சகல நற்கிரியைக்கும் நம்மையே மனப்பூர்வமாக அளிப்பது
1 உலகப்பிரகாரமான ஒரு பிரசுரம் யெகோவாவின் சாட்சிகளைக் குறிப்பிட்டு சொன்னது: “சாட்சிகள் செய்வது போல வேறெந்தத் தொகுதியிலுள்ள அங்கத்தினர்களும் தங்கள் மதத்திற்காக அத்தனை கடினமாக உழைப்பதைப் பார்ப்பது கடினமாயிருக்கும்.” யெகோவாவின் சாட்சிகள் ஏன் அவ்வளவு கடினமாகவும் அத்தகைய மனப்பூர்வமான ஆவியோடும் உழைக்கின்றனர்?
2 ஒரு காரணமானது அவர்கள் அவசரவுணர்வினால் ஊக்குவிக்கப்படுகின்றனர். இயேசு பூமியிலுள்ள தம்முடைய வேலையை முடிப்பதற்கு மட்டுப்பட்ட சமயமே இருந்ததை உணர்ந்தார். (யோவா. 9:4) இன்று மகிமைபொருந்திய தேவகுமாரன் தம்முடைய சத்துருக்களின் மத்தியில் கீழ்ப்படுத்திக்கொண்டு செல்கையில், தங்கள் வேலையைச் செய்ய தங்களுக்கு மட்டுப்பட்ட சமயமே இருப்பதாக யெகோவாவின் மக்கள் உணருகின்றனர். ஆகையால், அவர்கள் பரிசுத்த சேவைக்காக தங்களையே மனப்பூர்வமாக அளித்துக் கொண்டிருக்கின்றனர். (சங். 110:1-3) அறுவடைக்கு இன்னும் அதிக ஆட்கள் தேவையாயிருப்பதால், அவர்களுடைய முயற்சிகளில் எந்தத் தளர்ச்சியும் இருக்க முடியாது. (மத். 9:37, 38) ஆகவே, தம்முடைய வேலையில் மனப்பூர்வமான தன்மையையும் ஊக்கத்தையும் காட்டியதற்கு பரிபூரண மாதிரியை வைத்த இயேசுவைப் பின்பற்ற அவர்கள் அதிமுயற்சி எடுக்கின்றனர்.—யோவா. 5:17.
3 யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவுக்கென்று முழு ஆத்துமாவோடு உழைப்பதற்கான இன்னொரு காரணம் என்னவென்றால், அவர்களுடைய உலகளாவிய அமைப்பு மற்றெல்லா தொகுதிகளிலிருந்தும் வித்தியாசப்பட்டதாகத் திகழ்கிறது. உலக மத அமைப்புகள் தங்கள் மதத்தைத் தழுவியவர்களிடமிருந்து ஒரே விதமாகக் குறைந்தளவான நேரத்தையும் முயற்சியையுமே தேவைப்படுத்துகின்றன. அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிற காரியங்கள், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையிலும் மற்றவர்களுடன் கொண்டுள்ள தொடர்புகளிலும், அல்லது வாழ்க்கையில் உள்ள அவர்களின் நாட்டங்களிலும் கொஞ்ச பாதிப்பையே கொண்டுள்ளன, அல்லது எந்தவித பாதிப்பையும் கொண்டிருப்பதில்லை. மெய் விசுவாசத்தின் உந்துவிக்கும் வல்லமையில் குறைவுபட்டவர்களாக, தங்கள் மேய்ப்பர்கள் அவர்கள் எடுக்கிற பெயரளவான முயற்சி போதுமானது என்று உறுதியளித்து, ‘இதமான சொற்களை உரைக்கவேண்டுமென’ வற்புறுத்தி இருக்கின்றனர். (ஏசா. 30:10) அவர்களுடைய குருவர்க்கம், அசட்டை மனப்பான்மையையும் ஆவிக்குரிய சோம்பலையும் தூண்டிவிட்டு அவர்களை ‘செவித்தினவுள்ளவர்களாகச்’ செய்வதன் மூலம் உதவியளித்திருக்கின்றனர்.—2 தீ. 4:3..
