சமூகத்தின் கருத்துகளுக்கு அடிபணிந்துவிடாதீர்கள்
ஊருக்கு ஊர் கருத்துகள் வேறுபடுகின்றன. சில ஊர்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிற கருத்துகள் மற்ற ஊர்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை; சில ஊர்களில் மெச்சிப் பேசப்படுபவை மற்ற ஊர்களில் மதிப்புக் குறைவாகப் பேசப்படுகின்றன. அதோடு, காலம் மாற மாற கருத்துகளும் மாறுகின்றன. ஆகவே, கடந்த காலத்தில் நடந்த பைபிள் சம்பவங்களை வாசிக்கும்போது நம்முடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பைபிள் காலங்களில் மக்கள் மத்தியிலிருந்த கருத்துகளையும் நெறிகளையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
உதாரணத்திற்கு, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அடிக்கடி குறிப்பிடப்படுகிற இரண்டு கருத்துகளை எடுத்துக்கொள்ளலாம்; ஒன்று மதிப்பு, மற்றொன்று அவமதிப்பு. இவ்விரண்டு கருத்துகளைப் பற்றிப் பேசப்படுகிற பகுதிகளை நன்கு புரிந்துகொள்வதற்கு, அச்சமயத்தில் வாழ்ந்த மக்கள் அவற்றை எப்படிக் கருதினார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
முதல் நூற்றாண்டு நெறிகள்
“கிரேக்கர், ரோமர், யூதர் இவர்களெல்லாரும் மதிப்பு, அவமதிப்பு ஆகிய இரண்டையும் தங்களுடைய கலாச்சாரத்தில் மிக முக்கிய நெறிகளாகக் கருதினார்கள். அவர்கள் வாழ்க்கையில் பேர், புகழ், மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் ஆகியவற்றைப் பெறத் துடித்தார்கள், அதற்காக சாகவும் துணிந்தார்கள்” என்பதாக ஓர் அறிஞர் சொல்கிறார். மக்கள் மத்தியில் மின்ன வேண்டுமென அவர்கள் விரும்பியதால், சமூகத்தின் கருத்துகளுக்கு ஒத்துப்போக நினைத்தார்கள்.
அரசன் முதல் அடிமை வரை சமுதாயத்திலிருந்த அனைவருமே ஸ்தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்; அதனால்தான் பதவி, அந்தஸ்து, மதிப்பு போன்றவை மிக முக்கியமானவை என அவர்கள் கருதினார்கள். மதிப்பு என்பது ஒருவர் தன்னை உயர்வாகக் கருதுவதை மட்டுமல்ல, மற்றவர்களால் உயர்வாகக் கருதப்படுவதையும் அர்த்தப்படுத்தியது. ஒருவருக்கு மதிப்புக் கொடுப்பதென்பது, அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட விதமாக நடந்துகொண்டதற்கு அவரை மற்றவர்கள் முன் கௌரவிப்பதை அர்த்தப்படுத்தியது. அதோடு, ஒருவருடைய செல்வத்தால், ஸ்தானத்தால் அல்லது உயர்குலத்தால் கவரப்பட்டு அவருக்கு உரிய மரியாதை கொடுப்பதையும் அர்த்தப்படுத்தியது. நற்காரியங்களைச் செய்வதாலோ மற்றவர்களைவிட மேம்பட்டு விளங்குவதாலோ மதிப்பைச் சம்பாதிக்க முடிந்தது. அதற்கு நேர்மாறாக அவமதிப்பு, மக்கள் மத்தியில் தலைகுனிவுக்கும் ஏளனத்திற்கும் வழிவகுத்தது. ஒருவருடைய தனிப்பட்ட உணர்ச்சியாலோ மனசாட்சி சொல்வதாலோ ஏற்படாமல் ஊராரே பழிப்பதால் ஏற்பட்ட விளைவே இது.
