உண்மையில் நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடித்தல்
நீங்கள் ஒரு கண்ணாடியில் பார்க்கும் போது, நீங்கள் எதைக் காண்கிறீர்கள்? உங்களுடைய சொந்த சரீர உருவத்தின் பிரதிபலிப்பை. ஆனால் நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை அது உங்களுக்குச் சொல்லுகிறதா? உங்களை ஒரு நபராக மற்றவர்கள் எவ்வாறு காண்கின்றனர் என்பதைப் பற்றி அது உங்களுக்குச் சொல்லுகிறதா? நீங்கள் யார் என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிந்திருக்கிறீர்களா? உங்களுடைய தனிப்பட்ட நடத்தை முதன்முதலாக எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம், ஒரு தனித்தன்மை கொண்டவராக நீங்கள் எப்படி உருவானீர்கள்?
உங்களுடைய தனித்தன்மையை உருவாக்கிய எல்லா அடிப்படைக் கூறுகளையும் சற்றுநேரம் ஆராய்ந்து பார்க்கையில், அநேக பாதிப்புகள் மற்ற நபர்களாலோ அல்லது மற்ற காரணங்களாலோ உங்கள் மீது வலிந்து சுமத்தப்பட்டிருப்பதாக நீங்கள் ஒருவேளை காண்பீர்கள். நம்முடைய ஆரம்பகால வளர்ச்சிக்குரிய ஆண்டுகளின் போது, நம்முடைய சொந்த பழக்கங்களையும் வழிகளையும் நிலைநாட்டுவதன் சம்பந்தமாக நம்மால் அதிகம் செய்ய முடியவில்லை. ஆகையால் உங்கள் மீது வலிந்து சுமத்தப்பட்ட இப்படிப்பட்ட ஆள்தன்மை-உருவாக்கும் பாதிப்புகள் சிலவற்றை நாம் இப்போது பார்க்கலாம். உங்களுடைய சொந்த நடத்தையை பற்றி நீங்கள் ஏதாவது செய்வதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பதற்கு வெகு முன்பாகவே அவற்றில் சில உங்கள் மீது வலிந்து சுமத்தப்பட்டன.
பரம்பரை பண்பியல்புகள் பெரும் பங்கை வகிக்கின்றன
பரம்பரை பண்பியல்புகள் உங்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கின்றன? தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் பண்புகளை கடத்தி அனுப்பும் செல்களில் உள்ள குரோமோஸோமுகளில் காணப்படும் DNA படிவம் ஒவ்வொரு நபரின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விவரிப்புகளையும் சுருக்கமான விவரங்களையும் எடுத்துச் செல்கிறது. ஆகையால் உங்களுடைய தனிப்பட்ட நடத்தை எந்த அளவுக்கு பரம்பரை வழிப் பண்பியல்புகள் சார்ந்ததாக இருக்கிறது? பரம்பரை பண்பியல்புக்கும் ஆள்தன்மைக்கும் உள்ள திட்டவட்டமான தொடர்பை நிரூபிப்பது இன்னும் கடினமாயிருப்பதாக தோன்றுகிறது. என்றபோதிலும், மதிப்பு வாய்ந்த சில அணுகுமுறைகள் இருக்கின்றன. உதாரணமாக, உங்களுடைய சுதந்தரிக்கப்பட்ட உடல்சம்பந்தமான தோற்றக்கூறுகள் உங்களுடைய நடத்தையின் மீது மிக நெருங்கிய தொடர்புடையதாய் இருக்கின்றன. ஆகையால், ஒரு குறிப்பிட்ட நிறத்தவரைப் பற்றியோ அல்லது இனத்தவரைப் பற்றியோ அநேக ஜனங்கள் ஏற்கெனவே தப்பெண்ணங்களையும், அறியுமுன்னரே கருத்துக் கொள்ளும் பண்பையும் கொண்டிருக்கின்றனர்.
கர்ப்பமாயிருக்கும் ஒரு பெண் தன் சொந்த செயல்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தன் பிறவாத குழந்தைக்கு நன்மையை கொண்டு வரலாம் அல்லது சேதப்படுத்தலாம். நீங்கள் உங்கள் தாயின் கருப்பையில் இருக்கும்போது எவ்வளவு சமாதானம் அல்லது எரிச்சல் உங்கள் மீது வலிந்து புகுத்தப்பட்டது? உங்களுடைய பெற்றோரின் குரலின் தொனியிலிருந்து அவர்கள் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த இசையிலிருந்து நீங்கள் எவ்வளவு கற்றுக்கொண்டீர்கள்? உங்களுடைய தாய் உட்கொண்ட உணவினால் நீங்கள் எவ்வளவாக பாதிக்கப்பட்டீர்கள்? மதுபானமோ அல்லது போதை மருந்துகளையோ தாய் குடித்திருந்தால், அவைகளால் அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தார்கள்? நீங்கள் பிறப்பதற்குள்ளாக, மாற்றுவதற்கு கடினமாக உங்களுடைய அநேக மனப்பாங்குகள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.
