வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ லாட்டரி சீட்டுகளின் வருமானம் தர்ம காரியங்களுக்குப் பயன்படுகிறது என்றால், அவற்றை வெறுமென ஒரு பொழுதுபோக்கிற்கென வாங்குவது ஒரு கிறிஸ்தவனுக்குத் தகுந்ததா?
பைபிள் நிச்சயமாகவே பொருத்தமான பொழுதுபோக்கைத் தவறென குறிப்பிடுவதில்லை, ஏனென்றால் யெகோவா “நித்தியானந்த தேவன்.” (1 தீமோத்தேயு 1:11) அவருடைய மக்கள் இசையையும், அடக்கமான நடனத்தையும், அளவான சாப்பாட்டையும் அல்லது மதுபானத்தையும், சமநிலையான விளையாட்டையும் அனுபவித்து மகிழலாம். (சங்கீதம் 150:4; பிரசங்கி 2:24) என்றபோதிலும் சூதாட்டம் கடவுளுடைய ஞானமான ஆலோசனைக்குத் தெளிவாகவே முரண்படுகிறது. இது லாட்டரி சீட்டு அல்லது பரிசுச் சீட்டுகளில் பங்கு கொள்வதிலும் உண்மையாக இருக்கிறது.
உண்மையில் லாட்டரி அல்லது பரிசுச்சீட்டு என்பது என்ன? அது வெற்றிகொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருப்பதற்காக பரிசுச் சீட்டுகளை வாங்குவதை உட்படுத்துகிறது. வெற்றிபெறுகிறவர்கள் ஒரு குலுக்கல் முறையிலோ அல்லது ஓர் எண்ணைத் தெரிந்துகொள்ளுதல் மூலமோ தீர்மானிக்கப்படுகிறார்கள்.a பெரும்பாலும் ஒரு பெரிய பரிசு இருக்கிறது. அது ஒருவேளை இலட்சக்கணக்கான ரூபாயையோ, அல்லது டாலர்களையோ கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டப் பரிசுத் தொகைகளில் காணப்படும் கவர்ச்சி அவ்வளவு அதிகமாய் இருப்பதால், லாட்டரி சீட்டுகள், “மிகவும் பரவலாகக் காணப்படும் சூதாட்டமாகும்.” (தி உவர்ல்டு புக் என்சைக்ளோபீடியா [The World Book Encyclopedia]) இலட்சக்கணக்கான ஆட்கள் லாட்டரி சீட்டுகள் மூலம் சூதாடுகின்றனர்.
ஒரு பரிசுச் சீட்டில் உட்படுவது தவறோ அல்லது கெட்டதோ அல்ல, ஏனென்றால் ஒரு சீட்டின் விலை (அதிஷ்டம்) கொஞ்சமாக இருக்கலாம், அதில் பங்குபெறுவோர் மனமுவந்து பங்கு பெறுகின்றனர், அல்லது அதன் வருமானத்தில் ஓரளவு தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தப்படலாம், உதாரணமாக ஏழைக்கு உதவ பயன்படுத்தப்படலாம் என்று சிலர் விவாதித்துள்ளனர். அப்படிப்பட்ட விவாதம் எந்தளவுக்கு ஆதாரமுடையது?
பரிசுச் சீட்டு வாங்குவது சாதாரணமான, அதிக செலவாகாத ஒரு பொழுதுபோக்கு என்று சிலர் உரிமைப்பாராட்டினாலும், அதில் பேராசை என்ற அம்சம் உட்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. நிறைய பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். இது நிச்சயமாகவே பேராசைக்கு எதிரான தெய்வீக புத்திமதியை மீறிச் செல்வதாயிருக்கிறது. ஒருவர் ‘கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு’ இது தடையாக இருக்கக்கூடிய விதத்தில் ஒரு வினைமையான குற்றமாகும். எனவே சூதாடுவதன் மூலம் ஒரு கிறிஸ்தவன் தொடர்ந்து பேராசையை வெளிப்படுத்துவானேயானால், அவன் சபையிலிருந்து நீக்கப்படலாம். (1 கொரிந்தியர் 5:11; 6:10) பைபிள் சொல்லுகிறது: “ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.” (நீதிமொழிகள் 20:21) ஒரு கிறிஸ்தவன் லாட்டரி சீட்டு ஒன்றை ‘வாங்கிப் பார்ப்போம்’ என்று உணருவானானால், லாட்டரி பேராசையில் அஸ்திபாரமிடப்பட்டிருக்கிறது என்பதை அவன் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். ‘பொருளாசை பேர் முதலாய் நமக்குள்ளே சொல்லப்படவும் கூடாது,’ என்று எபேசியர் 5:3 சொல்லும்போது, ஒரு கிறிஸ்தவன் அதற்கு இடங்கொடுத்துவிடுவது அதிலும் குறைந்துவிடுவதில்லை.
லாட்டரி சீட்டுகளை வாங்குவோரில் பெரும்பகுதியினர் ஏழை சமுதாயத்தினராயிருக்கின்றனர். எனவே ஒரு சீட்டின் விலை குறைவாக இருந்தாலும், உண்மையிலேயே குடும்ப தேவைகளாக இருப்பவற்றிற்கு—அதிகமான உணவு, போதியளவு உடை, மேன்மையான மருத்துவ கவனிப்பு ஆகியவற்றிற்கு செல்ல வேண்டிய தொகை வேறுபக்கமாகத் திருப்பப்படுகிறது. ஒரு கிறிஸ்தவனாக உரிமைப்பாராட்டும் ஒருவன் அப்படிப்பட்ட குடும்பத் தேவைகளை அசட்டை செய்வானானால், அவன் “அவிசுவாசியிலும் கெட்டவனாயிருக்கிறான்.”—1 தீமோத்தேயு 5:8.
அதற்காக வேலை செய்யாமலேயே பணம் பெற்றிட வேண்டும் என்ற கனவும் லாட்டரியுடன் இணைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆம், லாட்டரி சோம்பலை ஊக்குவிக்கிறது அல்லது அதை நாடச் செய்கிறது. என்றபோதிலும், கடவுளுடைய மக்கள் சிக்கனமாக, சுறுசுறுப்பாக, கடினமாக வேலை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று பைபிள் ஊக்குவிக்கிறது. ‘ஒன்றும் இல்லாமல் ஏதாவது பெறுதல்’ என்ற ஆவியை வளர்ப்பதற்குப் பதிலாக, அது நமக்குப் பின்வரும் ஆலோசனையைத் தருகிறது: “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால், அவன் சாப்பிடவும் கூடாது.”—2 தெசலோனிக்கேயர் 3:10; நீதிமொழிகள் 13:4; 20:4; 21:25; 1தெசலோனிக்கேயர் 4:9-12.
[அடிக்குறிப்புகள்]
a இது லாட்டரி என்று பரவலாக அறியப்பட்டாலும், இப்படிப்பட்ட சூதாட்டம், சீட்டாட்ட வகையில் பந்தய பணம், ஒரு குழுக்குச் சீட்டு, பரிசுச் சீட்டு அல்லது ஏதாவ ஓர் உள்ளுர் பெயரில் வழங்கப்படுகிறது.