நம்முடைய உலகம் எவ்விதமாக மாறியிருக்கிறது?
உங்களுடைய உலகம் மாறியிருக்கிறதா? பூர்வ கிரேக்கத் தத்துவஞானியாகிய ஹெராகிளிடஸ் இவ்விதமாகச் சொன்னார்: “ஒன்றும் நிலைத்திருப்பதில்லை, ஆனால் மாறுகின்றன.” நம் எல்லாருடைய வாழ்விலும் மாற்றம் தொடர்ந்து நிகழும் ஒன்றாக இருக்கிறது.
கடந்த 10, 20, 30, அல்லது அதிக ஆண்டுகளை நீங்கள் பின்னோக்கிப் பார்க்கையில், என்ன மாற்றங்களைப் பார்த்திருக்கிறீர்கள்? நவீனமயமாக்குதல் வடிவிலும், பாரம்பரிய மதிப்பீடுகளைத் தள்ளிவிடுகின்ற முறையிலும் மாற்றம் வருவதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சந்தேகமில்லாமல், சில மாற்றங்களை உடன்பாடாகவும், மற்றவை எதிர்மறையாகவும் நீங்கள் காண்கிறீர்கள்.
நீங்கள் 70 வயதுக்கு மேலாக இருப்பீர்களாகில், உங்களுடைய வாலிப நாட்களிலிருந்து என்ன மாற்றங்களைப் பார்த்திருக்கிறீர்கள்? டிவி இல்லாத, ஒரு மணிக்கு 150 கிலோமீட்டர் என்று மெதுவாக ஆகாய விமானங்கள் செல்லுவதை, அதிகமான சர்வதேசப் பயணங்கள் பிரயாணிகளின் பெரிய பாய்மரக் கப்பல்களில் இருந்ததை, போதைப்பொருள் துர்ப்பிரயோகம் அடிக்கடி அபினி புகைக்கிறவர்களின் மறைவிடங்களுக்குக் கட்டுப்பட்டிருந்ததாகத் தோன்றியதை, மோட்டார் வண்டிகள் குறைவாக, மிகக் குறைவாக இருந்த சமயத்தை நீங்கள் நினைவுகூருவீர்கள். ஆம், நிச்சயமாகவே உங்களுடைய உலகம் மாறியிருக்கிறது.
மாறியிருக்கிற நுகர்வோர் சமுதாயம்
ஆனால், உலகம் இளைஞருக்குங்கூட மாறியிருக்கிறது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குச் சற்று முன்பாக, உலகச் சந்தைகளில் மேற்கத்திய உற்பத்திப் பொருட்களாலும், செய்நுட்ப அறிவாலும் அதிகமாய் நிறைந்திருந்தன. இப்பொழுது, பசிபிக் சமுத்திரத்தின் ஓரத்தில் அமைந்திருக்கிற கிழக்கத்திய நாடுகள் மோட்டார் வாகன உற்பத்தி, கணிப்பொறிகள், புகைப்படக்கருவிகள், டிவிக்கள் மற்றும் அநேக வகையான மின்னியக்கப் பொறியமைப்புகளின் முன்னோடிகளாக ஆகியிருக்கின்றன.
அனுபவம்வாய்ந்த ஒரு சீனப் பயணி விழித்தெழு!-வுக்குச் சொன்னதில் இது விளக்கப்பட்டிருக்கிறது: “முப்பது அல்லது 40 ஆண்டுகளுக்குச் சற்று முன்பாக, ஒரு சராசரி சீன நாட்டவரின் கனவு ஒரு மிதிவண்டியும், ஒரு தையல் இயந்திரமும் வாங்குவதாக இருந்தது. அவை அப்போதைய கெளரவச் சின்னங்களாக இருந்தன. இப்போதையக் கனவு ஒரு கலர் டிவியும், ஒரு விசிஆரும், ஒரு குளிர்சாதனப்பெட்டியும், ஒரு மோட்டார் வண்டியும் வாங்குவதாகும்.” நுகர்வோர் சமுதாயம், சீனாவிலிருந்தாலுஞ்சரி வேறு எங்கு இருந்தாலுஞ்சரி, அதனுடைய ரசனைகளையும் தேவைகளையும் மாற்றியிருக்கிறது.
நோக்குநிலையில் இந்த விதமான மாற்றம், அநேக நாடுகளில் அவற்றினுடைய பொருளாதாரம் முன்னேற்றமடைந்திருப்பதால் சம்பவித்திருக்கிறது. காத்லோனியனாகிய பெட்ரோ அவனுடைய 40-களின் துவக்கத்தில் இவ்விதமாகக் குறிப்பிட்டான்: “முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பெய்னில், குறைந்தபட்சமாக ஒரு சிறிய 600 cc சீட் [ஃபியட்] கார் சொந்தமாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தது. இப்பொழுது ஸ்பானியர்கள் ஒரு விலையுயர்ந்த ஜெர்மானிய BMW காரைக் கொண்டிருக்க ஆசைப்படுகிறார்கள்!” ஐக்கிய மாகாணங்களில் குடியிருக்கும் ஜெகதீஷ் பட்டேல் தன்னுடைய சொந்த நாடாகிய இந்தியாவுக்குச் சென்ற சமீபத்தியப் பயணத்தைப் பற்றி இவ்விதமாகக் குறிப்பிட்டார்: “இப்பொழுது இந்திய சாலைகளிலுள்ள அநேக எண்ணிக்கையான மோட்டார் வண்டிகளினால் நான் கவரப்பட்டேன். நெடுஞ்சாலைகளில் இன்னும் ஹிந்துஸ்தான் மோட்டார் வண்டிகளைக் காணலாம், ஆனால் இப்பொழுது அவற்றோடு அயல்நாட்டு நிறுவனங்களின் உரிமத்தின்பேரில் இந்தியாவில் செய்யப்பட்ட நவீன வித்தியாசமான கார்களும், மோட்டார் ஸ்கூட்டர்களும், மோட்டார் பைக்குகளும் சேர்ந்துகொள்கின்றன.”
