உங்களுக்குச் சேவை செய்யும் எண்ணெய் ஒருவேளை!
ஒரு துளியாக அங்கே நான் என்னுடைய சொந்த வேலையைக் கவனித்துக்கொண்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இலட்சக்கணக்கான உடன் துளிகளுடன் எண்ணற்ற ஆண்டுகளாக சமாதானமாய் கூட்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். அந்தச் சமயத்தில், திடீரென, எங்களுடைய வீட்டுச் சுவர்களைப் பொடியாக்கிடும் இரும்பு இயந்திரங்களின் அரைக்கும் சத்தத்தால் நாங்கள் விழித்தெழுந்தோம். இன்னொரு உலகிலிருந்து எங்களுடைய தனிமையைத் தாக்க வந்திருக்கும் படையெடுப்பாளர் துளைப்பான் துண்டு. இது எங்களுடைய வாழ்க்கைப் பாணியை ஒரே இரவில் மாற்றிவிட்டது.
அற்ப எண்ணெய்த் துளியாகிய நான் எப்படி இந்தளவுக்குப் பிரபலமாகிவிட்டேன்? என்னுடைய கதை 1960-களின் ஆரம்பத்திற்குச் செல்கிறது. அந்தச் சமயத்தில் அலாஸ்காவின் வடக்கு மலைச் சரிவுகளில் கச்சா எண்ணெய்க் கண்டுபிடிக்கும் பணி நடத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக எண்ணெய்த் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தலைசிறந்த இலட்சியத்தை—ஒரு வர்த்தக எண்ணெய் வயலை—கண்டுபிடிக்க நாடி பணத்தைக் கோடிக்கணக்கில் செலவுசெய்தன. கடைசியாக அவர்களுடைய முயற்சிகள் பலன்தந்தன. 1968-ல் இராட்சத புருதோ விரிகுடா எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டது.
பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த என்னுடைய வீடு தாக்கப்பட்டது. என்னுடைய வெப்பமான, வசதியான வீட்டை விட வற்புறுத்தப்பட்டு நான் அறியாத ஓர் உலகில் வாழ்வதற்காக எனக்கு அந்நியராயிருந்த ஒரு குழாய் வழியே தள்ளப்பட்டபோது எனக்குள் இருந்த அந்தப் பயத்தை நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா?
என்னுடைய வீடு ஒரு குளம் அல்ல
நான் இப்பொழுது விட்டுச் செல்லும் என்னுடைய வீட்டைக் குறித்துச் சற்று விளக்கிட ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். முதலாவதாக, அது கடல் மட்டத்திற்கு 8,500 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டது. என்னே ஒரு தொந்தரவு இல்லாத இடம்! மேலும் வெப்பம் ஏறக்குறைய 200 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது—எங்களுடைய அமைப்புக்கு ஏற்ற சொகுசாக இருக்கச்செய்யும் வெப்பம். அநேகர் என்னுடைய வீட்டை ஒரு குளம் என்று விளக்குகிறார்கள். எண்ணெயால் நிறைந்த ஒரு பெரிய தேக்கத்தில் வாழ்கிறேன் என்ற தவறான கருத்தை இது கொடுத்துவிடுகிறது. அப்படி இல்லை. என்னுடைய குடியிருப்பு ஓர் எண்ணெய்க் குளம் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் உண்மையில் அது மணல் அல்லது கருங்கற்களாலான ஒரு படுகையாக எண்ணெயும் வாயும் நிறைந்ததாக இருக்கிறது. இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதென்றால், மணல் நிறைந்த ஒரு கலத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இன்னும் அதில் நீங்கள் தண்ணீரைக் கூட்டலாம்—அந்தக் கலத்தின் கொள்ளளவுக்கு 25 சதவீத தண்ணீரைக் கூட்டலாம்—அது நிரம்பி வழியாது.
ஆனால் நான் புதியதோர் வாழ்க்கைக்குக் கடத்தப்பட்ட அந்தச் சமயத்திற்கு செல்கிறேன். எண்ணெய்த் தேக்கத்திலிருந்த அழுத்தத்தின் காரணத்தால் குழாய் வழியாய் என்னுடைய பயணம் மிக வேகமாக இருந்தது. இது ஆரம்பத்தில் சதுர அங்குலத்திற்கு 4,000 பவுண்டு அழுத்தமாக இருந்தது என்று கணக்கிடப்பட்டது, எனவேதான் என்னை அதிவேகமாக மேலே கொண்டுவந்தது.
