தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—கேள்வி கேட்டு, சொல்வதைக் கவனிப்பதன் மூலம்
1 பெரும்பாலோர் தங்கள் கருத்துகளைச் சொல்ல ரொம்பவே ஆசைப்படுவார்கள், ஆனால் யாராவது தங்களிடம் “லெக்சர்” அடித்தாலோ குறுக்குக் கேள்விகளைக் கேட்டாலோ முகம்சுளிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே, கிறிஸ்தவ ஊழியர்களான நாம், ஆட்களிடம் கேள்விகளைக் கேட்டு, அவர்கள் உள்ளத்தில் இருப்பதை அறிந்துகொள்ளும் கலையைக் கற்க வேண்டும்.—நீதி. 20:5.
2 நாம் கேட்கிற கேள்விகள் மற்றவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டுமே தவிர, அவர்களைத் தர்மசங்கடப்படுத்திவிடக் கூடாது. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் ஒரு சகோதரர் இப்படிக் கேட்கிறாராம்: “மக்கள் ஒருவரையொருவர் மதிப்பு மரியாதையுடன் நடத்தும் காலம் எப்போதாவது வருமென்று நினைக்கிறீர்களா?” பதிலைப் பொறுத்து, “இது எப்படிச் சாத்தியமாகும் என்று நினைக்கிறீர்கள்?” அல்லது “நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?” என்று மேலுமாகக் கேட்கிறாராம். சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதும், பொது இடங்களில் சாட்சி கொடுக்கும்போதும், பிள்ளைகளை உடைய தம்பதிகளிடம் மற்றொரு சகோதரர் இப்படிக் கேட்கிறாராம்: “ஒரு பெற்றோராக உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் எது?” அதன் பிறகு, “உங்களுக்கிருக்கும் மிகப் பெரிய கவலை எது?” என்று மற்றொரு கேள்வியையும் கேட்கிறாராம். பார்த்தீர்களா, இந்தக் கேள்விகள் ஜனங்களை தர்மசங்கடப்படுத்தாமலே அவர்களுடைய கருத்துகளைச் சொல்ல வைக்கின்றன. சூழ்நிலைகள் வேறுபடுவதால், நாம் பேசும் விஷயத்தையும், கேள்வி கேட்கும் விதத்தையும் பிராந்தியத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
3 உள்ளத்திலிருப்பதை வரவழைத்தல்: ஜனங்கள் தங்களுடைய கருத்துகளைச் சொல்ல ஆசைப்படுகிறார்கள் என்றால், அநாவசியமாகக் குறுக்கிடாமல் பொறுமையாகக் கவனித்துக் கேளுங்கள். (யாக். 1:19) கனிவுடன் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். (கொலோ. 4:6, NW) இப்படிக்கூட நீங்கள் சொல்லலாம்: “அப்படியா, இதை நீங்கள் என்னிடம் சொன்னதற்கு ரொம்ப நன்றி.” அவர்களைப் பாராட்ட நினைத்தால் உள்ளப்பூர்வமாகப் பாராட்டுங்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், ஏன் அப்படி உணருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள கூடுதலான கேள்விகளைத் தயவாகக் கேளுங்கள். நீங்களும் அவரும் ஒத்துப்போகிற ஒரு விஷயத்தைக் குறித்துப் பேச முயலுங்கள். அவர்களுடைய கவனத்தை பைபிள் வசனத்திடம் திருப்ப நினைத்தால், “இது சாத்தியம் என்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா?” என்று கேட்கலாம். அடித்துப் பேசுவதையோ, வாக்குவாதம் செய்வதையோ தவிருங்கள்.—2 தீ. 2:24, 25.
4 நம்முடைய கேள்விகளுக்கு மற்றவர்கள் தரும் பதில், பெரும்பாலும் நாம் கவனித்துக் கேட்கும் விதத்தையே சார்ந்திருக்கிறது. உள்ளப்பூர்வமாகக் கவனித்துக் கேட்கிறோமா இல்லையா என்பதை ஜனங்கள் எளிதில் கண்டுகொள்வர். ஒரு பயணக் கண்காணி குறிப்பிட்டதாவது: “ஜனங்கள் பேசுவதை நாம் பொறுமையாகக் கேட்கும்போது அவர்கள் ரொம்பவே கவரப்படுகிறார்கள்; அவர்கள்மீது நமக்கிருக்கும் கனிவான தனிப்பட்ட அக்கறையை அது அருமையாக எடுத்துக்காட்டும்.” ஆம், மற்றவர்கள் பேசும்போது கவனித்துக் கேட்பது அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம் என்பதைக் காட்டுகிறது; நாம் சொல்ல விரும்பும் நற்செய்திக்குச் செவிகொடுத்துக் கேட்கவும் சிலசமயம் அது அவர்களை உந்துவிக்கிறது.—ரோ. 12:10.