திட்ட உணவு, கூருணர்வுகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றியென்ன?
நீங்கள் வளர்ந்து பிள்ளைப் பருவத்தை அடைகையில், உங்களுடைய உணவில் இருந்த சில பண்டங்கள் உங்களுடைய நடத்தையின் மீது பாதிப்பை கொண்டிருந்திருக்கலாம். இனிப்பூட்டும் பண்டங்கள், செயற்கையான சாயங்கள், உணவை கெடாமல் வைக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள்—இவையனைத்தும் நடத்தையின் மீது காணமுடியாத பாதிப்பை உண்டுபண்ணக்கூடும். மட்டுக்கு மீறி சுறுசுறுப்பாயிருத்தல், அதிகரிக்கப்பட்ட விறைப்பு நிலை, எரிச்சல்படுவது, நரம்பு வலி, மட்டுக்கு மீறிய கட்டுக்கடங்காத செயல்கள் போன்றவை சில விளைவுகள் ஆகும். மோட்டார் வண்டிகள் வெளியேற்றும் புகையிலிருந்து வரும் தூய்மைக்கேடு, தொழிற்சாலை கழிவுகள், சுற்றுச்சூழலில் இருக்கும் மற்ற நச்சுப் பொருட்கள் ஆகியவையும்கூட நடத்தையை உருவாக்குகிறது. அல்லது தனிப்பட்ட நிலையில், உங்களை அதிகமாக பாதிக்கும் கூருணர்வு உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அது உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது எந்தத் தீங்கு விளைவிக்கும் பாதிப்பை கொண்டில்லாமல் இருக்கலாம்.
இப்படிப்பட்ட பாதிப்புகளோடு கூட, உங்களுடைய பெற்றோரின் நடத்தை, அவர்களுடைய விருப்பங்கள், வெறுப்புக்கள், தப்பெண்ணங்கள் ஆகியவற்றோடு சிறுபிராயத்திலிருந்து நீங்கள் வாழ்ந்து வந்ததால், அவைகள் உங்கள் மீது பாதிப்பை கொண்டிருந்திருக்கும், ஓரளவுக்கு உங்களுடைய ஆள்தன்மையை உருவாக்கியிருக்கும். இதன் விளைவு, உங்களுடைய பெரும்பாலான வழிகளும், வாழ்க்கையின் பேரில் உங்களுடைய பொதுவான மனநிலையும் வெறுமென உங்களுடைய பெற்றோர்களுடையதை பிரதிபலிக்கும். அவர்களை நிலைகுலைவிக்கும் காரியங்கள் உங்களை நிலைகுலையச் செய்கிறது. அவர்கள் பொறுத்துக் கொண்ட காரியங்களை நீங்கள் பொறுத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். அவர்களுடைய நடத்தையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதை, உங்களுடைய தகப்பனைப் போன்று அல்லது உங்களுடைய தாயை போன்று நீங்கள் நடந்து கொள்கிறீர்கள் என்று யாராவது ஒருவர் உங்களிடம் சொல்லும் வரை நீங்கள் கவனிப்பதில்லை. உங்களுடைய சுற்று வட்டாரமும் பள்ளி சூழ்நிலையும் உங்களை பாதித்தது போல, அவர்களுடைய பண சம்பந்தமான, சமுதாயம் சார்ந்த நிலையும்கூட உங்களை பாதித்திருக்கிறது. உங்களுடைய நண்பர்களும், கூட்டாளிகளும் கூட உங்கள் மீது பெரும் பாதிப்பை கொண்டிருந்திருக்கின்றனர். ஒருவேளை (உங்களுக்கோ அல்லது ஒரு நெருங்கிய நண்பருக்கோ நேரிட்ட) மோசமான விபத்து, ஏதோவொரு உள்ளூர் சேதம், அல்லது மனக்கலக்கம் உண்டாக்கும் உலக சம்பவங்களும் கூட உங்களை பாதித்திருக்கும். அல்லது விவாகரத்து, கடும் நோய் போன்ற ஏதோவொரு பெருவருத்தந்தரும் நிகழ்ச்சி உங்களுடைய ஆள்தன்மையின் மீது ஒரு தழும்பை விட்டுச் சென்றிருக்கக்கூடும்.
