வருத்தமின்றி விடுமுறைகளை அனுபவியுங்கள்!
ஒரு புகழ்பெற்ற விடுமுறைத் தலத்திற்கு சென்றிருக்கையில் எவ்விதம் அனுபவித்தார் என்று ஐரோப்பாவில் இப்பொழுது வாழ்ந்துவரும் ஓர் அமெரிக்கரிடம் கேட்கப்பட்டபோது, அவர் பதிலளித்தார்: “மக்கள் வருவதற்கு முன்பாக அது மிக அழகாக இருந்திருக்க வேண்டும்.” அவரைப்போலவே நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா? வரிசையாக ஓட்டல்களும் நைட் கிளப்புகளும் மாசுபடுத்தப்பட்ட, நிரம்பி வழியும் கடற்கரையும் செவியைப் பிளக்கும் ரேடியோக்களும் இனிய ஒரு விடுமுறைத் தலத்தைப் பற்றிய பொது கருத்தாய் அனைவருக்கும் இல்லை.
நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடுமுறைகள் எப்பொழுதுமே இருப்பதில்லை என்பது கவலைக்குரியது. நம் ஆற்றலைப் புதுப்பிப்பதற்கு மாறாக, அவை ஆற்றலிழக்கச் செய்கின்றன; மீண்டும் ஆற்றல் பெற்றவர்களாய் நம்மை ஆக்குவதற்குப் பதிலாக, அவை சில சமயங்களில் அதிக ஓய்வைத் தேவைப்படுத்துபவையாய் ஆகிவிடுகின்றன. இவ்வாறிருக்க, வருத்தமின்றி விடுமுறைகளை நாம் எவ்விதம் அனுபவிக்க முடியும்? என்று கேட்பது பொருத்தமாயுள்ளது.
சமநிலையுடன் இருங்கள்
நம் உணவில் சேர்க்கப்படும் நறுமணப்பொருட்களைப் போன்றே, விடுமுறைகளும் அளவோடு இருந்தால் மிகச் சிறந்த பலனை அடைகின்றன. பழமொழியாகக் கூறப்படும் இன்பப் பயணம் மேற்கொள்ளும் செல்வந்தரின் வாழ்க்கை (jet-setter) கவர்ச்சிகரமாய் இருந்தாலும், அது சமநிலையைத் தேவைப்படுத்துவதோடு, மெய்யான சந்தோஷத்துக்கு வழிநடத்துவதில்லை.
விசேஷமாக விடுமுறைகளைப் பொறுத்தமட்டில், பணத்தைச் செலவழிப்பதில் சமநிலை மிகவும் அத்தியாவசியமானது. நீங்கள் செல்வதற்கு முன்கூட்டியே திட்டமிடுங்கள், உங்கள் வரவுசெலவுத் திட்டத்திற்குள் செலவழிக்க முயலுங்கள். “இப்பொழுது அனுபவியுங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்” போன்ற உற்சாக வார்த்தைகளைக் கூறும் சுற்றுலா ஏஜென்ட்டுகளால் ஏற்பாடு செய்யப்படும் விசேஷ அளிப்புகளால் வஞ்சிக்கப்படுவதைத் தவிருங்கள்.
மேலும், விடுமுறைகளைக் கவர்ச்சிகரமாய் ஆக்கும் தன்னிச்சையான செயல்கள், கவலையில்லா மனநிலை ஆகியவற்றை முடிவுகட்டும் அளவுக்கு அபாயங்களைப் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனத்தைப் பீடிக்க விடாதீர்கள். அதோடு, நம் விடுமுறையை வருத்தத்துடன் நோக்கிப் பார்க்க வைக்கும் மிகப் பெரிய அபாயத்தை நாம் அறிந்துகொள்வதையும் நாம் சரியான சமநிலையுடன் இருப்பது உட்படுத்துகிறது. விபத்துகள், நோய், அல்லது குற்றச்செயல் இவையெல்லாவற்றையும்விட, தனிப்பட்ட உறவுகள்தான் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவை.
