1998 “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாடுகள்
1 மாவட்ட மாநாடுகளில் பெரும் எண்ணிக்கையில் கூடிவரும் கூட்டத்திற்காக உலகெங்கிலும் இருக்கும் யெகோவாவின் நவீன நாளைய மக்கள் வருடாவருடம் ஆவலோடு காத்திருப்பது வழக்கம். பண்டைய இஸ்ரவேலில் இருந்த யெகோவாவின் உண்மையான ஊழியர்கள், அவரை வணங்குவதற்காக எருசலேமுக்கு போகும் வழியில் மகிழ்ச்சி பொங்க பாடிய பாடல் வரிகள் சங்கீதம் 122-ல் காணப்படுகின்றன. அதே மனநிலையோடு இன்றும் யெகோவாவின் மக்கள் இருக்கிறார்கள். அந்தச் சங்கீதத்தின் முதல் வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.” அத்தகைய சந்தர்ப்பங்களில் ஏசாயா 2:2, 3-ல் உள்ள கடவுளின் ஏவப்பட்ட வார்த்தைகள் நிறைவேற்றம் அடைவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
2 ‘யெகோவாவின் . . . வழி அரண்’ என்று நீதிமொழிகள் 10:29 (தி.மொ.) சொல்கிறது. அப்படியென்றால், “கடவுள் காட்டும் ஜீவ வழி” என்ற இவ்வருட மாநாட்டின் தலைப்பு எவ்வளவு பொருத்தமாக உள்ளது! சரி, மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் எப்படி இந்தத் தலைப்பை கொஞ்ச கொஞ்சமாக விளக்கப் போகிறார்கள்? நமக்காகத் தயாரித்து அளிக்கப்படும் நிகழ்ச்சிநிரலுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். மாநாட்டில் முக்கிய குறிப்புகள் எல்லாம் விவரிக்கப்படும்.
3 கலந்துகொள்வதற்கு என்ன செய்தாலும் தகும்: ஆப்பிரிக்காவின் ஒருசில பகுதிகளில் போரும், கலவரமும் நடைபெறுவதால், அங்கு இருக்கும் நம் சகோதரர்கள் பலர் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். யெகோவாவின் மக்கள் கூடிவரும் மாநாடுகளுக்கு வந்தால்தான் தங்கள் வாழ்க்கைக்கே ஒருபிடிப்பு கிடைப்பதாக இவர்கள் நினைக்கிறார்கள். மாநாட்டிற்கு வரவேண்டுமென்றால் ஒருசிலர் பல மைல்கள் நடந்தே வரவேண்டும். எவ்வளவு தூரம் நடக்கவேண்டி இருந்தாலும் இவர்கள் ஒரு மாநாட்டையும் தவறவிட விரும்புவதில்லை. 73 வயது சகோதரர் ஒருவர், காங்கோ குடியரசை (முன்னாள் ஜயர்) சேர்ந்தவர். இவர் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 16 நாட்களாக நடந்தே சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்து சேர்ந்தார். காலெல்லாம் வீங்கிப்போனது. தான் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டதற்காக சந்தோஷப்பட்டார். மாநாடு முடிந்ததும், ஆவிக்குரிய விதத்தில் நல்ல பலமடைந்து, சந்தோஷமாக மறுபடியும் நடந்தே வீட்டிற்கு திரும்பிப்போனார். இப்படி நடந்தே மாநாட்டிற்கு வருவதை இவர் பல வருடங்களாக செய்துவருகிறார் என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!
