பெரிய நகரிலுள்ள பள்ளிகளை உற்றுப்பார்த்தல்
விழித்திருக்கும் நேரத்தில் அதிகமான மணிநேரங்களை பிள்ளைகள் பள்ளியில் செலவழிக்கிறார்கள். பள்ளியின் செல்வாக்கு வெகு அதிகமாக இருக்கிறது. ஆனால் அநேக பெற்றோர்களுக்கு பள்ளிகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைக் குறித்து தெளிவான கருத்துக்கள் இருப்பதில்லை. ஆகவே விழித்தெழு! ஐக்கிய மாகாணங்களில் ஆரம்பித்து, நான்கு வித்தியாசமான தேசங்களிலுள்ள கல்வித் துறையின் காட்சிகளை ஆராய்கிறது.
ஏப்ரல் 1983-ல் வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கை ஒன்று பெற்றோர்களையும் கல்வித் துறையைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தீமைக்கு அறிகுறியான அதன் தலைப்பு அபாயத்திலுள்ள ஓர் ஜனம் என்பதாக இருந்தது. மிகவும் தேர்ச்சிப் பெற்ற நிபுணர் குழுவினால் தொகுக்கப்பட்ட அந்த அறிக்கை இவ்விதமாக வாசித்தது; “நம்முடைய தேசம் அபாயத்தில் இருக்கிறது . . . நம்முடைய சமுதாயத்திலுள்ள கல்வித்துறையின் அஸ்திபாரங்கள் தற்சமயம் அதிகரித்து வரும் சாதாரணமான திறமைகளின் அலையினால் அரித்தழிக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு தேசமாகவும் ஜனமாகவும் நம்முடைய எதிர்காலத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.” இதற்கு ஆதாரம்:
◼ “வழக்கமாக செய்யப்படும் வாசிப்பிலும் எழுதுதலிலும் புரிந்து கொள்ளும் திறனிலும் சோதிக்கப்படுகையில், வயது வந்த அமெரிக்கர்களில் சுமார் 230 லட்சம் பேர் நடை முறையில் கல்வியறிவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.”
◼ “ஐக்கிய மாகாணங்களில் 17 வயதுகளிலுள்ளவர்களில் சுமார் 13 சதவிகிதத்தினர் நடைமுறையில் கல்வியறிவில்லாதவர்களாகவே கருதப்படலாம்.”
◼ “பெரும்பாலான பொது முறை சோதனைகளில் உயர்நிலை [நடுநிலைப்] பள்ளி மாணவர்களின் சராசரி சாதனை 26 வருடங்களுக்கு முன்பாக இருந்ததைவிட குறைவாகவே இருக்கிறது.”
இந்த அறிக்கை வெளி வந்ததை தொடர்ந்து ஐக்கிய மாகாணங்களின் பள்ளிகள் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒருவேளை வேறு எந்த இடத்தையும்விட பெரிய நகரத்திலுள்ள பள்ளிக் கூடங்களில்தானே ஐக்கிய மாகாணங்களின் கல்விப் பிரச்னைகள் இத்தனை வெளிப்படையாக தெரிகின்றன. சுருங்கும் வரவு செலவு திட்டப் பட்டியலினாலும் வகுப்பறைகளில் மாணவர்களின் அதிகமான எண்ணிக்கையினாலும் அவை அவதிப்படுகின்றன. குறைந்த ஊதியமும், வகுப்பறை வன்முறையும், மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் பாதியில் படிப்பை நிறுத்திவிடுவதும் அநேக திறமையுள்ள ஆசிரியர்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றன. இதனால் சில குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் அல்லது புறநகர் பள்ளிகளில் சேர்த்து விடுகிறார்கள்.a
ஆனால் நகர் பள்ளி பிரச்னைகளைப் பற்றிய புத்தகங்களும் கட்டுரைகளும் முழு விவரத்தையும் கொடுப்பதில்லை. ஆகவே கல்வித்துறையில் மேற்பார்வையாளராக வேலைப் பார்க்கும் ஒரு நண்பரின் உதவியோடு விழித்தெழு! நிருபர் நேரடியாக சில பள்ளிகளை சென்று பார்க்க முடிவு செய்தார். அவருடைய அறிக்கை பின்வருமாறு:
கல்வித்துறை பேரில் ஓர் உள்காட்சி
“நகரின் மிகப் பெரிய ஆரம்பப் பள்ளி ஒன்றுக்கு வெளியே நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். சோம்பலாக திரிந்து கொண்டிருக்கும் அநேக இளைஞர்கள், துணிச்சலாக பள்ளி மைதானத்தில் அங்குமிங்குமாக நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்களை சுற்றி வளைந்து, வகுப்பறைகளுக்கு துரத்த போதிய ஊழியர்களை வைத்து சம்பளம் கொடுக்க அவர்களுக்கு வசதியில்லை” என்பதாக என்னை அழைத்துச் சென்ற நண்பர் விளக்குகிறார்.
