நீங்கள் ஒரு விடுமுறைக்குத் தயாரா?
வட கோளார்த்தத்தில் கோடைகாலம் சமீபித்துவிட்டது. சீக்கிரத்தில் கோடிக்கணக்கானோர் விடுமுறையில் செல்பவர்களாய் இருப்பர். ஆனால் விடுமுறைகள் கோடைகாலத்திற்கானவை மட்டுமே அல்ல. சுற்றுலா ஆண்டுதோறும் நூற்றுக்கோடிக்கணக்கான டாலர் வருமானமளிக்கும் முழு-ஆண்டுத் தொழிலாய் ஆகிவிட்டது. பெரும்பாலான விடுமுறையாளர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே பயணம் செய்தாலும், முன்பு செல்வந்தர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணம் இப்போது அனைவருக்கும் சர்வசாதாரணமாகிவிட்டது.
வேலைக்கு அமர்த்துபவரால் ஒதுக்கப்பட்டுள்ள விடுமுறைக் காலம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. 1979-ல் ஜெர்மனியின் தொழிலாளர்களில் 2 சதவீதத்தினரே ஆறு வார விடுமுறையைப் பெற்றனர், ஆனால் இப்போது அதிக அளவில் பெரும்பாலானோர் பெறுகின்றனர். மேற்கு ஐரோப்பாவில் தொழிற்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான சராசரி விடுமுறை ஐந்து வாரங்களுக்கும் மேலாகும்.
விடுமுறைகள் பயனுள்ளவையாய் இருக்கலாம்
விடுமுறை என்பதன் முன்னாளைய அர்த்தம் இன்றைய அர்த்தத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது: “விடுமுறைகளின் நவீன நாளைய பழக்கம் . . . பண்டைய ரோம மத நாட்காட்டியிலிருந்து எதிர்மாறான அர்த்தத்தில் கொள்ளப்படுகிறது. ஆண்டில் 100 நாட்களுக்கும் மேலாக வெவ்வேறு ரோம தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் விருந்து நாட்கள் அர்ப்பணிக்கப்பட்டன. பரிசுத்த பண்டிகையிருந்த நாட்களில், புனித நாட்கள் எனப்படும் அந்நாட்களில், ஆட்கள் தங்கள் வழக்கமுறையான அன்றாட நடவடிக்கைகளிலிருந்து ஓய்வு பெற்றனர். பரிசுத்தமாகக் கருதப்படாத நாட்கள் டீயெஸ் வாகான்ட்டெஸ், அதாவது வெற்று நாட்கள் என்று அழைக்கப்பட்டன, அந்நாட்களில் மக்கள் வேலை செய்தனர்.” வேலை நாட்கள் என்பதற்குப் பதிலாக, நவீன நாளைய “வெற்று நாட்கள்” என்பவை ஓய்வு நாட்களாய் உள்ளன.
ஜெர்மானியர்கள் “ஆண்டின் மிகச் சிறந்த வாரங்கள்” என்று விடுமுறைகளை அழைக்க விரும்புவர். மறுபட்சத்தில், வேலைப்பித்தர்கள், அர்த்தமுள்ள நடவடிக்கைகள் இல்லாததால், இன்றைய “விடுமுறை நாட்களை” உண்மையிலேயே வெறுமையானவை என்று கருதலாம். என்றபோதிலும் இது ஓர் அதீத நோக்குநிலையாய் இருக்கும். எப்பொழுதாவது ஒரு முறை, சாதாரண வழக்கமுறைகளிலிருந்து விடுபட்டு, வித்தியாசமாகவும், சாவகாசமாகவும் ஏதோவொன்றைச் செய்யும் ஞானத்தை ஒரு சமநிலையான நோக்குநிலை ஏற்றுக்கொள்ளும்.