4 யெகோவாவின் மக்கள் மத்தியில் என்னே ஒரு வித்தியாசமான நிலை! நம்முடைய வணக்கம் சார்ந்த அனைத்துக் காரியங்களும் முயற்சியையும் சிரமத்தையும் உழைப்பையும் உட்படுத்துகின்றன. ஒவ்வொரு நாளும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும், நாம் நம்புவதை நடப்பித்துக் காட்டுகிறோம். சத்தியம் நமக்கு அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவந்தபோதிலும், அது கேட்பதை நிறைவேற்றுவதற்கு ‘வெகுவான போராட்டம்’ அதில் உட்பட்டிருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:2-ஐ ஒப்பிடுக.) அன்றாட வாழ்க்கையின் உத்தரவாதங்களை கவனித்துக்கொள்வதுதாமே, பெரும்பான்மையரை அதிக வேலையாயிருக்கச் செய்வதற்குப் போதுமானது. என்றபோதிலும், ராஜ்ய அக்கறைகளை முதலிடம் கொடுப்பதிலிருந்து இந்த அக்கறைகள் தடைசெய்யும்படி நாம் அனுமதிப்பதில்லை.—மத். 6:33.
5 யெகோவாவின் சேவையில் செய்யும்படி நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பது அவ்வளவு பயனுள்ளதாகவும் அவசரமாகவும் இருப்பதால் மற்ற நாட்டங்களிலிருந்து நேரத்தை ‘வாங்கி’ ஆவிக்குரிய காரியங்களில் அதிக பயனுள்ளதாய் உபயோகிக்கும்படித் தூண்டப்படுகிறோம். (எபே. 5:16, NW) நம்முடைய தேவபக்தியும் மனப்பூர்வமான ஆவியும் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது என்பதை அறிந்தவர்களாக, நம்முடைய கடினமான வேலையில் தொடர்ந்திருக்க பெரும் தூண்டுவிப்பைக் கொண்டிருக்கிறோம். இப்போது நாம் பெறுகிற நிறைவான ஆசீர்வாதங்களோடும் வரப்போகிற வாழ்க்கை எதிர்பார்ப்புகளோடும், ராஜ்ய அக்கறைகள் சார்பாக தொடர்ந்து ‘கடினமாக உழைத்து நாம் சிரமப்படவேண்டுமென்று’ நம்முடைய தீர்மானம் இருக்கிறது.—1 தீ. 4:10, NW.
6 அர்ப்பணமும் சுய-தியாக ஆவியும்: இன்று பெரும்பான்மையான ஆட்கள் எந்தக் காரியத்தையும்விட பொருளாதார தேவைகளுக்கும் அக்கறைகளுக்கும் முதலிடம் கொடுக்கின்றனர். என்னத்தை உண்பார்கள், குடிப்பார்கள், அல்லது உடுத்துவார்கள் என்பதன்பேரில் கவனத்தை ஒருநிலைப்படுத்துவது முற்றிலும் நியாயமென அவர்கள் உணருகின்றனர். (மத். 6:31) அத்தியாவசியமானவற்றைப் பெற்றதோடு மனநிறைவற்றவர்களாக, இப்போது நல்ல வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழும் இலக்கினாலும், ‘அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருட்களைச் சேர்த்துவைத்து, இப்படியாக இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிருக்க’ தூண்டப்படுகின்றனர். (லூக். 12:19) ஒழுங்காக சர்ச்சுக்கு செல்லும் நபர், தன்னுடைய மதத்தில் கேட்கப்படும் எந்தத் தனிப்பட்ட முயற்சியும் தன்னுடைய உரிமைகளை அபகரிப்பதாய் இருப்பதாக நினைக்கிறார். ஏதோவொரு பொருளாசைமிக்க நாட்டத்தை நிராகரிப்பது அல்லது குறைப்பது, அல்லது சுகபோக அக்கறையை விட்டுக்கொடுப்பது போன்ற எண்ணங்கள் அவருக்கு வெறுக்கத்தக்கது. தன்மீதே சிந்தனையை ஆழ்த்தியவனாக, சுய-தியாக ஆவியை வளர்த்துக்கொள்வது மெய்மையற்றதாகவும் நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் இருக்கிறது.
