கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
அனுபவமுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
பல வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் சகோதர சகோதரிகள் நம் சபைகளில் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். தங்கள் வாழ்க்கையில் யெகோவாவை அவர்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட விதம், வாழ்க்கையில் அவர்கள் எதிர்ப்பட்ட பிரச்சினைகள், அவற்றைச் சமாளிக்க யெகோவா உதவிய விதம், யெகோவாவுடைய அமைப்பின் சரித்திரம் என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். இப்படிப்பட்ட வயதான சகோதர சகோதரிகளில் ஒருவரை உங்கள் குடும்ப வழிபாட்டுக்கு அழைத்து அவருடைய அனுபவத்தைக் கேட்கலாம்.
நீங்கள் பல வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்து வரும் கிறிஸ்தவரா? அப்படியென்றால், இளம் கிறிஸ்தவர்களிடம் உங்கள் அனுபவங்களைத் தயங்காமல் சொல்லுங்கள். யெகோவா தங்களுக்கு செய்த உதவிகளைப் பற்றி யாக்கோபும் யோசேப்பும் தங்கள் சந்ததிக்குச் சொன்னார்கள். (ஆதி 48:21, 22; 50:24, 25) யெகோவாவுடைய மகத்தான செயல்களைப் பற்றி குடும்ப தலைவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்று பிற்காலத்தில் யெகோவா எதிர்பார்த்தார். (உபா 4:9, 10; சங் 78:4-7) இன்றும்கூட, பெற்றோர்களும் சபையில் இருக்கும் மற்றவர்களும், தன்னுடைய அமைப்பின் மூலம் யெகோவா செய்த அருமையான விஷயங்களில் தாங்கள் பார்த்தவற்றைப் பற்றி அடுத்த தலைமுறைக்குச் சொல்லலாம்.
தடைகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
நம் வேலை தடை செய்யப்பட்ட சில நாடுகளிலிருந்த சகோதரர்களுக்கு ஆஸ்திரியாவில் இருக்கும் கிளை அலுவலகம் எப்படி உதவி செய்தது?
இந்த நாடுகளிலிருந்த சகோதரர்கள் எப்படி தங்கள் விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொண்டார்கள்?
ரொமேனியாவைச் சேர்ந்த நிறைய பிரஸ்தாபிகள் ஏன் யெகோவாவின் அமைப்பைவிட்டு பிரிந்துபோனார்கள், அவர்கள் எப்படி மறுபடியும் ஒன்றுசேர்ந்தார்கள்?
இந்த அனுபவங்கள் உங்கள் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்துகின்றன?
அனுபவமுள்ள கிறிஸ்தவர்களின் இதயங்களில் மறைந்திருக்கும் ஆன்மீக பொக்கிஷங்களைக் கண்டெடுங்கள்!