“நகரத்தின் சிதைவுக்குரிய அடையாளத்தை பள்ளியில் காணமுடிகிறது. பள்ளி முதல்வரின் அலுவலகத்துக்குள் நாங்கள் நுழைகிறோம். பேரிரைச்சலான குரல்கள், தட்டெழத்து பொறிகள் மற்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் தொலை பேசிகளின் சப்தத்துக்கு மேலாக குரலை உயர்த்திப் பேசுகிறோம், பள்ளி முதல்வர் பார்ப்பதற்கு களைப்பாகவும் சோகமாகவும் இருக்கிறார், மணியோ 10 தானே ஆகிறது. அவர் பண்புள்ளவராக இருக்கிறார். முதல் வகுப்பறையை பார்வையிட நாங்கள் கிளம்புகிறோம்.
“அங்கே சுறுசுறுப்பான இளவயது மனிதன் ஒருவர் நல்ல ஆசிரியருக்கு இலக்கணமாக பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். ‘தன்னுடைய நாவை தன்னுடைய மூக்கில் கொண்ட மிருகத்தைப் பற்றியா, ப்ளாரிடாவிலுள்ள நடமாடும் மரத்தைப் பற்றியா அல்லது பறந்து செல்ல முடியாத ஒரு பறவையைப் பற்றியா, எதைக் குறித்து கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம்?’ என்று கேட்கிறார். ஆவல் தூண்டப்பட்டவர்களாய் மாணவர்கள், முதலில் சொல்லப்பட்ட, எறும்பைத் தின்னும் விலங்கைப் பற்றி கற்றுக்கொள்ள விருப்பத்தை தெரிவிக்கிறார்கள். அவர்கள் வழக்கமாகச் செய்யப்படும் சில வாசிப்பு பயிற்சிகளுக்காக தங்களுடைய பாட புத்தகங்களை ஆவலோடு திறந்து வைக்கிறார்கள். அவர்களுடைய ஆசிரியர் அவர்களைக் கற்றுக்கொள்ள விரும்பும்படியாகச் செய்திருக்கிறார்.
“எதிர்மாறாக நகர் புறப்பள்ளிகள் படிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இப்பொழுது நாங்கள் பழைமையானதாக இருந்தபோதிலும் முற்றிலும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் தோற்றமளிக்கும் ஒரு பள்ளியை நாங்கள் பார்வையிடுகிறோம். வகுப்பறைக்கு வெளியே எவரையும் காணமுடிவதில்லை. நீண்ட பொது பாதைகள் அமைதியாக இருக்கின்றன. ‘இந்த பள்ளிக்கு ஒரு நல்ல முதல்வர் இருக்கிறார்’ என்பதாக என்னை அழைத்து வந்தவர் விளக்குகிறார்.
