லாட்டரிகள் பரிசு யாருக்கு? இழப்பு யாருக்கு?
அரசாங்கம் நடத்தும் லாட்டரிகளுக்குச் சார்பாக அமையும் அடிப்படை விவாதம், அவை அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்டுவருகிறது என்பது. அப்படி இல்லாவிட்டால், அந்தத் தொகை வரி வசூலிப்பினால் மட்டுமே கிடைக்கும். ‘அது எவ்வளவு எளிதான வழியாக இருக்கிறது!’ என்று அதன் ஆதரவாளர்கள் சொல்லுகிறார்கள். எவருமே கட்டவேண்டிய அவசியம் இராத ஒரு வரிப் பணம் போன்றது; இது மனமுவந்து கொடுக்கப்படுவது. உண்மையில், மக்கள் அதைக் கட்டுவதற்கு வாஞ்சையுள்ளவர்களாயிருக்கின்றனர்; அதைச் செலுத்துவதற்கு அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்!
ஆனால் லாட்டரி சீட்டுகளுக்கு எதிரான ஒரு சில குற்றச்சாட்டுகள் என்ன?
ஒன்று, லாட்டரி விளம்பரங்கள் பெரும்பாலும் தகுந்த தகவல் அளிப்பதாயில்லை, அல்லது வெறுமென மோசம்போக்குவதாய் இருக்கிறது. நீங்கள் வெற்றிபெறப்போகிறீர்கள் என்ற எண்ணத்தையே அவை ஊக்குவிக்கிறது. கானடா தேசத்து லாட்டரி விளம்பரம் இதற்கு ஒப்பாய் இப்படியாகக் கூறுகிறது: “நீங்கள் வெற்றி! பெறுவதற்கு . . . நாங்கள் எளிதாக்குகிறோம்!”
ஆனால் வெற்றிபெறுவது எந்தளவுக்கு எளிதாக இருக்கிறது? ஆலி மேற்கு ஜெர்மன் லாட்டரி சீட்டுகள் வாங்குகிறாள். அந்த விளம்பரத்தின் உந்துதல்: “நீங்கள் வெற்றிபெறும் வாய்ப்பு தவிர்க்கமுடியாதது.” என்றபோதிலும், ஆலி இப்படியாகப் புலம்புகிறாள்: “நான் லாட்டரி சீட்டுகளைப் பத்து ஆண்டுகளாக வாங்கிவந்திருக்கிறேன், நான் இதுவரை ஒரு வெற்றியும் பெற்றதில்லை. வெற்றிபெற்ற மற்றவர்கள் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.”
வெற்றிபெறும் ஒவ்வொருவருக்கும் ஆலி போன்று லட்சக்கணக்கானவர்கள் இருக்கின்றனர், இதற்கு வாரந்தோறும், வருடந்தோறும் தங்கள் பணத்தைச் செலவழித்தும், அதற்குக் கைமாறாக ஒன்றும் பெறாத ஆட்கள் இருக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில், லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபடும் 9.7 கோடி மக்களில் 0.000008 விழுக்காடே 10 லட்சம் டாலர் வெற்றி பெறுபவர்கள் ஆவர்.
உச்சப் பரிசைப் பெறும் வாய்ப்புகள் பத்து லட்சத்தில் ஒருவராக மட்டும் இருக்கிறதில்லை. (மின்னல் பாய்ந்து மரிக்கும் சாத்தியத்திற்கு ஒப்பாக); கோடிகளில் ஒருவராக இருக்கலாம். உதாரணமாக, ஜாக்பாட் பரிசு பெரியது என்பது தெளிவானபோது, கூடுதல் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. நியு யார்க் லோட்டோவில் வெற்றிபெறுவதற்கு எதிரான வாய்ப்புகள் 60 லட்சத்திற்கு 1 முதல் 1.29 கோடிக்கு 1 என்பதாக ஆயின!
தங்களுக்குப் பரிசு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இல்லாததைக் கவனியாத, விழிப்பில்லாத ஆட்களிடம் லாட்டரி சீட்டுகள் தள்ளப்படுகின்றன என்று மக்கள் குற்றஞ்சாட்டுவதில் ஆச்சரியம் இல்லை. டாக்டர் வேலரி லாரன்ஸ், நோய்க்குண சூதாட்ட அ.ஐ. தேசிய மையத்தின் இயக்குநர் இப்படியாகக் குறிப்பிடுகிறார்: “லாட்டரிகள்? ஆட்களை உறிஞ்சிடும் மிகப் பெரிய பந்தயம் இது. பரிசு பெறும் வாய்ப்புகள் வெகுவாக உங்களுக்கு எதிராய் இருக்கிறது.”
