எதற்கெதிராக உங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்
“விடுமுறைகளின் மிகவும் வெளிப்படையான நோக்கம் வித்தியாசம், இடைவேளை, வழக்கமுறையில் மாற்றம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது” என்று பத்திரிகையாளர் லான்ஸ் மாரோ எழுதினார். என்றபோதிலும், விடுமுறையிலிருந்து வீடுதிரும்பியவர்களில் சிலர் அவ்வளவு அதிக சோர்வுற்றவர்களாய் இருந்ததால் “இனிமேலும் அவ்வாறு விடுமுறையில் போவதில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றனர் என்று அவர் கண்டறிந்தார்.
ஆனாலும், விடுமுறைகளில் போவதையே நினைத்துப்பார்க்காதிருப்பதைக் காட்டிலும், சாத்தியமான இடறுகுழிகளைச் சற்று முன்னதாகவே பரிசீலிப்பதும் அவற்றைத் தவிர்க்க வேண்டிய படிகளை எடுப்பதும் ஞானமானதாயிருக்கும்.
மதிப்புள்ளவற்றைக் காப்பாற்றுங்கள்
விடுமுறையிலிருந்து திரும்பி வந்தவர்களில் பலர் தாங்கள் இல்லாதிருக்கையில் தங்கள் வீடுகளில் திருடுபோயிருப்பதாகக் காண்கின்றனர். ஆகவே ஒரு விடுமுறைக்காகச் செல்வதற்கு முன்பு, உங்கள் வீட்டை ஒழுங்காக பார்த்துக்கொள்ளும்படி நண்பர்களையோ அல்லது அயலகத்தாரையோ கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் அங்கு சிறிது நேரத்தைச் செலவிடுவதன் மூலம் நீங்கள் வீட்டில் இல்லை என்பதைத் தெளிவாக வெளியில் தெரியாதபடி செய்பவர்களாயும் இருக்கலாம். அவர்கள் தினமும் உங்கள் செய்தித்தாள்களை எடுக்கும்படியும் தபால் பெட்டியைக் காலி செய்யும்படியும் கேளுங்கள், ஏனெனில் நீங்கள் வீட்டில் இல்லை என்பதை, செய்தித்தாள்களின் ஒரு குவியல் அல்லது எடுக்கப்படாத தபால் திணிக்கப்பட்டுள்ள ஒரு தபால் பெட்டி விளம்பரப்படுத்துவதைப் போல் வேறெதுவும் விளம்பரப்படுத்துவதில்லை.
நீங்கள் விடுமுறைக்காகச் செல்லும் இடத்தில் உங்களுடைய மதிப்புள்ள பொருட்களைப் பாதுகாக்கவும் வேண்டும். சில நாடுகளில் அயல்நாட்டினர் பணக்காரராகக் கருதப்படுகின்றனர், ஆகவே ஒவ்வொரு சுற்றுப்பயணியும் கொள்ளையடிக்கப்படுவதற்கு முக்கியக் குறியிலக்காய் இருக்கிறார். ஆகவே, அதிகப்படியான பணத்தையும் மதிப்புவாய்ந்த ஆவணங்களையும் ஓட்டலில் பாதுகாப்பாக அல்லது வேறொரு பத்திரமான இடத்தில் வைப்பது ஒரு நல்ல பழக்கமாகும். முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் தயவின்றி நடந்துகொள்ளாமலே எச்சரிக்கையாய் இருங்கள்.
ஒவ்வொரு ஆண்டும், அ.ஐ.மா.-வைச் சேர்ந்த ஃப்ளாரிடா மாகாணத்திலுள்ள மியாமிக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் லட்சக்கணக்கான விடுமுறையாளர்கள் வருகைபுரிகின்றனர். அத்தகைய சுற்றுலாப் பகுதிகளில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக சுறுசுறுப்பாயிருக்கின்றனர். 1992-ன்போது, “ஃப்ளாரிடாவில் மட்டும், உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்த 36,766 பார்வையாளர்கள் கொலை செய்யப்பட்டனர், கற்பழிக்கப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர், அல்லது வேறுவிதமாக இரையாக்கப்பட்டனர்” என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்தது.