4 மொஸாம்பிக்கில் ஒரு வட்டாரக் கண்காணியும் அவரது மனைவியும் வட்டார மாநாடு ஒன்றிற்கு போவதற்காக, உயரமான ஒரு மலையில் ஏறி, பெரிய பாலைவனம் போல் இருந்த இடத்தை தாண்டி, நடந்தே சென்றார்கள். அவர்கள் 45 மணிநேரத்தில் 90 கிலோமீட்டர் தூரத்தை கடந்து வந்தார்கள். மாநாட்டிற்கு வந்திருந்த எல்லாருக்கும் இந்தத் தம்பதியின் முன்மாதிரியைப் பார்த்து உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அங்கு மாநாட்டிற்கு வந்திருந்த நிறைய குடும்பங்கள் இதேபோல் கஷ்டப்பட்டு நடந்தே வந்திருந்தன. ஒருசில சகோதரர்கள் 200 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தார்கள் என்றும், அவர்களுள் 60 வயதான சகோதரரும் இருந்தார் என்றும் மாவட்ட கண்காணி அறிவித்தார்!
5 இந்த வருட மாநாட்டில் கலந்துகொள்ள திட்டவட்டமாக பிளான் செய்துவிட்டீர்களா? நீங்களும் உங்கள் குடும்பமும் மாநாட்டிற்கு செல்ல ஒருவேளை நீண்ட தூரம் நடக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனாலும் அதற்காக ஏதாவது முயற்சியும், தியாகமும் நீங்கள் செய்யவேண்டியிருக்கும். நிகழ்ச்சிநிரலை ஆரம்பம் முதல் கடைசிவரை கேட்டு மகிழ அங்கே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பைபிள் மாணாக்கர்கள் பலர் கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும் என முன்னேற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாநாட்டிற்கு வந்தால் சரியான தீர்மானம் எடுப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும். உங்களோடுகூட மாநாட்டில் கலந்துகொள்ள, நீங்கள் பைபிள் படிப்பு நடத்தும் மாணாக்கர்களிடத்திலும், பைபிளில் ஆர்வம்காட்டுபவர்களிடத்திலும் சொல்லிவிட்டீர்களா?
6 மூன்று நாள் மாநாடு: இவ்வருடம் இந்தியாவில் 20 மாநாடுகள் நடைபெறவிருக்கின்றன. ஆங்கிலத்தைத் தவிர, கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, பெங்காலி, மலையாளம், ஹிந்தி மொழிகளில் மாநாடுகள் நடைபெறும். இம்மாநாடுகள் நடைபெறும் தேதிகளும், இடங்களும் இந்த உட்சேர்க்கையின் 6-ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன.
7 முக்கிய குறிப்பு: வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சிநிரல் தொடங்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 5:00 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் மாலை 4:00 மணிக்கும் நிகழ்ச்சிநிரல் முடிவடையும். ஒவ்வொரு நாளும் காலை 8:00 மணிக்கு கதவுகள் திறக்கப்படும். மாநாட்டில் வேலை செய்யவிருப்பவர்களுக்கு மட்டும் இந்த நேரத்திற்கு முன்னதாக உள்ளே செல்ல அனுமதி உண்டு. ஆனாலும் காலை 8:00 மணிக்கு முன் இருக்கைகளை பிடித்துவைக்க அனுமதி கிடையாது.
8 நாம் மாநாட்டிற்காக வந்து போகும்போது சந்தர்ப்பசாட்சி கொடுப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். பெட்ரோல் பங்க்கிலுள்ள உதவியாட்கள், கடைகளில் இருக்கும் வேலையாட்கள், ஹோட்டல் பணியாட்கள் மற்றும் வெயிட்டர்கள் அநேகமாக ராஜ்ய செய்தியில் ஆர்வம் காட்டலாம். வழக்கமாக செய்யும் ஊழியத்தின் மூலம் இப்படிப்பட்ட ஆட்களுக்கு சாட்சிகொடுக்கும் வாய்ப்பு கிடைக்காமலே இருந்திருக்கும். எனவே இத்தகைய சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு சாட்சிக்கொடுப்பதற்காகத் துண்டுப்பிரதிகளையும், புதிய பத்திரிகைகளையும், புரோஷர்களையும் இன்னும் வேறுசில புத்தகங்களையும் உங்களோடு எடுத்துச்செல்லுங்கள்.—2 தீ. 3:16.
