பைபிள் கற்பிக்கிறது புத்தகம்—பைபிள் படிப்பிற்கு உதவும் முக்கிய புத்தகம்
1 “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகம் வெளியிடப்பட்டபோது நாம் எவ்வளவாய் பூரித்துப்போனோம்! மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் சனிக்கிழமை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தங்களுக்கென ஒரு பிரதியைப் பெற்று அகமகிழ்ந்தனர். கற்பிப்பதற்கு உதவும் இந்தப் புதிய புத்தகத்தை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகிறோம்? பைபிள் படிப்பிற்கு உதவும் முக்கிய புத்தகமாக இருக்கும் விதத்தில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஊழியத்தில் முதன்முதலாக இப்புத்தகத்தை மார்ச் மாதத்தில் அளிக்கப்போகிறோம்; என்றாலும், இதை இப்போதே அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்தும்படி பிரஸ்தாபிகளை ஊக்கப்படுத்துகிறோம்.
2 தற்போதைய பைபிள் படிப்புகள்: அறிவு புத்தகத்திலோ தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலோ பைபிள் படிப்புகளை நடத்திவரும் பிரஸ்தாபிகள், இந்தப் புதிய புத்தகத்தை எப்போதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதைப் பகுத்தறிய வேண்டும். சமீபத்தில் பைபிள் படிப்பை ஆரம்பித்திருந்தால், இப்புதிய புத்தகத்திலிருந்தே படிப்பைத் தொடங்கிவிடலாம். அறிவு புத்தகத்தில் படிப்பை ஓரளவு நடத்தியிருந்தால், அடுத்ததாக நடத்தவிருக்கிற அதிகாரத்தை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து நடத்த ஆரம்பிக்கலாம். அறிவு புத்தகத்தைப் படித்து முடிக்கும் அளவிற்கு வந்துவிட்டால், அதை முடித்துவிடத் தீர்மானிக்கலாம்.
3 பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் படித்துப் பலன் பெறப் போகிற அநேகரை நாம் எல்லாருமே அறிந்திருப்போம் என்பதில் சந்தேகமில்லை. பைபிள் சத்தியத்தைப் படிப்படியாகக் கற்பிப்பதற்கு உதவும் இப்புத்தகத்திலிருந்து படிக்கலாமா என்று ஒவ்வொருவரிடமும் நீங்கள் ஏன் கேட்கக்கூடாது? உதாரணமாக, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலோ அறிவு புத்தகத்திலோ பைபிள் படிப்பை முடித்திருக்கும் மாணாக்கர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு முன்னேறாமல் இருக்கலாம்; அப்படிப்பட்டவர்கள் இந்தப் புதிய புத்தகத்திலிருந்து மறுபடியும் பைபிளைப் படிக்க விரும்பலாம். கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவைத் தங்கள் பிள்ளைகளுக்குப் புகட்டிவருகிற பெற்றோர்கள், இந்தப் பிரசுரத்தைப் பயன்படுத்தத் தீர்மானிக்கலாம்.—கொலோ. 1:9, 10.
4 இரண்டாவது புத்தகத்தைப் படித்தல்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் படித்து முடித்த பைபிள் மாணாக்கருக்கு, தொடர்ந்து பைபிள் படிப்பை நடத்தும் வகையில் இன்னொரு புத்தகம் இருக்கிறதா? ஆமாம், இருக்கிறது. அந்த மாணாக்கர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் என்பதும், தான் கற்றுவரும் காரியங்களுக்கு நன்றியுணர்வைக் காட்டுகிறார் என்பதும் தெரியவந்தால், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்திலிருந்து தொடர்ந்து பைபிள் படிப்பை நடத்தலாம். பைபிள் கற்பிக்கிறது புத்தகம், சீஷராக்கும் வேலையைச் செய்துவருகிற நமக்கு வலிமைமிக்க ஒரு கருவியாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.—மத். 28:19, 20.