நன்கு கற்பிக்க தேவை ஒரு முக்கியமான குணம்
1. நன்கு கற்பிக்க ஒருவருக்கு என்ன தேவை?
1 பைபிளை மற்றவர்களுக்கு நன்கு கற்பிக்க ஒருவருக்கு என்ன தேவை? படிப்பா? அனுபவமா? திறமையா? இதைவிட முக்கியமான ஒன்று தேவை. அது திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறது, அது இயேசுவின் சீடர்களுக்கு அடையாளமாக இருக்கிறது, அது யெகோவாவிடம் நம்மை ஈர்க்கிறது; அவரது முக்கியப் பண்புகளில் ஒன்றாய் இருக்கிறது. (யோவா. 13:35; கலா. 5:14; 1 யோ. 4:8) அதுதான் அன்பு. ஆம், நன்கு கற்பிக்கிறவர்கள் அன்பைக் காட்டுவார்கள்.
2. மக்கள்மீது அன்பு காட்டுவது ஏன் முக்கியம்?
2 மக்கள்மீது அன்பு: பெரிய போதகரான இயேசு மக்கள்மீது அன்பு காட்டினார். அதனால், அவர் சொல்வதை மக்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள். (லூக். 5:12, 13; யோவா. 13:1; 15:13) மக்கள்மீது நமக்கு அன்பு இருந்தால் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாட்சி கொடுப்போம். அவர்கள் நம்மை துன்புறுத்தினாலும் சரி நம் செய்தியை அலட்சியப்படுத்தினாலும் சரி, சாட்சி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். வீட்டுக்காரர்மேல் உண்மையான அக்கறை காட்டுவோம். அவர்களுக்கு ஏற்ற விதமாக நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்வோம். நம்முடைய ஒவ்வொரு பைபிள் மாணவர்களுடனும் தாராளமாக நேரம் செலவிடுவோம்; அவர்களுக்குப் படிப்பு நடத்த நன்கு தயாரிப்போம்.
3. சத்தியத்தின்மீது அன்பு இருந்தால் என்ன செய்வோம்?
3 சத்தியத்தின்மீது அன்பு: இயேசு பைபிள் சத்தியங்களை நேசித்தார். அவற்றைப் பொக்கிஷமாகப் போற்றினார். (மத். 13:52) சத்தியத்தின் மீது நமக்கு அன்பு இருந்தால் அதைப் பற்றி ஆர்வம் பொங்கப் பேசுவோம், அந்த ஆர்வம் வீட்டுக்காரரையும் தொற்றிக்கொள்ளும். அதோடு, ‘எனக்குப் பேச்சுத் திறமை இல்லை’ என்றெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டு முடங்கிவிடாமல் நாம் சொல்லும் செய்தி மக்களுக்குத் தேவை என்பதைப் புரிந்துகொள்வோம்; தைரியமாக ஊழியம் செய்வோம்.
4. அன்பை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
4 அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள்: நாம் எப்படி மக்கள்மீது அன்பை வளர்த்துக்கொள்ளலாம்? அதற்கு, அவர்கள்மீது யெகோவாவும் இயேசுவும் வைத்திருக்கிற அன்பைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்கள் ஆன்மீக இருளில் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். (மாற். 6:34; 1 யோ. 4:10, 11) பைபிள் சத்தியத்தின்மீது நம் அன்பை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? தவறாமல் பைபிள் படிக்க வேண்டும், தியானிக்க வேண்டும். கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் ஒன்றுதான் இந்த அன்பு. (கலா. 5:22) எனவே, கடவுளுடைய சக்தியைத் தரும்படி... அன்பை வளர்த்துக்கொள்ள உதவும்படி... அவரிடம் மன்றாட வேண்டும். (லூக். 11:13; 1 யோ. 5:14) ஆம், நம் ஒவ்வொருவராலும் நன்கு கற்பிக்க முடியும். அதற்கு படிப்போ, அனுபவமோ, திறமையோ முக்கியமில்லை, அன்புதான் மிக மிக முக்கியம்.