பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்துகையில் பெரிய போதகரைப் பின்பற்றுங்கள்
1 பெரிய போதகரான இயேசு, எப்போதுமே எளிமையாகவும் தெளிவாகவும் காரியங்களை விளக்கினார். தமக்குச் செவிகொடுத்துக் கேட்டவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்காக, சில சமயங்களில் அவர்களுடைய கருத்தைச் சொல்லும்படி கேட்டார். (மத். 17:24-27) கடவுளுடைய வார்த்தையிடம் அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார். (மத். 26:31; மாற். 7:6) அவர்களுக்கு அளவுக்கதிகமான விஷயங்களைப் போதிக்காதிருக்க கவனமாய் இருந்தார், ஏனென்றால், அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்வார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். (யோவா. 16:12) இயேசு, தாம் கற்பித்த விஷயங்களை சீஷர்கள் நம்பினார்களா, புரிந்துகொண்டார்களா என்பதையும் தெரிந்துகொள்ள விரும்பினார். (மத். 13:51) நாமும் இயேசுவைப் போலவே கற்பிப்பதற்கு உதவியாக பைபிள் கற்பிக்கிறது புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
2 ஆரம்ப கேள்விகள்: நீங்கள் அதிகாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக தலைப்பின் கீழுள்ள கேள்விகளிடம் மாணாக்கரின் கவனத்தைத் திருப்புவது பொருத்தமாக இருக்கும். மாணாக்கரின் பதிலை எதிர்பார்க்காமலே ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் அக்கேள்விகளைக் கேளுங்கள்; அல்லது அந்தக் கேள்விகளைக் குறித்த அவருடைய கருத்தைச் சுருக்கமாகச் சொல்லுமாறு கேளுங்கள். அவர் சொல்லும் பதில்களை விலாவாரியாகக் கலந்தாலோசிக்கவோ அவர் தவறாகச் சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் திருத்தவோ அவசியமில்லை. அவருடைய கருத்தைச் சொன்னதற்கு நன்றி சொல்லிவிட்டு அதிகாரத்தைக் கலந்தாலோசிக்கத் தொடங்கலாம். ஆரம்பக் கேள்விகளைக் குறித்து அவர் சொன்ன கருத்திலிருந்து அதிகாரத்தின் எந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
3 வசனங்கள்: வசனத்தை ஆதாரமாகக் கொண்டு படிப்பு இருக்க வேண்டும். (எபி. 4:12) அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வசனங்களையும் வாசிக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் பைபிள் வசனங்களை வலியுறுத்துங்கள். பின்னணித் தகவல்களை அளிக்கும் வசனங்களை வாசிக்க வேண்டியதில்லை. பைபிள் கற்பிக்கிறது புத்தகம் சத்தியத்தை குழப்பமில்லாமல் தெளிவாக விளக்குகிறது. அதனால் படிப்பை எளிமையான முறையில் நடத்துங்கள். முக்கியக் குறிப்புகளுக்குக் கவனம் செலுத்துங்கள், அதிகமாக விளக்கமளிக்க வேண்டுமென நினைக்காதீர்கள், புத்தகத்தில் இல்லாத வேறு தகவல்களை தேவையில்லாமல் திணிக்காதீர்கள்.
4 பிற்சேர்க்கை: முக்கிய அதிகாரங்களுக்குரிய பிற்சேர்க்கையில் மொத்தம் 14 தலைப்புகள் உள்ளன. படிப்பின்போது இந்தப் பிற்சேர்க்கையைக் கலந்தாலோசிப்பது கட்டாயமல்ல. அதிகாரத்திலுள்ள விஷயங்களை உங்கள் மாணாக்கர் புரிந்துகொண்டு அவற்றை ஏற்றுக்கொள்கிறார் என்றால் அவராகவே பிற்சேர்க்கைக் கட்டுரையை படிக்கும்படி உற்சாகப்படுத்தலாம். உதாரணத்திற்கு இயேசுவே மேசியா என்பதை மாணாக்கர் நம்புகிறவராக இருந்தால், “இயேசு கிறிஸ்து—வாக்குப்பண்ணப்பட்ட மேசியா” என்ற பிற்சேர்க்கையை “இயேசு கிறிஸ்து யார்?” என்ற தலைப்புடைய 4-ஆம் அதிகாரத்தை படிக்கையில் அவருடன் கலந்தாலோசிக்கத் தேவையில்லை. மற்ற சந்தர்ப்பங்களில், பிற்சேர்க்கையை அல்லது அதிலுள்ள குறிப்பிட்ட சில விஷயங்களை நேரமெடுத்து கலந்தாலோசிப்பது பிரயோஜனமாய் இருக்கலாம்.