9 “கேட்கிற விதத்தைக்குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்”: மாநாட்டுக்கு செல்பவர்கள் லூக்கா 8:18-ல் உள்ள ஆலோசனைக்கு செவிகொடுப்பது நல்லது. பைபிள், பாட்டு புத்தகம், நோட்டு புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு வரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு பேச்சிலும் சொல்லப்படும் முக்கியக் குறிப்புகளை கவனமாக கேட்டு, சுருக்கமாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். அந்த விஷயம் எப்படி உங்கள் வாழ்க்கைக்கு தனிப்பட்ட விதமாக பொருந்துகிறது என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். மாநாடு நடைபெறும் சமயத்தில், ஒவ்வொரு ராத்திரியும், தூங்கப்போவதற்கு முன், நீங்கள் எழுதிய குறிப்புகளை படித்து, யெகோவா காட்டும் ஜீவ வழியில் எந்தளவுக்கு ஒழுங்காக நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள்.—நீதி. 4:10-13.
10 நிகழ்ச்சி நடைபெறுகையில் சிலர் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்து, தங்களுடைய வண்டிகளில் உட்கார்ந்துகொண்டு, பேச்சுகளை தவறவிடுகிறார்கள். இன்னும் சிலர் ஆடிட்டோரியத்தில் உட்கார்ந்து பேச்சுகளை கேட்பதற்கு பதிலாக, நடைபாதைகளில் வீணாக சுற்றிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மதியவேளையில் இளைஞர்கள் கும்பல்கும்பலாக பாதியிலேயே வெளியேறிவிடுவதும் கவனிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்கள் சிலர் யெகோவா கொடுத்த நினைப்பூட்டுதல்களுக்கு ஒழுங்காக கேட்டு, நடந்துகொள்ளாததால் அவர்கள் பெரிய பெரிய பாவங்களை எல்லாம் செய்தார்கள். அப்படிப்பட்ட தவறை செய்ய நாம் கண்டிப்பாக விரும்பமாட்டோம். (2 இரா. 17:13-15) நம் அனைவருக்கும் தேவையான போதனையை, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தயாரித்துள்ளார்கள். ஆகவேதான், இந்த மூன்று நாள் மாநாட்டில், ஒவ்வொரு பகுதியிலும் சொல்லப்படும் விஷயங்களை “இயல்பாக கேட்பதைவிட அதிக கவனத்தோடு கேட்பது” ரொம்ப ரொம்ப முக்கியம். விசேஷமாக ஆர்வத்தை தூண்டும் விஷயங்களும், அதிலும் குறிப்பாக, எதிர்காலத்தில் ஜீவ வழியில் நடந்திட உதவும் பயனுள்ள விஷயமும் ஒவ்வொரு நாளும் அளிக்கப்படும். வரவிருக்கும் மாநாடுகளில் யெகோவா அளிக்கப்போகும் ஆவிக்குரிய விஷயங்களை கவனமாக கேட்டு, அதன்படி நடந்துகொண்டால் நாம் உறுதியாக நங்கூரம் இடப்பட்டவர்களாய், கடவுள் காட்டும் ஜீவ வழியை ‘விட்டுவிலகாமல்’ இருப்போம்.—மத். 24:45; எபி. 2:1; NW.