நல்ல உறவுகளைக் காத்துக்கொள்ளுதல்
குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு விடுமுறைகளுக்குச் செல்வது அன்பின் கட்டுகளைப் பலப்படுத்தலாம். மறுபட்சத்தில், பின்னர் சரிசெய்யக் கடினமாகிவிடக்கூடிய உறவுப் பிளவுகளை விடுமுறைகள் ஏற்படுத்திவிடலாம். “விடுமுறையின் மெய்யான அபாயம், எல்லா குடும்பத் தகராறுகளையும் ஒன்று சேர்த்து, அதிகளவில் ஒருமுகப்படுத்திய நிலைக்குள் அழுத்திவிடுவதுதான். . . . தாங்கள் எப்பொழுதும்போல் சாதாரணமாய் வேலை பார்த்துக்கொண்டிருக்கையில், தொழில்கள், குடும்பப் பொறுப்புகள், நண்பர்கள் மற்றும் பழக்கமுறைகள் ஆகியவற்றால் மக்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் அடக்கிக்கொள்ளவும் முடிகிறது. விடுமுறைக்காகப் பயன்படுத்தப்படும் வீட்டுச் சூழலில், 20 ஆண்டுகளாக அடக்கிவைத்திருந்த குடும்பப் பிரச்சினைகள் வெடிப்பதைப் போன்று வெளிவரும் சாத்தியமிருக்கிறது” என்று பத்திரிகையாளர் லான்ஸ் மாரோ கூறினார்.
ஆகவே விடுமுறையில் செல்வதற்கு முன்பு, அதை ஓர் இனிய அனுபவமாக்க திடத்தீர்மானமுள்ளவராய் இருங்கள். அக்கறைகள் வேறுபடுகின்றன என்பதை நினைவில் வையுங்கள். பிள்ளைகள் சாதனைகளை ஏற்படுத்த விழையலாம், ஆனால் பெற்றோர்கள் ஒருவேளை நிம்மதியாக ஓய்வெடுக்க விழையலாம். என்ன செய்வது, எங்குப் போவது போன்றவற்றில் தனிப்பட்ட முன்னுரிமைகளை விட்டுக்கொடுக்க மனமுள்ளவராய் இருங்கள். உசிதமானதாகவும், நடைமுறையானதாகவும் இருந்தால், அவ்வப்பொழுது ஒவ்வொரு உறுப்பினரும் அவருக்கு அக்கறையூட்டும் குறிப்பிட்ட காரியம் என்னவோ அதைத் தொடர அனுமதியுங்கள். ஆண்டு முழுவதும் தினந்தோறும் கடவுளுடைய ஆவியின் குணங்களைக் கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள், அப்படியிருந்தால், உங்கள் விடுமுறை சமயத்திலும் அவ்வாறே தொடர்ந்து செய்வது கடினமானதாயிராது.—கலாத்தியர் 5:22, 23.
குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் ஒரு நல்ல உறவைக் காத்துக்கொள்வது முக்கியமானதாய் இருக்கையில், கடவுளோடுள்ள நம் உறவும் அதைவிட முக்கியமானது. விடுமுறைகளில், கடவுளைப் பற்றியும் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றைப் பற்றியும் உள்ள நம்முடைய கிறிஸ்தவ நோக்குநிலையைக் கொண்டிராதவர்களைப் பொதுவாக நாம் சந்திக்கிறோம். அவர்களோடு நெருங்கிய கூட்டுறவு கொள்வது—ஒருவேளை கேள்விக்கிடமான பொழுதுபோக்குகள் நடைபெறும் இடங்களுக்கு அடிக்கடி செல்வது—வருந்தத்தக்க விளைவுகளுக்கு வழிநடத்தலாம். “மோசம் போகாதிருங்கள். கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கங்களைக் கெடுக்கும்.”—1 கொரிந்தியர் 15:33, NW.
விடுமுறையில் இருக்கும்போது, கிறிஸ்தவ தராதரங்கள், பழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ளும் ஓர் ஆவலை நீங்கள் உங்களுக்குள் எப்பொழுதாவது கண்டுபிடித்தீர்களானால், அத்தகைய பலவீனத்தை ஞானமாக எதிர்ப்பட்டு, அந்த ஆவலை எதிர்த்துப் போராடத் தேவைப்படும் தெய்வீக உதவிக்காகக் கேளுங்கள்!
எது ஊக்குவிக்கப்படுகிறது?
கிறிஸ்தவ தராதரங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கையை உருப்படுத்தாதவர்கள் விடுமுறையில் இருக்கும்போது என்ன செய்தாலும் பரவாயில்லை என்று உணரலாம். சில ஐரோப்பிய நாடுகளில், பாலின சுற்றுலா அதிக வருமானமளிக்கும் தொழிலாயுள்ளது, சுற்றுலா ஏஜென்ஸிகள் சில அதை உற்சாகப்படுத்துகின்றன. ‘குறிப்பிட்ட ஆசிய ரிஸார்ட் நகர்களில் ஐரோப்பிய ஆண்கள் செய்யும் வெறுப்பூட்டும் காரியங்கள் வெகுகாலமாக நன்கு தெரிந்தவையாய் இருந்திருக்கின்றன,’ என்று தி யுரப்பியன் எழுதுகிறது. ஓர் ஆசிய நாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுவதாய், 70 சதவீதம்வரையான எல்லா ஆண் பார்வையாளரும் “பாலின சுற்றுலாப் பயணிகளாக” இருந்ததாய் ஜெர்மானிய பத்திரிகையான டார் ஷ்பீகெல் மதிப்பீடு செய்தது.