விருந்தில் ஒருவருக்கு ‘முதன்மையான இடம்’ அல்லது ‘கடைசி இடம்’ கொடுக்கப்படுவதைப் பற்றி இயேசு பேசியபோது அன்றைய கலாச்சாரத்தில் அது மதிப்பாகவோ அவமதிப்பாகவோ கருதப்பட்டதைக் காட்டியது. (லூக். 14:8-10) இயேசுவின் சீடர்கள் குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது “தங்களில் யார் மிக உயர்ந்தவர்” என்பதைக் குறித்து வாக்குவாதம் செய்தார்கள். (லூக். 9:46; 22:24) தங்களுடைய சமுதாயத்தில் வாழ்ந்தவர்களுக்கு முக்கியமானதாயிருந்த ஒன்றை அவர்கள் வெளிக்காட்டினார்கள். தற்பெருமையும் போட்டி மனப்பான்மையும் கொண்ட யூத மதத் தலைவர்கள்கூட, இயேசுவின் பிரசங்க வேலை தங்களுடைய மதிப்பையும் அதிகாரத்தையும் குறைத்துப்போட்டதாக எண்ணினார்கள். என்றாலும், பொது மக்களுக்கு முன்பாக வாக்குவாதம் செய்து தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக்கொள்வதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வியையே தழுவின.—லூக். 13:11-17.
முதல் நூற்றாண்டு யூத, கிரேக்க, ரோம மக்கள் அவமதிப்பாகக் கருதிய மற்றொரு விஷயம், “கைது செய்யப்பட்டு தவறு செய்ததாக அனைவர் முன்பும் குற்றம் சாட்டப்பட்டதே” என்கிறார் மேற்குறிப்பிடப்பட்ட அந்த அறிஞர். ஒருவரை கைதுசெய்வதோ சிறையில் தள்ளுவதோ பெரும் அவமானமாகக் கருதப்பட்டது. அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவ்வாறு செய்வது நண்பர்கள், குடும்பத்தார், சமுதாயத்தினர் முன்னிலையில் கேவலப்படுத்துவதாக இருந்தது. அதன் பிறகு, அவருடைய நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம் காரணமாக அவர் அவமானத்தால் கூனிக்குறுகிப் போய் தன் சுயமரியாதையையும், மற்றவர்களோடு உள்ள பந்தத்தையும் இழந்துவிடலாம். ஆடைகளைக் களைந்து அல்லது சாட்டையால் அடித்து கேவலப்படுத்துவது கைதுசெய்யப்படுவதைவிட ரொம்பவே அவமானத்திற்குரியதாகக் கருதப்பட்டது. ஒருவரை இவ்வாறு செய்வது, மற்றவர்களுடைய வெறுப்புக்கும் கேலி கிண்டலுக்கும் ஆளாக்கியது, அவருடைய மதிப்பையும் தூக்கியெறிந்தது.
ஒருவரைக் கழுமரத்தில் ஏற்றி கொலை செய்வதைவிட படு கேவலமான செயல் வேறெதுவும் இல்லை. இவ்விதத்தில் கொலை செய்வதுதான் “அடிமைகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை” என்பதாகவும் “இது அவமானத்திற்கும், சித்திரவதைக்கும் உச்சக்கட்டமாக இருந்தது” என்பதாகவும் அறிஞர் மார்டின் ஹெங்கல் கூறுகிறார். இவ்வாறு கேவலமாகக் கொலை செய்யப்பட்டவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் சமூகத்தின் கருத்துகளுக்கு அடிபணிந்து அவரைக் கைவிட்டுவிடும்படி வற்புறுத்தப்பட்டார்கள். கிறிஸ்து இவ்விதமாகக் கொலை செய்யப்பட்டதால், முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களாக மாற விரும்பியவர்கள், பொது மக்களுக்கு முன்பாக கேலிப் பேச்சுகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. ஒருவர், கழுமரத்தில் அறையப்பட்ட ஒரு மனிதனைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்வதே முட்டாள்தனம் என பெரும்பாலோர் நினைத்திருக்கலாம். “நாமோ கழுமரத்தில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கிறோம்; அந்தச் செய்தி யூதர்களுக்குத் தடைக்கல்லாகவும் புறதேசத்தாருக்கு முட்டாள்தனமாகவும் இருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 1:23) ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் இச்சூழ்நிலையை எப்படிச் சமாளித்தார்கள்?
