அடக்கமான, போற்றத்தக்க தோற்றம்
1 “யெகோவாவின் சாட்சிகள் அருமையானவர்கள்! நீங்கள் கனிவானவர்கள், நேர்த்தியாக உடுத்துபவர்கள், ஆழ்ந்த மரியாதை காட்டுபவர்கள்.” இவ்வாறு ஒரு ஹோட்டல் பிரதிநிதி, கடந்த வருடம் ஒரு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட சகோதர சகோதரிகளைப் பற்றி சொன்னார். மற்றொரு மாநாட்டைப் பற்றி ஒரு ஹோட்டல் பணியாள் இவ்வாறு கூறினார்: “உங்கள் ஆட்கள் கடவுளைப் பிரியப்படுத்தும் வகையில் உடுத்துகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.” ஆம், மாநாட்டுக்கு வருபவர்களை மற்றவர்கள் கவனிக்கிறார்கள். எனவே நாம் “சுவிசேஷத்திற்குப் பாத்திரராக” உடுத்த விரும்புகிறோம்; இதனால் அடிக்கடி வெளியாட்கள் நம்மைப் பாராட்ட தூண்டப்படுகிறார்கள்; நாம் கடவுளுடைய ஊழியர்கள் என்பதை அது தெளிவுபடுத்துகிறது. (பிலி. 1:27) மாவட்ட மாநாட்டுக்காக நாம் தயாராகையில் நம் தோற்றத்துக்கு முன்னதாகவே கவனம் செலுத்துவது பொருத்தமானது.
2 ‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளது [அதாவது அடக்கமுள்ளது]’ என சீஷராகிய யாக்கோபு எழுதினார். (யாக். 3:17) அடக்கத்தைத் தோற்றத்தில் காட்டுவது சவாலாக இருக்கலாம். சாத்தானின் நெறிகெட்ட உலகம் பொருத்தமற்றதாக இருக்கிற, அடக்கமற்ற, வசீகரமான, வினோதமான பாணிகளைப் பின்பற்றும்படி ஆட்களை கவர்ந்திழுக்கிறது. (1 யோ. 2:15-17) எனவே ஆடை, தோற்றம் சம்பந்தமாக நாம் தீர்மானங்கள் எடுக்கையில், “அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தி . . . உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்”ணும்படி சொல்லும் பைபிள் புத்திமதிக்கு செவிசாய்க்க வேண்டும். (தீத். 2:12) நம் தோற்றத்தால் மற்றவர்களை, அவர்கள் நம் சகோதரர்களாக இருந்தாலும் சரி, ஹோட்டலிலோ ரெஸ்டாரன்ட்டிலோ வேலை செய்யும் பணியாட்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அவர்களை ஒருபோதும் இடறலடைய செய்யாதிருப்போமாக.—1 கொ. 10:32, 33.
3 அடக்கமும், தகுதியுமான ஆடை: மாநாட்டுக்கு தயாராகையில் இவ்வாறு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: ‘என்னுடைய ஆடை அடக்கமானதாக இருக்கிறதா, அல்லது தேவையின்றி மற்றவர்களின் கவனத்தை என்னிடம் திருப்புகிறதா? மற்றவர்களது உணர்ச்சிகளுக்கு மதிப்பு காட்டுவதாக இருக்கிறதா? என்னுடைய பிளௌஸின் கழுத்து அதிகம் கீழிறங்கி இருக்கிறதா அல்லது இறக்கம் குறைவாக இருக்கிறதா? என் உடைகள் உடல் அங்கங்களை வெளிக்காட்டுகின்றனவா அல்லது இறுக்கமாக இருக்கின்றனவா? என் உடை சுத்தமாகவும் துர்நாற்றம் வீசாமலும் இருக்கிறதா? ஹோட்டலில் இலவசமாக தரும் உணவைப் பெறுகையில் அல்லது மாநாட்டுக்குப் பின்பு ஓய்வாக பொழுதைக் கழிக்கையில் ஓர் ஊழியருக்கே உரிய நேர்த்தியும் சுத்தமுமான தோற்றத்தோடு நான் இருப்பேனா அல்லது என் உடை ஒழுங்கற்றதாக, அதிநவீன பாணியாக, ஏனோதானோவென உடுத்தியிருப்பதாக, பேட்ஜ் கார்ட் அணிந்திருக்கும் மாநாட்டுப் பிரதிநிதிக்குப் பொருத்தமற்றதாக இருக்கிறதா? ஓய்வாக பொழுதைக் கழிக்கும் நேரத்தில் அணிந்திருக்கும் ஆடை காரணமாக சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வெட்கப்படுகிறேனா?’—ரோ. 15:2, 3; 1 தீ. 2:9, 10.
4 முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் தரும் ஆலோசனைகளிலிருந்து நாம் பயனடையலாம். தங்கள் ஆடையை பார்த்து தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை மனைவிகள் தங்கள் கணவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் பயமுள்ள பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு உதவலாம். மேலும், மதிப்புமிக்க முதிர்ந்த சகோதரிகள், “தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் . . . தெளிந்த புத்தியுள்ளவர்களும்,” தங்கள் தோற்றத்திலே ‘கற்புள்ளவர்களுமாயிருக்கும்படி [அதாவது, அடக்கமுள்ளவர்களாயிருக்கும்படி] . . . அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்கவர்களாய்’ இருக்கலாம். (தீத். 2:3-5) அடக்கமான, தகுதியான ஆடைகள் அணிவதற்கு நம்முடைய பிரசுரங்களில் காணப்படும் படங்கள் உதவுகின்றன.
5 யெகோவாவுக்குப் புகழ் சேருங்கள்: நிகழ்ச்சியில் பங்கெடுப்பவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்கு மாவட்ட மாநாடுகள் அருமையான வாய்ப்பளிக்கின்றன. நம் கிறிஸ்தவ நடத்தையும் பேச்சும் அவரை கனப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அநேகர் முதலில் நம் உடையையும் தோற்றத்தையும்தான் கவனிக்கிறார்கள். நம்முடைய அடக்கமான, போற்றத்தக்க தோற்றத்தால் நாம் அனைவரும் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்போமாக.—சங். 148:12, 13.
[கேள்விகள்]
1. மாவட்ட மாநாட்டுக்கு தயாராகையில் நாம் ஏன் தோற்றத்துக்கு கவனம் செலுத்த வேண்டும்?
2. ஆடையிலும் தோற்றத்திலும் அடக்கத்தை காட்டுவது ஏன் சவாலானது?
3. நம் தனிப்பட்ட தோற்றத்தை சோதித்துப் பார்க்க என்ன கேள்விகள் நமக்கு உதவும்?
4. அடக்கமான தோற்றத்துடன் இருக்க மற்றவர்கள் நமக்கு எப்படி உதவலாம்?
5. மாநாட்டில் நாம் அனைவரும் யெகோவாவுக்கு எப்படி புகழ் சேர்க்கலாம்?
[பக்கம் 6-ன் பெட்டி]
சிறந்த தோற்றத்துக்கு உதவுபவை
◼ கடவுளுடைய வார்த்தை
◼ சுயபரிசோதனை
◼ மற்றவர்கள் கவனித்துச் சொல்லுபவை
◼ கிறிஸ்தவ பிரசுரங்கள்