விடுமுறையில் இருக்கையில், ஜேப்படித் திருடுகளைக் குறித்து விசேஷமாக எச்சரிக்கையாய் இருங்கள். ஆண்கள், தங்கள் ஜாக்கட்டின் உள்பாக்கெட்டு அல்லது பேண்ட்டின் முன்பாக்கெட்டு போன்ற கண்ணில் படாத இடத்தில், மற்றும் பாதுகாப்பான இடத்தில் தங்கள் பர்ஸை வைக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த சுற்றுப்பயணிகள் பொதுவாக தங்களிடத்திலேயே திறமையான விதங்களில் மறைத்து வைக்கின்றனர். உதாரணமாக, சிலர் தங்களுடைய பணம், பாஸ்போர்ட்டுகள், விசாக்கள் ஆகியவற்றை ஒரு சிறிய, தட்டையான, தங்கள் கழுத்தைச் சுற்றியுள்ள பையில் வைத்து தங்கள் உடைக்குள்ளே செருகிக்கொள்கின்றனர். பெண்கள் கவனமாக இராவிடில், இலேசாகப் பிடித்திருக்கும் பைகளை அவர்களின் பிடியிலிருந்து சைக்கிள் அல்லது மோட்டார் வாகனங்களில் செல்பவர்கள் பறித்துச் செல்வர்.
குற்றச்செயலில் ஈடுபடுவோர் சுற்றுப்பயணிகளைக் கொள்ளையடிப்பதற்கு புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில், நீண்ட தொலைவு செல்லும் விரைவு ரயில் வண்டிகளில், தூங்கும் பயணிகள் இரவு நேரங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனர். பயணம் செய்பவர்களின் உடைமைகள் சூறையாடப்படுகையில் அவர்கள் விழித்துவிடாமல் இருக்கும்படியாக, ரயில் பெட்டிகளுக்குள் தூக்கத்தைத் தூண்டும் பொருட்கள் வெளிவிடப்படலாம். ஒரு சந்தர்ப்பத்தில், “கொள்ளையடிப்பவர்கள் பணமாகவும் திருட்டுப்பொருட்களாகவும் $8,45,000 மதிப்புள்ளவற்றை எடுத்துக்கொண்டு அமைதியாக ரயிலைவிட்டு வெளியேறியிருப்பதாகக் கருதப்படுகிறது” என்று தி யுரப்பியன் கூறினது.
விபத்துகளைத் தவிருங்கள்
“அடிக்கடி நிகழ்கிற விபத்துகளின் பிரச்சினைக்கு நான் காணும் ஒரே தீர்வு, நாள் முழுவதிலும் படுக்கையிலேயே இருப்பதுதான்” என்று நகைச்சுவையாளர் ராபர்ட் பென்க்லே கூறினார். ஆனால் பிறகு அவர் கூறினார்: “அப்படியிருந்தாலும், நீங்கள் படுக்கையைவிட்டுக் கீழே விழும் வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது.” உண்மையில், விபத்துகள் எங்கும் சம்பவிக்கின்றன! ஆகவே விடுமுறையிலிருக்கையில் ஒரு விபத்தைக் குறித்து பயப்படுவது, நீங்கள் வீட்டிலேயே தங்கிவிடும் அளவுக்கு உங்களை அச்சுறுத்த வேண்டியதில்லை. ஆனால் விடுமுறையிலிருக்கையில் எச்சரிப்புடன் இருக்கத் தேவையான விசேஷ காரணம் இருக்கிறது.
