பெற்றோரைப் பள்ளிகள் பதிலீடு செய்கின்றனவா?
இன்று, பள்ளிகள் வாசிப்பையும் எழுத்தையும் கணிதத்தையும் கற்பிப்பதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்ய எதிர்பார்க்கப்படுகின்றன. பல பள்ளிகள் ஒரு சமயம் வீட்டில் கவனித்துக் கொள்ளப்பட்ட உணவையும், தார்மீக வழிநடத்தலையும் மற்ற சேவைகளையும் வழங்குகின்றன. “எண்ணிக்கையில் வளர்ந்துவரும் பெற்றோர்கள் பள்ளிகளை, விசேஷமாக நீதி போதனை ஆசிரியர்களை பெற்றோரின் வேலையைச் செய்யும்படியாக எதிர்பார்க்கிறார்கள்,” என்பதாக ஓர் உயர்நிலைப் பள்ளி போதனைத்துறையின் முதல்வர் ஜிம் மக்ளூர் குறிப்பிடுகிறார்.
ஆனால் அநேக பெற்றோரோ, பிழைப்புக்காக போதுமான அளவு பொருளீட்டுவதற்கும், தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதற்குமிடையே தெரிவு செய்ய வேண்டிய இரண்டக நிலையை எதிர்ப்படுகிறார்கள். ஒரு தலைமுறைக்கு முன்பாக இருந்தது போலில்லாமல் இன்று பிழைப்பை நடத்துவது அநேகமாக தேவைப்படுகின்ற பெற்றோரின் மேற்பார்வையின்றி பிள்ளைகளை விட்டுச் செல்வதை அர்த்தப்படுத்துகிறது. மறுபட்சத்தில் அந்தக் கவனத்தை அளிப்பது, குடும்பத்துக்குப் போதிய அளவு பொருளீட்டமுடியாமல் போவதை அர்த்தப்படுத்தக்கூடும். இரண்டு நிலைகளுமே விரும்பப்படாதவையாகும்.
கீழ்நோக்கிய போக்கின் ஆரம்பம்
நவீன கல்வியைப் பாதிக்கும் பிரச்னையை ஆராய்ந்திருப்பவர்கள், இந்த கீழ்நோக்கிய போக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாக இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தவுடனேயே ஆரம்பமானது என்று நம்புகிறார்கள். பெண்கள் தொழில்துறை உழைப்புச் சந்தையில் வேலையில் சேர்ந்து கொள்வதன் மூலம் போர் முயற்சியை ஆதரித்தனர். பின்னர் போர் முடிவடைந்த போது, கணிசமான எண்ணிக்கையில் இவர்கள், தாயாகவும் தங்களுடைய பிள்ளைகளுக்கு முக்கிய ஆசிரியராகவும் தாங்கள் செய்து வந்த வேலைக்கு மீண்டும் திரும்பவில்லை. அவர்கள் தொழிலாளர் தொகுதியிலேயே தொடர்ந்து நிலைத்திருந்தனர்.
வருடங்கள் கடந்த போது மற்ற சமுதாய மாற்றங்கள் காரியங்களை இன்னும் அதிக சிக்கலாக்கின. தார்மீக மதிப்பீடுகள் படிப்படியாக அழிந்துவிட்டன. விவாகரத்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாகி, ஒற்றைப் பெற்றோருள்ள வீடுகளின் எண்ணிக்கை வளர்ந்தன. மேலுமாக வாழ்க்கைச் செலவு உயர, அநேக பெற்றோருக்கு நீண்ட மணிநேரங்கள் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட போக்குகள், பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் அறிவுப்பூர்வமான, சரீரப்பிரகாரமான, உணர்ச்சிப்பூர்வமான, மற்றும் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக விடப்பட்ட நேரத்தை வெகுவாக குறைத்துவிட்டிருக்கிறது. இதன் காரணமாக பெற்றோர்கள் இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பள்ளிகளை அதிகமாக சார்ந்திருக்க ஆரம்பித்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இது பள்ளிகளின் உத்தரவாதமாக இருக்கிறதா?
