பத்திரிகை மார்க்கத்தில் சந்திப்பவரின் ஆர்வத்தை வளருங்கள்
1 ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களில் பலர் நம்மை வாயார வரவேற்கிறார்கள், நம் பத்திரிகைகளைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள், பைபிள் படிப்பு என்று வரும்போது மட்டும் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்கள் காட்டும் ஆர்வத்தை வளர்ப்பதற்கு ஒரு வழி, பத்திரிகை மார்க்கத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகும். ஒருவருக்குப் பத்திரிகைகளை அளிக்கும்போது, அவருடைய பெயர், விலாசம், அவரை எந்தத் தேதியில் சந்தித்தீர்கள், எந்தப் பத்திரிகைகளை அளித்தீர்கள், எந்த வசனத்தைக் கலந்தாலோசித்தீர்கள் போன்றவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்; அந்த நபருக்கு எதில் ஈடுபாடு அதிகம் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு புதிய பத்திரிகை கையில் கிடைக்கும்போதும், பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவர்களின் மனதைக் கவரும் குறிப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பாருங்கள், அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது அவற்றைச் சிறப்பித்துக் காட்டுங்கள். (1 கொ. 9:19-23) காலப்போக்கில் நம் பத்திரிகைகளில் படிக்கும் ஏதோவொரு விஷயம் அவர்களுடைய அக்கறையைத் தூண்டலாம், அதிகம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்தலாம்.
2 ஆனால் பத்திரிகைகளைப் படிப்பதன் மூலம் பெரும்பாலோர் தாங்களாவே யெகோவாவின் ஊழியர்களாக மாறிவிட மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். இப்போது ஜனங்கள் யெகோவாவைத் தேடுவது அவசரமாக இருப்பதால், அவர்களுக்கு உதவ நாம் இன்னும் என்ன செய்யலாம்? (செப். 2:2, 3; வெளி. 14:6, 7) ஒவ்வொரு முறை பத்திரிகைகளைக் கொடுக்கப் போகிறபோதும் கவனமாக ஒரு வேதவசனத்தைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களுக்கு வாசித்துக் காட்டுவதன் மூலம் ஆர்வத்தை வளர்க்கலாம்.
3 ஒரேவொரு வசனத்தைக் கலந்தாலோசிப்பது: உங்கள் பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்; அவர்கள் ஒவ்வொருவருடைய பிரத்தியேக தேவைகளுக்கும் ஏற்ப ஒரேவொரு வசனத்தைக் கலந்தாலோசிக்க தயாரித்துக்கொள்ளுங்கள். (பிலி. 2:4) உதாரணமாக, அவர்களில் யாரேனும் சமீபத்தில் தங்கள் பாசத்திற்குரியவரை மரணத்தில் பறிகொடுத்திருந்தால் மரித்தோரின் நிலை பற்றியும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்பதை அடுத்தடுத்த மறுசந்திப்புகளில் கலந்தாலோசிக்கலாம். ஒரேவொரு வசனத்தைக் காட்டிக் கலந்தாலோசிப்பதற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் “மரணம்,” “உயிர்த்தெழுதல்” போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் உள்ள தகவலைப் பயன்படுத்தலாம். அதோடு சம்பந்தப்பட்ட விஷயங்களான வியாதி, வயோதிகம், மரணம் எல்லாம் எவ்வாறு முற்றிலும் துடைத்தழிக்கப்படும் என்றும் அடுத்தடுத்து ஒவ்வொரு முறை சந்திக்கையிலும் கலந்தாலோசிக்கலாம். இதற்கெல்லாம், அந்த நபர் எதில் ஆர்வம் காட்டுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதும் அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை அவருக்குப் படிப்படியாக விளக்குவதும் முக்கியமாகும்.
4 புரிந்துகொள்ள உதவுவது: அத்தகைய கலந்தாலோசிப்புகளை எளியதாகவும் சுருக்கமாகவும் வைத்துக்கொள்வது எப்போதும் சிறந்ததாக இருந்தாலும் தேர்ந்தெடுத்துள்ள வசனத்தை வாசித்துக் காட்டுவது மட்டும் போதாது. ஏனெனில் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாதபடி சாத்தான் ஜனங்களின் மனதைக் குருடாக்கி இருக்கிறான். (2 கொ. 4:3, 4) பைபிளைப் பற்றி தெரிந்திருப்பவர்களுக்குக்கூட அதைப் புரிந்துகொள்வதற்கு உதவி தேவைப்படுகிறது. (அப். 8:30, 31) எனவே, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுக்கும்போது செய்வதைப் போலவே, வசனத்தைப் புரியும் விதத்தில் விளக்கி உதாரணத்துடன் தெளிவுபடுத்துவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். (அப். 17:3) கடவுளுடைய வார்த்தையை தன் சொந்த வாழ்க்கையில் பின்பற்றுவது அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பதை அந்த நபர் புரிந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5 கற்றுக்கொள்ளும் விஷயங்கள் ஒருவருக்குப் பிடித்திருந்தால், ஒவ்வொரு முறை சந்திக்கச் செல்லும்போதும் மெல்ல மெல்ல இரண்டோ மூன்றோ பைபிள் வசனங்களைக் கூடுதலாகக் கலந்தாலோசியுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அறிவு புத்தகத்தையோ அளிப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருங்கள். ஆக, நம்மிடம் தவறாமல் பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்கிறவர் இறுதியில் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளலாம்.
[கேள்விகள்]
1. பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவரிடம் நாம் எவ்வாறு ஆர்வத்தை வளர்க்கலாம்?
2. இப்போது ஜனங்கள் யெகோவாவைத் தேடுவது ஏன் அவசரமாக இருக்கிறது, அவர்களுக்கு உதவ நாம் இன்னும் என்ன செய்யலாம்?
3. (அ) ஒரேவொரு வசனத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து ஒவ்வொரு முறை கலந்தாலோசிப்பதற்கும் நாம் எப்படித் தயாரிக்கலாம்? (ஆ) உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்கள் எந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்?
4. வேதவசனங்களைப் பயன்படுத்தும்போது புரிந்துகொள்ள உதவுவது ஏன் முக்கியம், அதை நாம் எப்படிச் செய்யலாம்?
5. நம்மிடம் தவறாமல் பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்கிறவர் இறுதியில் எப்படி பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளலாம்?