யெகோவாவின் புண்ணியங்களை அறிவியுங்கள்
1 ‘யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்.’ (1 நா. 29:11) யெகோவாவிடம் நமக்குள்ள அன்பும் மரியாதையும் என்ன செய்யும்படி நம்மைத் தூண்டுகின்றன? ‘நம்மை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி’ தூண்டுகின்றன. (1 பே. 2:9) நம்முடைய மகத்தான கடவுளைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்கவே முடியாது! யெகோவாவின் புண்ணியங்களை அறிவிப்பதற்கு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நமக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
2 நினைவுநாள் ஆசரிப்பை விளம்பரப்படுத்தும் விசேஷ விநியோகிப்பு: ஏப்ரல் 2 திங்கட்கிழமை அன்று கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிப்பதன்மூலம் யெகோவாவின் புண்ணியங்களை நாம் சிறப்பித்துக்காட்டுவோம். முக்கியமான இந்த நிகழ்ச்சிக்கான விசேஷ அழைப்பிதழ் மார்ச் 17 முதல் ஏப்ரல் 2 வரை உலகெங்கும் விநியோகிக்கப்படும். இதில் முழுமையாய் பங்குகொள்ள எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறோம். புதியவர்கள் தகுதிபெற்றிருந்தால் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பிப்பதற்கு இது அருமையான சமயமாய் இருக்கும். உங்கள் பிள்ளைகளோ, நீங்கள் படிப்பு நடத்தும் பைபிள் மாணாக்கரோ அவ்வாறு தகுதிபெற்றிருந்தால், நீங்களாகவே இதுகுறித்து மூப்பர்களிடம் பேசுங்கள்.
3 “மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாடுகளின்போது எப்படி விநியோகித்தோமோ அதைப்போன்றே இந்த அழைப்பிதழையும் விநியோகிப்போம். பிரஸ்தாபிகளுக்குத் தலா 50 பிரதிகளும், பயனியர்களுக்குத் தலா 150 பிரதிகளும் கிடைக்கும் விதத்தில் போதுமான அழைப்பிதழ்கள் சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். சுருக்கமாகப் பேசுங்கள்; ஒருவேளை நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “வரவிருக்கும் முக்கியமான வருடாந்தர நிகழ்ச்சிக்கான இந்த அழைப்பிதழை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் நிச்சயம் அன்பான வரவேற்பைப் பெறுவீர்கள். அதுபற்றிய விவரங்கள் இந்த அழைப்பிதழில் உள்ளன.” ஒருவேளை வீட்டுக்காரர் கேள்விகளைக் கேட்டால் பதில் சொல்வதற்கு நேரமெடுத்துக்கொள்ளுங்கள். இது சம்பந்தமாக, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் பிற்சேர்க்கையில், 206-ஆம் பக்கத்தில் ஆரம்பமாகும் கர்த்தருடைய இராப்போஜனம்பற்றிய கட்டுரை உதவியாய் இருக்கும். சனி, ஞாயிறு தினங்களில் அப்போதைய பத்திரிகைகளோடு இந்த விசேஷ அழைப்பிதழையும் சேர்த்துக் கொடுப்போம். யாரேனும் ஆர்வம் காட்டினால் அவர்களுடைய விலாசத்தைக் குறித்து வைத்துக்கொண்டு, மீண்டும்போய் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
4 முடிந்தவரையில், ஒவ்வொரு வீட்டுக்காரரையும் நேரில் சந்தித்து இந்த விசேஷ அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும். ஆகவே, பூட்டப்பட்ட வீடுகளைக் குறித்து வைத்துக்கொண்டு பின்னர் வேறொரு சமயத்தில் மீண்டும் போய் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். சபையில் நிறைய அழைப்பிதழ்கள் மீதமாக இருந்தால், நினைவுநாள் ஆசரிப்புக்கு முந்தின வாரத்தில், பூட்டப்பட்ட வீடுகளில் அழைப்பிதழ்களைப் போட்டுவிட்டு வரலாம்; ஆனால் அதற்கு முன்பு அப்படிப் போட வேண்டாம். மறுசந்திப்புகள், பைபிள் மாணாக்கர்கள், சொந்தபந்தங்கள், சக பணியாளர்கள், அக்கம்பக்கத்தார் ஆகியோருக்கும், தெரிந்தவர்களுக்கும்கூட மறக்காமல் அழைப்பிதழைக் கொடுங்கள்.