இன்றைய உண்மை நிலை
“கடினமாக உழைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் தன்னுடைய இல்லத்தரசியிடமும், அனுசரணையுடன் நடந்து கொள்ளும் தங்களின் இரண்டு பிள்ளைகளிடமும் உண்மையுடன் வழக்கமாக ஒவ்வொரு மாலையும் வீடு திரும்பிய தகப்பன் இப்பொழுது எங்கோ ஒரு பாழடைந்த தனி அறையில் தனிமையில் வாழ்ந்து கொண்டு, பிரிந்து வாழும் தன் மனைவிக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுத்தப்பிறகு தன் சாப்பாட்டுக்கு எவ்விதமாக பணம் செலுத்துவது என்பதை கணக்கிட முயற்சித்துக் கொண்டிருப்பதே இன்றைய உண்மை நிலையாக இருக்கிறது. பிள்ளைகளோடு தங்கியிருந்த தாய் . . . வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்கிறாள்,” என்பதாகக் கல்வித்துறை எழுத்தாளர் ஜீன் I. மேராஃப் விளக்குகிறார். என்ன பின்விளைவுகளோடு?
“பிள்ளைகள் துண்டு துண்டாகிவிட்ட ஆதார அமைப்பின் மேல் தங்களின் கல்வி சம்பந்தமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பிரமாண்டமான பணியை எதிர்ப்படுகிறார்கள்,” என்பதாக மேராஃப் சொல்கிறார். உதாரணமாக ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சொல்வதாவது: “எங்களுடைய மாணவர்களில் 20 சதவிகிதத்துக்கும் கூடுதலானவர்கள் ஒவ்வொரு நாளும் காலையுண்டி உண்ணாமலேயே பள்ளிக்கு வருகிறார்கள்.” காலை உண்டி கல்விக்கு இன்றியமையாததாக இருப்பதால் இந்த ஆசிரியர் வருத்தத்தோடு சொல்வதாவது: “காலை உணவுக்கு ஏற்பாடு செய்வதன் மூலம் பிரச்னையை சமாளிக்க நாங்கள் முயன்று வருகிறோம்.” அதே பள்ளிக்கு ஒரு மாணவி கடுமையான ஜுரத்தோடு வந்தாள். வேலை செய்யுமிடத்தில் அவளுடைய தாயோடு தொடர்பு கொண்டு பேசிய போது: “அவளுக்காக என்னால் வரமுடியாது. நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன்,” என்று பதிலளித்தாள். கடைசியாக அவள் வேலையை விட்டுவிட்டு வந்தாள். ஆனால் அவள் நோய்வாய்ப்பட்டிருந்த தன்னுடைய பிள்ளையைக் கவனித்துக் கொள்ள வேண்டியதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமிடையே தீர்மானிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது குறித்து “ஏமாற்றமாக” உணர்ந்தாள்.
பள்ளிகளில் நிலைமைகள்
சமுதாயத்தின் தார்மீக சீர்குலைவு கற்பிப்பதற்கான பள்ளிகளின் திறமையை சேதப்படுத்திவிட்டிருக்கிறது. அது தார்மீக வழிநடத்துதலை கொடுப்பதை பெரும்பாலும் சாத்தியமற்றதாகவே ஆக்கிவிட்டிருக்கிறது. 1982-ல் பள்ளிகளிலிருந்த தலையாய 17 பிரச்னைகளோடு ஒப்பிட, 1940-ல் அமெரிக்காவில் பெருநகர் பள்ளிகள் அனுபவித்த 7 தலையாய ஒழுங்கு பிரச்னைகளின் பட்டியல் பள்ளியின் மாறிவிட்ட சூழ்நிலைமையை விளக்குகிறது. 1940-ல் பள்ளிகளின் தலையாய பிரச்னைகள் வருமாறு: (1) பேசுவது, (2) சுவிங்கம் மெல்லுதல், (3) சப்தம் போடுதல், (4) மன்றங்களில் ஓடுவது, (5) வரிசையில் இடம் மாறிவிடுவது, (6) தகுதியற்ற உடை உடுத்துவது, (7) தாள்களைக் குப்பைக் கூடையில் போடாதிருப்பது.