நீங்கள் பத்து லட்சம் டாலர் பரிசு பெறுவீர்களானால், அப்பொழுது என்ன? அந்தப் பணம் முழுவதையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது. வரி வசூலிப்பவன் தன் பாகத்தை எடுத்துக்கொண்ட பிறகு, ஐக்கிய மாகாணங்களில் பரிசு பெற்ற ஆட்கள் ஆண்டுதோறும் 35,000 டாலர் பணத்தை 20 ஆண்டுகளுக்குப் பெற்றுகொள்கின்றனர். அதாவது, 7,00,000 டாலர், இந்த 20 ஆண்டுகளில் பணவீக்கத்தினால் அதன் மதிப்பு இன்னும் குறைக்கப்படுகிறது.
ஏழைகள் மீது பாதிப்பு
இதற்காகப் பெரிய அளவில் செலவு செய்பவர்கள் ஏழைகள், வாங்கமுடியாத நிலையில் இருப்பவர்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இது சரியல்ல என்று லாட்டரி ஊக்குவிப்பவர்கள் கூறுகின்றனர். நடுத்தர வருவாய் மக்கள் மத்தியில்தான் லாட்டரி சீட்டுகள் வாங்கும் காரியம் அதிகமாக இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் காண்பிப்பதாகச் சொல்கிறார்கள். லாட்டரி சீட்டுகள் மனமுவந்து வாங்கப்படுபவை, எவருமே விளையாடும்படி வற்புறுத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். என்றபோதிலும், விளம்பரங்கள் சூதாட்டக்காரரின் ஆசைகளை வேண்டுமென்றே தூண்டிவிடுகின்றன, இதில் அநேகர் ஏழை மக்கள். ஃப்ளாரிடாவில், ஒரு பல்பொருள் கடையின் காசாளர் கூறினார்: “நாங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களைக் காண்கிறோம். சிலர் ஒவ்வொரு நாளும் 10 சீட்டுகள் வாங்குகின்றனர். சிலர் வாரந்தோறும் 100 சீட்டுகள் வாங்குகின்றனர். அவர்களுக்குச் சாப்பிட பணம் இல்லை, ஆனால் ‘லோட்டோ’ ஆடுகிறார்கள்.”
ஒருசில பின்தங்கிய நாடுகளில் நிலைமை பெரும்பாலும் மோசமாகவுங்கூட இருக்கிறது. அண்மையில் இந்தோனேசிய அரசு, தன்னுடைய போர்க்காஸ் கால்பந்தாட்ட குலுக்கலை மறுபரிசீலனை செய்தது; அந்தக் கிராமம் முழுவதும் “போர்க்காஸ் பைத்தியம்” ஆகிவிட்டார்கள் என்று அறிக்கை செய்யப்பட்டது. ஏஷியாவீக் பத்திரிகை பின்வருமாறு அறிக்கை செய்தது: “[இந்தோனேசியா] தினசரிகளில் பயங்கரமான அறிக்கைகள் நிரம்பியிருந்தன: ஆண்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் அடிப்பது; பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பணம் திருடுவது; கடினமாக சம்பாதிக்கப்பட்ட பள்ளிப் படிப்புக்கான பணத்தைப் பிள்ளைகள் செலவழிப்பது—எல்லாவற்றையும் போர்க்காஸ் ஆட்டத்திற்காக செலவுசெய்துவிடுகின்றனர்.”
லாட்டரி குலுக்கல்கள் உலகமுழுவதும் மிக விரைவாக அதிகரித்துவருவதால், அதிகமதிகமாக ஆட்கள் சூதாட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சிலர், ஏழைகள் மட்டும் அல்ல, கண்டிப்பான சூதாட்டக்காரர்களாக, லாட்டரி அடிமைகளாக ஆகியிருக்கின்றனர். அ.ஐ.மா., நியு ஜெர்சியில் கட்டாய சூதாட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் ஆர்னி வெக்ஸ்லர் கூறுகிறார்: “பணம் திரட்ட வேதனையற்ற, மிக எளிய ஒரு வழியைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக அரசு அதிகாரிகள் உணருகின்றனர், உண்மையில் பார்த்தால் அவர்கள் ஏராளமான குடும்பங்களை, ஏராளமான வியாபாரங்களை, ஏராளமான மக்களை, மற்றும் ஏராளமான உயிர்களை அழிக்கின்றனர்.”
