனால், இளைஞர்கள் பலர் பருவ வயதை அடைந்ததும், தன்னம்பிக்கை இழந்து, அறிவுரைக்காக ஏங்குகிறார்கள். நீங்கள் பருவ வயது பிள்ளையை உடைய பெற்றோரா? அப்படியென்றால், இந்தப் புத்தகத்திலிருந்து உங்கள் பிள்ளை பெருமளவு பயனடைய நீங்கள் எப்படி உதவலாம்? இதோ சில ஆலோசனைகள்:
▪ உங்களுக்கென ஒரு புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கு படித்துப் பாருங்கள். அதை மேலோட்டமாகப் படித்தால் மட்டும் போதாது. அதில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ள விதத்தைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்யுங்கள். எது சரி, எது தவறு என இளைஞர்களிடம் வெறுமனே சொல்வதற்குப் பதிலாக, அவர்களுடைய ‘பகுத்தறியும் திறன்களை’ பயிற்றுவிக்க இந்தப் புத்தகம் முயலுகிறது. (எபி. 5:14) சரியானதைச் செய்ய எப்படித் தீர்மானமாய் இருக்கலாம் என்பதற்கு நடைமுறை ஆலோசனைகளையும் தருகிறது. உதாரணத்திற்கு, “சக மாணவர்கள் தரும் தொல்லைகளை நான் எப்படிச் சமாளிப்பது?” என்ற தலைப்பிலுள்ள 15-ஆம் அதிகாரம், தவறான காரியங்களுக்கு மறுப்பு தெரிவித்தால் மட்டுமே போதுமென இளைஞர்களிடம் சொல்வதில்லை. மாறாக, சக மாணவர்கள் தொல்லை தரும்போது பைபிள் நியமங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும், அவர்களுக்கு எப்படிப் பதிலளிக்கலாம் என்பதையும் விளக்குகிறது; இவ்வாறு, ‘ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிப்பது’ என்பதை இளைஞர்கள் கற்றுக்கொள்ள உதவுகிறது.—கொலோ. 4:6.
▪ பதிலளிக்கும்படி கொடுக்கப்பட்டுள்ள இடங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யுங்கள். இவை முக்கியமாக இளைஞர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தாலும், உங்கள் பிரதியில் பொருத்தமான இடங்களில் பதில்களை நீங்கள் ஏன் எழுதக்கூடாது?a உதாரணத்திற்கு, பக்கம் 16-ல் டேட்டிங் சம்பந்தமாகக் கேட்கப்பட்டுள்ள இரண்டு கேள்விகளுக்குப் பதில்களை எழுதுகையில், உங்கள் பிள்ளையின் வயதில் நீங்கள் இருந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் என்ன பதில்களைச் சொல்லியிருப்பீர்களோ அவற்றை அங்கு எழுத நீங்கள் விரும்பலாம். பிறகு உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘வருடங்கள் செல்லச் செல்ல இந்த விஷயத்தில் என்னுடைய மனநிலை எப்படி மாறியிருக்கிறது? பருவ வயதிலிருந்ததைவிட இப்போது நான் எந்தளவுக்குப் பக்குவம் அடைந்திருக்கிறேன்? என் பிள்ளையின் மனதில் பதியும்படி இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்துச் சொல்வேன்?’
▪ உங்கள் பருவ வயது பிள்ளையின் புத்தகத்தைத் திறந்து பார்க்காதீர்கள். உங்கள் பிள்ளை கேள்விகளுக்குப் பதில்களை எழுதுவதற்கு அல்லது அவற்றை மனதில் சொல்லிக்கொள்வதற்கு உதவும் விதத்தில் இந்தப் புத்தகத்தில் சில பகுதிகள் உள்ளன. உங்கள் பிள்ளையின் மனதில் உள்ளதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள், ஆனால் அவனுடைய புத்தகத்தில் உள்ளதைப் பார்க்க முயற்சி செய்யாதீர்கள். 3-ஆம் பக்கத்தில் “பெற்றோருக்குக் குறிப்பு” என்ற தலைப்பிலுள்ள பகுதியில் இவ்வாறு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது: “உங்கள் பருவ வயது பிள்ளைகள் தங்களுடைய மனதிலுள்ளதை அப்படியே புத்தகத்தில் எழுத வேண்டுமென்றால் அவர்களுடைய புத்தகத்தை நீங்கள் திறந்து பார்க்காதிருக்க வேண்டும். அப்படிப் பார்க்காதிருந்தால், பிற்பாடு அவர்களே தாங்கள் எழுதின விஷயங்களைப் பற்றி உங்களிடம் மனந்திறந்து பேசலாம்.”