7 இந்தக் காரியத்தை நாம் வித்தியாசமாக நோக்குகிறோம். நாம் மனிதனுடைய எண்ணங்களை சிந்திப்பதற்கு மாறாக கடவுளுடைய எண்ணங்களை சிந்திக்குமாறு கடவுளுடைய வார்த்தை நம்முடைய சிந்தனையை உயர்த்தியிருக்கிறது. (ஏசா. 55:8, 9) வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் இலக்குகள் மாம்சப்பிரகாரமான நாட்டங்களை விஞ்சிவிடுகின்றன. யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதும் அவருடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதும் முழு சர்வலோகத்திலேயே அதிமுக்கியமான விவாதங்களாக இருக்கின்றன. இந்த விவாதங்களின் அளவு அவ்வளவு பெரியதாயிருப்பதால், ஒப்பிடுகையில், சகல தேசங்களும் “அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை.” (ஏசா. 40:17) கடவுளுடைய சித்தத்தைப் புறக்கணிக்கும் விதத்தில் நம்முடைய வாழ்க்கையை வாழ விரும்பும் எந்த முயற்சியும் முட்டாள்தனமாகக் கருதப்படவேண்டும்.—1 கொ. 3:19.
8 ஆகவே நம்முடைய ராஜ்ய நடவடிக்கைகளைத் தொடருவதில் சில பொருளாதார காரியங்கள் தேவையானவையாகவும் மற்றவை பிரயோஜனமுள்ளவையாகவும் இருக்கிறதென்றாலும், இவையே உண்மையில் ‘அதிமுக்கியமான காரியங்கள்’ அல்ல என்று நாம் உணருகிறோம். (பிலி. 1:10, NW) பொருளாதார அக்கறைகளை நாடுவதை மட்டுப்படுத்துவதில் 1 தீமோத்தேயு 6:8-ன் உட்கருத்தை நாம் பின்பற்றி, நம்முடைய இருதயங்களை ‘காணப்படாத நித்தியமானவை’ பேரில் ஒருநிலைப்படுத்தி வைக்க நாம் ஞானமாக முயலுகிறோம்.—2 கொ. 4:18.
9 கடவுளுடைய யோசனைகளை எவ்வளவு அதிகமாக சிந்திக்கிறோமோ, அந்தளவு நமக்குப் பொருளாதார காரியங்களைப் பற்றிய குறைவான கவலை இருக்கிறது. யெகோவா ஏற்கெனவே நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதையும் எதிர்காலத்திற்காக அவர் வாக்கு செய்திருக்கிற மகத்தான ஆசீர்வாதங்களையும் எண்ணிப் பார்த்தால், நம்மிடம் அவர் கேட்கும் எந்தத் தியாகத்தையும் நாம் செய்ய மனமுள்ளவராக இருக்கிறோம். (மாற். 10:29, 30) உயிர் வாழ்வதற்கே நாம் அவருக்கு கடன்பட்டிருக்கிறோம். அவருடைய இரக்கமும் அன்பும் மாத்திரம் இல்லையென்றால், இப்போது நாம் வாழ்க்கையை அனுபவித்து மகிழமாட்டோம், எந்தவொரு எதிர்காலமும் இருக்காது. நம்மையே நாம் அளிக்க கடன்பட்டிருப்பதாக உணருகிறோம், ஏனென்றால் அவருடைய சேவையில் செய்யும் எல்லாக் காரியங்களும் நாம் ‘செய்யவேண்டியவை’ ஆகும். (லூக். 17:10) ‘பெருக அறுப்போம்’ என்பதை அறிந்தவர்களாக, யெகோவாவுக்கு திரும்பக் கொடுக்குமாறு சொல்லப்படுகிற எதையுமே நாம் உற்சாக மனதோடு அளிக்கிறோம்.—2 கொ. 9:6, 7.
10 மனப்பூர்வமான வேலையாட்கள் இப்போது தேவைப்படுகின்றனர்: அதன் ஆரம்பத்திலிருந்தே, கிறிஸ்தவ சபை தீவிரமான நடவடிக்கையின் காலப்பகுதிக்குள் நுழைந்தது. பொ.ச. 70-ல் கவிழ்க்கப்படுவதற்கு முன்பாக முற்றுமுழுமையான சாட்சி கொடுக்கப்பட வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தின்போது, இயேசுவின் சீஷர்கள் ‘தேவ வார்த்தையைப் போதிப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தனர்.’ (அப்போஸ்தலர் பணி 18:5, கத்.பை.) வேகமான விஸ்தரிப்பு, அதிக சுவிசேஷகர்களையும் திறமைவாய்ந்த மேய்ப்பர்களையும் பயிற்றுவித்து, அவர்களுடைய உதவியைப் பெறுவதை அவசியப்படுத்தியது. உலக அதிகாரிகளோடு தொடர்புகொள்ள அனுபவமிக்க மனிதர்களும் பொருளாதார காரியங்களைத் திரட்டி, விநியோகிப்பதை மேற்பார்வையிட திறம்பட்ட ஆட்களும் தேவையாயிருந்தனர். (அப். 6:1-6; எபே. 4:11) பலரால் அறியப்பட்ட நிலையில் சிலர் சேவை செய்தாலும், பெரும்பான்மையர் பின்னணியில் இருந்தனர். ஆனால் எல்லாருமே ‘மும்முரமாகத் தங்களை சிரமத்திற்குட்படுத்தி,’ வேலை நடைபெற ஒருமிக்க முழு இருதயத்துடன் பணிபுரிந்தனர்.—லூக். 13:24, NW.
11 பின்தொடர்ந்துவந்த அநேக நூற்றாண்டுகளின்போது உலகளாவிய அளவில் சுறுசுறுப்பான நடவடிக்கைக்கு அவ்வளவு தேவையில்லாவிடினும், 1914-ல் இயேசு தம்முடைய ராஜ்ய வல்லமையை ஏற்றபோது, ராஜ்ய நடவடிக்கையில் பெரிய மறுமலர்ச்சி தொடங்கியது. ராஜ்ய அக்கறைகள் சார்பாக வேலையாட்களின் தேவை மிகவும் அதிகமாகி, உலக முழுவதிலுமுள்ள தேசங்களிலிருக்கிற லட்சக்கணக்கான மனப்பூர்வ ஆட்களின் உதவியை தேவைப்படுத்தும் என்பதை முதன்முதலில் ஒருசிலரே உணர்ந்தனர்.
12 இன்று, நம்முடைய உதவியாதாரங்களை அவற்றின் மிக உயர்ந்த மட்டத்திற்கு வற்புறுத்தியிருக்கிற பெரும் வித்தியாசப்பட்ட திட்டவேலைகளில் அமைப்பு ஆழமாக உட்பட்டிருக்கிறது. ராஜ்ய நடவடிக்கை மகத்தான அளவில் முன்னேறிச் செல்கிறது. நம்முடைய நாட்களின் அவசரத்தன்மையானது, நம்மைநாமே பெருமுயற்சியில் ஈடுபடுத்தி, செய்யவிருக்கிற வேலையை நிறைவேற்ற நம்முடைய வசத்திலிருக்கிற ஒவ்வொரு உடைமையையும் பயன்படுத்த தூண்டுவிக்கிறது. முழு பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவு மிகவும் அருகாமையில் நெருங்கி வந்துகொண்டிருக்க, முன்னுள்ள நாட்களில் இன்னும் மும்முரமான நடவடிக்கையை நாம் எதிர்பார்க்கிறோம். இந்த அவசரமான கூட்டிச்சேர்ப்பு வேலையில் தன்னையே மனப்பூர்வமாக அளிக்கும்படியாக யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியரும் கேட்கப்படுகிறார்.
