ஒரு பருவ விடுமுறையை ஏன் வீட்டில் கழிக்க முயற்சி செய்யக்கூடாது?
உங்களுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை இருக்கிறது, உங்களுக்கு உண்மையில் ஒரு மாற்றம் தேவை! ஆனால் இந்தச் சமயத்தில் பிரயாணத்துக்காகும் செலவை உங்களால் சமாளிக்க முடியாது. நீங்கள் என்ன செய்யலாம்?
ஆம் விடுமுறை என்பது வழக்கமான வேலைகளிலிருந்து ஓர் ஓய்வு, இளைப்பாற அல்லது வேலையிலிருந்து விடுவிக்கப்பட ஓர் இடைவேளை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே ஏன் ஒரு பருவ விடுமுறையை வீட்டில் கழிக்க முயற்சி செய்து பார்க்கக்கூடாது? அங்கே செய்வதற்கு நிச்சயமாகவே அநேகக் காரியங்கள் இருக்கின்றன. நீங்கள் வண்ணம் பூசலாம் அல்லது புகைப்படங்கள் எடுக்கலாம் அல்லது உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கப் பெறாதிருந்த ஓய்வுநேர விருப்ப வேலைகளைச் செய்யலாம். உங்கள் வீட்டைச் சுற்றியே நீங்கள் காணவும் அனுபவிக்கும் இடங்களும் பொருட்களும் இருக்கின்றன. விடுமுறையை வீட்டில் கழிப்பதில் அநேக அனுகூலங்கள் உண்டு. ஒரு சிலவற்றை குறிப்பிட:
◼ பாஸ்போர்ட் அல்லது விசா தேவையில்லை
◼ நாணய மாற்றம் தேவையில்லை
◼ மற்றொரு மொழியோடு பிரச்னை இல்லை
◼ சுங்கவரி அல்லது குடியேறுதலில் அசெளகரியமில்லை
◼ மூட்டை முடிச்சு கட்ட வேண்டியதில்லை
◼ அதிக பணச்செலவை உட்படுத்தும் விமான டிக்கட்டுகள் அல்லது பெட்ரோல் பில்கள் இல்லை
◼ அங்கு சென்றடைய விலைமதிப்புள்ள நேரம் இழக்கப்படுவதில்லை
இப்பொழுது, ஏற்கெனவே நீங்கள் அதிக தெம்பாக உணருகிறீர்கள் அல்லவா? ஏன், நீங்கள் எப்பொழுதும் பழக்கப்பட்டிருக்கும் உங்கள் சொந்த செளகரியமான படுக்கையில் நீங்கள் விரும்பும் சமயம்வரை தூங்கலாம்!
எந்த விடுமுறையோடும் சம்பந்தப்பட்ட முக்கிய காரியம் திட்டமிடுதலாகும். சில ஆட்களுக்கு எதிர்பார்ப்பு தானே நிஜத்தைப் போன்று அத்தனை கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது. நீங்கள் உண்மையில் அனுபவித்து செய்யக்கூடியதும் உங்களுக்கு திருப்தியளிக்கக்கூடியதுமான பயனுள்ள ஏதோவொன்றை நீங்கள் செய்யும் பொருட்டு, வீட்டில் விடுமுறை கழிப்பதற்கும் கூட நல்ல தயாரிப்பு தேவையாக இருக்கிறது.
வீட்டில் என்ன செய்வது
அச்சமயத்தின் நினைவாக சில ஆட்கள் விடுமுறையின் போது புகைப்படங்கள் எடுக்கிறார்கள். உங்கள் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை புகைப்படமெடுக்க அவர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்கிறார்கள். டேய்ஸி பூந் தோட்டத்தை, வெகு அருகாமையில் ஒரு மலரை அல்லது குச்சி மீது சின்னஞ்சிறு உயிரினம் ஒன்றை புகைப்படமெடுக்க முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை உங்கள் பழைய பள்ளி அல்லது நீங்கள் வளர்ந்து வருகையில் தங்கிய வீடு அல்லது நகரத்துக்கு வெளியே உங்கள் பாட்டியம்மாவின் பழைய பண்ணை வீடு இவற்றின் படங்களைக் கொண்டிருக்க எப்போதும் விரும்பியும் அவற்றை ஒருபோதும் செய்ய முடியாது போல் தோன்றியிருக்கலாம். இப்பொழுது அதைச் செய்யுங்கள்!