ஆண் பாலின சுற்றுலாப் பயணிகளின் உதாரணத்தைப் பெண் சுற்றுலாப் பயணிகள் இப்போது பின்பற்றி வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்யும் பெண் பயணிகளில் 30 சதவீதத்தினர் தெளிவான சட்டவிரோதப் பாலுறவு நோக்கத்துக்காக விடுமுறையில் செல்கின்றனர் என்று கரிபியன் விமானங்களைப் பயன்படுத்துவதில் அனுபவமிக்க ஜெர்மானிய வாடகை ஏர்லைன் மதிப்பீடு செய்கிறது. “அதை விளையாட்டிற்காக ஓர் எளிய மற்றும் சிக்கலற்ற முறையாக—ஒரு கவர்ச்சிகரமான விளையாட்டாக—அவர்கள் காண்கின்றனர்” என்று ஒரு ஜெர்மானிய பத்திரிகையாளர் கூறினதை தி யுரப்பியன் மேற்கோள் காட்டியது.
என்றபோதிலும், மெய்க் கிறிஸ்தவர்கள் சட்டவிரோதப் பாலுறவை விளையாட்டிற்காக ஏற்கத்தகுந்த ஒரு வழியாக நோக்குவதில்லை. அது கிறிஸ்தவ நியமங்களை மீறுவதோடு, அபாயம் நிறைந்ததாயுள்ளது. அபாயங்கள் பொதுவாக அறிந்துகொள்ளப்பட்டாலும், பலர் வெறுமனே அந்தப் பழக்கத்தை வெறுத்து ஒதுக்குவதைக் காட்டிலும் அதனால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்கின்றனர். அதற்கு உதாரணமாக ஒரு குடையையும் இரு காலியான கடற்கரை நாற்காலிகளையும் காட்டும் ஜெர்மானிய செய்தித்தாள்களின் விளம்பரம். அதன் தலைப்பு வாசிக்கிறது: “பாதுகாப்பாகப் பயணம் செய்யுங்கள், எய்ட்ஸ் இன்றி திரும்புங்கள்.”
பாலின சுற்றுலாப் பயணத்தின் மற்றொரு வெறுக்கத்தக்க இடை விளைவு, சிறார்களின் பாலின துர்ப்பிரயோகம். குறிப்பாக, 1993-ல், வயது வராதவர்களுடன் பாலுறவு கொள்ளும் குற்றமுடையவர்களாகக் கண்டுபிடிக்கப்படுகையில்—வெளி நாடுகளில் விடுமுறைக்காகச் சென்றிருக்கும்போதும்கூட—ஜெர்மானியர்கள் தண்டனைக்குரியவர்கள் என்ற ஒரு சட்டத்தை ஜெர்மானிய அரசாங்கம் இயற்றியது. என்றபோதிலும், இப்போதுவரை, அதற்குச் சாதகமான முடிவுகள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கின்றன. மனித சமுதாயத்தில் சிறார் விபசாரம் சீரழிந்துவரும் கொடுமையாக இருந்துவருகிறது—மற்றும் நிலைத்திருக்கிறது.
விடுமுறையை ஒரு பயனுள்ள நேரமாக ஆக்குங்கள்
வாசிப்பது, பைபிளைப் படிப்பது, கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடுவது உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு இனிய, பயனுள்ள நடவடிக்கைகளாகும். ஆனால் பலர் இக்காரியங்களைத் தாங்கள் விரும்பும் அளவு செய்வதற்குப் போதிய நேரத்தைக் காண்பதைக் கடினமாக உணருகின்றனர். விடுமுறையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட அட்டவணையிலிருந்து விடுபட்டவர்களாயிருக்கும் விடுமுறை நேரத்தைவிட வேறெந்த நேரம் போதியளவு செய்வதற்கு சிறந்ததாய் இருக்கும்?
ஒரு சுறுசுறுப்பான, திருப்தியளிக்கும் விடுமுறை, நீங்கள் சாதாரணமாகச் செய்யும் அளவுக்கு கிறிஸ்தவ அக்கறைகளை நாடித்தொடர உங்களை அனுமதிக்காமல் இருக்கலாம் என்பது மெய்யே. ஆனால் ஆக்கப்பூர்வமான ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்காகக் கொஞ்சம் நேரத்தையாவது ஒதுக்க ஏன் முயலக்கூடாது? இது நிம்மதியாக ஓய்வெடுக்கக் கொஞ்சம் நேரத்தை இன்னும் அனுமதிக்கும். சிலர் தங்கள் ஊழியத்தை விரிவாக்க, விடுமுறைகளின்போது கிடைக்கும் அதிகப்படியான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கின்றனர். இயேசு கூறினதுபோல், “ஆவிக்குரிய உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.”—மத்தேயு 5:3, NW.
