நாங்கள் “உங்களோடேகூடப் போவோம்”
“தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்.”—சக. 8:23.
1, 2. (அ) நாம் வாழும் காலத்தில் என்ன நடக்கும் என்று யெகோவா சொன்னார்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள போகிறோம்? (ஆரம்பப் படம்)
நாம் வாழும் காலத்தில், “பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்” என்று யெகோவா சொன்னார். (சக. 8:23) அந்த ‘யூதன்,’ பரலோக நம்பிக்கையுள்ளவர்களை குறிக்கிறார். அவர்களை “கடவுளுடைய இஸ்ரவேலர்” என்றும் பைபிள் சொல்கிறது. (கலா. 6:16) அந்த ‘பத்து மனிதர்கள்,’ பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள மக்களை குறிக்கிறார்கள். பரலோக நம்பிக்கையுள்ளவர்களை யெகோவாதான் வழிநடத்துகிறார் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதை இவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள்.
2 கடவுளுடைய மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சகரியா தீர்க்கதரிசி சொன்னது போலவே இயேசுவும் சொன்னார். ‘சிறுமந்தையும்’ ‘வேறே ஆடுகளும்’ இரண்டு தொகுதிகளாக இருந்தாலும் இவர்கள் தன்னையே பின்பற்றுவார்கள், ‘ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாக’ இருப்பார்கள் என்று இயேசு சொன்னார். (லூக். 12:32; யோவா. 10:16) சிலர் இப்படி யோசிக்கலாம்: (1) இன்று பூமியில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாருடைய பெயரையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமா? (2) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும்? (3) சபையில் யாராவது ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட ஆரம்பித்தால் அவரிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (4) பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாவதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு இப்போது பதில் தெரிந்துகொள்ள போகிறோம்.
பரலோக நம்பிக்கை உள்ளவர்களின் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
3. யாரெல்லாம் பரலோகத்துக்குப் போவார்கள் என்று நம்மால் ஏன் உறுதியாக சொல்ல முடியாது?
3 இன்று பூமியில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாருடைய பெயரையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், அவர்களில் யாரெல்லாம் பரலோகத்துக்குப் போவார்கள் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.[1] (பின்குறிப்பு) பரலோகத்துக்குப் போக யெகோவா அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர்கள் கடைசிவரை அவருக்கு உண்மையாக இருந்தால் மட்டும்தான் அந்தப் பரிசைப் பெறுவார்கள். இது சாத்தானுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவர்கள் உண்மையாக இருக்க கூடாது என்பதற்காக ‘போலித் தீர்க்கதரிசிகளை’ பயன்படுத்தி அவர்களை ‘ஏமாற்றுகிறான்.’ (மத். 24:24) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அந்தப் பரிசைப் பெற தகுதியுள்ளவர்கள் என்பதை யெகோவாதான் தீர்மானிப்பார், அதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவார். அவர்கள் இறந்துபோவதற்கு முன்பு, அல்லது ‘மிகுந்த உபத்திரவம்’ ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்பு, யெகோவா அவர்களுக்குக் கடைசி முத்திரையைக் கொடுப்பார்.—வெளி. 2:10; 7:3, 14.
4. இன்று இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாருடைய பெயரையும் தெரிந்துகொள்ள முடியாது என்றால் நாம் எப்படி அவர்களைப் பின்பற்ற முடியும்?
4 இன்று பூமியில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாருடைய பெயரையும் தெரிந்துகொள்ள முடியாது என்றால் வேறே ஆடுகளால் எப்படி அவர்களைப் பின்பற்ற முடியும்? பத்து மனுஷர், “ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்” என சொல்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. அந்த வசனத்தில் ‘ஒரு யூதன்’ என்று சொல்லியிருந்தாலும் அவர் பரலோக நம்பிக்கையுள்ள எல்லா கிறிஸ்தவர்களையும் குறிக்கிறார். வேறே ஆடுகள் இதைப் புரிந்துவைத்திருப்பதால் அந்தத் தொகுதியில் இருப்பவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குகிறார்கள். அந்தத் தொகுதியில் இருக்கிற ஒவ்வொருவருடைய பெயரையும் தெரிந்துகொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை. ஏனென்றால், இயேசு மட்டும்தான் நமக்குத் தலைவராக இருக்கிறார், அவரையே நாம் பின்பற்ற வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.—மத். 23:10.
அவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும்?
5. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எந்த எச்சரிப்பை ஞாபகத்தில் வைக்க வேண்டும், ஏன்?
5 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் 1 கொரிந்தியர் 11:27-29-ல் உள்ள எச்சரிப்பை எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். (வாசியுங்கள்.) அந்த வசனங்களில் பவுல் என்ன விஷயத்தை விளக்குகிறார்? பரலோக நம்பிக்கையுள்ள ஒருவர் யெகோவாவோடு நல்ல நட்பை வைத்துக்கொள்ளாமல்... அவருக்கு உண்மையாக இல்லாமல்... ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட்டால் அவர் அதை ‘தகுதியில்லாத’ விதத்தில் சாப்பிடுகிறார் என்று அர்த்தம். (எபி. 6:4-6; 10:26-29) அதனால், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற முக்கியமான எச்சரிப்பை பவுல் கொடுக்கிறார். அப்போதுதான், “கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் விடுக்கும் பரலோக அழைப்பாகிய பரிசை” அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.—பிலி. 3:13-16.
6. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்களைப் பற்றி எப்படி நினைப்பதில்லை?
6 பரலோக நம்பிக்கை உள்ளவர்களிடம் பவுல், “நம் எஜமானருக்காகக் கைதியாய் இருக்கிற நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார். தகுதியானவர்களாக நடந்துகொள்வது எப்படி என்பதையும் அவர் விளக்கினார். “எப்போதும் மனத்தாழ்மையோடும் சாந்தத்தோடும் நீடிய பொறுமையோடும் நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு வாழ்வதற்கும் ஊக்கமாய் முயற்சி செய்யுங்கள்” என்று சொன்னார். (எபே. 4:1-3) மனத்தாழ்மையாக இருக்க கடவுளுடைய சக்திதான் ஒருவருக்கு உதவுகிறது. (கொலோ. 3:12) அதனால், பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் மற்றவர்களைவிட தங்களை உயர்வாக நினைப்பதில்லை. வேறே ஆடுகளைவிட அவர்களுக்கு யெகோவா நிறைய சக்தி கொடுக்கிறார் என்று அவர்கள் நினைப்பதில்லை. மற்றவர்களைவிட அவர்களால் பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் நினைப்பதில்லை. ஒருவரை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு அவரை ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடும்படி சொல்வதில்லை. ஏனென்றால், ஒருவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை அவர்கள் மனத்தாழ்மையாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
7, 8. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எதை எதிர்பார்ப்பது கிடையாது, ஏன்?
7 யெகோவா தங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதை நினைத்து பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். இருந்தாலும், மற்றவர்கள் தங்களை விசேஷமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது கிடையாது. (எபே. 1:18, 19; பிலிப்பியர் 2:2, 3-ஐ வாசியுங்கள்.) யெகோவா ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பது அந்த நபருக்கு மட்டும்தான் தெரியும், வேறு யாருக்கும் யெகோவா அதை தெரியப்படுத்தவில்லை. அதனால், ஒருவருக்கு பரலோக நம்பிக்கை இருப்பதை சிலர் உடனே நம்பவில்லை என்றால் அதை நினைத்து அவர் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அதோடு, ஒரு விசேஷ பொறுப்பை கடவுள் கொடுத்திருப்பதாக யாராவது சொன்னால் உடனே நம்பிவிட கூடாது என்று பைபிள் சொல்வதும் அவருக்குத் தெரியும். (வெளி. 2:2) மற்றவர்கள் தன்னை விசேஷமாக நடத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்காததால் பார்க்கிற எல்லாரிடமும், “எனக்கு பரலோக நம்பிக்கை இருக்கு” என்றும் சொல்ல மாட்டார். சொல்லப்போனால் அதை அவர் யாரிடமும் சொல்ல மாட்டார். அதோடு, அவர் பரலோகத்தில் செய்யப்போகும் விஷயங்களைச் சொல்லி பெருமையடிக்கவும் மாட்டார்.—1 கொ. 1:28, 29; 1 கொரிந்தியர் 4:6-8-ஐ வாசியுங்கள்.
