இனிய சேவை செய்யும் இளம் மொட்டுக்கள் ஈக்வடாரில்
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ப்ரூனோ என்ற இளம் சகோதரர் என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார். அப்போதுதான் அவர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருந்தார். எல்லாப் பாடங்களிலும் நிறைய மதிப்பெண் வாங்கியிருந்ததால் உயர்கல்வி படிக்கும்படி குடும்பத்தாரும் ஆசிரியர்களும் அவரை நச்சரித்தார்கள். சில வருடங்களுக்கு முன்புதான் அவர் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தார், வாழ்க்கையில் அவருடைய சித்தத்தைச் செய்ய முதலிடம் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார். அதனால், அவர் என்ன தீர்மானம் எடுத்தார்? அவரே சொல்கிறார்: “யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்தபோது, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதாகவும் அவருக்கே வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதாகவும் சொல்லியிருந்தேன். ஆனால், ஓர் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ எனக்கு இஷ்டமில்லை என்பதையும் வித விதமான ஊழியத்தில் கலந்துகொண்டு அவருக்குச் சேவை செய்ய ஆசைப்படுவதையும் வெளிப்படையாகவே அவரிடம் சொல்லியிருந்தேன்.”
சில வருடங்களுக்குப் பிறகு, ப்ரூனோ தென் அமெரிக்காவிலுள்ள ஈக்வடார் நாட்டுக்குச் சென்றார். “நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே யெகோவா என்னை ஆசீர்வதித்திருக்கிறார்” என்று அவர் சொல்கிறார். வேறு நாடுகளிலிருந்தும் அநேக இளைஞர்கள் ஈக்வடாருக்கு வந்திருந்ததைப் பார்த்தபோது அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. இவரைப் போலவே அவர்களும் யெகோவாவுக்கு இன்னும் அதிகளவு சேவை செய்வதற்காக ஈக்வடாருக்கு வந்திருந்தார்கள்.
யெகோவாவை ‘சோதித்துப் பார்த்த’ இளைஞர்கள்
உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான ப்ரூனோக்கள் யெகோவா கொடுத்திருக்கும் இந்த அன்பான அழைப்பை ஏற்றிருக்கிறார்கள்: “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்.” (மல். 3:10) யெகோவாமீது உயிரையே வைத்திருக்கும் இந்த இளைஞர்கள் அவரை ‘சோதித்துப் பார்க்க’ முன்வந்திருக்கிறார்கள். நற்செய்தியை அறிவிக்க அதிகமானோர் தேவைப்படும் நாடுகளுக்கு அல்லது இடங்களுக்குச் சென்று சேவை செய்ய தங்கள் நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் பொருளையும் மனமுவந்து அர்ப்பணித்திருக்கிறார்கள்.
இந்த இளைஞர்கள் புதிய இடத்திற்கு வந்து சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே, ‘அறுவடை மிகுதியாக இருப்பதையும், வேலையாட்கள் குறைவாக இருப்பதையும்’ கண்ணாரக் காண்கிறார்கள். (மத். 9:37) ஜெர்மனியைச் சேர்ந்த யாக்ளின் என்ற சகோதரியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஈக்வடார் கிளை அலுவலகத்திற்கு உற்சாகம் ததும்ப அவர் ஒரு கடிதம் எழுதினார். “இரண்டு வருடங்களாகத்தான் ஈக்வடாரில் ஊழியம் செய்து வருகிறேன். அதற்குள்ளாக 13 பைபிள் படிப்புகளை நடத்துகிறேன். 4 பேர் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறார்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதல்லவா?” என்று அவர் எழுதினார். கனடாவைச் சேர்ந்த ஷாண்டெல் என்ற சகோதரி சொல்வதைக் கேளுங்கள்: “நான் 2008-ல் ஈக்வடாரின் கடலோரப் பகுதிக்கு மாறிச் சென்றபோது அங்கு ஒரேவொரு சபைதான் இருந்தது. இப்போது மூன்று சபைகள் உள்ளன, 30-க்கும் அதிகமானோர் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். அநேகர் சத்தியத்திற்குள் வருவதைப் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை! சமீபத்தில் ஆண்டீஸ் மலைகளில் உள்ள ஒரு நகரத்திற்கு மாறிச் சென்றேன். அது 9,000 அடி (2,743 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இந்த நகரத்தில் 75,000-க்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். இங்கே, ஒரேவொரு சபை இருந்தாலும், ஏராளமானோர் சத்தியத்திற்குள் வருகிறார்கள்! என் ஊழியத்தை அணு அணுவாக ருசிக்கிறேன்.”