“திறம்பட்ட நிர்வாகிகளும்கூட மிகப் பெரிய பிரச்னைகளை எதிர்படுவது துர்அதிஷ்டமாகும். அலுவல் நடைமுறையை கடுமையாக கடைபிடிக்கும் அதிகாரிகள், ஆசிரியர்களை போதிப்பதற்கு பதிலாக பாரங்களை பூர்த்தி செய்வதில் அவர்களுடைய நேரத்தை அதிகமாக செலவழிக்கச் செய்கிறார்கள். பள்ளி ஒழுங்கு முறைக்கு இடையூறாக இருக்கும் சட்டங்கள். தங்களுடைய சொந்த உணர்ச்சிகளிலும் சரீரத்திலும் சேதப்படுவதைக் குறித்து பயப்படும் ஆசிரியர்கள். படிக்க மனமில்லாத ஆனால் பல்கலைக்கழகப் பட்ட சான்றிதழை வற்புறுத்தும் மாணவர்கள் புத்தகங்களையும் கருவிகளையும் வாங்குவதற்காக வைக்கப்படும் பணம், நாச வேலைகளை சரி செய்வதற்காக பயன்படுத்தப்படுதல். பெரிய நகரிலுள்ள பள்ளிகள் இந்நிலைமைகளையெல்லாம் சமாளித்துவருவது குறிப்பிடத்தக்கதாகவே இருக்கிறது.
நல்லவேளை, போதித்தலை முன்னேற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்ட கார்னகி நிறுவனம் இவ்விதமாகச் சொல்லுகிறது: “அமெரிக்க பொதுத்துறை கல்வி முன்னேற ஆரம்பித்திருக்கிறது . . . என்று நாங்கள் நம்புகிறோம்.” உங்களுடைய பிள்ளையின் பள்ளி எவ்விதமாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதானே இருக்கிறது: நீங்களே அங்கு சென்று பார்க்க வேண்டும். (g85 9/22)
[அடிக்குறிப்புகள்]
a 1955 முதற்கொண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
“நம்முடைய சமுதாயத்தின் கல்விக்குரிய அஸ்திபாரங்கள் தற்போது இடைப்பட்ட கல்வித்தரம் என்ற உயர்ந்தெழும்பும் அலையால் அரிக்கப்படுகிறது.”—அபாயத்திலிருக்கும் ஓர் ஜனம், ஆங்கிலம்.
[பக்கம் 15-ன் படம்]
ஐக்கிய மாகாணங்கள் பள்ளிகளை அலைக்கழிக்கும் பிரச்னைகள்
பரம்பரையான மற்றும் கண்டிப்பான பயிற்சிகளை மாற்றிவிட்டு, இன்று அதினிடத்தில் இருப்பதை, கல்வி பொழுதுபோக்கு என்றே சிறப்பாக விவரிக்கலாம்.”—பால் காப்பர்மன் எழுதிய The Literacy Hoax.
போதை மருந்துகளின் பிரச்னை அத்தனை பரவலாக இருப்பதன் காரணமாக, பள்ளிகள் குற்றச் செயல்களை பொறுத்தவரையில், தெருக்களைப் போலவே இருக்கின்றன.”—பேராசிரியர் லூயில் சிமிநில்லோ, வடமேற்கு இந்தியானா பல்கலைக்கழகம்.
“கடந்த 15 ஆண்டுகளில் தேசத்தின் பள்ளி மாணவர் தொகை முழுவதுமாக மாறிவிட்டிருக்கிறது. பிளவுபட்ட குடும்பங்களிலிருந்தும் வறுமையில் வாழம் குடும்பங்களிலிருந்தும் வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு இருந்திருக்கிறது.”—The Express, ஈஸ்டன், பென்சில்வேனியா, அ.ஐ.மா.
“ஆசிரியர்களின் தரத்தில் கவலைக்கிடமாக கீழ்நோக்கிய சரிவு இருந்து வருகிறது.”—U.S. News & World Report.
“மட்டம் போடுதலும், போதை மருந்துகளின் உபயோகமும் உட்பட, மாணவர்களின் கட்டுப்பாடு, டென்வர் கல்வி மன்றம் எதிர்படும் மிகவும் நெருக்கடியான ஒரு பிரச்னையாக இருக்கிறது.”—Rocky Mountain News.
“பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் கத்திகளையும் துப்பாக்கிகளையும் வைத்திருப்பதன் காரணமாக, இதை கண்டுபிடிக்க, கதவண்டையில் உலோக பொறி அமைப்பு ஒன்று வைக்கப்பட வேண்டும் என்ற மனுவில் 100 மாணவர்கள் கையொப்பமிட்டார்கள்.”—The New York Times.