11 யெகோவாவுக்கு கௌரவத்தை கொண்டுவரும் உடை: இக்கட்டான இந்தக் கடைசி நாட்களில் உலகத்தாரின் மனோபாவம் நம்மையும் தொற்றிக்கொள்ளாதிருக்க நாமும் எப்போதையும்விட இன்னும் அதிக கவனத்தோடு விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். (1 கொ. 2:12) நம் உடையும், தலைவாரும் விதமும் அடக்கமாக இருக்க வேண்டும். அவை நாம் வழிபடும் கடவுளுக்கு கௌரவத்தை கொண்டுவர வேண்டும். (1 தீ. 2:9, 10) ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை அலங்காரமாக’ கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் இருக்க விலையுயர்ந்த ஆடைகள் ஒன்றும் தேவையில்லை. (தீத். 2:9) ஜூன் 15, 1997, காவற்கோபுரம் 17, 18-ம் பக்கங்களில், 14-18 பாராக்களில் பைபிள் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் நடைமுறையான சிறந்த ஆலோசனைகளை கவனியுங்கள். யெகோவாவுக்கு கௌரவத்தைக் கொண்டுவரும் விதத்தில் நாம் உடையணிவது, மற்றவர்களுக்கு பலமான சாட்சியாக அமைகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
12 உடை விஷயத்தில் தான் கவனித்ததை 16 வயது சாட்சி ஒருத்தி விவரித்தாள். மாநாட்டு நிகழ்ச்சி முடிந்த பிறகு, மாலையில் அவளும் அவளுடைய சகோதரனும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு சென்றனர். அங்கே இவர்களுக்கு முன்பே ஒருசில சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் பொருத்தமற்ற உடைகளை உடுத்திக்கொண்டு வந்திருப்பதை இவர்கள் கவனித்தார்கள். ஒருசிலர் இப்படி செய்துவிட்டாலும்கூட, நிறைய சாட்சிகள் இடத்திற்கு ஏற்றாற்போல் ஒழுங்காக உடையணிந்து, பேட்ஜ்களை குத்திக்கொண்டு வந்திருந்தனர். இத்தகைய சாட்சிகளை ஹோட்டல் முதலாளிகளும் கௌரவமாக நடத்தினார்கள். அதனால் ஒருசில முதலாளிகளுக்கு சாட்சி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
13 யெகோவாவுக்கு புகழைக் கொண்டுவரும் நடத்தை: நம்முடைய கிறிஸ்தவ நடத்தை, மற்றவர்கள் உண்மை வணக்கத்தை பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயத்தை பாதிக்கும் என்பது நாம் அறிந்ததுதான். எனவே, எல்லா சமயத்திலும், நற்செய்திக்கு பாத்திரமானவர்களாகவும், யெகோவாவுக்கு புகழைக் கொண்டுவரும் விதத்திலும் நாம் நடந்து கொள்ள வேண்டும்.—பிலி. 1:27.
14 கடந்த வருடம், அங்கோலாவின் வட பகுதியில் முதல் முறையாக மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட இரண்டு உள்ளூர் போலீஸ் ஆபீஸர்கள் வந்தார்கள். அவர்கள் ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்தனர். அன்றைய மாலையில், அவர்கள் மாநாட்டில் கேட்ட விஷயங்களை வெகுவாக புகழ்ந்தனர். சாட்சிகளின் ஒழுங்கான நடத்தையை பாராட்டினார்கள். அவர்களுள் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நம்மை எதுக்கு இங்கே அனுப்பினார்கள்? யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் ஒழுங்காக நடக்கும் என்பது ஊர் அறிந்த விஷயமாச்சே.”
15 ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் ஏதோ ஓர் அரசியல் கட்சியில் இருந்தார். அவருடைய கூட்டாளிகளையெல்லாம் கொன்றுவிட்டார்கள். இவர் மாத்திரம் எப்படியோ ஐரோப்பாவுக்குத் தப்பிவந்துவிட்டார். இவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்ததால், வாழ்க்கையில் மிகவும் நொந்துபோனார். கடைசியில் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். அவர் முதல் முறையாக மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டபோது, அங்கே பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் ஒற்றுமையாகவும், சமாதானத்தோடும் இருப்பதை கண்டு அசந்துபோனார். இதுதான் சத்தியம் என்று முழுமையாக நம்பினார். மாநாடு நடந்துகொண்டிருக்கும்போதே, அரசியல் விவகாரங்களோடு தான் வைத்திருந்த தொடர்புகளையெல்லாம் துண்டித்துக்கொள்ள முடிவுசெய்தார். பிறகு முழுக்காட்டுதல் எடுத்துக்கொண்டார். இப்போது அவரும், அவருடைய பிள்ளைகளும் யெகோவாவை சேவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
