“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை”
1 உயிர்காக்கும் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பது உங்களுக்கு சவாலாக இருக்கிறதா? அவர்களுடைய அறிவு பசியைத் தூண்டும் விதத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டுமென நினைக்கிறீர்களா? “போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்” என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 10:7) அந்த செய்தி, புரிந்துகொள்ள எளிதாகவும் பகிர்ந்துகொள்ள சுலபமாகவும் இருந்தது. இன்று நாம் பிரசங்கிக்கும் செய்தியும் அப்படித்தான் உள்ளது.
2 உரையாடலைத் துவங்க ஒருசில வார்த்தைகளே போதும். உதாரணமாக, பிலிப்பு ஓர் எத்தியோப்பியனை சந்தித்தபோது, “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” என கேட்டார். (அப். 8:30) இப்படியாக, “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை” பலன் தரும் உரையாடலுக்கு வழிவகுத்தது.—நீதி. 25:11.
3 ஊழியத்தில் நீங்களும் இதே விதமாகவே உரையாடலைத் துவங்கலாம். எப்படி? வீட்டிலுள்ளவற்றை கவனத்துடன் பார்த்து, சூழ்நிலைக்குப் பொருத்தமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். கேள்வி கேளுங்கள், சொல்லும் பதிலுக்கு செவிசாயுங்கள்.
4 சில அடிப்படை கேள்விகள்: உரையாடலைத் துவங்க பின்வரும் எந்தக் கேள்வியையும் உபயோகிக்கலாம்:
◼ “கர்த்தருடைய ஜெபத்தை (அல்லது பரமண்டல ஜெபத்தை) நீங்கள் சொல்கிறீர்களா?” (மத். 6:9, 10) அதிலுள்ள சில வாக்கியங்களை குறிப்பிட்டு இவ்வாறு சொல்லுங்கள்: “‘பரிசுத்தப்படுத்தும்படி (அல்லது அர்ச்சிக்கப்படும்படி) இயேசு சொன்ன கடவுளுடைய பெயர் என்ன?’ என சிலர் கேட்கின்றனர். ‘நாம் எந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படி இயேசு சொன்னார்?’ என்றும் கேட்கின்றனர். இக்கேள்விகளுக்கு எப்போதாவது திருப்தியான பதில்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றனவா?”
◼ “‘வாழ்க்கையின் அர்த்தமென்ன?’ என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதுடன் அது சம்பந்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டுங்கள்.—பிர. 12:13; யோவா. 17:3.
◼ “மரணமே இல்லாத காலம் வரும் என நீங்கள் நினைக்கிறீர்களா?” நம்பிக்கையளிக்கும் பதிலை ஏசாயா 25:8-லிருந்தும் வெளிப்படுத்துதல் 21:4-லிருந்தும் காட்டுங்கள்.
◼ “உலகிலுள்ள குழப்பமான நிலைக்கு ஏதாவது எளிய பரிகாரம் இருக்கிறதா?” “பிறரை நேசிப்பாயாக” என கடவுள் கற்பிக்கிறார் என்பதைக் காட்டுங்கள்.—மத். 22:39.
◼ “விண்வெளியிலுள்ள குறுங்கோள்களோ, வால்நட்சத்திரங்களோ மோதுவதால் நம்முடைய பூமி என்றாவது அழிக்கப்படுமா?” பூமி என்றென்றும் நிலைத்திருக்கும் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது என சொல்லுங்கள்.—சங். 104:5.
5 கனிவாகவும், எளிமையாகவும், நேரடியாகவும் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும். மற்றவர்களிடம் சத்தியத்தின் ‘ஒரு வார்த்தையை’ நீங்கள் பகிர்ந்துகொண்டாலும் அதற்கான ஆசீர்வாதம் யெகோவாவிடமிருந்து நிச்சயம் கிடைக்கும்.