இந்த ஊழிய ஆண்டின்போதுநாம் எதை நிறைவேற்றுவோம்?
1 செப்டம்பர் 1-ல் துவங்கும் 1994 ஊழிய ஆண்டு முதல், யெகோவாவின் மக்களாக, இந்தப் புதிய ஊழிய ஆண்டின்போது, தனிப்பட்ட நபர்களாகவும் ஓர் அமைப்பாகவும் நாம் எதை நிறைவேற்ற விரும்புகிறோம் என்பதை நம்முடைய மனங்களில் தெளிவாக நிலைநாட்டுவதற்கு நம் அனைவருக்கும் இப்பொழுது இது பொருத்தமான சமயமாயிருக்கிறது.
2 ஆவிக்குரிய விதமாகத் தொடர்ந்து வளருங்கள்: நாம் சத்தியத்துடன் புதிதாகத் தொடர்புகொண்டவர்களாக இருப்போமாகில், விசுவாசத்தில் பலமுள்ளவர்களாக ஆவதற்கு நாம் ஆசைப்படவேண்டும். (எபி. 6:1-3) நாம் ஏற்கெனவே ஆவிக்குரிய விதமாகப் பலமுள்ளவர்களாய் இருப்போமாகில், புதியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நாம் உதவிசெய்வதோடு மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த ஆவிக்குரிய தன்மைக்குங்கூட நாம் நெருங்கிய கவனஞ்செலுத்தவேண்டும். தேவையான அனைத்து பைபிள் அறிவையும் அனுபவத்தையும் நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம் என்று ஒருபோதும் உணரக்கூடாது. நாம் தினவசனத்தைச் சிந்திக்கிறோமா, தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பைபிள்-வாசிப்புத் திட்டத்தின்படி படித்து வருகிறோமா, மேலும் சபைப் புத்தகப் படிப்புக்காகவும் காவற்கோபுர படிப்புக்காகவும் தயார்செய்கிறோமா? அது நம் அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச இலக்காய் இருக்கவேண்டும். நாம் இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் அழிவைத் தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகில் பாதுகாக்கப்படவேண்டுமாகில், நாம் ஆவிக்குரிய விதமாகத் தொடர்ந்து வளரவேண்டும்.—பிலிப்பியர் 3:12-16-ஐ ஒப்பிடுங்கள்.
3 ஆவிக்குரிய விதமாகச் சுத்தமாய் தொடர்ந்திருங்கள்: யெகோவாவுக்கு முன்பாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவர்களாக இருப்பதற்காக, நாம் “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க” சுத்திகரிக்கப்பட வேண்டும். (2 கொ. 7:1) ஒருமுறை நாம் சுத்தமான பிறகு, மீண்டும் இந்தப் பொல்லாதப் பழைய உலகத்தின் ‘சேற்றிலே புரளுவதற்கு’ நாம் ஏன் விரும்புகிறோம்? (2 பேதுரு 2:22-ஐ ஒப்பிடுங்கள்.) நாம் ஆவிக்குரிய விதமாகப் பலமாகவும் சுத்தமாகவும் தொடர்ந்திருப்பதற்குத் தீர்மானமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுது நாம் சாத்தானுடைய தீய சதித் திட்டங்களைக்குறித்து அறியாதவர்களாய், மோசம்போய், பாவத்தில் விழுந்து யெகோவாவின் தயவிலிருந்து விலகினவர்களாக இருக்கமாட்டோம்.—2 கொ. 2:11.
4 ஞானமான அறிவுரைக்குக் கவனஞ்செலுத்துங்கள்: நீதிமொழிகள் 15:22 சுட்டிக்காட்டுகிறது: “ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.” என்றபோதிலும், அந்த வார்த்தைகளைப் பேசியவராகிய சாலொமோன், பின்பு ‘அவருடைய மனைவிகள் தன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படிச் சாயப்பண்ண’ அனுமதித்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்; ஏனென்றால் அந்நிய மனைவிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுபற்றிய கடவுளுடைய அறிவுரையைக் கவனத்திற்கொள்ள அவர் தவறிவிட்டார். (1 இரா. 11:1-4) ஆகவே நாம் தனிப்பட்டவிதமாக ஞானமான அறிவுரைக்குக் கவனஞ்செலுத்தினால் தவிர, நாம் எப்படி யெகோவாவின் சேவையில் திறம்பட்டவர்களாய் இருக்கவோ பின்பற்றப்படுவதற்குத் தகுதியான முன்மாதிரியை வைக்கவோ எதிர்பார்க்க முடியும்? (1 தீ. 4:15) பைபிளின் அறிவுரை நம்முடைய இருதயத்தைக் காத்துக்கொள்ள நமக்கு உதவிசெய்யும். (நீதி. 4:23) யெகோவா நேசிப்பதை நேசிப்பது, அவர் வெறுப்பதை வெறுப்பது, அவருடைய வழிநடத்துதலை விடாமல் நாடிக்கொண்டு அவருக்குப் பிரியமானதைச் செய்துகொண்டிருப்பது ஆகியவை ஒரு நிச்சயமான பாதுகாப்பாய் இருக்கின்றன.—நீதி. 8:13; யோவா. 8:29; எபி. 1:9.
5 யெகோவாவுக்கான நம்முடைய வணக்கமானது உயிர்ப்புத்திறமற்ற ஏதோ ஒன்றல்ல, இந்த உலகில் கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டுகிறவர்களுடையது போன்ற ஒரு தெய்வபக்தி முறையும் அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிறதுபோன்ற சத்தியத்திற்கு இசைவாக ஊக்குவிக்கப்பட்டதாயும், செயல் திறமுடையதாயும், உயிருள்ளதாயும் இருக்கிறது.—யோவா. 4:23, 24.
6 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கான நம்முடைய தீர்மானம் தினமும் சவால்விடப்படலாம். நம்முடைய சகோதரர்களின் “முழுக் கூட்டுறவும்” இப்படிப்பட்ட பரீட்சைகளை எதிர்ப்படுகிறது, மேலும் நம்மைப் பலப்படுத்துவது யெகோவாவே என்ற அறிவினால் நாம் வலிமைப்படுத்தப்படவேண்டும். (1 பே. 5:9, 10, NW) இவ்விதமாக நாம் இந்த 1994 ஊழிய ஆண்டின்போது நம்முடைய ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்றக்கூடியவர்களாய் இருப்போம்.—2 தீ. 4:5.