16 இந்த வருடம் நடைபெறவிருக்கும் மாநாடுகளுக்கு முதன்முறையாக வருவோர் நம் நடத்தையைப் பார்த்து எத்தகைய அபிப்பிராயத்தை பெறுவார்கள்? நாம் வாலண்டியர்களாக சேவை செய்யும்போது நம்மிடையே இருக்கும் ஒத்துழைக்கும் மனப்பான்மையை அவர்களால் காண முடியுமா? மாநாட்டு மன்றத்தை விட்டு செல்கையில், நாமும் நம்முடைய பிள்ளைகளும் நம் இருக்கைகளுக்கு அருகே குப்பைகள் சேர்ந்திருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, சுற்றுப்புறத்தை சுத்தமாக விட்டுவருவதை அவர்கள் காண்பார்களா? தங்கியிருக்கும் இடத்திலிருந்து மாநாட்டு மன்றத்துக்கு பயணம் செய்யும்போது நம்முடைய சிறந்த நடத்தையை அவர்கள் கவனிப்பார்களா? பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை எல்லா சமயத்திலும் கவனமாக பார்த்துக்கொள்வதை அவர்கள் பார்ப்பார்களா? நம்மை கவனிப்பவர்கள் நம்மைப் பற்றி நல்லவிதமாக கருதும்படி நம்மால் இயன்றதையெல்லாம் கண்டிப்பாக செய்வோமாக.
17 மாநாட்டுச் செலவுகளுக்கு உதவுதல்: இப்போதெல்லாம் ஸ்டேடியத்திலோ மன்றத்திலோ நடக்கும் விளையாட்டு நிகழ்ச்சிக்கு அல்லது மற்ற நிகழ்ச்சிக்கு செல்லவேண்டுமென்றால் நுழைவுக்கட்டணம் அதிகமாக உள்ளது. நகர்புறங்களில் வாடகை விஷம்போல் உயர்ந்திருப்பதும் ஒரு காரணம். “அனுமதி இலவசம்” என்ற பாலிசியை எப்போதும் சங்கம் பின்பற்றுகிறது. அப்படியென்றால், வாடகையும், மற்ற செலவுகளும் எப்படி சமாளிக்கப்படுகிறது? மாநாட்டிற்கு வருவோர் தாராளமாக நன்கொடை தருவதால் செலவுகளை சமாளிக்க முடிகிறது. அந்தக் காலத்தில் கடவுளின் மக்கள் யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றி, மனமுவந்து தாராளமாக நன்கொடைகளை வழங்கினார்கள். அதேபோல் நீங்களும் தாராளமாக வழங்குவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். (2 கொ. 8:7) இவ்வாறு வரும் எல்லா நன்கொடைகளையும் கவனமாக சேகரித்து, சேகரித்த தொகையை பதிவு செய்து, எதற்காக வசூலிக்கப்பட்டதோ அதற்காகவே செலவு செய்யப்படுகிறதா என்பதில் கவனமாக இருப்பார்கள். செக் மூலம் நன்கொடை தர விரும்பினால், “Watchtower” என்ற பெயருக்கு அனுப்பவும்.
18 இருக்கைகள்: இந்த விஷயத்தில் வழிநடத்துதலுக்காக பல வருடங்களாக கொடுக்கப்பட்டு வரும் குறிப்புகளே இப்போதும் பொருந்துகிறது. அதாவது, உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கும் உங்களோடுகூட பயணம் செய்வோர்க்கும் மட்டுமே இருக்கைகளை பிடித்து வைக்கலாம். இடம் பிடிக்கும் விஷயத்தில் நல்ல முன்னேற்றத்தை காணும்போது சந்தோஷமாக இருக்கிறது. இதன் காரணமாக மாநாடுகளில் அன்பான சூழல் மேலும் அதிகரித்துள்ளது. மாநாடு நடைபெறும் இடங்களில் ஒருசில இருக்கைகள் மாத்திரம் எளிதில் சென்று உட்காரும் விதத்தில் உள்ளன. வசதியான நாற்காலிகளில் உட்காரும் வாய்ப்பை வயதானவர்களுக்கும், கட்டாய தேவையிலிருப்போருக்கும் தயவுசெய்து அன்போடு விட்டுக்கொடுங்கள். அன்பு “தனக்குரியதை மட்டுமே நாடாது” என்பதை நினைவில்வையுங்கள்.—1 கொ. 13:4, 5; பிலி. 2:4, NW.