குடும்ப பைபிள் படிப்புக்கான புத்தகம்
இளைஞர் கேட்கும் கேள்விகள், தொகுதி 2 என்ற இந்தப் புத்தகம் உங்களுடைய குடும்ப வழிபாட்டில் பயன்படுத்துவதற்குரிய மிகச் சிறந்த புத்தகம். இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பாராவுக்கும் கேள்விகள் இல்லாததால் இதை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்? உங்கள் பிள்ளைகளுக்கு அதிக பயனளிக்கும் ஒரு படிப்பு முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், அல்லவா?
இந்தப் புத்தகத்தில் 132, 133-ஆம் பக்கங்களிலுள்ள “சக மாணவர்களின் தொல்லைகளைச் சமாளிக்கத் திட்டமிடுதல்” பகுதியைச் சிந்திக்கையில் சில குடும்பத்தார் அவற்றை முன்கூட்டியே பேசிப் பார்க்கிறார்கள். முதல் கேள்வி, சக மாணவர்களிடமிருந்து வரும் எந்தத் தொல்லையைச் சமாளிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறதென உங்கள் மகனோ மகளோ யோசித்துப் பார்க்க உதவலாம். இரண்டாவது கேள்வி, எந்தச் சூழ்நிலையில் அத்தகைய தொல்லை தலைதூக்கலாம் என்பதை யோசித்துப் பார்க்க உதவலாம். இந்தப் பகுதி, சக மாணவர்களின் தொல்லைக்கு இணங்கிப் போவதால் அல்லது அதை எதிர்த்து நிற்பதால் வரும் விளைவுகளைப் பற்றி உங்கள் பிள்ளையைச் சிந்திக்க வைக்கிறது; பிறகு, “ஆம் அப்படித்தான்” என்பதுபோல் பதிலளிக்கவோ, தீர்மானத்தைச் சொல்லி விட்டுவிடவோ, பதிலடி கொடுக்கவோ வழிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. உங்கள் பிள்ளை எப்படி எப்படியெல்லாம் பதிலளிக்கலாம் என யோசித்து, நம்பிக்கையோடும் உறுதியோடும் தயங்காமல் பதிலளிக்கத் தயாரிப்பதற்கு நீங்கள் உதவுங்கள்.—சங். 119:46.
உரையாடுவதற்கு உதவும் புத்தகம்
இளைஞர் கேட்கும் கேள்விகள், தொகுதி 2 என்ற இந்தப் புத்தகம், இளைஞர் தங்கள் பெற்றோருடன் உரையாட ஊக்கப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, “அம்மாவிடமோ அப்பாவிடமோ செக்ஸ் பற்றி நான் எப்படிப் பேசுவேன்?” (பக்கங்கள் 63-64), “உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள்!” (பக்கம் 189) ஆகிய பெட்டிகள், பேசத் தயங்கும் விஷயங்களைப் பற்றி எப்படிப் பேச ஆரம்பிக்கலாம் என்பதற்கு நடைமுறை ஆலோசனைகளைத் தருகின்றன. “என் மனதில் இருந்த விஷயங்களைப் பற்றியும், நான் செய்த காரியங்களைப் பற்றியும்கூட என் பெற்றோரிடம் பேசுவதற்கு இந்தப் புத்தகம் எனக்குத் தைரியத்தைத் தந்தது” என்று 13 வயது சிறுமி எழுதினாள்.
