விடுமுறை தொல்லைகளைத்—தவிர்ப்பது எப்படி
விடுமுறைக்காலம் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? செழித்து நிற்கும் தென்னைகளின் குளுகுளு நிழல் சூழ, சூரியவொளியில் தகதகக்கும் கடற்கரைகளில் சுகமாக ஓய்வெடுப்பதா? அல்லது ஒருவேளை, ஜில்லென்று வீசும் சுத்தமான மலைக்காற்றை ஆனந்தமாக சுவாசிப்பதா?
இருந்தாலும், திடீரென்று மோசமாகிற வானிலை, விமான நிலையத்தில் கால்கடுக்க காத்திருப்பது, பயண-நோய், (travel sickness) இன்னும் இதுபோன்ற அநேக காரியங்களைக் குறித்து நீங்கள் கவலைப்படலாம். உங்கள் மனதில் தோன்றுவது எதுவானாலும்சரி, விடுமுறைக்காலத்தை முடிந்தளவு இன்பமாக கழிக்க நீங்கள் என்ன செய்யலாம்?
கவனமாக தயாரியுங்கள்
புத்திசாலிகள் விடுமுறைக்காக முன்கூட்டியே திட்டமிடுகின்றனர். பயணத்தை துவங்கும் சமயத்தில், தங்களுடைய பயணம், உடல்நலம் எல்லாம் சரியாக இருப்பதற்காக தேவைப்படும் ஆவணங்களை முன்கூட்டியே வாங்கி வைக்கின்றனர். எதிர்பாராமல் பீடிக்கிற உடல்நலக் கோளாறுகளைப் பற்றியும் முன்னரே விசாரித்து அறிகின்றனர்; இது எத்தகைய தடுப்பு மருந்தை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்க அவர்களுக்கு உதவுகிறது.
மலேரியாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிற இடங்களுக்கு செல்ல திட்டமிடுகிற சிலர், அங்கு செல்வதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பிருந்தே மலேரியா எதிர்ப்பு மருந்தை சாப்பிடுகின்றனர். இருந்தாலும், வரும்முன் காப்பதற்காக, விடுமுறைக்காலம் முழுவதுமாகவும், அதற்குப்பிறகு நான்கு வாரங்களுக்கும்கூட இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிடும்படி அவர்களுக்கு பெரும்பாலும் அறிவுரை கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், மலேரியா ஒட்டுண்ணிகள் இத்தகைய நீண்ட காலத்துக்கும்கூட நம் உடலில் தங்கிப் பெருகமுடியும். ஆனால், மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அத்தியாவசியமாக இருக்கின்றன.
சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவத்திற்கான லண்டன் ஸ்கூலின் மருத்துவர் டாக்டர் பால் கிளார்க் இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “சருமத்தில் பூசுவதற்கான பூச்சிவிரட்டி மருந்துகள், பூச்சிவிரட்டிகளில் தோய்க்கப்பட்ட கணுக்கை, கணுக்கால் பட்டைகள், கொசுவலைகள், ஆவியாகி காற்றில் கலக்கிற மின்சார பூச்சிக்கொல்லிகள் ஆகியவையும்கூட இதே அளவுக்கு முக்கியம் வாய்ந்தவை.” விடுமுறை பயணத்தை துவங்குவதற்கு முன்பு இதுபோன்ற சாதனங்களை வாங்கிச் செல்வது சாதாரணமாக மிக நல்லது.
பயண-நோய் எப்பேர்ப்பட்ட குதூகலமான பயணத்தையும் கெடுத்துவிடும். இது எதனால் ஏற்படுகிறது? பழக்கமில்லாத சூழ்நிலையில் இருப்பதற்கான புது அறிகுறிகள் நம் மூளைக்குள் எக்கச்சக்கமாக செல்வதே பயண-நோயை ஏற்படுத்துகிறது என்று ஒரு ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். கப்பலின் அசைவு, வானவூர்தியின் அதிர்வு, அல்லது உங்களுடைய கார் என்ஜினிலிருந்து வரும் இரைச்சல் ஆகியவை பயண-நோயை உண்டாக்கினால், அசையாமலிருக்கும் ஏதோவொன்றின்மீது, ஒருவேளை அடிவானத்தின்மீதோ, முன்னாலிருக்கும் சாலையின்மீதோ கவனம் செலுத்த முயலுங்கள். நல்ல காற்றுவசதி தேவையான அளவு ஆக்ஸிஜனை கொடுக்கும். பயண-நோய் கடுமையாகும் சமயங்களில், ஒவ்வாமை எதிர் மருந்துகள் (antihistamine drugs) அதன் அறிகுறிகளை போக்கிட உதவலாம். இருந்தாலும், இந்த மருந்தைப் பயன்படுத்துவதைக் குறித்து ஒரு எச்சரிக்கை: தூக்கக்கலக்கத்தைப் போன்று ஏற்படக்கூடிய பக்க விளைவுகளைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்; ஏனென்றால், அத்தகைய சூழ்நிலைமைகளில், உங்களுடைய சொந்த நலன் ஆபத்துக்குள்ளாகலாம்.