8 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தாங்கள் ஒரு விசேஷ தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்று நினைப்பதில்லை. மற்ற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களோடு மட்டுமே நேரம் செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அவர்களோடு மட்டுமே பைபிளை ஆழமாகப் படிக்க வேண்டும்... கடவுள் தங்களைத் தேர்ந்தெடுத்த அனுபவத்தைப் பற்றி பேச வேண்டும்... என்றும் நினைப்பதில்லை. (கலா. 1:15-17) ஒருவேளை அவர்கள் அப்படியெல்லாம் செய்தால் சபையில் ஒற்றுமை இருக்காது, கடவுளுடைய சக்திக்கு எதிராக நடப்பவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், சபை ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருக்க அந்த சக்தித்தான் உதவுகிறது.—ரோமர் 16:17, 18-ஐ வாசியுங்கள்.
அவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
9. பரலோக நம்பிக்கையுள்ள சகோதர சகோதரிகளிடம் நடந்துகொள்ளும் விதத்தில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? (“அன்பு ‘கேவலமாக நடந்துகொள்ளாது’” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
9 பரலோக நம்பிக்கை உள்ளவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? சீடர்களிடம் இயேசு, “நீங்கள் எல்லாரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்” என்று சொன்னார். அதோடு, “தன்னைத்தானே உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்” என்றும் சொன்னார். (மத். 23:8-12) அதனால், நாம் யாரையும் அளவுக்கு அதிகமாக புகழக் கூடாது. அவர்கள் பரலோக நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால்கூட அப்படிச் செய்யக் கூடாது. மூப்பர்களுடைய “விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” என்று பைபிள் சொன்னாலும் அவர்கள் யாரையும் நாம் தலைவராகப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறது. (எபி. 13:7) ஆனால், சிலர் “இரட்டிப்பான மதிப்பை பெறத் தகுதியுள்ளவர்களாக” இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. அவர்களுக்கு பரலோக நம்பிக்கை இருப்பது அதற்குக் காரணம் அல்ல. ‘சபையை நல்ல விதத்தில் நடத்துவதும், கடவுளுடைய வார்த்தையைக் குறித்துப் பேசுவதிலும் கற்பிப்பதிலும் கடுமையாய் உழைப்பதுமே’ அதற்குக் காரணம். (1 தீ. 5:17) பரலோக நம்பிக்கையுள்ளவர்களை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்தாலோ அவர்களுக்கு அதிக கவனம் செலுத்தினாலோ அவர்கள் ரொம்ப தர்மசங்கடமாக உணரலாம். அவர்களுக்குள் பெருமை என்ற குணம் வருவதற்குக்கூட நாம் காரணமாகிவிடலாம். (ரோ. 12:3) கிறிஸ்துவின் சகோதரர்கள் தவறு செய்வதற்கு நாம் எந்த விதத்திலும் காரணமாக இருக்கக் கூடாது.—லூக். 17:2.
ஒருவர் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட ஆரம்பித்தால் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்க வேண்டும்? (பாரா 9-11)
10. யெகோவா தேர்ந்தெடுத்த ஒருவர்மீது உங்களுக்கு மதிப்பு இருப்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
10 யெகோவா தேர்ந்தெடுத்த ஒருவருக்கு நாம் எப்படி மதிப்பு காட்டலாம்? யெகோவா அவரை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்றெல்லாம் நாம் அவரிடம் கேட்க மாட்டோம். ஏனென்றால், அது அவருடைய சொந்த விஷயம்; அதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. (1 தெ. 4:11; 2 தெ. 3:11) அவருடைய கணவர், மனைவி, அப்பா-அம்மா, அல்லது குடும்பத்தில் இருக்கிற யாராவது பரலோக நம்பிக்கையுள்ளவராக இருப்பார் என்று நாமாகவே நினைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு பரலோக நம்பிக்கை இருந்தால் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. (1 தெ. 2:12) அதேசமயம் அவர்கள் மனதைக் கஷ்டப்படுத்தும் கேள்விகளை நாம் கேட்க மாட்டோம். உதாரணத்துக்கு, பரலோக நம்பிக்கையுள்ள ஒருவருடைய மனைவியிடம், ‘புதிய உலகத்துல உங்க கணவர் உங்ககூட இருக்க மாட்டார்னு நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கு?’ என்று கேட்க மாட்டோம். புதிய உலகத்தில் யெகோவா எல்லாருடைய ஆசையையும் திருப்தியாக்குவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—சங். 145:16.