இவற்றை சிந்தனை செய்து பார்க்கும்போது, இப்படிப்பட்ட ஏதாவது பாதிப்புகளை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளக் கூடுமா?
மதம் என்ன பங்கை வகிக்கிறது?
கொள்கை அளவில், மதம் நீங்கள் மேம்பட்ட நபராக இருப்பதற்கு உதவி செய்ய வேண்டும். உங்களுடைய ஒழுக்க நடத்தை, நன்னெறிகள், அன்றாடக நடைமுறையொழுங்கு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். பயனுடையது என்று நீங்கள் கருதும் எத்தனை தராதரங்களும் செயல்களும் மதத்தால் பாதிக்கப்பட்டன? உத்தரவாதமற்ற, குற்ற இயல்புள்ள நடத்தையின் பேரில் மதம் ஒரு தடையாக சேவித்தபோதிலும், அநேக ஜனங்கள் மதத்தோடு தாங்கள் கொண்டுள்ள தொடர்பினால் வேறு விதமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சர்ச்சுகளில் பெரும் மாய்மாலத்தையும், ஆவிக்குரிய மதிப்பீடுகளுக்கு பதிலாக பொருள்களின் பேரில் முக்கியத்துவம் வைப்பதையும் கண்டு அவர்கள் மனக்கசப்படைகின்றனர். ஆவிக்குரியத் தன்மையும் நம்பிக்கையும் இழந்து அவர்கள் மதத்தை வெறுக்கிறவர்களாகவும் கூட ஆகலாம்.
உங்களுடைய நடத்தையை உருவாக்கும் மற்ற புறம்பான பாதிப்புகளைப் பற்றி நீங்கள் சிந்திக்க முடியும். இதுவரை உங்களை பாதித்திருக்கும் காரியங்களில் ஏதாவது ஒன்றின் பேரில் சிந்தித்துப் பார்க்க சில விநாடிகள் செலவிடுங்கள். அவைகளில் சிலவற்றை நீங்கள் பட்டியலிட முடியுமா? தனிப்பட்ட உணர்ச்சிகள் அல்லது தப்பெண்ணங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் உண்மைகளின் பேரில் மட்டும் சிந்திப்பது எளிது அல்ல. ஆனால் இவ்வாறு சிந்திக்க முயற்சி செய்வது பலனளிக்கும். அது உங்களுக்கு உதவியளிக்கும். எவ்வாறு?
உங்களுடைய நடத்தையில் இருக்கும் எதிர்மறையான மனநிலைக்கு ஏதாவது பாதிப்பு அல்லது காரணம் இருப்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு, மற்ற பாதிப்புகளிலிருந்து அதை தனியே பிரித்து எடுத்துப் பார்த்தால், அதை கட்டுப்படுத்துவதற்கும் நீங்கள் அதை மாற்றுவதற்கும்கூட ஒரு சிறந்த நிலையில் இருப்பீர்கள். விரும்பத்தகாத பாதிப்பை கட்டுப்படுத்த முடியுமென்றால் அல்லது அதை தவிர்க்க முடியுமென்றால், நீங்கள் ஒரு வித்தியாசமான ஆளாக ஆகக்கூடும். மற்றவர்களோடு அதிக உடன்பாடான மனநிலையோடு நடந்து கொள்ளக்கூடும்.
நிச்சயமாகவே, அது ஒரு சவால். ஆனால் உங்களுடைய நடத்தையின் பேரில் உள்ள அநேக பாதிப்புகள் மற்ற ஜனங்களால் வலிந்து சுமத்தப்பட்டிருப்பதால் அல்லது நீங்கள் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைமைகளால் அவ்வாறு இருப்பதனால், அந்த நிலைமையைக் குறித்து ஏதாவது செய்ய நீங்களே ஏன் முயற்சி செய்யக்கூடாது? இதனால் முன்னேற்றம் ஏற்படும் என்றால், உங்களை நீங்கள் ஏன் மாற்றிக் கொள்ளக்கூடாது? (g91 7⁄8)
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
கர்ப்பமாயிருக்கும் பெண்ணின் செயல்களும் உணர்ச்சிகளும் பிறவாத குழந்தையை பாதிக்கலாம்