மதிப்பீடுகள் உட்படும் ஒரு கேள்வி
அரசு லாட்டரிகள் சூதாட்டத்தினிடமாக மக்களுடைய மனப்பான்மையை மாற்றிவிட்டன என்பது கவலைக்குரிய மற்றொரு பெரிய காரியம். இன்று அரசு நடத்தும் “ஆட்டம்-3” அல்லது “அதிர்ஷ்ட எண்கள்” லாட்டரிகள் ஆயிரத்துக்கு ஒன்று என்ற வாய்ப்பை அளிக்கிறது, ஆனால் பரிசுத் தொகையில் 50 விழுக்காடு மட்டுமே திருப்பித்தருகிறது. அரசு இந்த வியாபாரத்தில் இறங்குவதற்கு முன்பு, இந்த லாட்டரி ஆட்டம் “ஆபத்தாக,” சட்டத்துக்கு விரோதமான செயலாக, ஒரு துர்ப்பழக்கமாக இருந்தது. இப்பொழுதோ, அதே காரியம் பொழுதுபோக்கு, விளையாட்டு, நகரப் பொறுப்புணர்ந்த செயல் என்று அழைக்கப்படுகிறது!
உண்மைதான், சட்டப்பூர்வமற்ற எண்கள் ஆட்டத்துக்கும் அரசு லாட்டரிகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம், இலாபம் குற்றவாளிகளுடைய கைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, அவை அரசு திட்டங்களை ஆதரிக்கின்றன. என்றபோதிலும், சமுதாயம் நன்மையடைய வேண்டிய நெறிமுறை மதிப்பீடுகள் மீது இந்த லாட்டரிகள் கொண்டிருக்கும் பாதிப்புகள் குறித்து பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்குக் காரணம், இந்தக் குலுக்கல்கள், முயற்சியின்றி பணக்காரராகும் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊட்டுகின்றன. விளையாட்டும் பந்தய வியாபாரமும் என்ற நூலின் எழுத்தாசிரியர், பால் டுவாரின் இப்படியாகச் சொன்னார்: “நீங்கள் கடினமாக உழைத்தால் நன்றாயிருப்பீர்கள் என்று அரசு கடந்த காலத்தில் சொல்லியிருக்கிறது. இப்பொழுதோ, அது, ‘ஒரு சீட்டு வாங்குங்கள், லட்சாதிபதியாவீர்கள்,’ என்று இருக்கிறது. அது ஒரு மாநிலம் வழங்கும் அபூர்வமான செய்தியாக இருக்கிறது.” ஜார்ஜ் வில் நியுஸ்வீக் பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்: “மக்கள் எந்தளவுக்கு அதிர்ஷ்டம், தற்செயல், தொடர்பின்மை, விதி ஆகியவற்றை முக்கியமாகக் கருதுகிறார்களோ, அந்தளவுக்குச் சுறுசுறுப்பு, சிக்கனம், தன்னைத் திருப்திசெய்துகொள்வதைத் தள்ளிப்போடுதல், ஊக்கம், கடின உழைப்பு போன்ற பலமான நற்பண்புகளின் முக்கியத்துவத்தில் குறைந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.”
மனித சமுதாயத்திற்கு மையமாய் அமையும் மற்றொரு கருத்து: மற்றவர்களுக்கு ஏற்படும் துரதிர்ஷ்டங்களிலிருந்து தனிநபர்கள் இலாபம்பெற முற்படக்கூடாது. என்றபோதிலும், லாட்டரிகளை ஊக்குவிப்பவர்கள், ஒரு தனிநபர் மற்றவர்களுடைய இழப்பில் ஆதாயமும் ஆனந்தமும் கொள்வது சரியே என்ற கருத்தை ஊக்குவிக்கின்றனர். அப்படிப்பட்ட எண்ணம் தன்னலம்; “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,” என்ற பைபிள் புத்திமதியை இது புறக்கணிக்கிறது.—மத்தேயு 22:39.