சமாளிக்க வேண்டிய சவால்கள்
அயல்நாடுகளுக்குப் போய் ஊழியம் செய்பவர்கள் பெரும் சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால், ஊழியம் செய்ய வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே சில இளைஞர்கள் பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த கேலா என்ற சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “நான் அயல்நாட்டுக்குச் சென்று ஊழியம் செய்யப் போவதாகச் சொன்னபோது என் சபையிலிருந்த சிலர் வேண்டாம் என்றார்கள். நான் எதற்காக வேறொரு நாட்டுக்குச் சென்று பயனியர் ஊழியம் செய்ய விரும்புகிறேன் என்பதே அவர்களுக்குப் புரியவில்லை. சில சமயங்களில், ‘நான் எடுத்திருக்கிற தீர்மானம் சரிதானா?’ என்று சந்தேகப்பட்டிருக்கிறேன்.” இருந்தாலும், அயல்நாட்டுக்குப் போவதென கேலா முடிவுசெய்தார். “யெகோவாவிடம் நிறைய ஜெபம் செய்தேன், முதிர்ந்த சகோதர சகோதரிகளிடம் இதைப் பற்றி நிறையப் பேசினேன். மனமுவந்து சேவை செய்கிறவர்களை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் எனக்கு ரொம்பவே உதவினார்கள்” என்று அவர் சொல்கிறார்.
புதிய மொழியைக் கற்றுக்கொள்வது அநேகருக்குப் பெரும் பாடாய் இருந்திருக்கிறது. அயர்லாந்தைச் சேர்ந்த ஷேபான் என்ற சகோதரி கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து இவ்வாறு சொல்கிறார்: “ஊழியத்தில் பேச ரொம்பவே கஷ்டப்பட்டேன். பொறுமையாக இருக்கவும்... அந்த மொழியை எப்படியாவது கற்றுக்கொள்ளவும்... தவறுசெய்யும்போது என்னைப் பார்த்து நானே சிரித்துக்கொள்ளவும்... பழகிக்கொண்டேன்.” எஸ்டோனியாவைச் சேர்ந்த அனா என்ற சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “சுட்டெரிக்கும் வெயில், பறக்கும் புழுதி, குளிக்க சுடுதண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டது என எதுவுமே எனக்குச் சிரமமாகத் தெரியவில்லை. ஆனால், ஸ்பானிஷ் கற்றுக்கொள்வதுதான் ரொம்...ப சிரமமாக இருந்தது. சில சமயங்களில், என்னால் இந்த மொழியைக் கற்றுக்கொள்ளவே முடியாது என்று நினைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்கிற முன்னேற்றத்தை நினைத்துச் சந்தோஷப்பட வேண்டுமே தவிர, நான் செய்கிற தவறுகளை நினைத்துக் கவலைப்படக் கூடாது என்பதைப் போகப் போகப் புரிந்துகொண்டேன்.”
சில சமயங்களில் வீட்டு ஞாபகம் வந்து சிலரை வாட்டி வதைத்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜோனத்தான் இவ்வாறு சொன்னார்: “ஈக்வடாருக்கு வந்த புதிதில் நண்பர்களையும் குடும்பத்தாரையும் பிரிந்த ஏக்கத்தில் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடுவேன். ஆனால், பைபிள் படிப்பதிலும் ஊழியம் செய்வதிலும் மூழ்கிப்போனபோது அந்தச் சோர்வெல்லாம் பஞ்சாய்ப் பறந்தது. கொஞ்ச நாளுக்குள்ளேயே, ஊழியத்தில் மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்தன. சபையில் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். இதெல்லாம் நான் இழந்த சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்தது.”