11. மற்றவர்களைவிட பரலோக நம்பிக்கையுள்ளவர்களை உயர்வாக நினைக்காமல் இருப்பது நமக்கு எப்படிப் பாதுகாப்பாக இருக்கிறது?
11 மற்றவர்களைவிட பரலோக நம்பிக்கையுள்ளவர்களை உயர்வாக நினைக்காமல் இருப்பது நமக்குத்தான் பாதுகாப்பு. எப்படி? பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் “போலிச் சகோதரர்கள்” சபையில் இருக்கலாம் என்று பைபிள் சொல்கிறது. (கலா. 2:4, 5; 1 யோ. 2:19) அதோடு, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் சிலர் கடவுளுக்கு உண்மையாக இல்லாமலும் போகலாம். (மத். 25:10-12; 2 பே. 2:20, 21) பரலோக நம்பிக்கை உள்ளவர்களையும் சரி யெகோவாவை ரொம்ப வருஷமாக சேவிப்பவர்களையும் சரி, நாம் உயர்வாக நினைக்க ஆரம்பித்தால் அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவோம். அவர்கள் ஒருவேளை யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டால், அல்லது சபையை விட்டு போய்விட்டால் நம் விசுவாசம் குறைந்துவிடும், யெகோவாவை சேவிப்பதையும் விட்டுவிடுவோம்.—யூ. 16.
எண்ணிக்கை அதிகமாவதை நினைத்து கவலைப்பட வேண்டுமா?
12, 13. ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறவர்களுடைய எண்ணிக்கை அதிகமாவதை நினைத்து நாம் ஏன் கவலைப்பட வேண்டியதில்லை?
12 ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறவர்களுடைய எண்ணிக்கை பல வருஷங்களாகக் குறைந்துகொண்டே வந்தது. ஆனால் இப்போது, அந்த எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. அதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்று இப்போது பார்க்கலாம்.
13 “தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்.” (2 தீ. 2:19) ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் சகோதரரால் யாருக்கெல்லாம் உண்மையிலேயே பரலோக நம்பிக்கை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், சிலர் தங்களுக்குப் பரலோக நம்பிக்கை இருக்கிறது என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு அதைச் சாப்பிடுகிறார்கள். இதற்கு முன்பு சாப்பிட்டுக்கொண்டு இருந்த சிலர், பிறகு அதை நிறுத்தியிருக்கிறார்கள். சிலருக்கு மனநோய் இருப்பதால் தாங்களும் கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போவதாக நினைத்துக்கொண்டு அதைச் சாப்பிடுகிறார்கள். அதனால் இன்று பூமியில் இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் எண்ணிக்கையை நம்மால் சரியாகச் சொல்ல முடியாது.
14. மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது பூமியில் இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
14 தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இயேசு பரலோகத்துக்கு அழைத்துக்கொண்டுபோக வரும்போது அவர்கள் பூமியில் பல இடங்களில் இருப்பார்கள். இயேசு “தமது தேவதூதர்களை எக்காள முழக்கத்துடன் அனுப்புவார்; கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வானத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நாலாபக்கத்திலிருந்தும் அவர்கள் கூட்டிச்சேர்ப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (மத். 24:31) கடைசி நாட்களில் பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் கொஞ்சம் பேர்தான் பூமியில் இருப்பார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. (வெளி. 12:17) ஆனால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது அவர்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று சொல்லவில்லை.
15, 16. பரலோக நம்பிக்கையுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?