ஐரோப்பிய தொழில் நிர்வாகிகளிடம் 1991-ல் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, விடுமுறைகளைக் குறித்த நேர்நிலையான அம்சங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டன. அதாவது, அவர்களில் ஒவ்வொரு 100 பேரிலும் 78 பேர், “நிர்வகிப்பால் ஏற்படும் கடும் சோர்வைத் தடுப்பதற்கு விடுமுறைகள் முற்றிலும் தேவை” என்று கூறினர். விடுமுறைகள் தொழில் செயலாக்கத்தை முன்னேற்றுவித்தன என்று அவர்களில் முழுமையான முக்கால் பாகத்தினர் எண்ணினர், மேலும் விடுமுறைகள் படைப்புத்திறனை முன்னேற்றுவித்ததாக மூன்றில் இரண்டுக்கும் மேலானோர் கூறினர். இன்னும் தெளிவாக, “ஓர் ஒழுங்கான ரீதியில் விடுமுறை இல்லாவிடில், நான் சாய்ந்துவிடுவேன்” என்ற கூற்றை பெண்களில் 64 சதவீதத்தினரும் ஆண்களில் 41 சதவீதத்தினரும் ஒத்துக்கொண்டனர்.
பயணம், அதுவே ஒரு கல்வி
“அதிகப் பயணம் செய்பவர் அதிகம் அறிவார்” என்று பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேய மருத்துவரும் எழுத்தாளருமான தாமஸ் ஃபுல்லர் எழுதினார். பிற இடங்களைச் சேர்ந்த மக்களோடு பழகுவதற்கும், அவர்களது பழக்கவழக்கங்களையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் அறிந்துகொள்வதற்கும் பயணம் நம்மை அனுமதிக்கிறது. நம் வாழ்க்கைத்தரத்தைக் காட்டிலும் குறைவான வாழ்க்கைத்தரமுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்வது, நமக்கிருப்பதற்கு நன்றியுடனிருக்க நமக்குக் கற்பிக்கலாம், மேலும் நமக்கிருக்கும் சந்தர்ப்பங்களின் அளவிற்கு வாய்க்கப்பெறாத மக்களுக்காக ஒத்துணர்வு கொள்வதில் நம்மை விழிப்பூட்டலாம்.
நாம் அதை அனுமதித்தால், பயணம் நம் தவறான கருத்துகளைச் சரிசெய்து, தப்பெண்ணங்களை நீக்கலாம். முதலில் ஒரு புதிய மொழியைக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ளவும், வித்தியாசமான விதத்தில் தயாரிக்கப்பட்ட உணவுவகைகளை சுவைக்கவும், நம் குடும்ப ஃபோட்டோ ஆல்பத்தை, சிலைடு தொகுதியை, அல்லது வீடியோ நூலகத்தைக் கடவுளுடைய படைப்பிலுள்ள அழகின் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு கூட்டவும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது.
மிகவும் நன்மையடைவதற்கு, வெறுமனே பயணம் செய்வதைவிட, இன்னும் அதிகத்தை நாம் செய்ய வேண்டியது உண்மையே. உலக முழுவதிலும் பாதியைச் சுற்றிவந்தாலும், பலர் தன் சொந்த நாட்டினராகவே உள்ள உடன் சுற்றுப்பயணிகளுடன் வெறுமனே ஓர் ஓட்டலில் பதுங்கிக்கொள்வதும், அந்த ஓட்டலைச் சேர்ந்த குளம் அல்லது கடற்கரையில் நீந்துவதும், தன் வீட்டில் சாப்பிடும் உணவுவகைகளையே உண்பதுமாயிருக்கும் ஒரு சுற்றுப்பயணி அதிகத்தைக் கற்றுக்கொள்ளமாட்டார். என்னே பரிதாபம்! அறிக்கைகளின்படி, பயணிகளில் பெரும்பாலானோர் தாங்கள் பார்வையிடும் நாடுகளிலும் அங்குள்ள மக்களிலும் ஓர் உள்ளார்ந்த அக்கறை கொள்வதற்குத் தவறுவது தெளிவாயுள்ளது.