புகைப்படங்களைப் பற்றி பேசுகையில் என்றாவது ஒருநாள் ஆல்பத்தில் வைக்க வேண்டும் என்பதாக நீங்கள் நினைத்து பெட்டி பெட்டியாக வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பற்றி என்ன? இதைச் செய்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது. கடந்த காலங்களைப் பற்றிய இந்த நினைப்பூட்டுதல்களை, முழு குடும்பமும் புரட்டிப் பார்த்து அனுபவிக்க முடியும். குடும்பத்தின் அல்லது நண்பர்களின் நல்ல படங்கள் உங்கள் கண்ணில் பட்டால், அவர்களுக்கு சிலவற்றை அனுப்பி வைப்பது எத்தனை நன்றாக இருக்கும்!
பயணிகள் அநேக சமயங்களில் ஞாபகச் சின்னங்களைச் சேகரிக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் வீட்டில் எதைக் காணமுடியும்? ஒருவேளை நிலவாழுயிர்களின் பேணகச் சாலைக்கு அசாதாரணமான சில கற்கள் அல்லது சம்பாஷணைக்கு வழிநடத்தும் ஒரு கிண்ணம் நிறைய உள்ள வடிவக் கற்கள். வெறும் கற்களினால் சிறு பிள்ளைகள் எத்தனை பரவசமடைவார்கள் என்பதை அறிவதில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! மற்றப் பொருட்களைக் குறித்து நீங்கள் எண்ணிப் பார்க்க முடியுமா? கிளிஞ்சல் சிப்பிகள்? அலங்கரிப்புக்காக இலையுதிர் கால இலைகள்? புதர் செடிகள் மற்றும் தாவரங்களை (காட்டுச் செடிகள்) காய வைப்பது?
நீங்கள் அழைக்க விரும்பிய அல்லது சென்று சந்திக்க விரும்பிய குடும்ப அங்கத்தினர்களை அல்லது நண்பர்களைப் பற்றியதென்ன? காப்பி அல்லது தேநீர் அருந்த அவர்களை ஏன் அழைக்கக்கூடாது? இளைஞரின் நன்மைக்காக, வயதானவர்களை அவர்களுடைய இளமைக் காலம் குறித்து சொல்லும்படி கேளுங்கள். கதைகளை ஏன் பதிவு செய்து வைத்துக்கொள்ளக்கூடாது? ஏனெனில், “தாத்தா” இன்னும் ரொம்ப காலம் இருக்கப்போவதில்லை அல்லவா?.
விடுமுறையில் இருக்கையில், அநேகர் அன்பானவர்களுக்கும் நண்பர்களுக்கும் அஞ்சல் அட்டைகளை அனுப்புகிறார்கள். வீட்டில் விடுமுறையை கழிப்பதற்கு, மேசை அடுக்கிலுள்ள கத்தையான கடிதங்களுக்கு பதில் எழுத விழையுங்கள். உங்கள் நண்பர்களை நீங்கள் இன்னும் நேசிப்பதையும் அவர்களை நீங்கள் மறந்துவிடாதிருப்பதையும் தெரியப்படுத்துங்கள்.
வீட்டில் எங்கே செல்வது
உங்கள் பட்டணத்துக்கு அல்லது நகரத்துக்கு விருந்தாளிகள் வந்தால், அவர்களை நீங்கள் எங்கே அழைத்துச் செல்வீர்கள்? அவர்கள் என்ன பார்க்கக்கூடும்? முதலில், அதிக அக்கறைக்குரிய இடம் எதுவுமில்லை என்பதாக நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அதற்கு காரணம் நம்முடைய சொந்த ஊரை நாம் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. என்ன இருக்கிறது என்பதை விசாரித்துப் பாருங்கள். உள்ளூர் சுற்றுலா செய்தி அலுவலகம் அல்லது வர்த்தகப் பிரிவு சுற்றுலாப் பயணிகளுக்கு என்ன சிபாரிசு செய்கிறது என்பதைப் பாருங்கள். பார்க்க என்ன இருக்கிறது என்பதை அறிகையில் நீங்கள் இன்ப அதிர்ச்சியடைவீர்கள்.