எதிர்ப்புக் குரல்கள் பல இருந்தாலும், லாட்டரி பூமியெங்கும் வேகமாக வளர்ந்துவருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்ற ஒருவர் மாநில குலுக்கல் கட்டிடத்தைச் சுற்றி மக்கள் திரண்டு நிற்பதைக் கண்டார். அங்கிருந்த ஒரு குடிமகனைப் பார்த்து, “இந்த மக்கள், குறிப்பாக ஏழைகளாக இருப்பதால், இவர்கள் அனைவரும் ஏன் தங்கள் பணத்தை லாட்டரிகளில் வீணடிக்கிறார்கள்?” என்று கேட்டார்.
“அன்பரே, அது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது, அதனால்தான் லாட்டரி சீட்டுகள் வாங்குகிறார்கள்,” என்றான் அந்தக் குடிமகன். “அவர்களில் பலருக்கு, வாழ்க்கையில் இருக்கும் ஒரே நம்பிக்கை அதுதான்.”
ஆனால் லாட்டரி பரிசைப் பெறுவது உண்மையிலேயே ஒரு நம்பிக்கையா? அது ஒரு கற்பனை, கானல் நீர், போலிக் கனவு. மனச்சாட்சியுள்ள ஒரு கிறிஸ்தவன் பணத்தைச் சூதாடும் இந்த வீண் காரியத்தில் தன் நேரத்தையும் வளத்தையும் வீணாக்க மாட்டான். ஞானமுள்ள மக்கள் “நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற . . . தேவன்மேல் நம்பிக்கை வைக்”கிறார்கள் என்று எழுதிய அப்போஸ்தலனாகிய பவுலின் புத்திமதிக்குச் செவிகொடுப்பது எவ்வளவு மேன்மையானது.—1 தீமோத்தேயு 6:17. (g91 5/8)
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
“பணம் திரட்ட வேதனையற்ற, மிக எளிய ஒரு வழியைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக அரசு அதிகாரிகள் உணருகின்றனர், உண்மையில் பார்த்தால் அவர்கள் ஏராளமான குடும்பங்களை, ஏராளமான வியாபாரங்களை, ஏராளமான மக்களை, மற்றும் ஏராளமான உயிர்களை அழிக்கின்றனர்”
[பக்கம் 9-ன் பெட்டி]
சூதாட்டக்காரருக்குச் சிறந்த துப்புகள்
“பரிசுபெறுபவரை வாழ்த்தும் பந்தயப்பணம்வைப்பவரின் புன்சிரிப்பைக் காட்டிலும் போலிச்சிரிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. . . . தன்னுடைய வாடிக்கையாளர் அதிகமாக இழந்துகொண்டிருப்பதைப் பார்த்து அந்தச் சூதாட்டக்காரர் தொடர்வதைத் தடை செய்யும் பந்தயப்பணம்வைப்பவரைக் காண்பது மிகவும் அரிது. . . . வெற்றிகரமான சூதாட்டக்காரர்கள் வறுமையிலிருக்கும் பந்தயப்பணம்வைத்திருப்பவர்களைப் போன்று மிகவும் சொற்பமானவர்கள்.”—கிரஹாம் ராக், தி டைம்ஸ், லண்டன்.
“இன்றிரவு நடத்தப்படும் உத்தரவாதமளிக்கபட்டிருக்கும் 4.5 கோடி டாலர் ஜாக்பாட் லோட்டோ லாட்டரி நியு யார்க் சரித்திரத்திலேயே மிகப் பெரியது. ஆனால் அதில் 1 டாலர் லாட்டரி சீட்டில் பரிசு பெறும் வாய்ப்பு 1,29,13,582 சீட்டுகளுக்கு 1 என்பதாக இருக்கிறது.”—தி நியு யார்க் டைம்ஸ்.
“மூடனும் அவனுடைய பணமும் விரைவில் பிரிகிறது.” இந்த முதுமொழி 16-வது நூற்றாண்டு முதல் இருந்துவருகிறது.—ஃபெமிலியர் கொடேஷன்ஸ் (Familiar Quotations), ஜான் பார்லெட் எழுதியது.
“சூதாடுபவன் சந்தோஷப்படுவதில்லை; இன்று ஜெயிப்பவன் யாராயிருந்தாலும், நாளை இழக்கிறான்.”—ஒரு ஸ்பானிய பழமொழி.