பன்முனை குண்டு வீச்சுகளின் மத்தியில் மதம்
“ஒருவன் எனக்கு முன்பாக நிறுத்தப்பட்டு நான் அவனை சுடவேண்டியதாக இருக்கையில், நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ஒரு அமெரிக்க படைவீரன் படைத்துறையின் தனி மதகுருவை கேட்டான்.
“சீக்கிரமாக சுட்டுவிடு,” என்று பதிலளித்தார் மதகுரு, “ஆனால் . . . உயிர் அருமையானது என்பதை நினைவிற்கொள்.”
போர் செய்வதும் மனச்சாட்சிக்குட்பட்ட மதநம்பிக்கைளை பின்பற்றுவதும் எப்பொழுதுமே ஒன்றோடொன்று இசைந்து செல்வது இல்லை. என்றபோதிலும் தேசங்கள் யுத்தத்திற்கு செல்லுகையில் மேற்சொன்ன ஓர் உதாரணம் சித்தரித்து காட்டுவதைப் போன்றே பல முனையிலிருந்து செலுத்தப்படும் குண்டுவீச்சுகளின் மத்தியில் பெரும்பாலும் மதமே இருக்கிறது. தி சீயட்டில் டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது: “அதிகப்படியான சண்டை தொல்லைகள் நிறைந்த உலகில் மதம் இன்று அமைதிப்படுத்தும் ஒரு மருந்தாக இருப்பதற்கு மாறாக வெறியூட்டும் ஒரு பானமாக இருக்கிறது.”
ஆகவே சமீப ஆண்டுகளில் வடக்கு ஐயர்லாந்தில் கத்தோலிக்கர்கள் புராட்டஸ்டாண்டினருக்கு எதிராகவும், லெபனனில் “கிறிஸ்தவர்கள்” முகமதியர்களுக்கெதிராகவும், மத்திய கிழக்கில் முகமதியர்கள் யூதர்களுக்கெதிராகவும், இந்தியாவில் முகமதியர்களுக்கெதிராக இந்துக்களும், ஸ்ரீ லங்காவில் புத்தர்கள் இந்துக்களுக்கெதிராகவும், ஈரான் ஈராக்கில் ஷியா முகமத்தியர்களுக்கெதிராக சன்னி முகமதியர்களும் என்றவாறு பட்டியல் தொடருகிறது.
இப்படிப்பட்ட இந்த எல்லா சண்டைகளும் மத வேறுபாடுகளின் காரணமாக ஏற்படுவதில்லை. சில விவகாரங்களில் அது ஒருவேளை எல்லைத்தகராராக அல்லது சமுதாய உரிமைகள் பேரில் போடப்படும் சண்டைகளாக இருக்கக்கூடும். இருந்தபோதிலும், மதம்தானே அடிக்கடி முக்கிய பாகத்தை ஏற்கிறது. எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுகிறது. உதாரணமாக, ஈரான் ஈராக் எல்லைத் தகராரில் ஈரானிய ஷியா முகமதிய தலைவர்கள் தங்கள் இளம் இராணுவ வீரர்களை “அல்லா அக்பர்!” (கடவுள் மகா வல்லவர்) போன்ற வார்த்தைகளால் உற்சாகப்படுத்துகின்றனர். இந்த இளம் இராணுவ வீரர்கள் போர்களத்தில் மரிப்பது பரலோக பிரவேசத்திற்கு உத்திரவாதமளித்துவிடும் என்ற நம்பிக்கையோடு சுன்னி முகமதியர்களுக்கெதிராக போர் தொடுக்கிறார்கள்.
எனவே பல முனையிலிருந்து செலுத்தப்படும் குண்டு வீச்சுகளில் மதம் ஈடுபடுகையில் அவரவர் நினைத்துக்கொள்வது என்னவெனில் ‘கடவுள் எங்கள் சார்பாக இருக்கிறார்’ என்பதே. ஆகவே வன்முறை, அழிவு மற்றும் கொலை அனைத்தும் கடவுள் பெயரிலேயே செய்யப்படுகின்றன. இன்னுமதிகமாக மதம் முக்கிய பாகத்தை வகிக்கும்போது போரானது அடிக்கடி படுமோசமான உயிர் சேதங்களை ஏற்படுத்துவதாயும் நிறுத்துவதற்கு அதிக கடினமானதாயும் இருக்கிறது. வாசிங்டன் டி.சி.-யில் அறிவியல் ஆய்வேடு மற்றும் பொது மக்களுக்குரிய நடத்தை போக்கு நிறுவனத்தின் பிரசிடென்டாக இருக்கும் எர்னஸ்ட் லிஃபெவர் சொன்னதாவது: “கடவுள் உங்கள் சார்பாக இருக்கிறார் என்று நீங்கள் உணர்ந்தால் எந்த ஒரு அட்டூழியத்தையும் நீங்கள் நியாயமானதாக ஆக்கிவிடலாம்.”—யு.எஸ். நியூஸ் அண்டு உவர்ல்ட் ரிப்போர்ட்.
அப்படியானால் பின்வரும் கேள்வி எழும்புகிறது: யுத்தம் என்ற காரியத்துக்கு வருகையில் கடவுள் உண்மையிலே ஏதாவது ஒரு சார்பாக ஆதரவு கொடுக்கிறாரா? இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மனி மற்றும் இத்தாலி மீது குண்டு வீசும் பணியில் சுமார் 60 முறை பறந்த மனிதனின் உள்ளத்தில் இந்த கேள்வி தொல்லைபடுத்திக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் மற்றும் பிள்ளைகள் படுகொலை செய்வதில் பங்குகொண்டமைக்காக அந்த மனிதன் மனச்சாட்சியின் வேதனைகளை அனுபவித்தான். கடவுள் யார் சார்பாக இருக்கிறார்? என்ற கேள்விக்கு திருப்திகரமான விடையை எப்படி கண்டடைந்தான் என்பதை தொடர்ந்து வரும் கட்டுரையில் வாசித்து பார்க்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்! (g85 12/8)