விரைவில் நீங்களும்கூட விடுமுறையில் செல்பவர்களாய் இருக்கலாம். அப்படியானால், அதை அனுபவிக்க நிச்சயமாயிருங்கள்! வரக்கூடிய அபாயங்களைப் பற்றி தேவையின்றி எண்ணி சஞ்சலப்படாதீர்கள், ஆனால் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள். இப்பக்கத்திலுள்ள பெட்டியில் காணப்படுவதுபோன்ற ஆலோசனைகளை மனத்தில் கொள்ளுங்கள். பிறகு, புத்துணர்ச்சி பெற்றவர்களாய், ஓய்வெடுத்தவர்களாய், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வதற்கு ஆவலுள்ளவர்களாய்த் திரும்புங்கள். மிக விரைவில், விடுமுறை சென்றுவிடுகிறது, ஆனால் அதைப் பற்றிய அருமையான நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கலாம். வருத்தமின்றி விடுமுறைகளை அனுபவிப்பது—எவ்வளவு விலைமதிப்புள்ளது!
[பக்கம் 10-ன் பெட்டி]
ஒருசில விடுமுறை குறிப்புகள்
குற்றச்செயலை எதிர்த்துப் போராடுங்கள்
1. வீட்டில் விட்டுவந்திருக்கும் பொருட்களைப் பார்த்துக்கொள்ள எவராவது இருக்கும்படி ஏற்பாடு செய்யுங்கள்.
2. பொதுவாக அபாயமாய்க் கருதப்படும் இடங்களுக்குச் செல்லாதிருங்கள்.
3. ஜேப்படித் திருடர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள், பணத்தை ஒரு பாதுகாப்பான இடத்தில் உங்கள் வசம் வைத்திருங்கள், அதிகப்படியான பணத்தை நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
4. நீங்கள் கேட்காமலேயே உதவி அளிக்க முன்வரும், முன்ன் அறிமுகமில்லாதவர்களைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாய் இருங்கள்.
விபத்துகளைத் தவிருங்கள்
1. வாகனம் ஓட்டுவதாய் இருந்தால், எச்சரிக்கையுடன் இருங்கள், அடிக்கடி இடைவேளை விட்டுத் தொடருங்கள்.
2. ஓட்டல்களில் தங்கியிருக்கும்போது அல்லது ஆகாயவிமானத்தில் பறக்கும்போது, அவசர நிலைமைகளுக்காக செய்யப்பட்டிருக்கும் வசதிகளைப் பற்றித் தெரிந்திருங்கள்.
3. உடல்பலத்தைத் தேவைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமுன் உடல்ரீதியில் சரிப்படுத்துவதற்குக் கொஞ்சம் நேரத்தை அனுமதியுங்கள்.
4. சரியான உடைகளை, ஷூக்களை, உங்கள் நடவடிக்கைகளுக்குத் தேவையான மற்ற சாதனங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
ஆரோக்கியமாய் இருங்கள்
1. தடுப்பு ஊசிகள் அல்லது பிற மருந்துகளுக்கான தேவையைப் பற்றிய ஆலோசனைகளை உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
2. தேவையான மருந்துவகைகளையுடைய ஒரு பிரயாண மருந்துப் பெட்டியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
3. போதிய ஓய்வெடுங்கள், நீங்கள் உண்ணுவதைக் குறித்தும் பருகுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள்.
4. உங்கள் மருத்துவத் தேவைகளை அல்லது விருப்பங்களைப் பற்றிய தேவையான ஆவணங்களை எல்லாச் சமயத்திலும் உங்கள் உடலோடு வைத்துக்கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியான உறவைக் கொண்டிருங்கள்
1. உங்களோடு இருப்பவர்களிடம் அன்பையும் கரிசனையையும் காட்டுங்கள்.
2. தனிப்பட்ட கூட்டுறவுக்கான தராதரத்தை உயர்வாக வையுங்கள்.
3. நீங்கள் கேள்விக்குரியவையாய்க் கருதும் காரியங்களைச் செய்யும்படி ஏவும் பிற விடுமுறையாளர்களுக்கு இடமளிக்காதீர்கள்.
4. ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்.
[பக்கம் 9-ன் படங்கள்]
விடுமுறையில் இருக்கும்போது ஆரோக்கியகரமான நடவடிக்கைகளைத் தெரிவு செய்யுங்கள்