நீண்டதூர விமானப் பயணத்தால் நீரிழப்பும், இன்னும் அதற்கே உரிய உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு சீட்டிலேயே ஆணி அடித்தாற்போல அமர்ந்திருப்பதாலும் நீண்ட நேரத்துக்கு குறுகலான இடத்தில் அமர்ந்திருப்பதாலும் காலில் இரத்தம் உறையும் அபாயம் அதிகமாகலாம். உறைதல் இடம்பெயரத் துவங்கி, சுவாசக் குழாயையோ, இருதயத்தையோ சென்றடைந்தால், அதன் விளைவு படுபயங்கரமாக இருக்கலாம். எனவே, நீண்டதூர விமானப் பயணத்தில், இருக்கைகளுக்கு இடையிலுள்ள பாதையில் நடப்பது, அல்லது உட்கார்ந்த நிலையிலேயே இடுப்பையும் கால் தசைகளையும் வளைப்பது போன்ற உடற்பயிற்சிகளை செய்வது சிலருக்கு அவசியமாக இருக்கலாம். அதோடு நீரிழப்பை குறைப்பதற்காக, மதுபானம் சாராத பானங்களை நிறைய குடிக்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட காரணங்கள்தாமே விமானத்தில் பயணம் செய்வதற்கான உங்கள் பயத்தை அதிகரிக்கிறதா? அப்படியென்றால், விமானத்தில் செல்வது மற்றவற்றோடு ஒப்பிடுகையில் பாதுகாப்பானது என்பதை அறிவதில் நிம்மதி அடையுங்கள். விமானப்பயணம், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதைக் காட்டிலும் 500 மடங்கு பாதுகாப்பானது; காரில் செல்வதைக் காட்டிலும் 20 மடங்கு பாதுகாப்பானது என கண்டறியப்பட்டிருக்கிறது! இருப்பினும், இத்தகைய புள்ளிவிவரங்கள், விமானத்திலோ சாலையிலோ பயணம் செய்யும்போது செலவழிக்கப்படும் நேரத்தை பொருத்தல்ல, செல்லப்படும் தூரத்தை ஒப்பிட்டே கணக்கிடப்பட்டிருக்கிறது என்பதை ஒருசிலர் சுட்டிக்காட்டுவார்கள்.
இளம் பிள்ளைகளோடு பயணம் செய்வது உண்மையிலேயே ஒரு சவால்தான். “இராணுவ நடவடிக்கையைப் போல உங்கள் பயணத்தை துல்லியமாக திட்டமிடுங்கள்” என ஒலிபரப்பாளர் கேத்தி அர்னால்ட் பரிந்துரைக்கிறார். அதை உங்களால் செயல்படுத்த முடியாமல் போனாலும்கூட, பிள்ளைகளின் கவனத்தை கவருவதற்காக, புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள், இன்னும் மற்ற பொருட்களை கையோடு கொண்டு செல்லுங்கள். இதனால் பயணம் முழு குடும்பத்துக்கும் அதிக குதூகலமானதாக இருக்கும்.
போய்ச்சேர்ந்த பின்பு
‘பயண களைப்பு தீர்ந்து, விடுமுறையை அனுபவிக்க துவங்கறதுக்கு எப்படியும் நாலஞ்சு நாட்கள் ஆயிடுது’ என்று விடுமுறைக்கு செல்லும் அநேகர் குறைபட்டுக் கொள்கின்றனர். உண்மைதான், புதிய சூழ்நிலைக்கு பழக்கமாவதற்கு கொஞ்சகாலம் ஆகும்தான். எனவே, போய்ச்சேர்ந்த ஓரிரு நாட்களுக்குள்ளாகவே சுற்றிப் பார்க்கத் தொடங்குவது ஞானமாக இருக்காது. மாறிவிட்ட அட்டவணைக்கேற்ப உங்கள் உடலும் மனமும் பழகிக் கொள்வதற்கு அனுமதியுங்கள். இதை செய்யத் தவறுவது மன உளைச்சலை ஏற்படுத்தி, உங்கள் விடுமுறையில் கிடைக்கும் பலனை குறைத்துப் போடலாம்.