அருங்காட்சியகம் அருகில் இருக்கிறதா? அல்லது சுற்றுப்பயணம் அளிக்கும் ஒரு தொழிற்சாலை? ஒருசில மிட்டாய் அல்லது சாக்கலேட் தொழிற்சாலைகள் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வது மாத்திரமல்லாமல் சாம்பிள்கள் கூட தருகின்றன! அவ்விதமாகவே சில மதுவடிக்கும் தொழிற்சாலைகளும். உள்ளூர் விவசாயி விலங்குகளை உங்கள் பிள்ளைகளுக்கு காண்பிக்க மனமுள்ளவனாக இருக்கக்கூடும்—கோழியிலிருந்து முட்டைகளை எவ்வாறு சேகரிப்பது அல்லது எவ்வாறு பால் கரப்பது. பால் புட்டியில் அல்லது அட்டைப் பெட்டியிலிருந்து வருவதில்லை என்பதை கற்றறிவது அவர்களுக்கு நல்லது.
ஒரு சில தேசத்தவர் நடத்தும் சிற்றுண்டிச்சாலைகளுக்குச் செல்வதன் மூலம் அம்மாவுக்கு வேலையை நீங்கள் மிச்சப்படுத்தலாம். அவற்றின் விசேஷ—சீன, ஜப்பானிய, இத்தாலிய, கிரேக்க—உணவோடும்—அவற்றின் ஒப்பனையோடும் ஒருவேளை இசையோடும் நீங்கள் ஒரு வெளிநாட்டில் உணவு உண்பதாக கற்பனை செய்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட சிற்றுண்டிச்சாலை உங்கள் நகரில் இல்லாவிட்டால் அப்போது என்ன? வீட்டில் அந்த அனுபவத்தை ஏன் உருவாக்கிப் பார்க்கக்கூடாது? நூலகத்திலிருந்து மக்கள் எவ்வாறு உடுத்துகிறார்கள் மற்றும் சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றிய தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். இந்திய பதார்த்தங்களின் செய் முறைகளைக் கொண்ட ஒரு சமையல் புத்தகம், தயாரிக்க அதிக கடினமாக இல்லாத ஓர் உணவை தயாரிக்க உதவக்கூடும். மாலையில் அவர்களைப் போலவே நீங்களும்கூட உடுத்திக் கொள்ளலாம்.
‘ஆ, குடும்பத்திலுள்ள கூடாரப் பிரியர்கள் கூடாரமடித்துத் தங்கினாலொழிய அதை ஒரு விடுமுறையாகவே கருதமாட்டார்கள்’ என்பதாக நீங்கள் சொல்வீர்கள். இந்த வருடம் கொல்லைப்புறத்தில் உங்கள் கூடாரத்தைப் போடமுடியுமா? அருகிலுள்ள நாட்டுப்புறப் பகுதிகளுக்கு அவசரமின்றி கால்நடையாகவே நடந்து சென்று அங்கிருக்கையில் காட்டுப்பூக்களை சேகரிக்கவும், ஒருசில மிருகங்களையும் பறவைகளையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கவும் செய்யலாம்.
விடுமுறை காலம் குடும்ப பிணைப்புகளை கட்டவும், ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யவும் பொதுவாக சிறந்த ஒரு காலமாக இருப்பதன் காரணமாக, அதை மிகவும் பழக்கப்பட்ட ஒரு சூழலில் செய்வது ஒருவேளை அதிக பிரயோஜனமாக இருக்குமல்லவா? முயற்சி செய்து பாருங்கள்.