15 பரலோக நம்பிக்கையுள்ளவர்களை எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யெகோவாதான் தீர்மானிப்பார். (ரோ. 8:28-30) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பரலோக நம்பிக்கையுள்ளவர்களை யெகோவா தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். ஒருவேளை முதல் நூற்றாண்டில் இருந்த எல்லா உண்மை கிறிஸ்தவர்களுக்கும் பரலோக நம்பிக்கை இருந்திருக்கலாம். முதல் நூற்றாண்டில் இருந்து கடைசி நாட்கள் ஆரம்பிக்கும்வரை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட நிறையப் பேர் இயேசுவைப் பின்பற்றவில்லை. இருந்தாலும் அந்தச் சமயத்தில், தனக்கு உண்மையாக இருந்த சிலரை யெகோவா தேர்ந்தெடுத்தார். இயேசு சொன்னதுபோல் அவர்கள் களைகள் மத்தியில் உள்ள கோதுமைகளாக இருந்தார்கள். (மத். 13:24-30) யெகோவா 1,44,000 பேரில் சிலரை கடைசி நாட்களிலும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.[2] (பின்குறிப்பு) இந்த உலகத்துக்கு முடிவு வருவதற்கு முன்பு யெகோவா இன்னும் சிலரைத் தேர்ந்தெடுக்க நினைத்தால் அதைப் பற்றி நாம் கேள்வி கேட்க மாட்டோம். ஏனென்றால் யெகோவா எதைச் செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். (ஏசா. 45:9; தானி. 4:35; ரோமர் 9:11, 13, 16-ஐ வாசியுங்கள்.)[3] (பின்குறிப்பு) இயேசு சொன்ன உதாரணத்தில் வரும் கூலியாட்களைப் போல் நாம் ஒருநாளும் இருக்க கூடாது. ஏனென்றால், கடைசி நேரத்தில் வேலைக்கு சேர்ந்த கூலியாட்களுக்கும் எஜமான் அதே கூலியைக் கொடுத்ததற்காக அவர்கள் குறை சொன்னார்கள்.—மத்தேயு 20:8-15-ஐ வாசியுங்கள்.
16 பரலோக நம்பிக்கையுள்ள எல்லாருமே ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ இல்லை. (மத். 24:45-47) முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இன்றும், யெகோவாவும் இயேசுவும் கொஞ்சம் பேரைப் பயன்படுத்தி நிறையப் பேருக்கு பைபிளில் இருக்கும் விஷயங்களைச் சொல்லித் தருகிறார்கள். முதல் நூற்றாண்டில் பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் ஒருசிலரைப் பயன்படுத்தித்தான் கிரேக்க வேதாகமத்தை யெகோவா எழுதினார். இன்றும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் ஒருசிலரை பயன்படுத்தித்தான் யெகோவா நமக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிக்கிறார்.’
17. இந்தக் கட்டுரையில் இருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?
17 இந்தக் கட்டுரையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம்? இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்ய கொஞ்சம் பேரை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். மற்றவர்களை இந்தப் பூமியில் என்றென்றும் வாழ வைக்கப்போகிறார். இந்த இரண்டு தொகுதியையும் யெகோவா ஆசீர்வதிக்க போகிறார். ஆனால் அவர்கள் எல்லாரும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும், மனத்தாழ்மையாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக அவருக்குச் சேவை செய்ய வேண்டும், சபை சமாதானமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த உலகத்துக்கு முடிவு நெருங்கிக்கொண்டே வருவதால் நாம் ஒரே மந்தையாக இருந்து இயேசுவைப் பின்பற்றலாம். தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யலாம்.
^ [1] (பாரா 3) சங்கீதம் 87:5, 6 சொல்கிறபடி இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்கிற எல்லாருடைய பெயரையும் யெகோவா எதிர்காலத்தில் நமக்குச் சொல்லலாம்.—ரோ. 8:19.
^ [2] (பாரா 15) அப்போஸ்தலர் 2:33 சொல்வதுபோல் ஒருவருக்கு இயேசு மூலமாக சக்தி கிடைத்தாலும் யெகோவாதான் அந்த நபரைத் தேர்ந்தெடுக்கிறார்.
^ [3] (பாரா 15) இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள மே 1, 2007 காவற்கோபுரத்தில் பக். 30-31-ல் இருக்கும் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள்.