மறுபட்சத்தில் பள்ளிகளில் 1982-ன் தலையாயப் பிரச்னைகள் வருமாறு: (1) கற்பழிப்பு, (2) கொள்ளை, (3) தாக்குதல், (4) களவு, (5) தீயிடல், (6) அணுகுண்டு வெடிப்புகள், (7) கொலை, (8) தற்கொலை, (9) பள்ளிக்கு வராதிருத்தல், (10) பொது உடைமைகளை அழித்தல், (11) பயமுறுத்தி பணம் பறித்தல், (12) போதை வஸ்துக்களின் துர்ப்பிரயோகம், (13) சாராய சத்து பானங்களின் துர்ப்பிரயோகம், (14) கும்பல்களின் போர் நடவடிக்கை, (15) கருத்தரித்தல், (16) கருச்சிதைவு மற்றும் (17) மேக நோய்கள்.
நான்கு வயது சிறுமியின் தாய் தெபோராள் மாறுபட்ட இந்தப் பள்ளிச் சூழ்நிலைமை தன் பிள்ளைகளின் மீது செலுத்தக்கூடிய செல்வாக்கைக்குறித்து கவலைப்படுகிறாள். “பாதுகாப்பான ஒரு சூழ்நிலையில் நான் வளர்ந்து வந்தேன்,” என்று அவள் சொல்கிறாள். “பெரும்பாலும் என்னைச் சுற்றியிருந்த அனைவரும், அனைத்தும் நான் வளருவதற்கு உதவி செய்யும் ஒரு பின்பலமாகவே இருந்தன. அவ்விதமாக வளர்க்கப்பட்ட நாம் நம்முடைய பிள்ளைகள் அங்கே மிகவும் வித்தியாசமான ஓர் உலகிலிருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.”
ஆம், ஐக்கிய மாகாணங்களில் உட்பகுதியிலுள்ள சில நகரப் பள்ளிகளில் மாணவர்கள் கத்திகளையும் துப்பாக்கிகளையும் கைவசம் வைத்திருப்பது சர்வ சாதாரணமான விஷயமாகும். அவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி அதன் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். கோக்கேன் என்ற உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்யும் மருந்தை பயன்படுத்துகிறவர்களை “கோக் ஹெட்” என்பதாக அழைப்பது அன்றாட பேச்சு வார்த்தையின் பாகமாக இருக்கிறது. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வெற்றிகரமாக பாடம் நடத்தியதற்காக அல்ல, ஆனால் எந்தத் தொந்தரவுமின்றி மற்றொரு நாளை கழித்துவிட்டதற்காக அநேகமாக திருப்தியடைகிறார்கள்.
பள்ளிக்கூடங்களின் உள்ளே இருக்கும் வருந்தத்தக்க நிலைமைகள், வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு பிள்ளைகளுக்குத் தேவைப்படும் வழிநடத்துதலையும் ஆதரவையும் அளிப்பதில் அவைகளால் பெற்றோரின் இடத்தை எடுக்க முடிவதில்லை என்ற உண்மையை வலியுறுத்திக் காண்பிக்கின்றன. என்றபோதிலும் இப்படிப்பட்ட நிலைமைகளின் மத்தியிலும் உலக முழுவதிலும் எல்லா விதமான பள்ளிகளிலும், வெற்றி காணும் மாணவர்கள் இருக்கிறார்கள்.
‘வெற்றி பெற தேவைப்படுவது என்ன?’ என்பதாக நீங்கள் கேட்கக்கூடும். ‘பெற்றோராக எவ்விதமாக என் பிள்ளை வெற்றிபெற நான் உதவி செய்யக்கூடும்? என்னுடைய பிள்ளை என்ன செய்ய வேண்டும்?’ (g88 9⁄8)