லாட்டரி ஜுரம் உலகின் சூதாட்டம்
“உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு டாலரும் ஒரு கனவுமே.” நியு யார்க் லாட்டரி குலுக்கலில் 4.5 கோடி டாலர் ஜாக்பாட் சிறப்புப் பரிசைப் பெறுவதே அந்தக் கனவு. ஒரு டாலர் வெற்றி வாய்ப்பை அளித்தது. கனவில் ஆழ்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். லாட்டரிசீட்டுகளைப் பெறுவதற்காக வரிசையில் நின்றுகொண்டு, பரிசுப் பணம் கிடைத்தால் தாங்கள் உல்லாசப் படகுகளையும், நீர்க்கீரியின மென்மயிர்த் தோல் ஆடைகளையும், மாளிகைகளையும் வாங்கப்போவதாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், மாநிலம் முழுவதுமே, அவர்கள் நிமிடத்திற்கு 28,000 லாட்டரிசீட்டுகள் என்ற கணக்கில் டிக்கட்டுகளை போட்டிப்போட்டு வாங்கினர். குலுக்கலுக்கு முந்தைய மூன்று நாட்களில் அவர்கள் 3.74 கோடி சீட்டுகளை வாங்கினர்.
ஜப்பானில் அரசு அனுமதி வழங்கப்பெற்ற 10,000 லாட்டரிசீட்டு கடைகளில் வியாபாரம் எப்பொழுதுமே சுறுசுறுப்பாக இருக்கிறது. ஆண்டு இறுதியில் நடத்தப்படும் ஜம்போ டாக்கராகுஜி (லாட்டரி) வாங்குவதற்கு மக்கள் இவ்விடங்களில் திரண்டு காணப்பட்டனர். டோக்யோவிலுள்ள ஒரு குறிப்பிட்ட லாட்டரிசீட்டுக் கடையில் கடந்த ஆண்டுகளில் விற்கப்பட்ட லாட்டரிசீட்டுகளில் ஐந்து சீட்டுகள் முதல் பரிசுகளைப் பெற்றமையால், வியாபாரத்திற்காகக் கடையைத் திறப்பதற்கு முன்பே ஏறக்குறைய 300 ஆட்கள் வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர். அதிர்ஷ்டம் முதலில் செல்பவர்களுக்கே என்று பலமாக நம்பிய ஓர் இளம்பெண் காலை 1:00 மணி முதல் நின்றுகொண்டிருந்தாள். அதிகமாக இச்சிக்கப்பட்ட கடந்த ஆண்டு ஜாக்பாட்: 10 கோடி யென் (7,14,285 டாலர், ஐ.மா.) என்பது ஒரு புதிய பதிவு.
மேற்கு ஆப்பிரிக்க தலைநகரில், லோட்டோ கல்லூரி என்று அழைக்கப்படுகிற பகுதி எப்பொழுதுமே லாட்டரிசீட்டு வாங்கும் ஆட்களாலும், எந்த எண்ணுள்ள சீட்டுகளுக்குப் பரிசு கிடைக்கும் என்று ஊகித்திடும் ஆட்களாலும் நிரம்பியிருக்கிறது. எதிர்கால குலுக்கல்களில் வெற்றிபெறும் வாய்ப்புடைய எண்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் கடந்த குலுக்கல்களில் வெற்றிபெற்ற எண்களின் பட்டியல்கள் விற்கப்பட்டன. குறிசொல்லுதலில் நம்பிக்கையுடையவர்களுக்கு எந்த எண்களுள்ள சீட்டுகளை வாங்கவேண்டும் என்பதைப் பணத்திற்கு முன்னறிவிப்பு செய்யும் லோட்டோ குறிகாரர்கள் அண்மையில் இருந்தனர்.
இவை தனி சம்பவங்களா? இல்லவே இல்லை. லாட்டரி ஜுரம் பெருமளவில் பரவியிருக்கிறது. இது எல்லாக் கண்டங்களிலும் காட்டுத்தீ எனப் பரவியிருக்கிறது. இது பணபலம் படைத்த தேசங்களிலும் வறுமையிலிருக்கும் தேசங்களிலும் பற்றியெறிகிறது. இது சமுதாயத்தின் எல்லா வகைப் பொருளாதார, சமூக, மற்றும் கல்வி மட்டத்தில் இளைஞரையும் முதியோரையும் தூண்டுகிறது.
ஆம், லாட்டரிகள் பெரிய வியாபாரம், இந்த வியாபாரம் தழைக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டும், மாநில லாட்டரிகள் 1989-ல் 1,850 கோடி டாலர் பெற்றது. 27 ஆண்டுகளுக்கு முன்புதானே அந்த எண் பூஜியமாக இருந்தது. ஆனால் ஐக்கிய மாகாணங்களில் குலுக்குச் சீட்டுகள் இரண்டாவது பெரிய வகை சூதாட்டமாக இருக்கிறது. இந்தத் தொழில் ஆண்டுதோறும் 17.5 விழுக்காடாகக் கம்ப்யூட்டர் தொழில் வளரும் வேகத்தில் வளருகிறது.
1988-ல் உலகமுழுவதும் விற்பனை செய்யப்பட்டப் பரிசுச் சீட்டுகளின் மொத்த மதிப்பு, விளையாட்டும் பந்தயமுமான வியாபாரம் என்ற பத்திரிகையின்படி, ஒரு பெருந்தொகையாக 5,638 கோடி டாலர். இது பூமியில் வாழும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிள்ளைக்குமாக 10 டாலருக்கும் அதிகமாக இருக்கிறது! அதுவும் ஒரே ஆண்டில்!
லாட்டரிகள் செழிக்கிறது என்பதை ஒருவரும் மறுக்க முடியாது என்றாலும், அநேகர் அதற்கு எதிராக வாதாடுகிறார்கள். லாட்டரி சீட்டுகள் பிரபலமடைந்துவருவது குறித்தும், அதற்குப் பின்னேயிருக்கும் கருத்துவேற்றுமை குறித்தும் அடுத்த இரண்டு கட்டுரைகள் சிந்திக்கும். உண்மைகளைச் சிந்திக்கையில், லாட்டரிகள் உங்களுக்கானவையா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். லாட்டரி ஆட்டம் அறிவுள்ள காரியமா? வெற்றிபெறுவது எந்தளவுக்கு எளிமையானது? நீங்கள் பணத்திலும் அதிகத்தை இழக்கக்கூடுமா? (g91 5/8)