வித்தியாசப்பட்ட நெறிகள்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, தவறான நடத்தையால் வரும் அவமானத்தைத் தவிர்க்க முயன்றார்கள். “உங்களுக்கு வருகிற துன்பங்கள், நீங்கள் கொலைகாரராகவோ திருடராகவோ தீமை செய்கிறவராகவோ மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவராகவோ இருப்பதால் வந்தவையாக இருக்கக் கூடாது” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 4:15) என்றாலும், தம்மைப் பின்பற்றுவோர் தம்முடைய பெயரின் காரணமாகத் துன்புறுத்தப்படுவார்கள் என இயேசு முன்னதாகவே சொல்லியிருந்தார். (யோவா. 15:20) ஒருவர் ‘கிறிஸ்தவராக . . . துன்பப்பட வேண்டியிருந்தால், அதற்காக வெட்கப்படாமல், அந்தப் பெயருக்கேற்ப வாழ்ந்து கடவுளை எப்போதும் மகிமைப்படுத்தும்படி’ பேதுரு எழுதினார். (1 பே. 4:16) கிறிஸ்துவைப் பின்பற்றுவோராக துன்பப்படுவதை அவமானமாய் கருதாதிருப்பது அன்றைய சமுதாயத்தின் நெறிகளைப் புறக்கணிப்பதற்குச் சமமாய் இருந்தது.
கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய நெறிகளின் அடிப்படையில் தங்களுடைய நடத்தையை மாற்றிக்கொள்வது சரியல்ல. கழுமரத்தில் அறையப்பட்ட ஒருவரை மேசியாவாக ஏற்றுக்கொள்வது முதல் நூற்றாண்டு மக்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிந்தது. பொது மக்களின் இந்தக் கருத்து, சமூகத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ளும்படி கிறிஸ்தவர்கள்மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவர்கள் கேலி செய்யப்பட்டபோதிலும், இயேசுதான் மேசியா என்பதில் அவர்களுக்கிருந்த விசுவாசம் அவரைத் தொடர்ந்து பின்பற்ற அவர்களைத் தூண்டியது. “விசுவாசதுரோகமும் பாவமும் செய்கிற இந்தத் தலைமுறையினரில் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ அவனைக் குறித்து மனிதகுமாரனும் தமது தகப்பனின் மகிமையில் பரிசுத்த தூதர்களுடன் வரும்போது வெட்கப்படுவார்” என்று இயேசு குறிப்பிட்டார்.—மாற். 8:38.
கிறிஸ்தவ நம்பிக்கைகளை விட்டுவிடுவதற்கு இன்றும்கூட நாம் பல அழுத்தங்களை எதிர்ப்படலாம். சக மாணவர்கள், அக்கம்பக்கத்தார், கூட வேலை செய்பவர்கள் போன்றவர்களிடமிருந்து அழுத்தங்கள் வரலாம்; அவர்கள், ஒழுக்கக்கேடான, நேர்மையற்ற, சந்தேகத்திற்குரிய காரியங்களில் நம்மை ஈடுபட வைக்க முயலலாம். நாம் நீதியான நெறிகளின்படி வாழ்வதைக் குறித்து நாமே அவமானமாக உணரும்படி செய்ய அவர்கள் முயலலாம். அப்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
அவமானத்தைப் பொருட்படுத்தாதவர்களைப் பின்பற்றுங்கள்
யெகோவாவுக்கு எப்போதும் உத்தமமாய் இருப்பதற்காக இயேசு படு கேவலமான மரணத்தைத் தழுவினார். அவர் “அவமானத்தைப் பொருட்படுத்தாமல் கழுமர வாதனையைச் சகித்தார்.” (எபி. 12:2) இயேசுவின் எதிரிகள் அவரை அடித்தார்கள், அவர்மீது துப்பினார்கள், ஆடைகளைக் களைந்தார்கள், சாட்டையால் அடித்தார்கள், கழுமரத்தில் ஏற்றினார்கள், சபித்துப் பேசினார்கள். (மாற். 14:65; 15:29-32) அவர் அவற்றையெல்லாம் அவமானமாகக் கருத வேண்டுமென்பதற்காக அவர்கள் அப்படிச் செய்தாலும் இயேசு அவற்றைப் பொருட்படுத்தவில்லை. எப்படி? அவரை இம்சைப்படுத்தியபோது அவர் பின்வாங்கவில்லை. யெகோவாவின் பார்வையில் தாம் எந்த மதிப்பையும் இழக்கவில்லை என்பதை இயேசு அறிந்திருந்தார்; அதுமட்டுமல்ல, மக்களால் புகழ் மாலை சூட்டப்படவும் அவர் விரும்பவில்லை. அவர் ஓர் அடிமைபோல் மரித்தாலும் யெகோவா அவரை உயிர்த்தெழுப்பி, தமக்கு அடுத்த ஸ்தானத்தைக் கொடுத்து கௌரவித்தார். பிலிப்பியர் 2:8-11-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர் [கிறிஸ்து] மனிதராக வந்தபோது சாகுமளவுக்கு, ஆம், கழுமரத்தில் சாகுமளவுக்கு, தம்மையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார். அதனால்தான், கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தி, மற்றெல்லாப் பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குத் தந்தருளினார்; பரலோகத்திலும் பூமியிலும் மண்ணுக்குள்ளும் இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் முழங்கால்படியிட வேண்டும் என்பதற்காகவும், இயேசு கிறிஸ்துவே எஜமானர் என எல்லா நாவுகளும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்தார்; இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்கே.”