அறிவியலில் மாற்றங்கள்
இருபத்தைந்து ஆண்டுகளுக்குச் சற்று முன்பாக, அநேகர் தொடர்ந்து சந்திரனைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராக நோக்கினர். அதுமுதற்கொண்டு, மனிதன் தன்னுடைய அடிச்சுவடுகளையும் அறிவியல்சார்ந்த கருவிகளையும் அந்தச் சந்திரனின் மேற்பரப்பில் விட்டுவந்திருக்கிறான், பகுப்பாய்வுக்காகக் கற்பாறைத் துண்டுகளைத் திரும்பக் கொண்டுவந்திருக்கிறான். அமெரிக்காவின் விண்வெளி விமானங்கள் இப்பொழுது சர்வசாதாரணமாக சென்று வருகின்றன. ஐ.மா.-வின் விஞ்ஞானிகள், நிரந்தரமான விண்வெளி நிலையத்தை நிறுவுவதைக்குறித்தும் மார்ஸ் கிரகத்திற்குப் செல்வதைக்குறித்தும் பேசுகின்றனர்.
எய்ட்ஸ் பற்றி 15 ஆண்டுகளுக்கு முன்பாக யார் கேள்விப்பட்டிருந்தார்? இப்பொழுது அது ஓர் உலகளாவிய கொள்ளைநோயாக இருக்கிறது, இலட்சக்கணக்கானோர் அதைக்குறித்த பயத்தில் வாழ்கின்றனர்.
அரசியல் மாற்றங்கள்
நான்கு ஆண்டுகளுக்கு முன்புதானே, தகர்க்கமுடியாததாகத் தோன்றிய சுவர் பெர்லின் நகரத்தைப் பிரித்திருந்தது; அங்குக் கம்யூனிஸ சோவியத் கூட்டரசும் பனிப்போரும் இருந்தது. இப்பொழுது பெர்லின் ஐக்கியப்பட்ட ஜெர்மனியின் தலைநகரமாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது, முன்னாள் சோவியத் கூட்டரசின் 15 குடியரசுகளில் 11 குடியரசுகள், சுயேச்சை நாடுகளின் ஒரு பொதுவுரிமைக் குடியரசு நாட்டை அமைத்திருக்கின்றன.
ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள், முக்கியமாக முதலாளித்துவ மற்றும் கம்யூனிஸ அதிகாரங்களுக்கிடையேயான போராட்டத்தில் ஒரு செயற்களமாக இருந்தது. கூட்டுச்சேராத நாடுகள் என்று அழைக்கப்பட்டவை உறுதியான ஈடுபாட்டைத் தவிர்த்து பார்வையாளர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இப்பொழுது கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகள் சமாதானத்தையும் பாதுகாப்பையுங்குறித்து பேசிக்கொண்டிருக்கின்றன, ஐக்கிய நாடுகள் அதிக வல்லமையையும், ஆற்றலையும் கொண்டிருக்கிறது. உலகமுழுவதிலும் நெருக்கடியில் உள்ள பகுதிகளுக்கு அது இராணுவப் படைகளை அனுப்ப முடியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, யுகோஸ்லாவியா மற்றும் செக்கோஸ்லோவாகியா என்று அறியப்பட்ட நாடுகள் இருந்தன. இப்பொழுது இரண்டும் சிறிய சுயேச்சை நாடுகளாக துண்டுகளாகியிருக்கின்றன.
இந்த எல்லா மாற்றங்களுடனும் உண்மையான சமாதானம், நீதி, உணவையும் வள ஆதாரங்களையும் நேர்மையாக பங்கிடுதல் ஆகியவற்றில் இந்த உலகம் அதிகமாக முன்னேறியிருக்கிறதா? இந்த உலகம் அதிக நாகரீகமாக ஆகியிருக்கிறதா? குற்றவாளிகளின் பயமில்லாமல் நீங்கள் தெருக்களில் நடந்து செல்ல முடியுமா? இனம், மதம், அரசியல், வாழ்க்கை-பாணி, அல்லது மொழியின் அடிப்படையில் இனிமேலும் மற்றவர்களைப் பகைக்காமலிருக்கும்படிக்கு நாம் போதிக்கப்பட்டிருக்கிறோமா? பொதுவாக மனித குடும்பத்திற்கும், நம்முடைய வீடாகிய பூமிக்கும் உண்மையான முன்னேற்றத்திற்கு மாற்றம் வழிநடத்திக் கொண்டிருக்கிறதா? நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்? பின்வரும் கட்டுரைகள் இவற்றையும் மற்ற கேள்விகளையும் ஆராயும். (g93 1/8)