5 துணைப் பயனியர் ஊழியம்: யெகோவாவின் புண்ணியங்களை முழுமையாக அறிவிக்க மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்யமுடியுமா? அதைச் செய்வதற்கு உங்களுடைய தினசரி வேலைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். (எபே. 5:15-17) யெகோவாவின் சேவையில் அதிகமாய் ஈடுபட நீங்கள் முயற்சி எடுத்தால் உங்களுக்கு சந்தோஷமும் யெகோவாவின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பதில் நிச்சயமாயிருக்கலாம். (நீதி. 10:22) நினைவுநாள் ஆசரிப்பு நெருங்கி வந்துகொண்டிருப்பதால் அதற்காகத் திட்டமிடுவதற்கு இதுவே நேரம்.—நீதி. 21:5.
6 கடந்த வருடம் துணைப் பயனியர் ஊழியம் செய்த 90 வயது சகோதரி ஒருவர் அதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். அவர் இவ்விதமாகச் சொன்னார்: “எனக்கு தோட்ட வேலையில் அதிக ஆர்வம் இருந்ததால் செடிகள் நட வேண்டுமென நினைத்தேன். இருந்தாலும் நான் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்தேன். ராஜ்ய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்குப் பலமாக இருந்ததால் மார்ச் மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய தீர்மானித்தேன்.” அவருடைய முயற்சிகளுக்குப் பலன் கிடைத்ததா? அவர் இவ்வாறு சொல்கிறார்: “சபையிடம் இன்னும் நெருங்கி வந்திருப்பதாக உணருகிறேன். இது என்னை யெகோவாவிடமும் அதிகமாக நெருங்கி வரச் செய்திருக்கிறது.” அவரைப் போலவே நாமும், எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்தித்துப்பார்த்து தேவையான மாற்றங்களைச் செய்ய முடியுமா?
7 துணைப் பயனியர் ஊழியத்தில் 50 மணிநேர இலக்கை எட்டுவது நீங்கள் நினைக்குமளவு கடினமானதல்ல. ஜெப சிந்தையுடன் உங்களுடைய தினசரி வேலைகளைச் சீர்தூக்கிப்பாருங்கள், ஓர் அட்டவணை போடுங்கள், பிறகு ராஜ்ய காரியங்களுக்காக நீங்கள் ஏற்கெனவே போட்டு வைத்திருக்கும் உங்களுடைய அன்றாட அட்டவணையில் அவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய சூழ்நிலையைப்பற்றி உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். உடல் நிலை காரணமாக சீக்கிரத்தில் களைப்படையும் பிரச்சினை உங்களுக்கு இருந்தால் ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் நீங்கள் ஊழியத்தில் செலவிடலாம். நீங்கள் முழு நேர வேலையில் இருந்தாலோ பள்ளிக்குச் செல்பவராக இருந்தாலோ மாலை நேரங்களில் அல்லது வாரக் கடைசியில் ஊழியம் செய்யலாம்.
8 அநேகரால் குடும்பமாக துணைப் பயனியர் ஊழியத்தில் ஈடுபட முடிகிறது. கடந்த வருடங்களில் தங்களுடைய சூழ்நிலை அனுமதிக்காது என நினைத்த ஒரு தம்பதியர் துணைப் பயனியர் ஊழியத்தில் ஈடுபடத் தயங்கினார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? “நாங்கள் சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டும் என்ற எங்களுடைய நீண்டநாள் கனவு நனவாக யெகோவாவிடம் ஜெபம் செய்தோம்” என்றார்கள். நன்கு திட்டமிட்டதால் அவர்களுடைய கனவு நனவானது. அவர்கள் மேலும் சொன்னதாவது: “அது ரொம்ப நன்றாக இருந்தது. நல்ல பலன்களையும் பெற்றோம். நீங்களும் அதை முயன்று பாருங்கள் என்றே உங்களுக்கும் சொல்கிறோம். எங்களால் அதைச் செய்ய முடிந்திருக்கிறது என்றால், உங்களாலும் அதைச் செய்ய முடியலாம்.”
9 உங்களுடைய அடுத்த குடும்பப் படிப்பில், வரப்போகும் மாதங்களில் நீங்கள் எல்லாருமே எப்படி ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடலாம் என்பதைக் குறித்து ஏன் கலந்து பேசக்கூடாது? உங்களுடைய முழு குடும்பமும் துணைப் பயனியர் ஊழியத்தில் ஈடுபட முடியாது என்றாலும், குடும்பத்திலுள்ளவர்களின் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் ஒரு நபராவது அதைச் செய்யலாம். அதுவும் கடினம் என்றால், வரப்போகிற மாதங்களில் ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதற்குக் குடும்பமாக நீங்கள் இலக்கு வைக்கலாம்.