இயேசுவைக் கொலை செய்வதற்கு முன் மக்கள் அவரை அவமானப்படுத்தியதைக் குறித்து அவர் உணர்வற்றவராய் இருக்கவில்லை. தெய்வநிந்தனை செய்ததாக கடவுளுடைய மகன் குற்றம் சாட்டப்பட்டது, அவருடைய தகப்பனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் என நினைத்து இயேசு கவலைப்பட்டார். இப்படிப்பட்ட அவமானத்திலிருந்து தம்மை விடுவிக்கும்படி யெகோவாவிடம் கேட்டார். “இந்தக் கிண்ணத்தை என்னிடமிருந்து நீக்கிவிடுங்கள்” என்று அவர் ஜெபித்தார். அதே சமயத்தில், கடவுளுடைய சித்தத்திற்கு கீழ்ப்பட்டிருக்கத் தீர்மானமாய் இருந்தார். (மாற். 14:36) இருந்தாலும், தமக்கு நேரிட்ட அழுத்தங்களையெல்லாம் சகித்து, அவமானத்தைப் பொருட்படுத்தாமலிருந்தார். சொல்லப்போனால், அவருடைய காலத்திலிருந்த நெறிகளோடு ஒத்துபோகிறவர்கள் மட்டும்தானே இதையெல்லாம் அவமானமாக நினைத்திருப்பார்கள்! இயேசு அந்த நெறிகளோடு ஒத்துப்போகவே இல்லை.
இயேசுவின் சீடர்களும்கூட கைதுசெய்யப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டார்கள். அப்படிச் செய்தது, அநேகர் முன் அவர்களை அவமானப்படுத்தியது. மற்றவர்கள் அவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள், வெறுத்து ஒதுக்கினார்கள். ஆனாலும், அவர்கள் சோர்ந்துவிடவில்லை. உண்மையுள்ள சீடர்கள் மக்களின் கருத்துகளுக்கு அடிபணியவுமில்லை, அவமானத்தைப் பொருட்படுத்தவுமில்லை. (மத். 10:17; அப். 5:40; 2 கொ. 11:23-25) அவர்கள் தங்களுடைய “கழுமரத்தைச் சுமந்துகொண்டு நாள்தோறும் [இயேசுவின்] பின்னால் வரவேண்டும்” என்பதை அறிந்திருந்தார்கள்.—லூக். 9:23, 26.
இன்று நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? இந்த உலகம் முட்டாள்தனமானதாக, பலவீனமானதாக, துச்சமானதாக கருதுகிறவற்றை கடவுள் ஞானமுள்ளதாக, பலமுள்ளதாக, மதிப்புள்ளதாகக் கருதுகிறார். (1 கொ. 1:25-28) அப்படியிருக்க, நாம் மக்களின் கருத்துகளுக்கு முற்றிலும் அடிபணிந்துவிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது, எவ்வளவு அற்பத்தனமானது!
மற்றவர்கள் தங்களை மதிப்பாக கருத வேண்டுமென விரும்புகிற எவரும் தங்களைக் குறித்து இந்த உலகம் எப்படி கருதுகிறது என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மறுபட்சத்தில், இயேசுவையும் முதல் நூற்றாண்டில் அவரைப் பின்பற்றியவர்களையும் போல நாம் யெகோவாவை நம் நண்பராக்கிக்கொள்ள விரும்புகிறோம். ஆகவே, அவர் மதிப்பாகக் கருதுபவற்றை நாமும் மதிப்பாகக் கருதுவோம்; அவர் அவமதிப்பாகக் கருதுபவற்றை நாமும் அவமதிப்பாகக் கருதுவோம்.
[பக்கம் 4-ன் படம்]
மக்கள் அவமானமாகக் கருதியவற்றை இயேசு பொருட்படுத்தவில்லை