போட்டி விளையாட்டு உலகில் என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது?
இத்தாலியிலுள்ள விழித்தெழு! நிருபர்
எதிர் பக்கத்திலுள்ள அறிக்கைகள் லத்தீன் அமெரிக்க நாட்டில் நடந்த திடீர் அரசியல் புரட்சியையோ அல்லது ஏதாவது ஓர் ஐரோப்பிய மண்ணில் தீவிரவாதிகளின் மற்றொரு தாக்குதலையோ விவரிக்கின்றனவா? இல்லை, இவையும் இவற்றிற்கு ஒத்த அறிக்கைகளும், ஓர் இத்தாலிய தினசரி குறிப்பிடுவதுபோல “ஒரு சாதாரண நாளில் நடந்த ஒரு பயங்கரமான போட்டி விளையாட்டைப்” பற்றியது.
இந்நாட்களில் போட்டி விளையாட்டுகளும் வன்முறையும் கைகோர்த்துச் செல்வதாய்த் தெரிகிறது. உதாரணமாக, மே 29, 1985-ன் சாயங்கால வேளையை இன்னும் அநேகர் மறக்கவில்லை, ஐரோப்பிய வீரர்களின் கால் பந்தாட்டக் கோப்பைக்கான நிறைவு போட்டிக்கு முன் விளையாட்டு ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில் 39 பேர் மாண்டனர், 200 பேர் காயமுற்றனர்.
என்றபோதிலும், விளையாட்டில் பங்குபெற்றவர்களாலும் பார்வையாளர்களாலும் ஏற்பட்ட வன்முறை பற்றிய கதைகள் கால் பந்தாட்டம் போன்ற ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு மட்டுப்பட்டதாயில்லை, ஆனால் அவை எல்லா வகையான போட்டி விளையாட்டுகளிலும்—தளக்கட்டுப் பந்தாட்டத்திலும், குத்துச்சண்டையிலும், ஹாக்கியிலும்—எழும்புவதாயிருக்கின்றன.
“சிறப்பான ஆட்டக்காரர் வெற்றி பெறட்டும்,” “வெற்றி பெறுவதைவிட பங்குபெறுவதே மிகவும் முக்கியம்,” போன்ற கூற்றுகள் போட்டி விளையாட்டு உலகின் மறைந்துவிட்டக் கூற்றுகளாக ஆகிவிட்டிருக்கின்றன. போட்டி விளையாட்டுகளில் விளையாடுபவர்களும் பார்வையாளர்களும் ஏன் தங்களுடைய கீழ்த்தரமான உள்ளுணர்வுகளுக்கு, கட்டுப்பாடற்ற மூர்க்கத்துக்கு இடமளிக்கின்றனர்? போட்டி விளையாட்டுகளுக்குப் பின் இருப்பது என்ன? இந்தப் பிரச்னை எந்தளவுக்குக் கவலைக்குரிய ஒன்று? (g89 11/8)