விடுமுறைக் காலங்களின்போது போக்குவரத்துச் சூழ்நிலைகள் வஞ்சிப்பவையாய் இருக்கலாம். அத்தகைய சமயங்களில் 80-கிலோமீட்டர் நீள போக்குவரத்து நெரிசலைப் பற்றி ஜெர்மானியர்களுக்குப் பழக்கமுண்டு. “கடந்த வாரம் ஐரோப்பா முழுவதிலும், லட்சக்கணக்கான குடும்பத்தினர் தங்கள் வழக்கமான ஆகஸ்ட் விடுமுறையை ஆரம்பித்தனர்—அப்போது தெளிவற்ற மேலும் தண்டனை போன்ற நேரத்தை அனைவரும் அனுபவித்தனர். . . . நடைமுறையில் பாரிஸுக்கு வெளியே செல்லும் ஒவ்வொரு பெரிய நெடுஞ்சாலையும் ஸ்தம்பித்து நிற்கும் வகையில் நெரிசலாயிருந்தது. . . . ஜூலை 28-க்கும் ஆக. 1-க்கும் இடையே, நெடுஞ்சாலை மோதல்கள் காரணமாக 102 பேர் இறந்தனர்,” என்று ஆகஸ்ட் 14, 1989 தேதியிட்ட டைம் பத்திரிகை கூறியது. ஆகவே பிரயாணத்தால் களைப்புற்ற நரம்புகளுக்கு ஓய்வளிக்க நில்-மற்றும்-செல் போக்குவரத்தைப் பயன்படுத்தி ஞானமாய் இடையிடையே சற்று நிறுத்திக் கொள்ளுங்கள்.
மோட்டார் வாகனம் ஓட்டுவோர் “ஞாயிற்றுக்கிழமை வரையில் தங்கள் பயணத்தைப் பிந்தி மேற்கொள்ளும்படி—அல்லது இரவில் பயணம் செய்யும்படி” ஓர் ஆலோசனைக் குறிப்பு தி யுரப்பியன் பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான விடுமுறையாளர்கள் “அதே நேரத்தில் விடுமுறை எடுப்பதில் பிடிவாதமாய் இருக்கின்றனர்” என்று அது ஒப்புக்கொண்டது. அதனால் என்ன விளைவு ஏற்படுகிறது? ஐரோப்பா முழுவதும் ஊர்திக் கம்பி அமைவு நெரிசலில் அகப்பட்டுக்கொள்கிறது. சாலைகளில் கூட்டம் குறைவாயிருக்கும்போது பயணம் செய்வது ஞானமாயிருந்தாலும், இரவில் பயணம் செய்வது ஆபத்தானதாய் இருக்கக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒருவர் இரவில் அவ்வளவு நன்றாகப் பார்க்க முடியாததால், விபத்துகள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம். அதிகாலைப்பொழுது பயணம் செய்வது ஒரு மேம்பட்ட சமயமாய் இருக்கலாம்.
உங்களுடைய விடுமுறைத் தலத்திற்குப் போய்ச் சேர்ந்த பிறகு, விபத்து ஏற்படுவதற்கு சாத்தியமான பிற காரணங்களையும் புறக்கணியாதீர்கள். ஆண்டின் பெரும்பாலான காலமாக உங்கள் தசைகள் நன்கு பயன்படுத்தப்படாமல் இருந்திருக்குமேயானால், அவற்றைச் சரியாக தயார்படுத்தாமல், அழுத்தப்படும்போது அவை எதிரிடையாகச் செயல்படலாம். ஆகவே குறிப்பாக உங்கள் உடல் காயமடைந்துவிடும் நிலையில் இருக்கும் முதல் சில நாட்களுக்கு விளையாட்டு நடவடிக்கைகளை மட்டுப்படுத்துங்கள்.
ஆரோக்கியமாயிருங்கள்
2,000 எவ்ரிடே ஹெல்த் டிப்ஸ் ஃபார் பெட்டர் ஹெல்த் அண்ட் ஹேப்பினஸ் என்ற புத்தகத்தின்படி, “கடல்கடந்து பயணம் செல்கையில் பயணிகள் எதிர்ப்படும் மிகப் பொதுவான ஆரோக்கியப் பிரச்சினைகள் உணவு, நீர் மற்றும் ஒருசில தொற்றுநோய்களைச் சுற்றியே உள்ளன.” சுற்றுலா ஏஜென்ட்டுகள் அத்தகைய பிரச்சினைகளைத் தவிர்ப்பது எப்படி என்று ஆலோசனை அளிக்கலாம், அது பின்பற்றத் தகுந்தது.