19 கேமராக்களும் வீடியோ கேமராக்களும் ஆடியோகேஸட் ரிக்கார்டர்களும்: மாநாடுகளில் கேமராக்களையும், பதிவு செய்யும் கருவிகளையும் பயன்படுத்தலாம். ஆனால் மற்றவர்களின் கவனம் சிதறாதபடி அவற்றை பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சிகளின் இடையே இங்கும் அங்கும் நடந்து, படங்களை பிடித்துக்கொண்டிருந்தால், நிகழ்ச்சியை கவனிக்கும் மற்றவர்களுக்கு அது இடைஞ்சலாக இருக்கும். எந்தவொரு பதிவு செய்யும் கருவியையும் மின் இணைப்புகளுடனோ, ஒலி அமைப்புகளுடனோ இணைக்கக்கூடாது. இருக்கைகளுக்கு இடையே இருக்கும் வழிகளிலும், நடைபாதைகளிலும் வைக்கக்கூடாது. உட்கார்ந்துகொண்டிருப்பவர்களின் பார்வையை மறைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
20 முதலுதவி: முதலுதவி இலாகா அவசரத் தேவைகளுக்கு மட்டுமே. உங்களுக்குத் தேவையான ஆஸ்பிரின், ஜீரண மருந்து மாத்திரைகள், பாண்டேஜ்கள், சேஃப்டி பின்கள் என இதுபோன்ற பொருட்களை தயவுசெய்து நீங்களே கொண்டுவாருங்கள். இவற்றையெல்லாம் மாநாட்டில் கொடுக்கமாட்டார்கள். ஒருசிலருக்கு திடீரென்று வலிப்பு வரும், உடலில் சர்க்கரை கிடுகிடுவென்று குறைந்துபோகும், இதய கோளாறுகள் ஏற்படும், இன்னும் இதுபோன்ற பிரச்சினைகள் வரும் என்று அறிந்திருந்தால், தங்களுக்கு தேவையான மருந்துகளை கூடவே கொண்டுவரவும். இப்படி வியாதியுள்ளவர்களோடு வீட்டிலிருந்து யாராவது ஒருவர் கண்டிப்பாக துணைக்கு வரவேண்டும். அல்லது இவர்களுடைய நிலையை ஏற்கெனவே அறிந்திருக்கும், ஏதேனும் அபாயம் வந்தால், அதை புரிந்து, அதற்கேற்ப செயல்படவல்ல சபை அங்கத்தினர் ஒருவரும் துணைக்கு வரலாம். தீரா வியாதியோடு இருப்பவர்களின் அருகில் இருந்து கவனிக்க யாருமே இல்லாததால் மாநாடு நடைபெறும்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன. இவ்வாறு விசேஷ மருத்துவ கவனம் தேவைப்படும் ஒருசிலருக்கு உதவ குடும்ப அங்கத்தினர்கள் இல்லையென்றால், நிலைமையை மூப்பர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவும் வகையில் மூப்பர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும். சுற்றுச்சூழல் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு அல்லது அலர்ஜி உள்ளவர்களுக்கு என்று விசேஷ அறைவசதிகள் மாநாடுகளில் ஏதும் கிடையாது.