கவனிக்கப்படாதவற்றை செய்து முடிப்பதிலிருந்து புதிய தெம்பு பெறுதல்
பின்னர் செய்வதற்கு உங்களுக்கு ஒருபோதும் நேரம் கிடைக்கப்பெறாதிருந்த, வீட்டைச் சுற்றியுள்ள எல்லா வேலைகளும் இருக்கின்றன. ஆனால் சரீரப்பிரகாரமான வேலை உண்மையில் புது தெம்பை அளிக்குமா? சரி, கடைசியாக கூரையிலிருந்த அந்த ஒழுகல் பழுதுபார்த்தாகிவிட்டது, மேசை இழுப்பறையில் எல்லா குமிழ்களும் இருக்கின்றன, கீச்சொலி செய்து கொண்டிருந்த கதவு மூட்டுவாய் ஒரு வழியாக அமைதியாகிவிட்டது என்ற திருப்தியோடு விடுமுறைக்குப் பிறகு உங்கள் வழக்கமான அலுவல்களை மீண்டும் துவங்குவது உங்களுக்கு நிம்மதியளிப்பதாக இருக்குமல்லவா? விளையாட்டுகளை விளையாடுவது, நீச்சலடிப்பது அல்லது நெடுந்தூரம் நடந்து செல்வது ஆகியவற்றில் நீங்கள் செலவிடக்கூடிய சக்தியைவிட, அந்த அவசியமான வேலையைச் செய்வதில் அதிக சக்தியை செலவிடமாட்டீர்கள்.
மேலும் யார்தான் சில சமயங்களில் அதிகமாக வாசிக்கவும் படிக்கவும் வேண்டும் என்று விரும்பமாட்டார்? அது சலிப்பூட்டுவதாயிராது. உங்களுக்கு அக்கறையாக இருக்கும் ஏதாவது ஒரு பொருளின் பேரில் ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் நூலக நிலையடுக்கிலிருந்து ஒரே புத்தகமாக சேர்க்கப்பட்ட காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-வை எடுங்கள். மற்ற சுவாரசியமான கட்டுரைகளை வாசிக்க நீங்கள் பக்க பாதையில் கொண்டு செல்லப்படுவதைக் கண்டால் ஆச்சரியப்படாதீர்கள். திடீரென்று மதிய உணவுக்கோ அல்லது இரவு சாப்பாட்டுக்கோ நேரமாகிவிடுகிறது. நேரம் எத்தனை வேகமாக கடந்து செல்கிறது என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் தளர்ந்த நிலையில் இருங்கள்! நீங்கள் விடுமுறையில் இருப்பதை நினைவில் வையுங்கள்.
வீட்டில் விடுமுறையை உருவாக்குவதில் சந்தோஷம்
புது முறைகளை காண்பவர்களாக இருங்கள். உங்கள் கற்பனை திறனை பயன்படுத்துங்கள். இப்போதைய விடுமுறை முடிந்தபின்பு நீங்கள் “நான் உண்மையில் இதை மகிழ்ச்சியாக அனுபவித்தேன்! நான் மீண்டும் இவ்வாறே செய்ய வேண்டும்” என்று உணருவீர்கள்.
ஆகவே இப்பொழுது அதைப் பற்றி என்ன? ஒருவேளை குடும்பத்தை ஒன்றாகக் கூட்டி வீட்டில் விடுமுறையை கழிக்க திட்டமிட விரும்புவீர்கள். அவர்கள் அபிப்பிராயங்களை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தனிமையில் வாழ்ந்தால், அதற்காக திட்டமிட ஒரு நல்ல நண்பனை உங்களைச் சேர்ந்து கொள்ளும்படிச் செய்யுங்கள். பின்னர் வீட்டில் ஒரு விடுமுறையை கழிக்க முயற்சி செய்து பாருங்கள். அதிக வேலைகள் நிறைந்த உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் அந்த இடைவேளையை உங்களுக்குத் தர, அது வீட்டிலிருந்து வெளியேச் சென்று அனுபவிக்கும் விடுமுறையைப் போல ஆகலாம். (g90 6/22)
[பக்கம் 27-ன் படங்கள்]
நாட்டுப்புற பகுதிகளில் நடந்துசெல்வது, ஒரு பண்ணை அல்லது அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்வது அல்லது ஓய்வாக வாசிப்பதும்கூட, வீட்டில்–தங்கி அனுபவிக்கும் விடுமுறையில் சேர்க்கப்படலாம்