10 ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்: உற்சாகம் என்ற குணம், தொற்றிக்கொள்ளும் தன்மைவாய்ந்தது. துணைப் பயனியர் ஊழியம் செய்ய உங்களுக்கு இருக்கும் ஆசை குறித்து மற்றவர்களிடம் பேசுங்கள். அப்போது, அவர்களும் துணைப் பயனியர் ஊழியம் செய்ய தூண்டப்படுவார்கள். அதோடு, ஏற்கெனவே பயனியர் ஊழிய அனுபவம் பெற்றவர்கள் உங்களுக்கு நடைமுறை ஆலோசனை தருவார்கள். அதன் அடிப்படையில், உங்களுடைய வேலைகளையும் அட்டவணைகளையும் நீங்கள் மாற்றியமைத்துக்கொண்டு உங்கள் இலக்கை எட்ட முடியும். (நீதி. 15:22) உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியுமென்றால் உங்களைப் போன்ற சூழ்நிலையில் உள்ள இன்னொரு பிரஸ்தாபியையும் ஏன் அழைக்கக்கூடாது? சந்தோஷமான இந்தச் சேவையை இருவரும் சேர்ந்து அனுபவிக்கலாமே!
11 இந்த முக்கியமான சேவையில் தாங்களும் ஈடுபட அநேக மூப்பர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். (எபி. 13:7) இது சபைக்கு உற்சாகம் அளிக்கிறது! மூப்பர்கள் இதுபற்றி மற்றவர்களிடம் பேசுவதன்மூலமாகவும் உற்சாகத்தை அளிக்கிறார்கள். சிலருக்குத் துணைப் பயனியர் ஊழியத்தில் ஆர்வம் வருவதற்கு உற்சாகமளிக்கும் ஓரிரண்டு வார்த்தைகளோ நடைமுறையான சில ஆலோசனைகளோ மட்டுமே தேவைப்படுகின்றன. ஊழியக் கண்காணி கூடுதலான வெளி ஊழியக் கூட்டங்களுக்காக ஏற்பாடு செய்யலாம். சபையில் உள்ள எல்லாருமே ஏன், பள்ளி முடிந்து அல்லது வேலை முடிந்து வருபவர்களும்கூட கலந்துகொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடுகள்பற்றி அவ்வப்போது அறிவிப்பு செய்ய வேண்டும். எல்லாருக்கும் போதுமான பிராந்தியமும் பிரசுரமும் இருக்கிறதா என்பதையும் ஊழியக் கண்காணி உறுதிப்படுத்திக்கொள்வார்.
12 உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியாமல் போனாலும் செய்வோரை நீங்கள் உற்சாகப்படுத்தலாம், அவர்களுக்காக ஜெபம் செய்யலாம். (நீதி. 25:11; கொ. 4:12) ஒருவேளை, வார நாட்களில் ஒருமுறை அவர்களுடன் ஊழியத்தில் ஈடுபட நீங்கள் ஏற்பாடு செய்யலாம் அல்லது நீங்கள் பொதுவாகச் செய்வதைவிட அதிக மணிநேரம் அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்யலாம்.
13 ஏப்ரலில் 4,500 துணைப் பயனியர்கள் தேவை: இந்தியாவில் துணைப் பயனியர்களின் என்றுமில்லா உச்ச எண்ணிக்கை 3,216-ஆக இருந்தது, அது ஏப்ரல் 2006-ல் எட்டப்பட்டது. அதனால் இந்த ஏப்ரல் மாதத்திலும் 4,500 துணைப் பயனியர்கள் என்ற எண்ணிக்கையை எட்டுவதற்கு ஓர் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சபையிலும் 5 பிரஸ்தாபிகளுக்கு ஒருவர் என்ற கணக்கில் துணைப் பயனியர் ஊழியத்தில் ஈடுபட்டாலே போதும், இந்த இலக்கை எட்டிவிடலாம். சில சபைகளில் இன்னும் அதிகமானோர் துணைப் பயனியர் ஊழியத்தில் ஈடுபட முடியும் என்பது உண்மைதான். சபையாக வைக்கப்படும் அப்படிப்பட்ட இலக்கை பெரும்பாலான சபைகளால் சுலபமாக எட்ட முடியும். இந்த விஷயம் உங்கள் சபையை எந்தளவு சந்தோஷமடையச் செய்யும் என்பதையும் அதனால் நீங்கள் ஊழியம் செய்யும் வட்டாரத்தில் விளையும் நல்ல பலன்களையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்!