ஒரு கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டுக்கு செல்லும் கோடானகோடி மக்களில் குறைந்தது பாதிப்பேராவது ஏதாவது ஒருவகை வியாதியாலோ காயத்தாலோ அவதிப்படுகின்றனர். எனவே, டிராவலர்ஸ் ஹெல்த் என்ற பத்திரிகையின் எடிட்டர் டாக்டர் ரிச்சர்ட் டாவுட் குறிப்பிடுகிறபடி, “வரும் முன் காத்தல் பயணம் செய்யும் எந்தவொரு நபரும் புறக்கணிக்கக்கூடாத உடல்நல திட்டமாக இருக்கிறது.” பயணம் செய்பவரின் உடல், காற்று மண்டலத்திலுள்ள வித்தியாசப்பட்ட வகை பாக்டீரியாக்கள், உணவு, நீர் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு பழக வேண்டுமாதலால், முதல் ஒருசில நாட்களுக்கு என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் குறித்து கவனமாயிருப்பது மிக முக்கியம்.
டாக்டர் டாவுட் இவ்வாறு எச்சரிக்கிறார்: “உணவு, புதிதாக, முழுவதுமாக (கிருமிகள் ஒழியும் அளவுக்கு சூடாக) சமைக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியும்வரை—இறைச்சியைப் பொருத்தவரை, சிவப்பு நிறம் போகும்வரை—அது தீங்கற்றது என நீங்களாகவே ஒருபோதும் நினைத்துக் கொள்ளக்கூடாது.” இருந்தாலும், சூடாக சமைக்கப்பட்ட உணவும்கூட எப்போதுமே தீங்கற்றதாக இருப்பதில்லை. எனவே, “உங்களுடைய மதிய உணவு முந்திய இரவில் மீந்திருக்கும் சாப்பாட்டோடு சில உணவுப்பொருளை சேர்த்து சூடாக்கப்பட்ட சாப்பாடு இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.”
எனவே, உங்கள் விடுமுறையை கழிக்குமிடம் நீங்கள் வாழுமிடத்திற்கு முற்றிலும் மாறுப்பட்ட ஒரு இடமாக இருந்தால், நீங்கள் விரும்புகிற நேரத்தில், விரும்பும் இடத்தில், நீங்கள் சாப்பிடவேண்டும் என்று நினைக்கிற உணவு எப்போதும் ஒருவேளை கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், சர்வதேச அளவில் பயணம் செய்பவர்களில் ஐந்தில் இரண்டுபேர் வயிற்றுப்போக்கால் அவதிப்படுகின்றனர் என்ற அறிக்கையைப் பார்த்தால், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
பானங்களைப் பொருத்த வகையில், உள்ளூரில் கிடைக்கும் பானங்களைக் காட்டிலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானம் பெரும்பாலும் பாதுகாப்பானது. இருந்தாலும், பிற்பாடு வரும் உபாதைகளைத் தவிர்க்க, பாட்டிலில் அல்லது கேனில் உள்ள பானங்களை உங்கள் முன்பு திறக்கும்படி கேட்பது நல்லது. கூடுமானவரை ஐஸ்கட்டிகள் போடப்பட்ட பானத்தைத் தவிர்ப்பது நல்லது. ஒரு உணவை, அது தீங்கற்றது என்று உங்களுக்கு தெரியவரும்வரையில் தீங்கானது என்றே கருதுங்கள்.
உல்லாசமான விடுமுறைக்கு அவசியமானவை
டிராவல் எடிட்டர் ஒருவர், தன்னுடைய வாசகர்களிடம் ஒரு சுற்றாய்வை நடத்திய பிறகு இவ்வாறு தெரிவித்தார்: “விடுமுறை நன்றாயிருந்ததா இல்லையா என யோசிப்பதில் சீதோஷ்ண நிலையை காட்டிலும் எப்படிப்பட்ட நண்பர்களுடன் நீங்கள் இருந்தீர்கள் என்பதைத்தானே மிக முக்கியமானதாக கருதுகிறீர்கள்.” உண்மையில், “வசதியான ஹோட்டல்கள், கஷ்டமில்லாத பயணங்கள், சுவைமிக்க உணவு, கண்ணுக்கு இனிய காட்சிகள்” ஆகிய எல்லாவற்றைக் காட்டிலும் “மனதுக்குகந்த தோழமை” குதூகலமிக்க விடுமுறைக்கு முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்பட்டது.
