உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் என்ன இலக்குகளை வைத்திருக்கிறீர்கள்?
1 பயனுள்ள இலக்குகளை வைத்து அதை அடைவதன் பேரிலேயே வாழ்க்கையின் வெற்றி சார்ந்திருக்கிறது. அற்பமான அல்லது நடைமுறைக்கு ஒவ்வாத இலக்குகளை நாடித் தொடருகிறவர்கள் ஏமாற்றத்திலும் தோல்வியிலும் போய் முடிவடைகிறார்கள். ‘உண்மையான வாழ்க்கையை உறுதியாகப் பற்றிக்கொள்ளுவதற்காக’ என்ன இலக்குகளை நாடித்தொடருவது என்பதைப் பகுத்துணருவதற்கு ஞானம் தேவைப்படுகிறது. (1 தீ. 6:19, NW) யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமும் அமைப்பின் மூலமும் நாம் எவ்வழியாய் செல்லவேண்டும் என்பதை சரியாக காண்பிப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—ஏசா. 30:21.
2 இத்தகைய அன்பான வழிநடத்துதலை அளிப்பதில், பெற்றோர்களுக்கு யெகோவா ஒரு சிறந்த மாதிரியை வைக்கிறார். எவ்வழி சிறந்தது என்பதைத் தெரிவுசெய்வதை அனுபவமற்றவர்களாக இருக்கிற தங்கள் பிள்ளைகளிடமே விட்டுவிடுவதற்குப் பதிலாக, ஞானமுள்ள பெற்றோர்கள் அவர்கள் நடக்கவேண்டிய வழியிலே அவர்களைப் பயிற்றுவிக்கிறார்கள்; அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து வருகையில் ‘அதை விடாதிருப்பார்கள்.’ (நீதி. 22:6) கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய சொந்த மதிப்பீட்டின் பேரில் சார்ந்திருக்க முடியாது என்பதை அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறார்கள்; அவர்கள் யெகோவாவை சார்ந்திருக்க வேண்டும். (நீதி. 3:5, 6) இந்தத் தேவை, அறிவிலும் அனுபவத்திலும் மட்டுப்பட்டவர்களாக இருக்கிற பிள்ளைகளுக்கு இன்னும் அதிகமாக இருக்கிறது.
3 பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்பாக, ‘அதிக முக்கியமான காரியங்களின்மீது’ கவனத்தை ஒருமுகப்படுத்த அவர்களுக்கு உதவும் பயனுள்ள இலக்குகளை வைக்கலாம். (பிலி. 1:10, NW) குடும்பப் படிப்புடன் அவர்கள் ஆரம்பிக்கலாம், அதன் முக்கியத்துவத்தை மதித்துணருவதற்கும் அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம். சபை கூட்டங்களுக்காக முன்கூட்டியே படிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்வதும் தங்களுடைய சொந்த வார்த்தைகளில் குறிப்புகள் சொல்வதற்குத் தயார்செய்வதும் பிள்ளைகளுக்கு நல்லது. பிரசங்கிக்கும் வேலையில் ஒழுங்காகப் பங்குகொள்வது முக்கியமானது. துண்டுப்பிரதிகளை அளித்தல், வசனங்களை வாசித்தல், அல்லது பத்திரிகைகளை அளித்தல் ஆகியவற்றின் மூலம் சிறு பிள்ளைகள் பங்குகொள்ளலாம். அவர்களால் வாசிக்க முடியும்போது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொள்வது அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை விரைவுபடுத்தக்கூடும். முழுக்காட்டுதல் பெறாத பிரஸ்தாபியாக தகுதிபெறுவது அல்லது முழுக்காட்டுதலுக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது அவர்களுக்கு முன்னாக இருக்கிற ஒரு பெரிய படியாகும்.
4 பிள்ளைகள் பருவ வயதை அடைகையில் அல்லது அதற்கு முன்பாகவோகூட, வாழ்க்கைத் தொழில் சம்பந்தமான இலக்குகளைப் பற்றி நடைமுறைக்கேற்ற விதமாக பெற்றோர்கள் அவர்களிடம் பேசவேண்டும். பள்ளி ஆலோசகர்களும் வகுப்புத் தோழர்களும் உலகப்பிரகாரமான, பொருள் சம்பந்தமான நாட்டங்களின் சார்பாக அவர்களை சுலபமாக செல்வாக்கு செலுத்தக்கூடும். நடைமுறையான பயிற்சியை அளித்து, ராஜ்ய அக்கறைகளைத் தியாகம் செய்யாமல் தங்களுடைய பொருள் சம்பந்தமான தேவைகளை கவனித்துக்கொள்வதற்கு பிள்ளைகளைத் தகுதியாக்குகிற பள்ளிப் பாடங்களைத் தெரிவுசெய்வதற்கு பெற்றோர்கள் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். (1 தீ. 6:6-10) விவாகமில்லாமல் இருக்கும் ‘வரத்தை’ நாடித்தொடருவதற்கு அவர்கள் உற்சாகப்படுத்தப்படலாம். பின்பாக, அவர்கள் விவாகம் செய்துகொள்ள தீர்மானித்தால், விவாகத்தின் கனமான உத்தரவாதங்களை எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். (மத். 19:10, 11; 1 கொ. 7:36-38) பயனியர் ஊழியம் செய்வது, தேவை அதிகமாகவுள்ள இடங்களில் சேவை செய்வது, பெத்தேல் சேவை, அல்லது மிஷனரி ஊழியம் ஆகியவற்றைப் பற்றி நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேசுவது, யெகோவாவைப் பிரியப்படுத்துகிற, மற்றவர்களுக்கு பயனளிக்கிற, தங்களுக்கு தானே ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிற முறையில் தங்களுடைய வாழ்க்கையை பயன்படுத்துவதற்கான ஆசையை சிறுபிராயத்திலேயே பிள்ளைகளுடைய மனதில் புகுத்தக்கூடும்.
5 உயர்ந்த கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பற்றிக்கொண்டு தேவராஜ்ய இலக்குகளை நாடித்தொடருகிற இத்தனை அநேக இளைஞர்களை இன்று நாம் அமைப்பில் கொண்டிருப்பது எதிர்பாராத ஒன்றல்ல. அவர்களுடைய பெரும் வெற்றிக்கு அன்பான பெற்றோர்களையே காரணமாக சொல்லலாம். நீங்கள் ஒரு பெற்றோராக இருப்பீர்களானால், உங்களுடைய பிள்ளைகள் எதை நோக்கி செல்வதாகத் தெரிகிறது? ராஜ்ய அக்கறைகளின்மீது ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை நோக்கி அவர்கள் படிப்படியாக முன்னேறிக்கொண்டு வருகிறார்களா? நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, உங்களுடைய பிள்ளைகளின் மனதில் சத்தியத்தைப் பதியவைத்து, அதைப் பற்றி அனுதினமும் பேசுவதாகும். யெகோவாவை சேவிப்பதில் உண்மைப் பற்றுறுதியுடன் இருக்கிற ஒரு குடும்பத்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படலாம்.—உபா. 6:6, 7; யோசு. 24:15.