பல பகுதிகளில் குழாய்நீர் குடிப்பதைத் தவிர்ப்பது முக்கியமானது. மேலும், ஐஸ் கட்டிகளும் அதுபோன்ற நீரைக்கொண்டே செய்யப்பட்டிருக்கலாம் என்பது நினைவிருக்கட்டும். இலையுள்ள காய்கறிகள், சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை (mayonnaise), கிரீம் சேர்த்த உணவு வகைகள், பச்சையான அல்லது அரைவேக்காடான கறி, ஓட்டு மீன், பழவகை ஆகியவற்றை நீங்களாகவே தோலுரித்து உண்டால் அன்றி அதுபோன்றவற்றை உண்ணாமல் தவிர்ப்பது ஞானமாயிருக்கலாம். வெப்பமண்டலப் பகுதிகளில், நீங்கள் பருகுவதற்கு முன்பு குடிக்கத்தக்க பால் கொதிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மெல்லிய உடையணிந்திருக்கும் விடுமுறையாளர்களுக்கு சூரிய வெப்பம் ஆபத்தின் ஒரு பெரும் மூலகாரணமாய் இருக்கலாம், மேலும் சமீப ஆண்டுகளில் வளிமண்டலத்தின் ஓஸோன் அளவு குறைந்துவருவதால் அந்த ஆபத்து வேகமாக அதிகரித்துள்ளது. தோல் புற்றுநோயின் மிகவும் கொடிய வகையான, உக்கிரமான கருங்கட்டிகளையுடைய பல புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 1980-க்கும் 1993-க்கும் இடையே இரு மடங்காகியுள்ளது. “ஸ்லிப்! ஸ்லாப்! ஸ்லேப்!” என்ற சுலோகங்களைக் கொண்ட டி-ஷர்ட்டுகள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. (ஒரு தொளதொள சட்டையணியுங்கள் [ஸ்லிப்], வெயில் காப்புப் பொருளைப் போட்டுக்கொள்ளுங்கள் [ஸ்லாப்], ஒரு தொப்பியையும் அணிந்துகொள்ளுங்கள் [ஸ்லேப்].) ஆனால் பொய்யான ஒரு பாதுகாப்புணர்வால் அமைதியாகி விடாதீர்கள். வெயில்காப்புப் பொருள்கள் பாதுகாப்பானவை என்று கருதி விட்டுவிட முடியாது.
மணிநேரத்தில் வேறுபாடுள்ள பல பகுதிகளைக் கடந்து செல்லும் ஆகாயவழிப் பயணம் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் (jet lag) விளைவடையலாம். அதுவே ஒரு நோயாக இராவிடினும், அவ்வுடல்நல பாதிப்பு விசேஷமாக ஒருவர் உடல்நலமில்லாதவராய் இருந்தால், அவரது உடல் ஆரோக்கியம் நன்றாயிருப்பதை நிலைகுலையச் செய்யலாம். “உடற்கூறு சார்ந்த மாற்றியமைத்தல் . . . ஏழு முதல் பத்து நாட்களுக்குக் குறையாமல் தேவைப்பட்டது” என்று எட்டு-மணிநேர வித்தியாசமுள்ள, லண்டனுக்கும் சான் பிரான்ஸிஸ்கோவுக்கும் இடையே பயணம் செய்த ஆகாயவழிப் பயணிகளிடம் கவனமாகப் பரிசீலனை செய்யப்பட்ட ஆய்வு வெளிப்படுத்தியது. பல மணிநேர-வித்தியாசப் பகுதிகளை விரைவாகக் கடக்கும் சில பயணிகள், “தெளிவாய்ப் பேசமுடியாத, தயக்கமுற்ற, இரு மடங்கு தவறு செய்யும் மனநிலை கொண்டிருந்தனர். மனதை ஒருமுகப்படுத்துவதும் ஞாபகசக்தியும்கூட பாதிக்கப்பட்டது” என்று தி பாடி மெஷின் என்ற புத்தகமும் அறிக்கை செய்தது. a