ஆனால், விடுமுறை செல்லுமிடத்தில் நற்குணமுள்ள புதுநண்பர்களை எங்கே காணலாம்? விடுமுறையில் செல்வதற்காக நீங்கள் திட்டமிட்டிருக்கும் அந்த நாட்டிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டி அலுவலகத்துக்கு முன்கூட்டியே எழுதுவது இதற்கு ஒரு வழியாகும். நீங்கள் செல்லுமிடத்துக்கு அருகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்ற விலாசத்தையும், அங்கு கூட்டம் நடக்கும் நேரங்களையும் அவர்கள் உங்களுக்கு தருவார்கள். இந்தப் பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் இத்தகைய அலுவலகங்களின் ஒருசில விலாசங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைவிட விரிவான விலாச பட்டியல் யெகோவாவின் சாட்சிகளுடைய சமீபத்திய வருடாந்தர புத்தகத்தில் (ஆங்கிலம்) உள்ளது.
“மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என்ற பைபிளின் ஞானமான புத்திமதிக்கு செவிகொடுப்பது விடுமுறைக்காலத்தை குதூகலமாக கழிப்பதற்கும் அதே சமயத்தில் பின்னர் எண்ணி வருந்துகிற எதையும் தவிர்ப்பதற்கும் அத்தியாவசியமானது. (1 கொரிந்தியர் 15:33) உங்கள் விடுமுறை பிரதேசம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும்போது, கிறிஸ்தவ தராதரங்களிலிருந்தும் பழக்கங்களிலிருந்தும் வழுவிச் செல்லும் மனச்சாய்வு ஏற்படலாம்; அப்படியென்றால், அதை ஒரு பலவீனமாக கருதி, அந்த ஆசையை போராடி ஜெயிப்பதற்கு தெய்வீக உதவிக்காக கேட்பது ஞானமுள்ள செயல். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். இது, “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்” என்பதையும் நினைவில் வையுங்கள்.—2 தீமோத்தேயு 3:1, NW.
குடும்பமாக விடுமுறைக்கு செல்கையில், வீட்டிலிருப்பதைப் போல, இங்கேயும் அம்மாவே எல்லாவற்றையும் செய்யட்டும் என நினைக்காதீர்கள். தினசரி வீட்டு வேலையில் உதவி செய்வதற்கு முந்திக் கொள்ளுங்கள். ஒத்துழைப்போராக இருங்கள். அத்தகைய மனநிலை விடுமுறையை அனைவரும் அனுபவித்துக் கழிப்பதில் அதிகப் பங்கு வகிக்கும்.
உங்களுடைய விடுமுறைக்காலம் இனிமையான ஒன்றாக இருக்குமா? மிக கவனமாக தெரிவு செய்யப்பட்ட போட்டோக்கள், போஸ்ட் கார்டுகள், நினைவுப் பொருட்கள், ஒருவேளை சில உள்ளூர் கைவினைப் பொருட்கள் ஆகியவையும்கூட நீங்கள் அனுபவித்த சந்தோஷமான நேரங்களை ஞாபகமூட்டும். ஆனால், புதிதாக கிடைத்த நண்பர்கள் விசேஷமாக நினைவுகூரத்தக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களோடு உங்கள் நட்பை தொடருங்கள். கடிதப் போக்குவரத்தை வைத்திருங்கள்; உற்சாகமூட்டும் அனுபவங்களை எழுதுங்கள். உங்கள் விடுமுறைக்காலத்தை உண்மையில் அனுபவிக்கத்தக்க ஒன்றாக ஆக்குவதற்கு அநேக வழிகள் உள்ளன.
[பக்கம் 17-ன் பெட்டி]
விடுமுறைக்கால நினைப்பூட்டுதல்கள் சில
செல்வதற்கு முன்
• பயணம், உடல்நலம் தொடர்பாக, தேவைப்படுகிற செல்லத்தக்க ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருங்கள்
• நோய்த் தடுப்பு மருந்துப் பொருட்களை வாங்கி வையுங்கள்
பயணத்தின்போது
• மதுபானம் சாராத பானங்களை நிறைய குடியுங்கள்; நீண்டதூர விமானப் பயணத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்
• இளைஞருக்கு ஆர்வமூட்டுகிற பொருட்களை கையோடு கொண்டு செல்லுங்கள்
சேர்ந்தபிறகு
• உங்களுடைய மனமும் உடலும் பழகிக் கொள்வதற்கு நேரம் அனுமதியுங்கள்
• உணவில் கட்டுப்பாடு வையுங்கள்; தீங்கிழைக்காத உணவையும் பானத்தையும் மட்டுமே சாப்பிடுங்கள்
• ஒழுக்க விழிப்புணர்வை காத்துக் கொள்ளுங்கள்
• குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களோடு சேர்ந்து தினசரி வீட்டு வேலையைச் செய்யுங்கள்
[பக்கம் 16-ன் படம்]
விடுமுறைக்கு செல்கையில், உங்கள் கூட்டுறவைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்