சரியான தயாரிப்பு
18-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கட்டுரையாளரும் புலவருமான சேம்யல் ஜான்ஸன், பயணம் செய்யும் ஒருவர், “தான் திரும்பி வரும்போது அறிவை எடுத்துவர வேண்டுமென்றால், தன்னோடு அறிவை எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறினார். ஆகவே உங்களுக்குப் பயணம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால், உங்களது சிறு பயணத்திற்காகத் தயாரியுங்கள். நீங்கள் போவதற்குமுன் போகவிருக்கும் இடத்தைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் பார்க்க விரும்புவதைப் பற்றி திட்டமிட்டு, செய்ய விரும்புவதைத் தீர்மானியுங்கள். பிறகு அதற்கேற்றாற்போல் தயாரியுங்கள். உதாரணமாக, கடற்கரையில் உலாவ, அல்லது மலைகளில் ஏற விரும்பினால், அதற்குரிய ஷூக்களையும் உடைகளையும் எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் அட்டவணைக்குள் மிக அதிகமான நடவடிக்கைகளைத் திணிப்பதன் மூலம் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களை உங்கள் விடுமுறையில் கொண்டுசெல்ல முயலாதீர்கள். நீங்கள் எதிர்பாராத காரியங்களைச் செய்யும் பொருட்டு திட்டமிடப்படாத அதிகப்படியான நேரத்தை விட்டுவையுங்கள். விட்டுக்கொடுக்காத ஓர் அட்டவணையின் அழுத்தமின்றியே, சிந்திக்கவும் தியானிக்கவும் நேரத்தை உடையவர்களாயிருப்பதும், அதன் மூலம் அட்டவணைப்படி அழுத்தத்தோடும் தடைகளோடும் வாழ்வதிலிருந்து விடுவிக்கப்படும் உணர்வுள்ளவராய் இருப்பதும் விடுமுறையில் இருப்பதன் மெய்யான பயன்களில் ஒன்றாகும்.
ஒரு பலனளிக்கும் விடுமுறை, கடின உழைப்பையும் உட்படுத்துவதாய் இருக்கலாம். வித்தியாசமான ஏதோவொன்றைச் செய்வதே பொதுவாய் ஒரு நல்ல விடுமுறைக்குத் திறவுகோலாக இருக்கிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களிலுள்ள விருப்பார்வ விடுமுறைகள் என்றழைக்கப்படும் லாபங்கருதாத ஓர் அமைப்பு, தேசிய பூங்காக்களை அல்லது காடுகளைப் பராமரிப்பதில் தங்கள் விடுமுறைகளைக் கழிக்க விருப்பார்வமுள்ளோருக்கென்று ஏற்பாடு செய்கிறது. தான் மிகக் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் அதை அவ்வளவு அனுபவித்ததால் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் அதே அனுபவத்தைத் திரும்பப் பெறத் தீர்மானித்ததாகவும் ஒரு விருப்பார்வமுள்ளோர் கூறினார்.
கிறிஸ்தவ மாநாடுகளுக்கென்று, அல்லது தங்கள் பொது ஊழியத்தை விஸ்தரிப்பதற்கென்று பயணம் செய்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் பொதுவாக தங்கள் விடுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகங்களிலோ, அல்லது தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்களிலோ வேலை செய்வதற்கென்று தங்கள் விடுமுறைகளைப் பயன்படுத்தி அவ்வனுபவத்தில் இன்பம் காண்கின்றனர். இவர்களில் பலர் அத்தகைய சிலாக்கியத்திற்கான போற்றுதலைத் தெரிவித்து, பின்பு கடிதங்கள் எழுதுகின்றனர்.
ஆம், விடுமுறைகள் மிக அதிக இன்பமூட்டுபவையாய் இருக்கலாம், ஆண்டின் மிகச் சிறந்த வாரங்களாகவும் இருக்கலாம். ஆச்சரியமின்றி, பிள்ளைகள் விடுமுறை நாட்களை எதிர்பார்த்து நாட்களை எண்ணுகின்றனர்! இருப்பினும், நீங்கள் கவனமாய் இருக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. பின்வரும் கட்டுரை விளக்கும்.