சிலருக்கு வாழ்க்கைச் சூழலும் சவாலாய் இருந்திருக்கிறது. உண்மைதான், உங்களுக்குப் பழகிப்போன வாழ்க்கை வசதிகள் போகும் இடங்களில் எல்லாம் கிடைக்காது. கனடாவைச் சேர்ந்த போ என்ற சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “ஊரில் இருந்தபோது ‘கரென்ட்’ பற்றி, தண்ணீர் பற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை, அவை எப்போதுமே இருக்கும். ஆனால், இங்கே ஈக்வடாரில் அப்படியில்லை. கரென்ட், தண்ணீர் எல்லாம் எப்போது வரும், எப்போது போகும் என்று சொல்ல முடியாது.” வளர்ந்து வரும் நாடுகளில், வறுமை வாட்டியெடுப்பதும், பயணிப்பதற்கு வசதியான வாகனங்கள் இல்லாதிருப்பதும் சகஜம். ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஈனஸ் என்ற சகோதரி இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளைச் சமாளித்து வருகிறார். என்றாலும், சந்தோஷமாய் இருக்க அவருக்கு எது உதவுகிறது? “இங்குள்ள மக்கள் விழுந்து விழுந்து உபசரிப்பவர்கள், ரொம்பக் கனிவானவர்கள், கஷ்டம் என்றால் உடனே ஓடி வருபவர்கள், மிகவும் தாழ்மையானவர்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்று அவர் சொல்கிறார்.
‘இடங்கொள்ளாமல் போகுமட்டும் யெகோவா அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார்’
ஈக்வடாரில் சேவை செய்வதற்காக இந்த இளைஞர்கள் நிறையத் தியாகங்களைச் செய்திருந்தாலும், அவர்கள் ‘நினைத்ததைவிட பல மடங்கு அதிகமாய்’ யெகோவா அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். (எபே. 3:20) ஆம், ‘இடங்கொள்ளாமல் போகுமட்டும் யெகோவா தங்களை ஆசீர்வதித்திருப்பதை’ அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். (மல். 3:10) பின்வரும் பத்திகளில், அவர்களுடைய எண்ணங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்:
ப்ரூனோ: “ஈக்வடாரிலுள்ள அமேசான் பகுதியில்தான் நான் முதன்முதலில் ஊழியம் செய்தேன். பின்பு, ஈக்வடார் கிளை அலுவலகத்தின் விரிவாக்கப் பணியில் பங்குகொண்டேன். இப்போது, பெத்தேலில் சேவை செய்து வருகிறேன். நான் இத்தாலியில் இருந்தபோது என் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தேன். அதை இப்போது நிறைவேற்றி வருகிறேன். யெகோவாவும், நான் கேட்ட மாதிரியே விதவிதமான ஊழியத்தில் கலந்துகொண்டு சந்தோஷமாய் இருக்க எனக்கு உதவிசெய்து வருகிறார்.”
போ: “ஈக்வடாருக்கு வந்த பிறகு என்னுடைய நேரத்தையெல்லாம் யெகோவாவுக்காக அர்ப்பணிப்பதால் முன்பைவிட இப்போது அவரிடம் ரொம்பவே நெருங்கி வந்திருக்கிறேன். அதேசமயம், புதுப் புது இடங்களைப் பார்க்க வேண்டுமென்ற என் நீண்டநாள் கனவும் இப்போது நிறைவேறி வருகிறது.”
அனா: “திருமணமாகாத ஒரு பெண்ணால் மிஷனரிகளைப் போல் சேவை செய்ய முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால், அதைப் போன்ற ஒரு சேவையைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன். யெகோவா என் ஆசையை நிறைவேற்றிவிட்டார். நான் ஊழியத்தில் பங்குகொள்கிறேன், அதோடு, ராஜ்ய மன்ற கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறேன். நிறையப் புதிய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.”
எல்கா: “ஆஸ்திரியாதான் என் சொந்த ஊர். அங்கு இருந்தபோது ஒரு பைபிள் படிப்பாவது நடத்த வேண்டுமென ஏங்கினேன், அதற்காக யெகோவாவிடம் நிறைய ஜெபம் செய்தேன். ஆனால், இப்போது நான் 15 பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறேன்! யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது அந்த பைபிள் மாணாக்கர்களின் முகத்தில் பளிச்சிடும் சந்தோஷத்தைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போகிறேன்.”