21 மாநாட்டில் உணவு: மதிய இடைவேளையின் போது உணவை வாங்குவதற்காக மாநாடு நடக்கும் இடத்தைவிட்டு வெளியே செல்லாமல் இருக்க, ஒவ்வொருவரும் வரும்போதே ஏதாவது உணவை கொண்டு வரவும். சத்துள்ள, எடுத்துவருவதற்கு சுலபமான, எளிய உணவே போதுமானது. என்ன கொண்டு வர வேண்டும் என்பதற்கு 1995, ஜூலை மாத நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் இடத்திற்குள் கண்ணாடி பாத்திரங்களையும் மதுபானங்களையும் கொண்டுவரக் கூடாது. உங்கள் இருக்கைக்கு அடியில் வைக்கும் அளவுக்கு உணவு கூலர்கள் அல்லது பைகள் சிறியவையாக இருக்கவேண்டும். நிகழ்ச்சிநிரல் நடந்துகொண்டிருக்கையில் பார்வையாளர்களில் சிலர் சாப்பிட்டுக் கொண்டும், குடித்துக் கொண்டும் இருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு செய்வது அந்த நிகழ்ச்சிக்கு அவமரியாதையை காட்டுவதாக இருக்கிறது.
22 1998 “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாடுகள் சீக்கிரத்தில் ஆரம்பிக்கவிருப்பது குறித்து நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்! ஆஜராவதற்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டீர்களா? உங்கள் பயணம் இனிதாக அமைய நல்வாழ்த்துக்கள். யெகோவாவின் ஒப்பில்லா சேவையில் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்ற தீர்மானத்தோடும், நித்திய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு கடவுள் காட்டும் ஜீவ வழியில் தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற உறுதியோடும் புத்துணர்வு அளிக்கப்பட்டவர்களாய் வீடு திரும்புவீர்களாக!
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
▪ முழுக்காட்டுதல்: சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே முழுக்காட்டுதல் எடுக்க இருப்பவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும். முழுக்காட்டுதல் பெற திட்டமிட்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் உடையையும், டவலையும் தங்களுடன் எடுத்துவர வேண்டும். அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குலைக்கும் விதத்தில் பொருத்தமற்ற உடையை ஒருசிலர் கடந்த காலத்தில் அணிந்து வந்திருந்தார்கள். நம் ஊழிய புத்தகத்திலுள்ள கேள்விகளை முழுக்காட்டுதல் எடுக்கவிருக்கும் ஆட்களோடு மறுபார்வை செய்கையில், இந்தக் குறிப்புகளை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை மூப்பர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவருடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக முழுக்காட்டுதல் உள்ளது. இது அந்த நபருக்கும் யெகோவாவுக்கும் இடையேயான மிக நெருங்கிய, சொந்த விஷயமாகும். எனவே, முழுக்காட்டுதல் எடுக்கவிருப்பவர்கள், முழுக்காட்டுதலின்போது ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோ அல்லது கைகளைக் கோர்த்துக்கொண்டோ இருப்பது பொருத்தமற்றதாகும்.
▪ பேட்ஜ் கார்டுகள்: 1998-க்கான பேட்ஜ் கார்டை மாநாடு நடக்கும் நகரத்தில் இருக்கும்போதும், பிரயாணம் செய்யும்போதும், மற்ற எல்லா சமயத்திலும் தயவுசெய்து அணிந்துகொள்ளுங்கள். இதை அணிவதால் சிறந்த சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகள் நமக்கு அடிக்கடி கிடைக்கின்றன. பேட்ஜ் கார்டுகளையும் அதற்கான கவர்களையும் (holders) உங்கள் சபையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். அவை மாநாட்டில் கிடைக்காது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான கார்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாநாடு ஆரம்பிப்பதற்கு சில நாட்களே இருக்கும் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள். உங்களது தற்போதைய மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை (Advance Medical Directive/Release card) உடன் கொண்டுசெல்ல மறந்துவிடாதீர்கள்.