அது எனக்கு ஒரு புதிய உலக வாழ்க்கையின் ஆரம்பமாக இருந்தது. நான் எரிபொருளாக அதிக பிரபலமாக இருப்பேன் என்று சிலர் சொன்னார்கள். நான் ஆயிரக்கணக்கான வேறு வழிகளிலும் பிரயோஜனமாக இருப்பேன் என்று மற்றும் பலர் உணர்ந்தார்கள்—வீடு மற்றும் தொழிற்சாலைப் பொருட்களுக்கு. நான் எதில் முடிவடைவேன்? அதை எண்ணிப்பார்ப்பது எனக்குக் கசப்பாயிருந்தது. நான் தனிமையில் இல்லை என்பதுதானே எனக்கு ஆறுதல். புருதோ விரிகுடா எண்ணெய் வயலிலிருந்து என்னுடைய தோழர் துளிகளையும் கொள்வதற்காகக் கூடுதல் கிணறுகள் துளைக்கப்பட்டன.
இப்பொழுது, இது அதிக செலவை உட்படுத்தக்கூடியதும் ஆபத்தானதுமான ஒரு வேலை. அநேக சமயங்களில் எண்ணெய்க் கிணறுகளை எடுப்பது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை அமைக்கிறது, அந்த அழுத்தத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், நாங்கள் பீரிவந்து பயங்கரமான வெடிப்பை ஏற்படுத்தி அந்தப் பனிப் பிரதேசத்துக்கும் வனவாழ்வுக்கும் பெருஞ்சேதத்தை ஏற்படுத்திடுவோம். ஆனால் இந்தக் குற்றத்திற்கு நான் காரணமாயிருக்கவில்லை. உங்களைச் சேவிப்பதற்காக நான் வால்டெஸுக்கு குழாய்ப்பாதையில் என் பயணத்தை முடித்தேன்.
இன்னொரு காரியம், என்னைத் தாங்கிச்செல்லும் குழாய்கள் நிரந்தரப் பனிப்படலம் உருகுவதைத் தவிர்ப்பதற்காக அதற்கு மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன. வடப் பிரதேசத்தில் இந்த நிரந்திரப் பனிப்படலம் கொண்ட அடி மண் பகுதியின் திண்மம் 2,000 அடியாகும். அதில் உறைந்த நீர் 30 சதவீதமாகும், எனவே வெப்பம் கொண்ட எண்ணெய் தரைப் பகுதிக்குக் கீழே ஓடினால், அந்த நிரந்தர பனிப் பகுதி உருகி, எங்களுடைய குழாய்கள் எளிதில் தொங்கி உடைந்துவிடும். இதனால் ஏற்படும் சேதத்தை நீங்கள் கற்பனைச் செய்துபார்க்க முடிகிறதா? ஆயிரக்கணக்கான காலன் கச்சா எண்ணெய் சிந்தி அந்தப் பனிப்படலம் கொண்ட அடிமண்ணுக்கு எப்பேர்ப்பட்ட சேதத்தை ஏற்படுத்திடும்!
வால்டெஸிலிருந்து நான் தூரத்திலுள்ள ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குப் பிரமாண்டமான எண்ணெய் வாகனங்கள் மூலம் பயணம்செய்ய அழைக்கப்பட்டேன். அங்கே நான் ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்கவேண்டியிருந்தது. வாயுவும் நீரும் வேறு இடங்களுக்குச் செல்வதற்காகப் பிரிக்கப்படுவதாயிருந்தது. ‘வாயுவா?’ என்று கேட்கிறீர்கள். ‘நாம் எண்ணெயைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தேன்.’ சரி, நான் எங்கு வாழ்ந்தாலும், எனக்கு அண்மையில் இருப்பது வாயு என்பதை அநேக ஆட்கள் உணருவதில்லை. உண்மையில் நான் பெருமளவில் வாயுவாலானவன். உண்மை என்னவெனில், நான் தரையின் மேல் மட்டத்துக்கு வந்ததும் அவர்கள் என்னை விடுவிப்பார்களானால், நான் நூறு மடங்குக்கும் அதிகமாக விரிவடைவேன்—அப்பொழுது நான் போடும் சப்தம் எவ்வளவாக இருக்கும்!
என்றபோதிலும், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையில் நான் ஒரு மாற்றத்தை அடைவதற்காகத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. நான் சிறு கூறுபடுத்தப்படுகிறேன், அல்லது பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறேன். இதற்கு கூறுபாட்டு வடித்தல் என்று பெயர். கச்சா எண்ணெய் ஆவியாக மாறும்படி சூடுபடுத்தப்பட்டு, ஒரு பெரிய கோபுரத்தின் வழியே மேலெழும்படி அனுமதிக்கப்படுகிறது. இந்தச் செயல் ஒரு குறிப்பிட்ட அளவுகளில் வித்தியாசமான கூறுபாடுகள் உறையும்படிச் செய்து, வால்வுகள் வழியே இழுக்கப்படுகிறது. என்னில் பாதி பெட்ரோலாகவும் டீசலாகவும் ஆகும், அப்பொழுது, நீங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்று, “அவளை நிரப்புங்கள்” என்று சொன்னதும், நான் உங்களுக்குச் சேவை செய்ய தயாராக இருக்கிறேன்.