5 ஒருவேளை பிற்சேர்க்கையை மாணாக்கருடன் சேர்ந்து கலந்தாலோசிக்க விரும்பினால் முன்னதாகவே நீங்கள் அதற்குரிய கேள்விகளைத் தயாரித்து படிப்புக் கட்டுரையை கலந்தாராய்வதைப் போலவே இதையும் ஆராயலாம். அல்லது, மாணாக்கரின் தேவையைப் பொறுத்து படிப்பின்போதே சில நிமிடங்கள் எடுத்து பிற்சேர்க்கையிலுள்ள தகவலை நீங்கள் மறுபார்வை செய்யலாம். இப்படிச் செய்வதன்மூலம், மாணாக்கர் சொந்தமாகப் படித்த விஷயங்கள் அவருக்குப் புரிந்திருக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
6 மறுபார்வை பெட்டி: ஒவ்வொரு அதிகாரத்தின் கடைசியிலும் கொடுக்கப்பட்டுள்ள பெட்டி ஆரம்பத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பெரும்பாலும் பதிலளிக்கிறது. இந்தப் பெட்டியைப் பயன்படுத்தி கட்டுரையின் முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யலாம். சில பிரஸ்தாபிகள், இந்தப் பெட்டியை மாணாக்கருடன் சேர்ந்து படிப்பதுடன், கொடுக்கப்பட்டுள்ள வசனங்களையும் வாசிக்கிறார்கள். அதன்பிறகு, இந்த வசனங்கள் எப்படி இந்தக் குறிப்பை ஆதரிக்கிறது என்பதைச் சுருக்கமாக விளக்குமாறு மாணாக்கரிடம் கேட்கிறார்கள். இப்படிக் கேட்பதன்மூலம் மாணாக்கர் பாடத்தின் முக்கியக் குறிப்புகள் என்ன என்பதையும் பைபிள் அவற்றை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதையும் நன்றாகப் புரிந்துகொண்டாரா, அவற்றை அவர் ஒத்துக்கொள்கிறாரா ஆகியவற்றை படிப்பு நடத்துபவர் தெரிந்துகொள்ள முடியும். அதோடு பைபிளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சத்தியத்தைப் போதிப்பதற்கு இது மாணாக்கரைப் பயற்றுவிக்கும்.
7 மக்களுக்கு கற்பித்து சீஷராக்கும் வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கச் சிறந்த வழி, இயேசுவின் கற்பிக்கும் முறைகளைப் பின்பற்றுவதாகும். (மத். 28:19, 20) அதைச் செய்வதற்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகம் நமக்கு உதவும். சத்தியத்தை தெளிவாகவும், எளிமையாகவும், ஆர்வமூட்டும் விதத்திலும் மற்றவர்களுக்குக் கற்பிக்க அதை நன்றாகப் பயன்படுத்துங்கள்.
[கேள்விகள்]
1. இயேசு எவ்வாறு கற்பித்தார்?
2. ஒவ்வொரு அதிகாரத்தின் ஆரம்பக் கேள்விகளை நாம் என்னென்ன வழிகளில் பயன்படுத்தலாம்?
3. படிப்பை எவ்வாறு எளிமையாக நடத்துவது?
4. படிப்பின்போது பிற்சேர்க்கையை கலந்தாலோசிப்பதா வேண்டாமா என்பதை எதை வைத்து தீர்மானிக்கலாம்?
5. பிற்சேர்க்கையிலுள்ள தகவல்களை நாம் கலந்தாராய நினைத்தால் அதை எவ்வாறு செய்யலாம்?
6. அதிகாரத்தின் கடைசியில் இருக்கும் மறுபார்வைப் பெட்டியை எவ்வாறு பயன்படுத்தலாம்?
7. நம்முடைய வேலையைச் செய்துமுடிக்க பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்?