இந்தியாவில் நடைபெற்ற ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பு
1 லோனாவ்லாவில் நடைபெற்ற உதவி ஊழியருக்கான முதல் வகுப்பில், சிக்கிம் உட்பட, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் நேப்பாளத்திலிருந்தும் வந்திருந்த இருபத்து மூன்று மாணவர்களும் கவனித்தறிபவர்கள் (observers) இருவரும் ஆஜராயினர். அந்த மாணவர்களில் இருவர் மூப்பர்களாகவும் மற்றவர்கள் உதவி ஊழியர்களாகவும் இருந்தனர். அவர்களில் ஏழு பேர் விசேஷ பயனியர்களாகவும், ஒன்பது பேர் ஒழுங்கான பயனியர்களாகவும் மற்றவர்கள் சபை பிரஸ்தாபிகளாகவும் இருந்தனர். மே 22 முதல் ஜூலை 16, 1995 வரை, எட்டு வாரங்களாக மாணவர்களுக்குப் போதிப்பதில் இரண்டு போதனையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மொத்தத்தில், சுமார் 270 மணிநேர வகுப்பறை போதனை வழங்கப்பட்டது. வீட்டுப் பாடங்களைச் செய்வதிலும் படிப்புக்கான புராஜெக்ட்களைத் தயார்செய்வதிலும் மாணவர்கள் அநேக மணிநேரங்களைச் செலவிட்டனர். இங்கு பெத்தேலில் நடைபெறும் வேலை பற்றிய சில நடைமுறையான அனுபவங்களையும் அவர்கள் பெற்றனர்.
2 மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்ச்சிநிரல், ஜூலை 16, ஞாயிற்றுக்கிழமை அன்று பெத்தேல் ராஜ்ய மன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிநிரலின் முடிவுக்கு சற்று முன்பாக, மாணவர்களுக்கு அவர்களுடைய நியமிப்பு கொடுக்கப்பட்டது. வேறு இடங்களுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பங்களையுடைய அவர்களில் ஆறு பேர், விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டனர். மீதிப்பேர் தங்கள் தங்கள் சொந்த சபைகளுக்கு திரும்பிச் சென்றனர்; அங்கு அவர்கள் ஒழுங்கான பயனியர்களாக அல்லது சபை பிரஸ்தாபிகளாக தொடர்ந்து சேவிப்பார்கள்.
3 அந்த மாணவர்கள் பெற்ற போதனை, உயர்வாக போற்றப்பட்டது. இப்படிப்பட்ட போதனை, ஆவிக்குரிய விதத்தில் அவர்கள்தாமே தகுதிபெற்றவர்களாய் ஆவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்கள் கூட்டுறவுகொண்டுள்ள சபைகளுக்கும்கூட உதவும் என்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம். இத்தகைய பயிற்சிக்கு அதிகளவான தேவை இருக்கிறது, ஆகவே குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக உதவி ஊழியராய் இருந்திருக்கிற 23-க்கும் 50-க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள இன்னுமநேக சகோதரர்கள், இனிவரும் காலத்தில் நடைபெறும் வகுப்புகளில் சேர்ந்துகொள்வார்கள் என்பதாக நம்பப்படுகிறது.
4 இனிவருகிற ஒவ்வொரு ஆண்டும் ஊழியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை இந்தியாவில் நடத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே, அடுத்த வகுப்புக்கு தகுதிபெறுவதற்காக சகோதரர்கள் உழைக்கலாம். உதாரணமாக, ஆங்கில அறிவு அவசியமாதலால், மற்ற அம்சங்களில் தகுதிபெற்றவர்களாக இருந்து ஆனால் நன்கு ஆங்கிலம் தெரியாமலிருப்பவர்கள், தங்களுடைய ஆங்கில அறிவை மேம்படுத்த பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லலாம். அடுத்த வகுப்பில் சேருவதற்கு விருப்பமுள்ள சகோதரர்கள் மாவட்ட கண்காணியுடன் தொடர்புகொள்ளும்படியும் தங்களுடைய அடுத்த வட்டார மாநாட்டில் அவர்களுக்காக நடத்தப்படுகிற கூட்டத்திற்கு ஆஜராகும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் அவர்கள் முதனிலை விண்ணப்பத்தாளைப் பெற வேண்டும்; அதை உடனடியாக பூர்த்திசெய்து, மாவட்ட கண்காணியிடம் சமர்ப்பிக்க வேண்டும், அவர் அதை எங்களுக்கு அனுப்புவார். தகுதியுள்ள மாணவர்கள் சங்கத்தால் தொடர்புகொள்ளப்படுவார்கள்.