ஆனால் நான் மற்ற காரியங்களாகவும் ஆகலாம். எண்ணெய்த்துளிகளாகிய நாங்கள் முதலில் அவ்வளவாகக் காணப்படாதவர்களாக இருக்கக்கூடும், ஆனால் உங்களுடைய அறையைச் சுற்றிப் பாருங்கள். அந்த நாற்காலி பிளாஸ்டிக்கால், பாலித்தீன் கலவையால், செயற்கை ரப்பரால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடும். அந்த அழகிய சமையலறை மேசை எண்ணெய் வஸ்துவினாலான மேற் பகுதியைக் கொண்டதாக இருக்கக்கூடும். உங்களுடைய தரைவிரிப்புகள் எண்ணெய் வஸ்துக்களில் செழித்திடும் ஓர் இரசாயன தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் தீவனமாக இருக்கக்கூடும்—உங்களைச் சேவிப்பதற்கு ஓராயிர வழிகள்!
இனிமேலும் ‘உங்களைச் சேவிப்பதற்கில்லை’
ஆனால் என்னைப் பொருத்ததில், அவற்றில் நான் எந்த ஒரு பொருளாயும் இல்லை. நான் என்னுடைய பயணத்தை வால்டெஸிலிருந்து ஆரம்பித்து, எக்ஸான் வால்டெஸ் என்ற பெயருடைய ஒரு பிரமாண்டமான எண்ணெய் வாகனத்தின் மூலம் ஒரு சுத்திகரிப்பாலையைச் சென்றடைந்தேன். நள்ளிரவுக்குச் சற்று பின்னால், பாறைக்கு எதிராக உலோகம் பொடியாக்கப்படுகிறது—வடக்குப் பிரதேசத்தில் அந்த இரும்புத் துளைத்துண்டு என்னுடைய வீட்டைத் தாக்கின சமயத்தை விட இது அதிக பயங்கரமாக இருந்தது! விரைவில் என்னைக் கொண்டிருந்த கொள்கலம் பிரின்ஸ் வில்லியம் சவுண்டிலிருந்த பிளை ரீஃபில் இரண்டாக வெடித்தது. என்னுடைய 1,10,00,000 காலன் பயண தோழர்களுடன் நான் அந்தத் தண்ணீர்களில் பாய்ந்தோடினேன். ஒரு பயங்கரமான நச்சுக்கலப்புக்குப் பாகமாகிவிட்டேன், வட அமெரிக்காவிலேயே இதுவரை சம்பவித்திராத மிகப் பெரிய எண்ணெய்ச் சொரிவு!
எனவே ஒரு பெட்ரோல் நிலையத்தில் உங்களுடைய வாகனத்தின் கொள்கலத்தை நிரப்பிடுவதில் நான் ஒருபோதும் உதவப்போவதில்லை. உங்களுடைய மேசையிலிருக்கும் அந்தப் பிளாஸ்டிக் தட்டுகளாகவோ, அல்லது உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் பாகமாகவோ, அல்லது உங்களுக்கு மிகவும் பிரியமான சிங்காரிப்பு வஸ்துக்களாகவோ, அல்லது நீங்கள் அணியும் ஆடையாகவோ, அல்லது உங்களை மணக்கச் செய்ய நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருளாகவோ இருக்கமாட்டேன். நான் புறப்பட்டபோது நினைத்தபடி, உங்களுடைய சேவையில் இருப்பதற்கு நான் என்னை அளிப்பதற்கில்லை. இல்லை, ஒருவேளை தற்போது அவற்றில் எதுவுமாக இருப்பதற்கில்லை!
மாறாக நான் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு மற்றும் அலாஸ்கா விரிகுடாவை நச்சுப்படுத்துவதையே என் கடைசி இடமாகக் கண்டேன். நூற்றுக்கணக்கான மைல் தூரத்திற்குக் கடலோரத்தின் எழிலைக் கெடுப்பதில் பங்குகொண்டேன். நான் ஆயிரக்கணக்கான பறவைகள் மற்றும் மிருகங்களின் மரணத்தில் ஒரு பாகத்தை வகிக்கிறேன். ஏராளமான மீனவர்களின் அனுதின வாழ்வுக்கு இடையூறாக இருக்கிறேன். நான் புருதோ விரிகுடாவிலுள்ள வடக்கு மலைச் சரிவு பகுதியில் கடல் மட்டத்திற்குக் கீழே 8,500 அடி ஆழத்திலிருக்கும் என்னுடைய வெப்பமான, சொகுசான வீட்டில் ஓர் எண்ணெய்த் துளியாக என்னுடைய சொந்த வேலையைக் கவனித்துக்கொண்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்திருப்பது மேலானதாக இருந்திருக்கும். (g89 11/22)