என்னுடைய சீக்கிய பரம்பரையும் சத்தியத்துக்காக நான் தேடியதும்
பல்பீர் சிங் டியோ கூறியது
தங்கள் மதத்தை முன்னிட்டு மனிதர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் பகைமையுணர்ச்சியைக் காண்கையில், அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இங்கே இந்தியாவிலும்கூட, அரசியலில், கிறிஸ்தவர்களென அழைக்கப்படுகிறவர்களின் பங்கும், தேசீயப் போர்களும் யாவரும் அறிந்ததே.
ஏன், இரண்டு உலகப் போர்களுமே, பெரும்பாலும் கிறிஸ்தவ நாடுகளென சொல்லிக்கொள்ளும் தேசங்களால் மட்டுமே செய்யப்பட்டன! மேலுமாக, கடந்த காலங்களில் “கிறிஸ்தவர்கள்” சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பொறுப்புள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். இவை இன்று வரையாக கத்தோலிக்கர்களும் புராட்டஸ்டண்டினரும் ஒருவரோடொருவர் போர் செய்து ஒருவரையொருவர் கொலை செய்துகொண்டிருக்கும் வட ஐயர்லாந்து போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடைவிடாமல் இவர்கள் போர் செய்து கொண்டிருப்பதும், உணவைக் கொடுத்து மதம் மாற்றுவதற்கு பேர் போனவர்களாயிருப்பதும் நல்ல அபிப்பிராயத்தை விட்டுச் செல்லவில்லை. இந்தியர்களாகிய எங்களில் அநேகர் கிறிஸ்தவம் என்றழைக்கப்படுகிறதை ஏன் வெறுக்கிறோம் என்பதை உங்களால் காணமுடிகிறதா?
அதே சமயத்தில் ஒருவர் இந்துவாக இல்லாமல் சீக்கியராகவோ அல்லது ஒரு முகமதியராக இல்லாமல் ஒரு இந்துவாகவோ இருப்பதன் காரணமாக இந்தியர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் பகைமை உணர்ச்சியை காண்கையில் அது எனக்கு வருத்தமாக இருந்திருக்கிறது. மெய் வணக்கத்தார் வித்தியாசமான நம்பிக்கையுடையவர்களையும்கூட நேசிக்க வேண்டும் என்பதாக நான் நினைத்தேன். கடந்த சில ஆண்டுகளாக இங்கே இந்தியாவில் இந்துக்களையும் சீக்கியர்களையும் பாதித்து வரும் பயங்கரவாதம் குறிப்பாக எனக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
ஆனால் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தபோதிலும் நானோ என்னுடைய மூன்று மூத்த சகோதரர்களோ என்னுடைய மைத்துனியோ பெரிதாக ஒன்றும் எதற்கும் பயப்படவில்லை. என்னுடைய சகோதரியும் அவளுடைய கணவனும்கூட வன்முறையிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன்? நாங்கள் ஏழு பேருமே சீக்கியர்களாக வளர்க்கப்பட்டதினாலா? இதை விளக்குவதற்கு முன்பாக, சீக்கியர்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல என்னை அனுமதியுங்கள்.
சீக்கிய மதம்
சீக்கிய மதம் ஒரு-கடவுள் கோட்பாட்டை ஆதரிக்கிறது. அது தன்னுடைய சொந்த திருமறை நூலையும், தீட்சை சடங்குகளையும், திருமண மற்றும் சவ அடக்க வைதீகச் சடங்குகளையும், புனித யாத்திரை மற்றும் வழிபாட்டு ஸ்தலங்களையும் கொண்டதாக இருக்கிறது. உலகிலுள்ள 150 இலட்ச சீக்கியர்கள் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நானக் என்ற பெயர் கொண்ட இந்திய குருவை பின்பற்றுகிறார்கள். அவரை பின்பற்றுகிறவர்கள் சீக்கியர் என்றழைக்கப்படுகின்றனர். இது “சீடர்” என்ற பொருளுடைய சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது.
நானக் வட இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் இந்து சமய பெற்றோருக்கு பிறந்தார். அவர் பிறந்த இடம் இப்பொழுது பாக்கிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கிறது. சீக்கியர்கள் இந்தியா முழுவதிலும் மற்றும் உலகின் மற்ற பாகங்களிலும்கூட குடியேறிவிட்ட போதிலும் அவரை பின்பற்றுகிறவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். பிரிட்டனில் மட்டுமே சுமார் 3,00,000 சீக்கியர்கள் உள்ளனர்.
நானக் இளமைப் பருவத்திலிருந்தபோது, இந்துக்களும் முகமதியர்களும் சதா சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இருபக்கங்களில் போர் காலத்தின்போது ஏற்பட்ட வேதனைகளால் அவர் வெகுவாக பாதிக்கப்பட்டார். என்ன மதத்தை அவர் பின்பற்றுவார் என்பதாக அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘இந்துவுமில்லை முகமதியனும் இல்லை’ ஆகவே நான் யாருடைய பாதையை பின்பற்றுவேன்? நான் கடவுளின் பாதையை பின்பற்றுவேன். கடவுள் இந்துவுமல்ல, முகமதியனுமல்ல. நான் பின்பற்றும் பாதையோ கடவுளுடையது’ என்று பதிலளித்தார்.
புதிய ஒரு மதத்தை ஸ்தபிக்கும் எண்ணம் இல்லாவிட்டாலும், நானக் ஒரு மத இயக்கத்துக்கு தலைவரானார். அவருடைய நாளிலிருந்த மற்றவர்களைப் போலவே இந்தியாவிலுள்ள ஜாதி அமைப்பு தீமையானது என்பதாகப் போதித்தார். மூன்று அடிப்படை கட்டளைகளில் அவர் தன்னுடைய செய்தியை சுருக்கமாகச் சொன்னார்: வேலை செய், வழிபடு, தர்மம் செய்.
முடிவான குரு
குரு நானக்கை நம்பியவர்கள், குரு அல்லது ஒரு போதகரின் மூலமாகவே கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார் என்பதாக புரிந்துகொண்டிருந்தார்கள். அது வாரிசுகளை தேவைப்படுத்தியது. ஆகவே சுமார் 200 ஆண்டு காலப் பகுதியில் பத்து வித்தியாசமான குருக்கள், எண்ணிக்கையில் வளர்ந்து வந்த சீக்கியர்களை முன்நின்று வழிநடத்தி வந்திருக்கிறார்கள். கடைசியாக, பத்தாவது குருவான கோபிந் சிங் தன்னுடைய வாரிசு ஒரு மனிதனாக இருக்கமாட்டார் என்பதாகத் தெரிவித்தார். மாறாக நானக், சீக்கிய குருக்கள் மற்றும் இந்து மற்றும் முகமதிய “புனிதர்களின்” பரிசுத்த எழுத்துக்கள் மனித குருக்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. குரு கிரான்த் சாகிப் என்றழைக்கப்பட்ட ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்ட இந்த எழுத்துக்கள் சீக்கியர்களால் கடவுளுடைய வார்த்தையாக கருதப்படலாயிற்று.
முன்னாள் மனித குருக்கள் பெற்றுக்கொண்ட அதே கனமும் மரியாதையும், குரு கிரான்த் சாகிப் புத்தகத்துக்கு கொடுக்கப்படுகிறது. புத்தகம் சீக்கியர்களின் வீட்டில் ஒரு விசேஷமான அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டு வாசிக்கப்படுகிறது. சீக்கியர்களின் ஆலயங்களினுள் விக்கிரகங்களோ அல்லது சம்பிரதாயப்படி ஆராதனைகளோ அல்லது ஒரு பலிபீடமோ அல்லது ஒரு பிரசங்கமேடையோ கிடையாது. குரு கிரான்த் சாகிப், உயர்த்தப்பட்ட ஒரு மேடையில் திண்டுகளின் மீது வைக்கப்பட்டு ஒரு கூடாரத்தினால் மூடி வைக்கப்படுகிறது. அதன் வசனங்கள் வாசிக்கப்பட்டு கேட்பவர்களுக்காக பாடி காண்பிக்கப்படுகிறது.
கடைசி மனித குருவாகிய கோபின் சிங் ‘காஸ்லா’ [பரிசுத்தவான்கள்] என்றழைக்கப்படும் ஒரு அமைப்பையும்கூட உருவாக்கினார். இது மத சம்பந்தமான கொள்கைகளுக்கு தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிக்க மனமுள்ளவர்களாக இருக்கும் சீக்கியர்களின் ஒரு விசேஷித்த சகோதரத்துவமாக இருக்கிறது. தங்களின் முந்தைய குடும்ப பெயர்கள் குறித்துக் காட்டும் எந்த ஜாதி வேறுபாடுகளையும் ஒழிப்பதற்காக, காஸ்லா உறுப்பினர்கள் “சிங்கம்” என்றர்த்தங்கொள்ளும் ‘சிங்’ என்ற சிறப்புப் பெயரை எடுத்துக் கொள்கிறார்கள். காஸ்லாவின் பெண் உறுப்பினர்கள் [பெண் சிங்கம் மற்றும் இளவரசி] என்ற அர்த்தமுள்ள ‘கார்’ என்ற சிறப்புப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சிறப்புப் பெயர்களை தொடர்ந்து, அடையாளங் காட்டும் குடும்பப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள்.
ஆண் காஸ்லா உறுப்பினர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்கு “K”-யில் ஆரம்பமான ஐந்து பொருட்களை அவர்கள் அணிந்துகொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். முதலாவதாக சவரம் செய்யப்படாத தாடியும் நீண்ட மயிரும் தலையில் நேர்த்தியாக சுருட்டி வைக்கப்படுவது கெஷ் (kesh) என்றழைக்கப்படுகிறது. இரண்டாவதாக, தலைமயிர் கங்கா (Kangha) என்ற ஒரு சீப்பினால் உறுதியாக பிணைக்கப்பட்டு சாதாரணமாக ஒரு தலைப்பாகையால் மூடப்படுகிறது. மூன்றாவதாக, உள்ளாடையாக உடுத்திக்கொள்ளப்படும் கக்ஸ் (Kachs) அல்லது குட்டையான கால் சட்டையாக இருக்கிறது. நான்காவது காரா (Kara) என்ற ஒரு இரும்பாலான காப்பு ஆகும். கடைசியாக மதசம்பந்தமான நம்பிக்கைகளை பாதுகாப்பதற்காக ஒரு கிர்ப்பன் (Kirpan) அல்லது பட்டயம் கைவசம் எடுத்துச் செல்லப்படுகிறது. “K”-யில் ஆரம்பமான இந்த ஐந்து பொருட்களும் சீக்கியர்களை மற்ற இந்திய தொகுதிகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்க ஒரு அடையாள சீருடையாக இருக்கிறது. சில சமயங்களில் இதில் சில மாற்றங்கள் இருந்தாலும் காஸ்லா உறுப்பினர்கள் இப்படிப்பட்ட சம்பிரதாயங்களைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.
அநேக கடவுட்களைக் கொண்டிருக்கும் இந்துக்களைப் போலில்லாமல், சீக்கியர்கள் ஒரே கடவுளை நம்புகிறார்கள். துறவு வாழ்வையும் உண்ணாவிரதத்தையும் சைவ உணவு கோட்பாட்டையும் சீக்கியர்கள் ஏற்பதில்லை. ஆனால் இந்துக்களைப் போல, சீக்கியர்களும்கூட அறிவூட்டப்படுவதன் மூலமாக விடுவிக்கப்பட்டாலொழிய மனிதன் மறுபிறப்பு சுழற்சியினால் கட்டுண்டவனாக இருப்பதாய் பொதுவாக நம்புகிறார்கள். குருவினால் தெரிவிக்கப்படும் கடவுளின் வார்த்தையே விடுவிக்கப்படுவதற்கு ஒரே வழியாக நம்பப்படுகிறது. மாம்ச சரீரத்திலிருந்து விடுபட்டு கடவுளோடு ஐக்கியமாகிவிடுவதே மனிதனின் இறுதியான நோக்கமாக நம்பப்படுகிறது.
தனிப்பட்ட ஓர் ஆராய்ச்சி
ஒரு சீக்கியனாக வளர்க்கப்பட்ட போதிலும் என் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்பின. அதே சமயத்தில் என்னுடைய அப்பா எங்களை வளர்த்த விதமானது, எங்களுடையதிலிருந்து வித்தியாசப்பட்ட கருத்துக்களை எதிர்ப்படுகையில் திறந்த மனமுள்ளவனாக இருக்க எனக்கு உதவியது.
எனக்கு ஏழு வயதாக இருந்தபோது, என் அம்மா இறந்து போனாள். இது என்னை உதவியற்றவனாகவும் குழம்பிய நிலையிலும் விட்டுச் சென்றது. ‘நல்லவர்கள் இளமையிலேயே மரித்துவிடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்’ மற்றும் ‘அவள் சொர்கத்தில் சமாதானமாயிருக்கிறாள்’ என்று சொல்லி உறவினர்கள் எனக்கு ஆறுதல் சொல்ல முயன்றார்கள். நான் எவ்வளவாக என் அம்மாவை இழந்து வேதனைப்படுகிறேன் என்பதை அவள் தெரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையில், நான் அவளுக்கு கடிதங்கள் எழுதி பின்னர் அவைகளை எரித்திருக்கிறேன். அவளை மறுபடியுமாக பார்க்கும் நம்பிக்கை எனக்கு இல்லாததால் என்னை வெறுமை உணர்ச்சி ஆட்கொண்டது.
நான் பெரியவனாக வளர்ந்தபோது குரு கிரான்த் சாகிபை ஒழுங்காக வாசித்தும், குரு நானக்கிடம் ஊக்கமாக ஜெபித்தும் சீக்கிய மதத்தை ஆழமாக ஆராய்ந்தேன். நாங்கள் ஒரே கடவுளையே நம்பினாலும் கடவுளிடம் நெருங்கிவர எங்களுக்கு உதவக்கூடியவராகிய நானக்கிடம் ஜெபிப்பதும்கூட எங்கள் பழக்கமாக இருந்தது. என்றாலும், மக்கள் ஏன் கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள் என்பது எனக்கு ஒரு புதிராகவே இருந்தது.
மிகச் சிறந்தக் கல்வியை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில், என்னுடைய அப்பா எங்களை ஒரு “கிறிஸ்தவப்” பள்ளிக்கு அனுப்பினார். கிறிஸ்தவர்களென தங்களை அழைத்துக்கொண்ட வெகு சிலர் நேர்மையானவர்களாகத் தோன்றினாலும் அவர்களில் பெரும்பாலானோரிடம் இருந்த மாய்மாலத்தைக் காண்பது எளிதாக இருந்தது. நாங்கள் சர்ச்சுக்குச் சென்று அதன் நடவடிக்கைகளில் பங்குகொண்டால் எங்களுடைய கல்விக்காகும் செலவை வெளிநாட்டிலுள்ள ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்பதாக நாங்களும் கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களும் சொல்லப்பட்டோம். அப்படிப்பட்ட அளிப்புகள் எனக்கு ஒரு இலஞ்சத்தைப் போல தோன்றியது.
ஆனால் எனக்கு 17 வயதானபோது, பைபிளில் என்னுடைய அக்கறையைத் தூண்டிய ஒரு காரியம் நடந்தது. போர்களும், அநேக மற்ற நவீன நாளையப் பிரச்னைகளும் பைபிளில் முன்னுரைக்கப்பட்டிருப்பதாக என்னுடைய ஒரு நண்பன் என்னிடம் சொன்னான். இது உண்மையாக இருக்குமென நான் நம்பவில்லை. ஆகவே என்னிடம் மத்தேயு 24-ம் அதிகாரம் காண்பிக்கப்பட்டபோது நான் ஆச்சரியமடைந்தேன். நிச்சயமாகவே பைபிளில் அதிகமான சத்தியம் அடங்கியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
சாட்சிகள் சந்திக்கிறார்கள்
1976-ல் ஒரு நாள் ஓர் இளம் யெகோவாவின் சாட்சி கல்கத்தாவிலுள்ள எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற புத்தகத்தை என்னிடம் விட்டுச் சென்றார். ஒரே நாளில் இதை நான் முழுவதுமாக வாசித்து விட்டேன். அவர் மறுபடியுமாக என்னை சந்தித்து ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் ஒரு கூட்டத்துக்கு வரும்படியாக அழைப்புக் கொடுத்தார். நான் கூட்டத்துக்குச் சென்றேன். உடனடியாக அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
நான் மிகவும் சாதாரணமான ஒரு சட்டையும் ஜீன்ஸ் கால்சட்டையும் அணிந்திருந்த போதிலும், அங்கு கூடியிருந்தவர்களில் உடை, பொருளாதார அந்தஸ்து, வயது, இனம் அல்லது குடும்பப் பின்னணியின் சம்பந்தமாக எந்த வேற்றுமையும் இல்லை. அவர்கள் மத்தியில் உண்மையான அன்பு இருந்தது. முன்வரிசையில் உட்காரும்படி நான் அழைக்கப்பட்டேன். அங்கே, “பைபிள் தன்னில்தானே முரண்பாடுள்ளதா?” என்ற கேள்வியின் பேரில் கொடுக்கப்பட்ட அர்த்தமுள்ள ஒரு பேச்சைக் கவனித்துக் கேட்டேன். ராஜ்ய மன்றத்தில் நான் சந்தித்த ஒரு சாட்சியின் உதவியோடு நான் பைபிளை படிக்க ஆரம்பித்து, விரைவிலேயே எல்லா கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் சென்று கொண்டிருந்தேன்.
நான் கற்றுக்கொண்டவை, நான் படித்த “கிறிஸ்தவப்” பள்ளியில் கேட்டவைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தன. யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை வணங்குவதில்லை. மாறாக அவர்கள் இயேசுதாமே வணங்கிவந்த அந்த சர்வ வல்லமையுள்ள கடவுளை வணங்குகிறார்கள். மேலுமாக, பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளபடி கடவுளின் பெயர் யெகோவா என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.—சங்கீதம் 83:17.
ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற கூட்டங்களில் நாங்கள் உண்மையாக பைபிளைப் படித்தோம். இதை நாங்கள் “கிறிஸ்தவப்” பள்ளியில் செய்யவில்லை. கிறிஸ்தவமென உரிமைப் பாராட்டும் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்டு மதங்களுக்கும் பெருத்த வித்தியாசமிருப்பதை நான் கற்றுக் கொண்டேன். கிறிஸ்தவ மதங்கள் அவர்களுடைய அரசியல் தலைவர்களால் ஊக்குவிக்கப்பட்டு போருக்கு கொடுக்கும் ஆதரவை பைபிளில் யெகோவா தேவன் கண்டனம் செய்வதை யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து எனக்குக் காண்பித்தார்கள்.—யோவான் 17:14; 18:36; மத்தேயு 26:52; ஏசாயா 2:4.
என்னுடைய நண்பர்கள் என்னை வித்தியாசமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். ‘இது ஒரு உணர்ச்சி வேக அனுபவமே’ என்பதாக என் நண்பர்கள் உறுதியாகச் சொன்னார்கள். உறவினர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு என்னுடைய நிலைநிற்கையைக் குறித்து விசாரித்தார்கள். என்றபோதிலும், பைபிளின் சத்தியத்தை கற்றறிவது எனக்கு உணர்ச்சி வேக அனுபவமாக இருக்கவில்லை. மாறாக, அது என்னுடைய வாழ்க்கையைச் சிறப்பித்து எனக்கு ஆழமான மனநிறைவை தந்திருக்கிறது. வார்த்தையில் மாத்திரமல்ல, செயலிலும்கூட ஒவ்வொரு அங்கத்தினரும் உண்மையில் அன்பை அப்பியாசித்து வரும் இப்படிப்பட்ட ஒரு உலகளாவிய சகோதரத்துவத்தை ஒருவர் வேறு எங்கே காணமுடியும்?
என் குடும்பம் அக்கறை காண்பிக்கிறது
பைபிள் படிப்பு, குறுகிய காலமே கவர்ச்சியாக இருக்கும் ஏதோ ஒன்று என்றும் அது சீக்கிரமாக மறைந்துவிடும் என்றும் என்னுடைய குடும்பத்தினரும்கூட நினைத்தார்கள். கடைசியாக, என்னுடைய மூத்த சகோதரன் ரஜீன்ந்தர் ஒரு கூட்டத்துக்கு என்னோடு வர தீர்மானித்தார். அவர் அங்கே அன்புடன் வரவேற்கப்பட்டார். அவரும்கூட அவர் பார்த்த காரியங்களால் மனம் கவரப்பட்டார். அவர் என்னோடு வர ஆரம்பித்தார். ஆனால் பைபிளில் எங்கள் அக்கறை மதசம்பந்தமாக நாங்கள் வளர்க்கப்பட்ட விதத்திலிருந்து பெரிதும் வித்தியாசமாக இருந்ததன் காரணமாக, நாங்கள் இருவருமே வீட்டில் தாராளமாக இதைக் குறித்து பேசியதில்லை. இது அண்மையில்தானே விவாகம் செய்துகொண்ட ரஜீன்ந்தருக்கு சில பிரச்னைகளை உருவாக்கியது.
அவன் தன் மனைவி சுனித்தாவை வீட்டில் விட்டுவிட்டு என்னோடு ராஜ்ய மன்றத்துக்கு ஒவ்வொரு வாரமும் பலமுறைகள் வந்து கொண்டிருந்ததால், அவள் கவலைப்பட ஆரம்பித்தாள். ‘உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?’ என்பதாக அவள் யோசித்தாள். ஒருசில கலந்தாலோசிப்புகளுக்குப் பின்பு, தப்பெண்ணங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. ரஜீன்ந்தர் தன்னுடைய மனைவியை எங்களோடு வரும்படியாக அழைத்தான். ஆரம்பத்தில், கூட்டங்களில் தான் கேட்ட விஷயங்களை அவள் முழுமையாக புரிந்துகொள்ளாவிட்டாலும் சுனித்தா எங்களோடு கூட்டங்களுக்கு வரவும் பைபிளை கற்றுக்கொள்ளவும் ஆரம்பித்தாள்.
என்னுடைய மற்றொரு சகோதரன் பூப்பேந்தர் எங்களுடைய நடவடிக்கைகளில் அக்கறை காண்பிக்கவும் நாங்கள் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் அப்பியாசித்து வந்தவற்றின் மதிப்பைக் காணவும் ஆரம்பித்தான். அவனும் படிக்க ஆரம்பித்தான். ஜெஸ்பால் என்னும் இன்னொரு சகோதரன், நாங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுக் கொள்வதை விரும்பவில்லை. என்னை கேலி செய்வது அவனுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது. ஆனால் சில காலத்துக்குப் பின்பு, பைபிளின் ஞானமான ஆலோசனையை அவன் மதித்துணர்ந்து, பைபிளை படிக்க ஆரம்பித்தான். இந்த படிப்புகளின் விளைவாக நான் 1978-ல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக முழுக்காட்டப்பட்டேன். ரஜீன்ந்தர், சுனித்தா, பூப்பேந்தர் மற்றும் ஜெஸ்பால் 1979-ல் முழுக்காட்டப்பட்டார்கள்.
இங்கிலாந்தில் ஐந்து வருடங்கள் இருந்துவிட்ட பின்பு, என்னுடைய சகோதரி பாவியும் அவளுடைய கணவன் கர்த்தாரும் இந்தியாவுக்கு திரும்பி வந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளாகிவிடுவது எங்களுடைய தீர்மானமாக இருந்ததை பாவி உணர்ந்துகொண்டாள். ஆனால் தனிப்பட்ட வகையில் சாட்சிகளோடு எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. நாங்கள் அவளுடைய உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுத்து எங்கள் நம்பிக்கைகளை அவள் மீது திணிக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் பாவியும் கர்த்தாரும் எங்களிடம் அநேக கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியாக இது ஒரு பைபிள் படிப்புக்கு வழிநடத்தியது. யெகோவாவில் அவர்களுடைய விசுவாசமும் அவரிடமாக அவர்களுடைய அன்பும் வளர ஆரம்பித்தது. இந்தியாவில் மத சம்பந்தமான வன்முறை காலங்களில் இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக சேவித்தது.
சத்தியம் ஒரு பாதுகாப்பாக இருந்தது
திருமதி இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளாகிய 1984 அக்டோபர் 31-ம் தேதி இரவு, பாவியும் கர்த்தாரும் உறங்கவே இல்லை. அப்போது அவர்கள் வட இந்தியாவில் நாங்கள் வாழ்ந்துவந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்து வந்தார்கள். அங்கே அநேக சீக்கியர்கள் கலகக்கார கும்பலால் கொல்லப்பட்டனர். அங்கே குடியிருந்தவர்கள், சீக்கியர்களின் வீடுகளைத் தாராளமாக அடையாளங் காட்டி தங்கள் சீக்கிய அயலாருக்கு மரணத்தீர்ப்பை அளித்தார்கள்.
அடுத்த நாள் காலை, பாவியும் கர்த்தாரும் கொலையும் அழிவுமான கொடுங்கனவில் விழித்துக் கொண்டார்கள். அவர்களைச் சுற்றி இவை நடந்து கொண்டிருந்த போதிலும், சிங் என்ற குடும்பப் பெயர்களை தாங்கியவர்களாக இருந்த போதிலும், அவர்களுக்கு எந்த தீங்குமிழைக்கப்படவில்லை. அவர்கள் வெறுமென படித்துக் கொண்டுதானே இருந்த போதிலும் அவர்களுடைய அயலகத்தார் அவர்களை யெகோவாவின் சாட்சிகளென அறிந்திருந்தபடியால் அவர்கள் வீடு தாக்கப்படவில்லை. அதே விதமாக, கல்கத்தாவில் என்னுடைய சகோதரர்கள் அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியர்களென அறியப்பட்டிருந்ததால், அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருந்திருக்கிறது.
அப்பாவின் பிரதிபலிப்பு
எங்களுடைய சீக்கிய தகப்பன் தன்னுடைய நான்கு மகன்களிடமிருந்தும் ஒரு மகளிடமிருந்தும் தான் எதிர்பார்த்த பலன்களைக் காணவில்லை என்பது உண்மையே. நிலையற்ற பொருளாதாரச் செல்வங்களை அதிகரிப்பதில் இந்திய வியாபாரிகளிடம் காணப்படும் மிகச் சாதாரணமான ஆவல், குடும்ப வியாபாரத்தில் துணையாக இருக்கும் என்னுடைய மூன்று சகோதரர்களிடமும் இல்லை. அவர்களுடைய மனங்களும் இருதயங்களும் நிலையான ஆவிக்குரிய ஐசுவரியங்களின் மீதும் யெகோவா தேவன் மனிதவர்க்கத்துக்கு வாக்களித்திருக்கும் சமாதானமுள்ள புதிய பூமியின் மீதும் உறுதியாக பதிந்திருக்கிறது. என்னுடைய சகோதரர்களில் ஒருவர் கிறிஸ்தவ சபையில் மூப்பராக இருக்கிறார். எங்களில் இரண்டு பேர் உதவி ஊழியர்களாக இருக்கிறோம். என் அன்பு மனைவி லாவினியாவும் நானும் இந்தியாவில் முழு-நேர ஊழியர்களாக சேவை செய்யும் சிலாக்கியமும்கூட பெற்றிருக்கிறோம். இப்பொழுது ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வரும் என்னுடைய சகோதரியும் அவளுடைய கணவனும் 1986-ல் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்.
பைபிளின் நீதியான தராதரங்கள் எங்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் சிறந்த பாதிப்புகளை எங்கள் அப்பா கவனித்திருக்கிறார். இவை அனைத்தும் அவரை சந்தோஷப்படுத்துங் காரியங்களாக இருக்கின்றன. அவர் தன்னுடைய பிள்ளைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகையில், எங்களைக் குறித்து அவர் பெருமைப்படுவதை சொல்கிறார். ‘யெகோவாவின் சாட்சிகளாக என்னுடைய பிள்ளைகள் என்ன தவறு செய்கிறார்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். நான் அவர்களை வீட்டை விட்டு விரட்டிவிடுகிறேன்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.
வெறுமென செல்வங்களையும் அந்தஸ்தையும் முயன்று பெறுவதைக் காட்டிலும் அதிக விலைமதிப்புள்ளதையும் நிலைத்திருக்கக்கூடியதையும் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதை என்னுடைய அப்பா உணர்ந்து கொண்டுவிட்டார். சமீப ஆண்டுகளில் வன்முறை காலங்களின்போது நாங்கள் பெற்றுக்கொண்ட பாதுகாப்பை அவரே நேரில் பார்த்திருக்கிறார். உலகளாவிய உண்மையான சகோதரத்துவத்தில், மெய்க் கடவுளை வணங்குவதில் சத்தியத்தை உண்மையாகத் தேடிக் கொண்டிருக்கும் மற்ற அநேகரோடுங்கூட அவரும் எங்களைச் சேர்ந்துகொள்ள வேண்டும் என்பது எங்களுடைய ஊக்கமான ஆசையாக இருக்கிறது. (g87 12⁄22)
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
குரு கிரான்த் சாகிப் என்றழைக்கப்பட்ட ஒரு புத்தகம் சீக்கியர்களால் கடவுளுடைய வார்த்தையாகக் கருதப்படலாயிற்று
[பக்கம் 20-ன் படம்]
[பக்கம் 24-ன் படம்]
என்னுடைய மனைவியோடு