ஜோயெல்: “முன்பின் தெரியாத ஊருக்கு வந்து யெகோவாவுக்குச் சேவை செய்வது என்பது ஒரு புதுமையான அனுபவம். ஏனென்றால், ஒவ்வொரு விஷயத்திலும் யெகோவாவைத்தான் சார்ந்திருப்போம். நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அவர் ஆசீர்வதிப்பதைப் பார்க்கும்போது நமக்குப் புல்லரித்துப் போகும்! அமெரிக்காவிலிருந்து நான் இங்கே வந்தபோது 6 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். ஆனால், ஒரே வருடத்திற்குள் 21 பேர் பிரஸ்தாபிகள் ஆகிவிட்டார்கள். கிறிஸ்துவின் நினைவுநாள் அனுசரிப்புக்கு 110 பேர் வந்திருந்தார்கள்.”
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
யுவன்களே... யுவதிகளே... நற்செய்தியை அறிவிக்க அதிகமானோர் தேவைப்படும் நாடுகளுக்குச் சென்று சேவை செய்ய உங்களால் முடியுமா? இது சாதாரண விஷயம் இல்லை. எனவே, நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்துத் திட்டமிட வேண்டும். முக்கியமாக, வேறொரு நாட்டுக்குப் போய்ச் சேவை செய்வதற்கு, யெகோவா மீதும் அயலார் மீதும் உங்களுக்கு உண்மையிலேயே ஆழமான அன்பு இருக்க வேண்டும். உங்களுக்கு அந்த அன்பும் இருந்து, உங்கள் சூழ்நிலையும் அனுமதித்தால் அதைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அதோடு, உங்கள் பெற்றோரிடமும் சபையிலுள்ள மூப்பர்களிடமும் அதைப் பற்றிப் பேசுங்கள். நீங்கள் விருப்பப்பட்டால்... வித்தியாசமான, விறுவிறுப்பான இந்தச் சேவையில் நீங்களும் பங்குகொள்ளலாம்.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
“யெகோவாவிடம் நிறைய ஜெபம் செய்தேன், முதிர்ந்த சகோதர சகோதரிகளிடம் இதைப் பற்றிய நிறையப் பேசினேன். மனமுவந்து சேவை செய்கிறவர்களை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் ரொம்பவே உதவினார்கள்.” —கேலா, அமெரிக்கா
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
அயல்நாட்டில் சேவை செய்ய விரும்பினால்...
• தவறாமல் பைபிளையும், பைபிள் பிரசுரங்களையும் படியுங்கள்
• ஆகஸ்ட் 2011, நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கங்கள் 4-6-லுள்ள தகவலைப் படித்துப் பாருங்கள்
• அயல்நாட்டில் ஊழியம் செய்தவர்களிடம் பேசுங்கள்
• நீங்கள் போகப் போகும் நாட்டின் கலாச்சாரத்தையும் அதன் வரலாற்றையும் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
• அந்த ஊர் மொழியை ஓரளவாவது பேசக் கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்புக்குச் செல்லுங்கள்
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
அயல்நாட்டில் ஊழியம் செய்ய விரும்பும் சிலர் தங்களைப் பராமரித்துக்கொள்ள...
• சொந்த ஊருக்குத் திரும்பிப் போய் வருடத்தில் சில மாதங்கள் வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்
• தங்கள் வீட்டை அல்லது அப்பார்ட்மென்ட்டை வாடகைக்கு விடுகிறார்கள்
• தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக்கொள்ள வேறு யாரையாவது நியமிக்கிறார்கள்
• இன்டர்நெட் மூலமாகவே வேலை செய்கிறார்கள்
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
1 யாக்ளின், ஜெர்மனி
2 ப்ரூனோ, இத்தாலி
3 போ, கனடா
4 ஷேபான், அயர்லாந்து
5 ஜோயெல், அமெரிக்கா
6 ஜோனத்தான், அமெரிக்கா
7 அனா, எஸ்டோனியா
8 எல்கா, ஆஸ்திரியா
9 ஷாண்டெல், கனடா
10 ஈனஸ், ஆஸ்திரியா