நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—செவிகொடுப்பதன் மூலம் அதிக திறம்பட்டவிதமாக
1 நம் ஊழியத்தில் திறம்பட்டவர்களாக இருக்க, எந்த இரண்டு நபரும் ஒரே விதமாக இருப்பதில்லை என்பதை நாம் கண்டுணர வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்களையும் அதோடு வித்தியாசமான தனிப்பட்ட அக்கறைகளையும் விருப்பங்களையும் கொண்டிருக்கின்றனர். ராஜ்ய செய்தியை தனிப்பட்டதாக்குவது, அதாவது, நாம் யாரிடம் பேசுகிறோமோ அவருக்கு தனிப்பட்ட விதத்தில் அது எதை குறிக்கிறது என்பதைக் காட்டுவது சவாலாயிருக்கிறது. இதை திறம்பட்ட விதமாகச் செய்வதற்கு, நாம் கவனமாகச் செவி கொடுக்கவும் வேண்டும்.
2 அநேக பிரஸ்தாபிகள் தங்கள் முன்னுரைகளில் சாதுரியமாக கேள்விகளை உபயோகிக்கின்றனர், இது வீட்டுக்காரரை ஒரு சம்பாஷணையில் உட்படுத்த உதவி செய்கிறது. வீட்டுக்காரரை சங்கோஜம் அடையச் செய்யாமல் இருக்கும் நோக்குநிலை கேள்விகள் மிக அதிக திறம்பபட்டவையாய் இருக்கும். ஆனால் ஒரு வீட்டுக்காரர் பேசும் போது, அவர் என்ன சொல்லுகிறாரோ அதற்கு செவிகொடுப்பது அதிக முக்கியமானதாக இருக்கிறது. செவி கொடுப்பது அயலான் பேரில் அன்பையும் மரியாதையையும் வெளிக்காட்டுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் அந்த நபரின் சிந்தனைக்குள் நாம் உட்பார்வை பெறுகிறோம். ஒரு நபரின் சூழ்நிலைமைகளை அறிந்திருப்பது, அவருடைய நிலைமையில் நம்மை வைத்துப் பார்க்க நமக்கு உதவி செய்கிறது. அதற்குப் பிறகு நாம் அவரோடு பைபிளிலிருந்து ஆறுதலையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்ளலாம்.
மாற்றியமைத்துக்கொள்பவர்களாய் இருங்கள்
3 அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுறுத்தினார்: “நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரோடும் எவ்வாறு சிறந்த விதத்தில் பேசுவது என்பதைப் படியுங்கள்.” (கொலோ. 4:6, புதிய ஆங்கி பைபிள்) ஒரு நபர் என்ன சொல்லுவார் என்பதை துல்லியமாக முன்னதாகவே நாம் அறியாதிருந்தாலும், இன்றைக்கு அநேக ஜனங்கள் எதிர்ப்படும் பிரச்னைகளோடு நாம் அறிமுகமாகியிருக்கிறோம். ஆக, நாம் “படித்து” பல்வேறு நிலைமைகளுக்கு பிரதிபலிக்க மனதில் தயாராயிருக்கலாம்.
4 உதாரணமாக, உலக சமாதானம் என்ற பொருளின் பேரில் சம்பாஷிக்க நாம் ஒருவேளை தயாரித்திருக்கலாம், ஆனால் வீட்டுக்காரர் தன் வேலையை இழந்துவிட்டிருப்பதாக குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பை நாம் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டுமா? சந்தேகத்துக்கிடமின்றி, தன் வீட்டாரின் தேவைகளுக்கு ஏற்பாடு செய்வது அவருடைய மனதையும் இருதயத்தையும் அழுத்துகிறது. அவருடைய தேவைகளுக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கலாம்? அவர் நிலையில் நீங்கள் உங்களை வைத்துப் பார்த்து, அவருடைய நிலைமைக்கு உண்மையான அக்கறையைக் காண்பிக்கலாம். பின்பு, திருப்தியான வேலையையும், நமக்கு தேவையானவைகள் அனைத்தையும் எவ்வாறு கடவுளுடைய அரசாங்கம் ஏற்பாடு செய்யும் என்பதைக் காண்பிக்கும் வேதவசனங்களுக்கு அவருடைய கவனத்தை தயவாய் திருப்பலாம்.—ஏசா. 65:17, 21, 22, 24.
5 அந்த நபரோ அல்லது அவரது குடும்பத்தின் ஓர் அங்கத்தினரோ சமீபத்தில் ஒரு குற்றச்செயலினால் தாக்கப்பட்டதையோ அல்லது ஏதோ அநீதிக்கு ஆளாகியிருப்பதையோ நாம் ஒருவேளை அறியவரலாம். இச் சூழ்நிலைமைகளில், நமது தனிப்பட்ட அக்கறையும், பரிவான கரிசனையும் அந்த நபரின் இருதயத்தை மென்மைப்படுத்தலாம், இப்பேர்ப்பட்ட துன்பந்தரும் பிரச்னைகளைப் பற்றி யெகோவா தேவனுக்கு நன்றாகத் தெரியும், அவர் விரைவில் எல்லா துன்மார்க்கத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்பதை அவரிடம் காண்பிப்பதை அது சாத்தியமாக்கும்.—நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 10, 12, 229–31 பார்க்கவும்.
6 நன்றாக பேச்சுத் தொடர்பு கொண்டிராத நபர்களுக்கிடையே சீர்குலைந்த உறவுமுறைகள் பொதுவாக ஏற்படுகின்றன. ஒருவர் பேசும் போது, எதிரில் இருப்பவர் தன் மனதோடும் இருதயத்தோடும் உண்மையில் செவி கொடுத்துக் கேட்பதில்லை. அப்பேர்ப்பட்ட மோசமாக செவிகொடுக்கும் பழக்கம் தவறாக புரிந்துகொள்வதிலும் அல்லது யாராவது ஒருவருக்கு உதவி செய்ய சந்தர்ப்பங்களை தவறவிடுவதிலும் விளைவடையலாம். மரியாதையுடன் செவி கொடுத்துக் கேட்கும் நல்ல பழக்கத்தை விருத்தி செய்வதன் மூலம், நாம் அதிக திறம்பட்ட விதமாக நற்செய்தியை அளிக்கலாம், மற்றவர்களில் யெகோவாவின் சுயநலமற்ற அக்கறையை பிரதிபலிக்கலாம், மேலும் நம் அன்பான சிருஷ்டிகருடனும், அவருடைய ஜனங்களுடனும் மற்றவர்கள் ஒரு நல்ல உறவை வளர்த்துக் கொள்ள உதவலாம்.—யாக். 1:19; g74 11/22 பக்.21–3.