▪ தங்கும்வசதி: இந்த விஷயத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீங்கள் மாநாட்டில் இருக்கும்போதே தயவுசெய்து தயங்காமல் ரூமிங் டிப்பார்ட்மென்டுக்கு தெரியப்படுத்துங்கள், அவர்கள் உடனே பிரச்சினையை தீர்த்துவைக்க உதவுவார்கள். பொருத்தமான மாநாட்டு விலாசத்திற்கு, விசேஷ தேவையிலுள்ள அறைவசதி வேண்டுகோள் படிவத்தை (Special Needs Room Request forms) உடனடியாக அனுப்ப சபை செயலர்கள் கவனமாக இருக்க வேண்டும். இத்தகைய விசேஷ தேவையின் மூலம் நீங்கள் அறையை புக் செய்ததை ரத்துசெய்வீர்கள் என்றால் உடனே ரூமிங் டிப்பார்ட்மென்டுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அப்போது அந்த அறையை வேறு யாருக்காவது கொடுக்க முடியும்.
▪ வாலண்டியர் சேவை: மாநாட்டில் உள்ள ஏதேனும் டிப்பார்ட்மென்ட்டில் சேவை செய்ய உங்களுடைய நேரத்தை கொஞ்சம் ஒதுக்க முடியுமா? உங்கள் சகோதரர்களுக்கு சேவை செய்யும்போது, கொஞ்ச நேரம் செய்தாலும் பரவாயில்லை, அது மிகவும் உதவியாக இருக்கும், உங்களுக்கும் மனதிருப்தி தரும். உதவ வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால், மாநாட்டில் வாலண்டியர் சேவை என்ற டிப்பார்ட்மென்ட்டில் தெரியப்படுத்துங்கள். 16 வயதுக்கு குறைவான பிள்ளைகளும் தங்கள் பெற்றோருடனோ அல்லது பொறுப்பான பெரியவர்களுடனோ சேர்ந்து உதவிசெய்யலாம்.
▪ எச்சரிக்கை: எல்லா சமயங்களிலும் உங்கள் வாகனம் பூட்டப்பட்டிருக்கிறதா என்று உறுதிசெய்து கொள்ளுங்கள். நாம் எதையாவது கண்ணில் படும்படி வைக்கப்போய், யாராவது அதை திருட முயன்றால் கஷ்டம். திருடர்களும் ஜேப்படிக்காரர்களும் பெரிய கூட்டங்களின்மீதே குறிவைப்பார்கள். விலையுயர்ந்த எந்தப் பொருளையும் இருக்கையில் விட்டு வருவது முட்டாள்தனம். உங்களை சுற்றியிருப்பவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் என உறுதியாக சொல்ல முடியாது. ஏன் வீணாக ஆசையை தூண்ட வேண்டும்? சில வெளி ஆட்கள் பிள்ளைகளை நைசாக கடத்திக் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் செய்திருப்பதாக அறிக்கைகள் வந்திருக்கின்றன. எல்லா சமயத்திலும் பிள்ளைகளை உங்களுடைய மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.
அநேக ஹோட்டல்கள் அளிக்கும் தொலைக்காட்சி மற்றும் வீடியோக்கள் பெரும்பாலும் ஆபாசமான நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புகின்றன. பிள்ளைகளை கண்காணிக்க யாரும் இல்லை என்றால் அறையிலுள்ள தொலைக்காட்சியை உபயோகிக்க அனுமதிக்காதீர்கள்.
மாநாடு நடக்கும் அரங்கத்தின் நிர்வாகத்தினரை போன் மூலமோ அல்லது கடிதம் மூலமோ தொடர்புகொண்டு, மாநாடு சம்பந்தப்பட்ட எந்தத் தகவல்களையும் தயவுசெய்து கேட்காதீர்கள். தேவையான தகவல் மூப்பர்களிடம் இல்லையென்றால், 1998 மே நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 5-ல் உள்ள குறிப்பிட்ட மாநாட்டு விலாசத்திற்கு நீங்கள் எழுதிக் கேட்டுக்கொள்ளலாம். நீங்கள் கோயம்புத்தூர் அல்லது மதுரை மாநாடுகளுக்கு போக திட்டமிட்டிருந்தால், மாநாட்டு தலைமை அலுவலக விலாசங்கள் இதே நம் ராஜ்ய ஊழிய பிரதியில் பக்கம் 7-ல் கொடுக்கப்பட்டுள்ளன.