14 துணைப் பயனியர் ஊழியம் செய்ய ஏப்ரல் மாதம் ஏன் பொருத்தமான மாதமாக இருக்கிறது? நினைவுநாள் ஆசரிப்பு, ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே வருகிறது. அதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்களையெல்லாம் மறுசந்திப்பு செய்வதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் நமக்குக் கிடைக்கும். அந்த மாதத்தில் மறுசந்திப்பு செய்து பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பு நடத்தும் நோக்கத்துடன் நாம் பத்திரிகைகளை அளிப்போம். எனவே, ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வது பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கு எண்ணற்ற சந்தர்ப்பங்களை அளிக்கும். இந்த நாட்டில் பகல் பொழுது நீண்ட நேரம் வெளிச்சமாக இருக்கும், மாலை வேளைகளில் வெயிலும் மிதமாகவே இருக்கும். அதுபோக, ஏப்ரல் மாதத்தில் ஐந்து ஞாயிறுகள் வருவதோடு பள்ளி விடுமுறைக் காலமாகவும் இருக்கிறது. அதனால், வேலை செய்பவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் துணைப் பயனியர் ஊழியம் செய்ய இது வசதியாக இருக்கும்.
15 இந்த நினைவுநாள் ஆசரிப்பை வருடந்தோறும் நாம் கடந்து செல்லச் செல்ல, இந்தப் பொல்லாத உலகின் முடிவை நெருங்கிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய மகத்தான கடவுளைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்காக மீந்திருக்கும் காலப்பகுதி மிகக் குறுகியதாக உள்ளது. (1 கொ. 7:29) இந்த நினைவுநாள் ஆசரிப்புக் காலம் கடந்து சென்றபிறகு, நம்முடைய பரலோகத் தந்தையை மகிமைப்படுத்துவதற்காக அப்போது நமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் மீண்டும் வரவே வராது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் யெகோவாவின் புண்ணியங்களை அறிவிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய இப்போதே தயார் செய்வோமாக!
[கேள்விகள்]
1. யெகோவாவின் புண்ணியங்களை அறிவிப்பதற்கு எவை நம்மைத் தூண்டுகின்றன?
2. நினைவுநாள் ஆசரிப்பை விளம்பரப்படுகிற என்ன விசேஷ விநியோகிப்பு திட்டமிடப்பட்டுள்ளது, யாரும்கூட அதில் பங்கெடுக்கலாம்?
3. ஆட்களை நினைவுநாள் ஆசரிப்புக்கு அழைக்கும்போது நாம் என்ன சொல்லலாம்?
4. நினைவுநாளுக்கான விசேஷ அழைப்பிதழ்கள் எவ்வாறு விநியோகிக்கப்படும்?
5. துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு நாம் ஏன் இப்போதே திட்டமிட வேண்டும்?
6. கடந்த வருடம் துணைப் பயனியர் ஊழியம் செய்த 90 வயது சகோதரியின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
7. துணைப் பயனியர் ஊழியம் செய்வது கடினமானதா?
8. துணைப் பயனியர் ஊழியம் செய்ய ஒரு தம்பதியருக்கு எது உதவியது?
9. வரப்போகிற மாதங்களில் அதிகமாய் ஊழியத்தில் ஈடுபடுவது சம்பந்தமாக உங்களுடைய அடுத்த குடும்ப படிப்பில் நீங்கள் என்ன செய்யலாம்?
10. நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு நமக்கிருக்கும் ஆசை குறித்து ஏன் மற்றவர்களிடம் பேச வேண்டும்?
11. வரப்போகிற மாதங்களில் சபையினர் துணைப் பயனியர் ஊழியத்தில் ஈடுபடும்படி மூப்பர்கள் எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்?
12. உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்யலாம்?
13. இந்தியாவிலுள்ள பிரஸ்தாபிகளுக்காக என்ன இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது, அதை எட்ட உங்களுடைய சபை எவ்வாறு உதவ முடியும்?
14. துணைப் பயனியர் ஊழியம் செய்ய ஏப்ரல் மாதம் ஏன் பொருத்தமான மாதம்?
15. நினைவுநாள் ஆசரிப்பு நெருங்கி வருகையில் நாம் ஏன் அவசரத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்?
[பக்கம் 4-ன் பெட்டி]
ஏப்ரல் மாதம் 4,500 பேர் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா?
◼ எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்
◼ குடும்பமாக உங்கள் இலக்குகளைக் கலந்துபேசுங்கள்
◼ உங்கள் திட்டங்களைப்பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள்