பைபிளின் கருத்து
திஷ்டிக்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?
அமேஸான் கிராமப்பகுதியில் வாழும் ஒரு பெண் தன்னுடைய குழந்தையை ஓர் ஏணையில் மெதுவாகக் கிடத்துகிறாள். அதனுடைய சிறிய கைகளின் மணிக்கட்டில் ஒரு சிவப்புக் கயிற்றையும் அதன் மத்தியில் இன்னொரு கயிற்றையும் கவனமாகக் கட்டுகிறாள். சடங்கு முடிந்தது, பின்னே இரண்டடி எடுத்துவைத்து, தனக்குள் இருந்த பாரத்தை இறக்கிவிட்டதாக ஒரு பெருமூச்சு விடுகிறாள்: “இப்பொழுது குழந்தை திஷ்டியிலிருந்து பாதுகாப்பாயிருக்கிறது.”
திஷ்டி பயம் தென் அமெரிக்க பழங்குடியினரிடையே மட்டும் காணப்படும் ஒன்றல்ல. இத்தாலியின் வழக்கறிஞர்களும், இந்தியாவின் விவசாயிகளும், வட அமெரிக்காவின் வியாபாரிகளும்கூட பிறர் திஷ்டி குறித்து நடுங்குகின்றனர்.
திஷ்டி என்பது என்ன? சிலர் தங்கள் பார்வையிலேயே உங்களைப் புண்படுத்தவும் அல்லது கொல்லவும் கூடும் என்று நம்பப்படுகிறது. உங்களுடைய செழிப்பு அவர்களுடைய பொறாமையை எழுப்பிவிடும் சமயத்தில் அவர்கள் இந்தத் தீய பார்வையைப் பயன்படுத்தவுங்கூடும். மேலும் நல்ல எண்ணமுடைய நபருக்குங்கூட திஷ்டி பார்வை இருக்கிறது, அவர் அறியாமையிலேயே அவருடைய பார்வை மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
நீங்கள் இந்தப் பயத்தில் பங்கு கொள்கிறீர்களா? அப்படியென்றால், இந்தப் பயம் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா அல்லது தீங்கிழைப்பதாக இருக்கிறதா?
உண்மையா அல்லது கட்டுக்கதையா?
திஷ்டி பயம் ஆதாரமற்ற ஒரு மூடநம்பிக்கை என்று இதுசார்ந்த அநேக நூல்கள் குறிப்பிடுகின்றன. மூடநம்பிக்கை என்பது “காரணத்தின் பேரிலோ அல்லது உண்மையின் பேரிலோ சாராத” ஒரு நம்பிக்கை என்று விளக்கப்படுவதால், திஷ்டி பயம் என்பது பலவீனமான மனதின் பலன் என்று சிலர் நம்புகின்றனர்.
திஷ்டி பற்றிய ஏராளமான கதைகள் கட்டுக்கதைகளாக இருக்கின்றன. உதாரணமாக, ஓரக்கண்பார்வையுடையவர்கள், கண்விழிவிறைப்பு நோயுடையவர்கள் அல்லது காக்கைக் குத்துகள் திஷ்டி பார்வையைக் கொண்டிருக்கின்றனர் என்று நம்புவது கற்பனையின் பாகமாக இருக்கிறது. அல்லது உங்களுடைய குழந்தை நோய்ப்படும்போதெல்லாம், உங்களுடைய பசுக்கள் மரிக்கும்போதெல்லாம், அல்லது உங்களுடைய கோழிகள் முட்டையிட மறுக்கின்றபோதெல்லாம் அந்தக் கொடிய பார்வை செயல்படுகிறது என்று நம்புவது அதற்கு அளவுகடந்த காரணங்களை உட்படுத்துவதாயிருக்கிறது.
என்றபோதிலும், ஒரு கனத்த தேங்காய் அடர்த்தியான தேங்காய் நார்களின் கீழே இருக்கிறது போல, திஷ்டி பற்றிய ஏராளமான கதைகளாகிய நார் அடுக்குக்குக் கீழே பலமான உண்மைகள் மறைந்திருக்கின்றன. எனவே அந்தக் கட்டுக்கதைகளை வெட்டி சில உண்மைகளை வெளிப்படுத்துவோமாக.
திஷ்டிபடுதலின் ஆரம்பம்
பூர்வ பாபிலோனியர் திஷ்டியின் செல்வாக்குக் குறித்து பயம் கொண்டிருந்தார்கள் என்று மதம் மற்றும் நன்னெறியின் என்சைக்ளோபீடியா (Encyclopædia Religion and Ethics) கூறுகிறது. அந்தப் பயத்தை வளர்த்தது யார்? பாபிலோனிய சூனியக்காரர்களும் சூனியக்காரிகளுமே. தங்களுடைய பார்வையின் மூலம் பயங்கரமான கஷ்டங்களை ஏற்படுத்துவதில் பேர்பெற்றிருந்தார்கள். என்றபோதிலும், அந்தச் சூனியக்காரர்கள் இதைத் தங்கள் சுய வல்லமையில் செய்யவில்லை. அவர்களுக்குச் சக்தியூட்டியது யார்? பிசாசுகள் என்று அழைக்கப்படும் ஆவி சிருஷ்டிகள். பாபிலோனியா மற்றும் அசீரியாவின் மதம் (The Religion of Babylonia and Assyria) என்ற நூல் இப்படியாக விளக்குகிறது: “சூனியக்காரிகள் தங்களுடைய சித்தத்திற்கேற்ப பேய்களை அழைக்க முடியும் மற்றும் தாங்கள் தெரிந்துகொள்ளும் ஆட்களைப் பிசாசுகளின் வல்லமையின் கீழ் கொண்டுவரவும் முடியும்.”
அதுபோன்று, தங்களைத் தாங்களே பிசாசுகளாக்கிக்கொண்ட தேவதூதர்களே “பில்லிசூனியத்திற்கு” மூலக்காரணராக இருக்கிறார்கள் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (1 சாமுவேல் 15:23; 1 தீமோத்தேயு 4:1; யூதா 6) கூடுதலாகப் பிசாசுகள் தங்களுடைய தீய சக்தியை ஆவியுலகத் தொடர்புடைய ஆட்களோடும் பேய்களின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஆட்களோடும் பகிர்ந்துகொள்கின்றனர் என்பதைக் கடவுளுடைய வார்த்தை உறுதிப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 16:16–18; வெளிப்படுத்துதல் 22:15) இதன் விளைவாக, அப்படிப்பட்ட ஆட்கள் சில சமயங்களில் தங்களுடைய பார்வையின் மூலமும் ‘மற்றவர்களை சூனியத்தால் ஆட்படுத்த’ முடிகிறது. (உபாகமம் 18:10–12) இப்படியாக, திஷ்டி சில உண்மைகளின் அடிப்படையிலானது.
எனவே சூனிய வைத்தியர்களின் வசியத்திற்கு ஆளாகுதல் அனுதின காரியமாக இருக்கும் ஓர் இடத்தில் வசித்துவருவீர்களானால், திஷ்டி பயம் உங்களில் உயிராயிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. என்றபோதிலும், அந்த வசியங்கள் எந்தளவுக்கு அச்சுறுத்துவதாயிருந்தாலும், உங்களுடைய அயலகத்தாருக்கு இருக்கும் அந்தப் பயத்தில் நீங்கள் பங்குடையவர்களாக இருக்கக்கூடது. ஏன் கூடாது? முதலாவதாக, திஷ்டி பயம்தானே, பைபிள் கண்டனம் செய்யும் பேய்களுக்குச் சேவை செய்ய உங்களை வழிநடத்தக்கூடும். (1 கொரிந்தியர் 10:20, 21) இரண்டாவதாக, திஷ்டிகளின் தீய பாதிப்புகளை முறித்து பயத்துக்கான அனைத்துக் காரணங்களையும் நீக்கிப்போடக்கூடியதும், உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதுமான ஒரு முறையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். என்ன பாதுகாப்பு? தாயத்துகள் அணிந்துகொள்வதா?
பலன்தரும் பாதுகாப்பு
இதற்கு விடையாக இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு பெரிய மரம் சரிந்து உங்களுடைய வீட்டின்மேல் விழுந்து அதை இடித்துத்தள்ளப்போகிறது என்று பயப்படுவீர்களானால், நீங்கள் என்ன செய்வீர்கள்? விழும் அந்த மரம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பைத் தாங்கத்தக்கதாக வீட்டின் கூரையைப் பலப்படுத்துவீர்களா? அல்லது, ஒருவருக்கும் பாதிப்பின்றி மரத்தை வெட்டி வீழ்த்துவதில் அனுபவம் வாய்ந்த ஒரு மர வெட்டியைக் கூப்பிடுவீர்களா? மரத்தை வெட்டிப்போடுவது, ஆபத்தின் ஊற்றுமூலத்தை நீக்கி, உங்களுடைய பயத்தையும் களைந்துவிடும்.
அதுபோலவே, ஓர் ஆவியுலகத் தொடர்புடையவன் தன்னுடைய திஷ்டிப் பார்வையைப் பயன்படுத்துவதாக உங்களை அச்சுறுத்துவானேயானால், அந்தப் பயத்தை எது போக்கிடும்? உங்களுடைய கழுத்தைச் சுற்றி தாயத்துகளைக் கட்டிக்கொள்வதன் மூலம் உங்களைத் தற்காத்துக்கொள்வீர்களா? அல்லது பேய்களை சக்தியற்றதாக்கிவிடுவதில் சாதனைப்புரிந்திருக்கும் ஒருவருடைய உதவியை நாடுவீர்களா? தெளிவாகவே, பின் குறிப்பிட்ட செயல்தானே ஞானமான செயலாகும். ஏனென்றால் அந்த நபர் ஆபத்தின் ஊற்றுமூலத்தை நீக்கி, உங்களுடைய பயத்தைப் போக்கிவிடுகிறார்.
ஆனால் சங்கீதக்காரனைப் போல் நீங்கள் இப்படியாகக் கேட்கக்கூடும்: “எனக்கு உதவி எங்கிருந்து வரும்?” கடவுளால் ஏவப்பட்டவனாக அவன் கொடுக்கும் பதில்: “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.” சிருஷ்டிகருடைய உதவி, திஷ்டிகளுக்கு எதிராகக் காக்கப்படுவதை உட்படுத்துகிறதா? ஆம், சங்கீதக்காரன் மேலுமாக உறுதிகூறுகிறான்: “யெகோவா தாமே உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.” (சங்கீதம் 121, NW) யெகோவா பாதுகாக்க வல்லவர் என்பதில் உங்களுடைய நம்பிக்கையைப் பலப்படுத்த, பேய்களை அவர் எவ்வாறு கையாண்டார் என்பது குறித்த நம்பிக்கையூட்டும் அவருடைய பதிவைக் கவனியுங்கள்.
‘பிசாசுகள் நடுங்குகின்றன’—ஏன்?
நோவாவின் நாட்களில், கீழ்ப்படியாத தேவதூதர்களை ஆவிக்குரிய இருளாகிய ‘ஒரு சிறையில்’ அவர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதன் மூலம் யெகோவா அவர்களைத் தம்முடைய தயவின் ஸ்தனத்திலிருந்து விலக்கிவிட்டார். (1 பேதுரு 3:19; ஆதியாகமம் 6:1–4) பின்பு, முதல் நூற்றாண்டில், இயேசு, கடவுளுடைய பிரதிநிதியாக செயல்படுகிறவராய் சக்திவாந்த பிசாசுகளைத் தம்முடைய சித்தம் கொண்டு துரத்தினார். (மத்தேயு 8:31, 32; மாற்கு 1:39) மீண்டும் இந்த இருபதாம் நூற்றாண்டில் கடவுள் தமக்குக் கொடுத்த வல்லமை கொண்டு சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார். (வெளிப்படுத்துதல் 12:7–9) எனவே, கடவுளுடைய வல்லமையுடன் ஒப்பிடும்போது தங்களுடைய வல்லமை ஒன்றுமில்லை என்பதைப் பிசாசுகள் கடினமான முறையில் கற்றறிந்திருக்கின்றனர். என்றபோதிலும், யெகோவா இந்தப் பதிவில் இன்னொரு பக்கத்தைக் கூட்டபோகிறார். விரைவிலேயே, சாத்தானும் தள்ளப்பட்ட இந்தப் பிசாசுகளும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அபிஸில் போடப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 20:1–3.
இதை அறிந்திருப்பது அவர்களை எவ்விதத்தில் பாதிக்கிறது? பைபிள் அதை வெளிப்படுத்துகிறது: “பிசாசுகளும் நம்பி நடுங்குகின்றன.” (யாக்கோபு 2:19, NW) இப்படியிருக்க, இந்த அறிவு உங்களை எவ்விதத்தில் பாதிக்கிறது? ‘நடுங்குகிற’ அந்தப் பேய்களுக்கும் அவற்றின் கையாட்களுக்கும் நீங்கள் இன்னும் பயப்படுவீர்களா? அல்லது, திஷ்டிகளுக்கு எதிராகக் காணக்கூடாத வகையில் யெகோவா அளிக்கும் பாதுகாப்பில் முழுவதுமாக நம்பிக்கைவைப்பதன் மூலம் “யெகோவாவுக்கு மட்டும் பயப்படுகிறவர்களாக” இருப்பீர்களா?—1 சாமுவேல் 12:24.
உங்களுடைய தாயத்துகளைக் களைந்தெறியவும், உங்களுடைய பிராந்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு உங்களுடைய பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் விசுவாசம் உங்களைத் தூண்டிடுமானால், பூர்வ கோராகுவின் குமாரர்கள் கூறிய வார்த்தைகளை எதிரொலிப்பதில் அவர்களோடு நீங்களும் விரைவிலேயே சேர்ந்துகொள்வீர்கள். அவர்கள் இப்படியாக அறிக்கைசெய்தார்கள்: “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் . . . நாம் பயப்படோம்.”—சங்கீதம் 46:1, 2; ரோமர் 8:31-ஐ ஒப்பிடவும். (g89 1⁄8)