13 என்ன செய்யவேண்டியிருக்கிறது? ‘கர்த்தருடைய வேலையில் அதிகம் செய்யவேண்டியிருக்கிறது’ என்று நாம் உண்மையில் சொல்லலாம். (1 கொ. 15:58) அநேக பிராந்தியங்களில் அறுவடை கனிந்திருக்கிறது, வேலையாட்களோ கொஞ்சம். நம்முடைய சொந்த பிராந்தியம் முழுவதும் சாட்சிகொடுப்பதில் அதிக முற்றுமுழுமையாக இருப்பதன் மூலம் மாத்திரம் அன்றி, அதிக தேவையிருக்கும் இடத்தில் சென்று சேவிக்கும் சவாலை எதிர்ப்படுவதன் மூலமும் நம் பங்கை வகிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
14 உலகின் எல்லா பகுதிகளிலுமுள்ள சாட்சிகள், மற்ற நடவடிக்கைகளுக்கு மனப்பூர்வமாக தங்களையே எப்படி அளிக்கிறார்கள் என்பதைக் காண்பது பாராட்டத்தக்கது. வணக்க இடங்களைக் கட்டுவதிலும், மாநாடுகளில் சேவிப்பதிலும் பேரழிவு சமயங்களில் நிவாரணப் பணிகளில் உதவுவதிலும் மனமுவந்து அளிப்பது தொடங்கி, ஒழுங்காக உள்ளூர் ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வது வரை இந்த வேலைகள் உட்படுத்தலாம். பின்குறிப்பிடப்பட்ட நடவடிக்கை சம்பந்தமாக, ஒவ்வொரு கூட்டத்திற்குப் பிறகும் ராஜ்ய மன்றத்தை சுத்தமாகவும் ஒழுங்கான நிலையிலும் விட்டுச்செல்வதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளும் காரியம் கவனத்துக்குரியது. தாழ்வான வேலைகளாகக் கருதப்படும் வேலைகளைச் செய்துமுடிப்பது, லூக்கா 16:10-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை சரியாக புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது: “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.”
◼ சபை நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவது: எல்லாவற்றையும் உள்ளிட்ட அமைப்பின் பாகமாக ஒவ்வொரு சபையும் இயங்கிக்கொண்டு, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையிடமிருந்து’ வழிநடத்துதலைப் பெற்றுவந்தாலும், தனிப்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகளால் அது உண்டாகி இருக்கிறது. (மத். 24:45, NW) ஒவ்வொரு சாட்சியும் எவ்வளவு அதிகம் செய்ய மனமுள்ளவராகவும் முடிந்தவராகவும் இருக்கிறார் என்பதன்பேரிலேயே அதன் சாதனைகள் பெரிதும் சார்ந்திருக்கின்றன. அதன் பிராந்தியத்தில் நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதன்பேரிலும் புதிய சீஷராக்குவதன்பேரிலும் பிறகு அவர்களை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துவதன்பேரிலும் அது கவனத்தை ஒருநிலைப்படுத்துகிறது. இந்த வேலையில் நாம் ஒவ்வொருவரும் பங்குகொள்ளலாம். தனிப்பட்ட படிப்பிலும், கூட்டங்களில் அர்த்தமுள்ள விதத்தில் பங்குகொள்வதிலும் சபைக்குள்ளாக தேவையிலிருப்பவர்களுக்கு உதவியாயிருப்பதிலும் நமக்குநாமே இலக்குகளையும் வைத்துக்கொள்ளலாம். நம்முடைய மனப்பூர்வமான தன்மையை வெளிக்காட்டுவதற்கு அநேக நல்ல சந்தர்ப்பங்களை இந்த நடவடிக்கைகள் அளிக்கின்றன.
