யெகோவாவுக்கு உங்களுடைய துதியை நீங்கள் ஏப்ரலில் அதிகரிக்க முடியுமா?
1 சங்கீதக்காரனாகிய தாவீது ஏற்கத்தகுந்த முறையில் யெகோவாவைத் துதிப்பதற்கு இருதயப்பூர்வமான ஓர் ஆசையைக் கொண்டிருந்தார், ஆதலால் அவர் அறிவித்தார்: “கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.” (சங். 109:30) வெளி ஊழியத்தில் நம்முடைய பங்கை அதிகரிப்பதன்மூலம் ‘மேன்மேலும் அவரைத் துதிப்பதற்கு’ ஏப்ரல் மாதமே சிறந்த ஒரு காலம். (சங். 71:14) துணைப் பயனியர் அணியில் சேர்ந்துகொள்வதன்மூலம் இதைச் செய்கிற அநேகர் மத்தியில் இருப்பதற்கு நீங்கள் திட்டமிட்டுவருகிறீர்களா?
2 இப்பொழுதே திட்டமிடுங்கள்: “ஊக்கமானவனின் திட்டங்கள் நிச்சயமாகவே நன்மைக்கேதுவானதாகும்,” என்பதாக நீதிமொழிகள் 21:5-ல் (NW) நாம் நினைப்பூட்டப்படுகிறோம். அந்தக் காரியத்தை யெகோவாவிடம் ஜெபத்தில் வைத்து, உங்களுடைய திட்டங்களில் அவரை முதலாவது வைப்பதை இது தேவைப்படுத்துகிறது. (நீதி. 3:5, 6) அடுத்ததாக, ஊழியத்தில் ஒரு நாளில் சராசரியாக இரண்டு மணிநேரம் செலவழிப்பதற்கு எங்கு சரிப்படுத்தல்களைச் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க உங்களுடைய தற்போதைய அட்டவணையைக் கூர்ந்து ஆராயுங்கள். மற்ற நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் ‘காலத்தை வாங்குவது,’ பிரசங்க வேலைக்கு அதிகளவு நேரத்தை ஒதுக்கிவைக்க உங்களை அனுமதிக்கிறது.—எபே. 5:16, NW.
3 பேச்சுத் தொடர்புகொள்ளுங்கள் மற்றும் ஒத்துழையுங்கள்: அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றுவதில் ‘பலப்படுத்தும் உதவியாளாக’ இருந்த ஒரு சிலரைக் குறித்து பேசினார். (கொலோ. 4:11, NW) ஏப்ரலில் சேர்ந்துகொள்ள விரும்புகிற மற்றவர்களோடு உங்களுடைய திட்டங்களைக் கலந்தாலோசியுங்கள். அவர்களுடைய ஆதரவும் தோழமையும் பரஸ்பர ஆவிக்குரிய நன்மைகளைக் கொண்டுவரக்கூடும். ஊழிய ஏற்பாடுகள் அல்லது வேலைசெய்வதற்கான பிராந்தியத்தைப்பற்றி கேள்விகள் இருக்குமானால், ஊழியக் கண்காணி உங்களுக்கு உதவிசெய்யக்கூடும்.
4 குடும்பத்திலிருந்தே வருகிற ஒத்துழைப்பும் ஆதரவும் துணைப் பயனியர் சேவைசெய்ய தனிப்பட்ட அங்கத்தினர்களுக்கு உதவிசெய்யக்கூடும். வீட்டுவேலைகளை தற்காலிகமாக மீண்டும் பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கலாம். இந்த வேலைகளைக் கையாளுவதற்கான அட்டவணையையும் சரிப்படுத்த வேண்டியிருக்கலாம். இந்தத் தேவைகளைக் கலந்தாலோசிக்க குடும்பமாக சேர்ந்து உரையாடுவது, உங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் பயனுள்ளதாய் இருக்கலாம். நல்ல பேச்சுத்தொடர்பும் ஒத்துழைப்பும் வெற்றிக்கான திறவுகோலாக இருக்கிறது.
5 நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள்: சாதகமற்ற சூழ்நிலைமைகளின் காரணமாக துணைப் பயனியர் சேவையை அவசரப்பட்டு புறக்கணிக்காதீர்கள். பள்ளியிலுள்ள இளைஞர், ஓய்வுபெற்றவர்கள், பிள்ளைகளையுடைய குடும்பத் தலைவிகள், முழுநேர வேலைசெய்யும் குடும்பத் தலைவர்கள் ஆகிய அனைவராலும் ஏப்ரலில் துணைப் பயனியர் சேவைசெய்வதற்கு தியாகம்செய்யவும்—சந்தோஷமாக அவ்வாறு செய்யவும்—முடிந்திருக்கிறது. “துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்,” என்பதில் அவர்கள் சங்கீதக்காரனோடு ஒத்துப்போகிறார்கள். ஊழியத்தில் 60 மணிநேரங்களைச் செலவழிப்பதற்கு தேவைப்படுகிற கூடுதலான முயற்சியை அதிக கடினமாக அவர்கள் கருதவில்லை. (சங். 33:1) உங்களால் சேர்ந்துகொள்ள முடியவில்லையென்றால், ஒரு சபை பிரஸ்தாபியாக உங்களுடைய நடவடிக்கையை அதிகரிப்பதன்மூலம் ஏன் அந்தச் சந்தோஷத்தில் பங்குபெறக்கூடாது?
6 அநேகருக்கு, ஏப்ரலில் துணைப் பயனியர் சேவைசெய்வது ஒழுங்கான பயனியர் சேவைசெய்வதற்கு ஒரு படிக்கட்டாக இருந்திருக்கிறது. தங்களுடைய நடவடிக்கையை அதிகரித்த பிறகு, ஒழுங்கான பயனியர் சேவைக்கு மாறுவது அதிக எளிதானதாய் இருந்திருப்பதாக அவர்கள் கண்டனர்.
7 ஆம், ஏப்ரலில் அதிகமான தேவராஜ்ய நடவடிக்கைக்கு காலநிலைதானே சாதகமானதாக இருக்கிறது. நீண்ட பகல்வெளிச்ச நேரங்கள் காலையிலும் மாலையிலும் அதிகமாக சாட்சிகொடுக்க அனுமதிக்கின்றன. நம்முடைய தேவனாகிய யெகோவாவை துதிப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய நாம் விரும்புகிறோம். நமக்காக அவர் செய்த தகுதியற்ற தயவிற்குரிய அநேக செயல்களுக்கு நம்முடைய போற்றுதலைக் காண்பிப்பதற்கு ஏப்ரலில் துணைப் பயனியர் சேவைசெய்வதே ஒரு சிறந்த வழியாகும்.