மற்ற விதங்களில் உரையாடுவதற்கும்கூட இந்தப் புத்தகம் வழி செய்கிறது. ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்ற தலைப்பில் ஒரு பெட்டி உள்ளது. அதை மறுபார்வைக்கு மட்டுமே பயன்படுத்தாமல், குடும்பமாக உரையாடுவதற்கும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதிப் பகுதியிலும், “செய்யத் தீர்மானித்திருப்பவை!” என்ற தலைப்பில் இன்னொரு பெட்டி உள்ளது. அந்த அதிகாரத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை எந்தெந்த விதங்களில் பின்பற்ற முடியுமென குறிப்பாக எழுதி வைப்பதற்கு அந்தப் பெட்டி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. “செய்யத் தீர்மானித்திருப்பவை!” என்ற ஒவ்வொரு பெட்டியின் இறுதியிலும், “இந்த விஷயம் சம்பந்தமாக என் பெற்றோரிடம் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால் . . .” என்ற வாக்கியம் உள்ளது. அது, பெற்றோரிடமிருந்து பயனுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ள இளைஞர்களுக்கு உதவலாம்.
இதயத்தை எட்டுங்கள்!
ஒரு பெற்றோராக, உங்களுடைய பிள்ளையின் இதயத்தை எட்டுவதே உங்களுடைய இலக்காக இருக்கிறது. இளைஞர் கேட்கும் கேள்விகள், தொகுதி 2 என்ற இந்தப் புத்தகம் அதைச் செய்ய உங்களுக்கு உதவலாம். ஒரு அப்பா தன்னுடைய மகளை மனந்திறந்து பேச வைப்பதற்கு இந்தப் புத்தகத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.
“நானும் ரெபெக்காவும் சேர்ந்து காலார நடப்பதற்கு, சைக்கிளில் செல்வதற்கு, அல்லது காரில் போவதற்கு அருமையான சில இடங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் மனந்திறந்து பேசுவது அவளுக்குச் சுலபமாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
“இந்தப் புத்தகத்தில் நாங்கள் முதலாவது சிந்தித்தது, ஆளும் குழுவின் கடிதத்தையும், ‘பெற்றோருக்குக் குறிப்பு’ என்ற பகுதியையும்தான். 3-ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, மனதிலுள்ளதைத் தயங்காமல் அப்படியே அந்தப் புத்தகத்தில் எழுதலாம் என்பதை அவள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தேன். அவள் என்ன எழுதினாலும் நான் பார்க்கப் போவதில்லை.
“புத்தகத்திலுள்ள அதிகாரங்களை எந்த வரிசையில் கலந்தாலோசிக்க வேண்டுமென்பதை அவளையே தேர்ந்தெடுக்கச் சொன்னேன். அவள் முதலாவது தேர்ந்தெடுத்த அதிகாரங்களில் ஒன்று ‘நான் எலக்ட்ரானிக் கேம்ஸ் விளையாடலாமா?’ என்பது. அதை அவள் தேர்ந்தெடுப்பாளென நான் துளிகூட எதிர்பார்க்கவில்லை! ஆனால், அவள் அப்படிச் செய்ததற்குக் காரணம் இருந்தது. அவளுடைய சிநேகிதிகளில் பலர் பயங்கரமான ஒரு எலக்ட்ரானிக் கேமை விளையாடிக் கொண்டிருந்தார்களாம். அந்த விளையாட்டு எந்தளவு கொடூரமான வன்முறை நிறைந்ததாகவும் கெட்ட வார்த்தைகள் நிறைந்ததாகவும் இருந்ததென எனக்குத் தெரியவே இல்லை! 251-ஆம் பக்கத்திலுள்ள ‘செய்யத் தீர்மானித்திருப்பவை!’ பெட்டியை நாங்கள் கலந்தாலோசித்தபோதுதான் இவையெல்லாம் தெரிய வந்தன. அந்த கேமை விளையாடும்படி யாராவது வற்புறுத்தினால் எப்படிப் பதிலளிப்பது என்பதைத் தயாரிக்க அந்தப் பெட்டி ரெபெக்காவுக்கு உதவியது.
“அந்தச் சமயத்தில், அவள் புத்தகத்தில் எழுதியிருப்பதையெல்லாம் என்னிடம் சொல்லிவிடுகிறாள். படிப்பின்போது நாங்கள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்போம். நாங்கள் மாறி மாறி வாசிப்போம்; பிறகு அவள் அந்தப் புத்தகத்திலுள்ள படங்கள், பெட்டிகள் என எல்லாவற்றையும் பற்றி என்னிடம் பேசுவாள். அவளுடைய வயதில் நான் இருந்த காலத்தில் நடந்ததைப் பற்றி அவளிடம் சொல்ல அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது; பின்பு, இந்தக் காலத்தைப் பற்றி அவள் என்னிடம் பேசுவாள். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவள் என்னிடம் சொல்வாள்!”