◼ கண்காணிப்பு ஸ்தானங்களிலிருந்து முன்னின்று நடத்துவது: ஒவ்வொரு சபையின் மேற்பார்வையையும் யெகோவா அதன் நியமிக்கப்பட்ட மூப்பர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். (அப். 20:28) இந்தச் சிலாக்கியத்திற்காக தகுதிபெற முயன்றெட்டிய மனிதர்கள் இவர்கள். (1 தீ. 3:1) உண்மையில் சபையிலுள்ள ஒவ்வொரு சகோதரரும் பெரும் உத்தரவாதங்களுக்குத் தகுதியாவதற்கான ஏதோவொரு சாத்தியத்தைப் பெற்றிருக்கிறார். அநேக சகோதரர்கள் ஆவிக்குரிய விதத்தில் வளர்ந்து வருகின்றனர், சபை மூப்பர்களின் வழிநடத்துதலாலும் அன்பான உதவியாலும் வளர்ந்துகொண்டே இருப்பதற்கான தேவையும் இருக்கிறது. பைபிளையும் நம்முடைய பிரசுரங்களையும் ஊக்கமாக படிக்கும் மாணாக்கராக இந்த மனிதர்கள் இருக்கவேண்டும். ஆவியால் நியமிக்கப்பட்ட மூப்பர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதாலும், அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவதாலும், கண்காணிகளிடம் எதிர்பார்க்கப்படுகிற குணங்களை வளர்த்துக்கொள்வதாலும் தங்களுடைய மனப்பூர்வமான தன்மையை அவர்கள் மெய்ப்பித்துக் காட்டலாம்.—எபி. 13:7, 17.
◼ முழுநேர சேவையை ஏற்பது: நற்செய்தியைப் பிரசங்கிக்கவே பிரதானமாக சபை இயங்குகிறது. (மத். 24:14) வைராக்கியமுள்ள ஆட்கள் பயனியர்களாக சேர்ந்துகொள்வதன் மூலம், தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்துவது என்னே ஓர் ஆசீர்வாதம்! அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சரிப்படுத்துதல்கள் செய்வதை இது சாதாரணமாக உட்படுத்துகிறது. அவர்கள் இந்த விசேஷ ஊழியத் துறையில் தொடர, கூடுதலான சரிப்படுத்துதல்கள் தேவைப்படலாம். ஆனால் ஏதோ தற்காலிக உற்சாகமிழத்தலின் காரணமாக ஓரிரு ஆண்டுக்குள் இந்தச் சிலாக்கியத்தை விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக அதைப் பற்றியிருப்பவர்கள், யெகோவாவின் நிறைவான ஆசீர்வாதத்தை கட்டாயமாக அனுபவிப்பர். அன்பான மூப்பர்களும் மற்ற முதிர்ச்சியுள்ள ஆட்களும் பயனியர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர்களின் வெற்றிக்கு உதவலாம். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நேரடியாக பயனியர் வேலைக்கு செல்லும் இளம் ஆட்களால் என்னே ஒரு நல்ல ஆவி மெய்ப்பித்துக் காட்டப்படுகிறது! தங்களுடைய உலகப்பிரகாரமான கடமைகள் குறைந்தவுடன், ஒழுங்கான பயனியர்களாக சேர்ந்துகொள்ளும் வயதுவந்தோருடைய விஷயத்திலும் இதுவே உண்மையாயிருக்கிறது. யெகோவா தீவிரப்படுத்தும் இந்தக் கூட்டிச்சேர்ப்பு வேலையோடு இவ்வாறு ஓர் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவன் ஒத்துழைத்தால், என்னே ஒரு திருப்தி!—ஏசா. 60:22.