அதோடு, ஜெட் விமானப் பயணம், ஒரு கண்டத்திலிருந்து மறு கண்டத்திற்கு நோய் பரவுதலை வெறும் சில மணிநேரங்களில் எளிதாக்குகிறது. “ஆப்பிரிக்கா, ஆசியா, அல்லது தென் அமெரிக்காவிலிருந்து விடுமுறையாளர்கள் கொண்டுவரும் ‘பிற நாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும்’ மலேரியா அல்லது ஈரல் அழற்சி போன்ற நோய்களைக் குறித்து குறிப்பாக மருத்துவர்கள் கவலையுறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 ஜெர்மானியர்கள் மலேரியாவுடன் வீட்டுக்குத் திரும்புகின்றனர்” என்று ஜெர்மானிய செய்தித்தாள் நாஸாவிஷி நோய் பிரெஸி குறிப்பிட்டது. தொடைச் சந்தில் ஏற்பட்ட கட்டி காரணமாக 1994-ல் இந்தியாவில் இறப்புகள் நேரிட்டதைத் தொடர்ந்து, பிற நாடுகளுக்கும் அது பரவாமல் தடுப்பதற்கான பலத்த தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தீவிர உடல்நலப் பிரச்சினையுள்ளவர்களும், கர்ப்பிணிகளும் பயணம் செய்யும்போது அதிகப்படியான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அத்தகையோர் பயணம் செய்யாமல் தடுக்கப்படாதபோதிலும், தங்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்னதாகவே அவர்கள் நாட வேண்டும். பயணம் செய்யும் ஒவ்வொருவரும் பெயர், விலாசம், அவசரநிலை ஏற்பட்டால் அணுகும்படியாக ஒரு நண்பர் அல்லது உறவினரின் தொலைபேசி எண் ஆகியவற்றைத் தங்களோடு கொண்டுசெல்ல வேண்டும்.
இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஒழுங்கான ரீதியில் இன்சுலின் ஊசி தேவைப்படும் ஒரு நபர் பல்வேறு மணிநேர-வித்தியாசப் பகுதிகளைக் கடப்பது, உணவுவகைகள் மற்றும் ஊசிகளைப் பற்றிய அவரது கவனமான அட்டவணையைத் தகர்த்தெறியும் என்பதையும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதற்கேற்றாற்போல் அவர் திட்டமிட வேண்டும். மேலும், இதய முடுக்கியை வைத்திருக்கும் ஒரு பயணி அவரது இதயநோய் மருத்துவரின் தொலைபேசி எண்ணை வைத்திருக்கிறாரா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலுமாக, குறிப்பிட்ட மருத்துவ முறையைச் சார்ந்திருக்கும் எவரும் அதைத் தன்னோடு எடுத்துச் செல்லும் கைப் பையில் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் லக்கேஜ் தொலைந்துவிட்டால், அல்லது தவறாகக் கொண்டுசெல்லப்பட்டால் அவரைத் தடுமாற்றமடையச் செய்துவிடலாம். மாற்று உடைகளின்றி பல நாட்கள்வரை இருப்பது இன்பமளிக்காததாய் இருக்கலாம்; அத்தியாவசியமான மருத்துவமின்றி ஒருசில மணிநேரங்கள்வரை இருப்பதோ உயிருக்கு அச்சுறுத்தலாயிருக்கலாம்.
விடுமுறைப் பயணத்தால் வரும் அபாயங்கள் குறைத்து மதிப்பிடப்படுவதில்லை. ஆனாலும், அதற்காக வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அது உங்களை அச்சுறுத்தவேண்டிய அவசியமில்லை. எச்சரிக்கையுள்ளவர்களாக இருந்தால் போதும். நினைவில் வையுங்கள்: நிகழத்தக்க அபாயங்களை எதிர்ப்பதற்கு சரியான தயாரிப்பு உதவுகிறது. இந்த ஞானமான ஆலோசனையைப் பின்பற்றுங்கள்: “விவேகமுள்ள மனிதன் ஆபத்து வருவதைக் கண்டு பதுங்கிக்கொள்கிறான்; கபடற்றவன் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறான்.”—நீதிமொழிகள் 22:3, தி நியூ இங்லிஷ் பைபிள்.
[அடிக்குறிப்பு]
a ஆகாயவழிப் பயணத்திற்குப்பின் ஏற்படும் உடல்நல பாதிப்பைப் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளுக்கு, ஆங்கில விழித்தெழு!, ஜூன் 8, 1986, பக்கங்கள் 19-21-ஐக் காண்க.
[பக்கம் 7-ன் படம்]
விடுமுறையிலிருக்கையில், நீங்கள் உண்ணும் உணவைக் குறித்து கவனமாயிருங்கள்