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டபோது அதிக சந்தோஷப்பட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்போது அதை நன்கு பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளைஞர் கேட்கும் கேள்விகள், தொகுதி 2 என்ற இந்தப் புத்தகம் உங்கள் குடும்பத்துக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைய வேண்டுமென்பது ஆளும் குழுவினரின் ஆசை. இந்தப் புத்தகம், ‘கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நடந்துகொண்டிருக்க’ எல்லாருக்கும், முக்கியமாக நம் பிரியத்திற்குரிய இளைஞர்கள் எல்லாருக்கும் உதவுவதாக.—கலா. 5:16.
[அடிக்குறிப்பு]
a பதிலளிப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகள் சிலவற்றை எல்லா வயதினரும் பூர்த்தி செய்யலாம். உதாரணத்திற்கு, “உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்” (பக்கம் 221) என்ற பெட்டி, உங்கள் பிள்ளைக்கு உதவியாய் இருப்பதைப் போல உங்களுக்கும் உதவியாய் இருக்கலாம். அதுபோலவே, “சக மாணவர்களின் தொல்லைகளைச் சமாளிக்கத் திட்டமிடுதல்” (பக்கங்கள் 132-133), “என் மாதாந்தர பட்ஜெட்” (பக்கம் 163), “என் இலக்குகள்” (பக்கம் 314) ஆகியவையும் உதவியாய் இருக்கலாம்.
[பக்கம் 30-ன் படம்]
சில இளைஞர்களின் கருத்து
“பென்சிலை எடுத்துக்கொண்டு, அமைதியாக உட்கார்ந்து, தியானித்துப் படிக்க வேண்டிய புத்தகம் இது. சொந்த டைரிபோல் பயன்படுத்தும் விதத்தில் இது அமைந்திருப்பது, சிறந்த வாழ்க்கையை வாழும் இலக்கோடு நம் மனதில் உள்ளதை ஆராய்ந்து பார்க்க வாய்ப்பளிக்கிறது.”—நிக்கோலா.
“என்மீது அக்கறை உள்ள ஆட்கள்கூட டேட்டிங் செய்யும்படி என்னை மிகவும் வற்புறுத்துகிறார்கள். இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி, யார் என்ன சொன்னாலும் நான் டேட்டிங் செய்யத் தயாராய் இல்லை என்பதை எனக்கு உணர்த்தியது.”—காட்ரீனா.
‘நீங்கள் ஞானஸ்நானம் பெற வேண்டுமென யோசிக்கிறீர்களா?’ என்ற பெட்டி, ஞானஸ்நானத்தைக் குறித்து இன்னும் சீரியஸாக யோசிக்க எனக்கு உதவியிருக்கிறது. என்னுடைய படிப்பு பழக்கத்தையும் ஜெபம் செய்கிற பழக்கத்தையும் மீண்டும் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அந்தப் புத்தகம் என்னைத் தூண்டியது.”—ஆஷ்லி.
“கிறிஸ்தவர்களாக இருக்கும் என் பெற்றோர், சிறுவயதிலிருந்தே எனக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்திருந்தாலும், என் வாழ்க்கையில் நான் எடுத்து வைக்க வேண்டிய படிகளைக் குறித்து நானாகவே யோசித்துப் பார்க்க அந்தப் புத்தகம் உதவியிருக்கிறது. என் பெற்றோரிடம் இன்னும் நன்றாக மனந்திறந்து பேசுவதற்கும் அது உதவியிருக்கிறது.”—ஸமீரா.
[பக்கம் 31-ன் படம்]
பெற்றோரே, இந்தப் புத்தகத்தை நன்கு படித்துப் பாருங்கள்
[பக்கம் 32-ன் படம்]
உங்கள் பிள்ளையின் இதயத்தை எட்டுவதற்கு இலக்கு வையுங்கள்