◼ கூட்டம் நடக்கும் இடங்களைக் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் பங்குகொள்வது: சொல்லர்த்தமாக நூற்றுக்கணக்கான நவீனகால ராஜ்ய மன்றங்களும் அநேக மாநாட்டு மன்றங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அற்புதகரமாக, இந்த வேலையின் பெரும் அளவு, தங்கள் நேரத்தையும் திறமைகளையும் மனமுவந்து, மனப்பூர்வமாக அளித்த நம்முடைய சகோதர சகோதரிகளால் செய்யப்பட்டிருக்கிறது. (1 நா. 28:21) ஆயிரக்கணக்கான மனமுவந்த வேலையாட்கள் செய்வதற்கு எந்தப் பணிகள் இருந்தாலும் அவற்றை செய்து இந்த இடவசதிகளை நல்ல நிலையில் வைத்துக்கொள்கின்றனர். (2 நா. 34:8) இந்த வேலையானது பரிசுத்த சேவையின் ஒரு பாகமாயிருப்பதால், இதில் உதவும் ஆட்கள் தங்களையே மனப்பூர்வமாக அளிக்கின்றனர்; வீடுவீடாய் பிரசங்கிப்பதற்கும் சபையில் பொதுப் பேச்சுக்கள் கொடுப்பதற்கும் அல்லது அசெம்பிளி பணியிலோ மாநாட்டு பணியிலோ உதவுவதற்கும் பணமளிக்கப்பட எவ்வாறு அவர்கள் கேட்கமாட்டார்களோ அதேவிதமாக இதன் சம்பந்தமாக செய்யப்படுகிற தங்களுடைய சேவைக்காக ஈடுபணம் செலுத்துமாறு அவர்கள் கேட்கமாட்டார்கள். மனமுவந்து அளிக்கும் இந்த ஆட்கள் யெகோவாவின் துதிக்காக வணக்க இடங்களை திட்டமிட்டு கட்டுவதற்கு தங்கள் சேவையை இலவசமாக அளிக்கின்றனர். சட்ட ஆவணங்களைப் பூர்த்திசெய்வது, கணக்குப் பதிவுகளை வைப்பது, கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்தல், வேண்டிய அளவான சாமான்களை கணக்கிடுதல் போன்ற காரியங்களில் அவர்கள் ஆவலோடு உதவுகின்றனர். யெகோவாவின் உத்தமமுள்ள இந்த ஊழியர்கள் தாங்கள் செய்கிற பணிகளுக்காக ஏதோவொரு வகையான அவசியமான மேல் செலவை கூட்டுவது கிடையாது, அல்லது நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பொருளாதார விதத்தில் எந்த முறையிலாவது லாபம் சம்பாதிக்கவோ நாடுவது கிடையாது; ஏனென்றால் அவர்களுடைய திறமைகளும் ஆதாரமூலங்களும் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கின்றன. (மே 1992, நம் ராஜ்ய ஊழியம், 4-ம் பக்கம், 10-ம் பாராவை பாருங்கள்.) இந்த நடவடிக்கை, தங்கள் சேவையை “கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்”கிற ஊக்கமுள்ள வேலையாட்களைத் தேவைப்படுத்துகிறது.—கொலோ. 3:23.
15 அப்படியானால், யெகோவாவின் மக்களுடைய மனமுவந்த தன்மையை விசேஷமானதாக செய்வது என்ன? அதுவே கொடுக்கும் மனநிலையாகும். அவர்கள் தாராளமாகக் கொடுப்பது பணம் அல்லது பொருளாதார காரியங்களைவிட அதிகத்தை உட்படுத்துகிறது—அவர்கள் ‘மனப்பூர்வமாய் தங்களையே அளிக்கின்றனர். (சங். 110:3, NW) யெகோவாவுக்கான நம்முடைய ஒப்புக்கொடுத்தலின் சாராம்சம் இதுதான். விசேஷ முறையில் நாம் பலனளிக்கப்படுகிறோம். நாம் ‘அதிக சந்தோஷத்தை’ அனுபவிக்கிறோம், மேலும் ‘பெருக அறுக்கிறோம்’ ஏனென்றால் நாம் செய்வதை மற்றவர்கள் போற்றி, நமக்கு திரும்பக் கொடுக்கின்றனர். (அப். 20:35, NW; 2 கொ. 9:6; லூக். 6:38) ‘உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் பிரியமாயிருக்கிற’ நம்முடைய பரலோக தந்தையாகிய யெகோவாவே நம்முடைய பெரிய கொடையாளியாக இருக்கிறார். (2 கொ. 9:7) அவர் நமக்கு என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்வாதங்களோடு நூறுமடங்காக திரும்பச் செலுத்துவார். (மல். 3:10; ரோ. 6:23) ஆகையால் யெகோவாவின் சேவையில் உங்களுக்கு சிலாக்கியங்கள் கிடைக்கப்பெற்றால், உங்களை மனப்பூர்வமாக அளித்து, “இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்று ஏசாயாவைப்போல பதிலளிப்பீர்களா?—ஏசா. 6:8.