மாறிக்கொண்டேயிருக்கும் நம் உலகம் அது எங்கே சென்றுகொண்டிருக்கிறது?
சில மாற்றங்கள் லட்சக்கணக்கானோர் வாழ்க்கையின்மீதும், முழு உலக ஜனத்தொகையின்மீதும் எதிர்கால சந்ததிகளின்மீதுங்கூட, ஆழமான, நீண்டகாலம்-நிலைத்திருக்கும் பாதிப்பைக் கொண்டிருக்கின்றன. வன்முறையான குற்றச்செயல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், எய்ட்ஸ் பரவுதல், தண்ணீர் மற்றும் காற்று தூய்மைக்கேடு, காடுகளை அழித்தல் ஆகியவை நம் எல்லார்மீதும் பாதிப்பை உண்டுபண்ணுகிற ஒருசில மாற்றங்களாகும். பனிப்போரின் முடிவும் மேற்கத்திய-பாணி குடியாட்சி அதனுடைய பொருளாதாரச் சந்தையுடன் பரவுவதுங்கூட வாழ்க்கையை மாற்றிக்கொண்டிருக்கின்றன மற்றும் எதிர்காலத்தின்மீது செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தக் காரணிகளில் சிலவற்றை நாம் ஆராய்வோம்.
குற்றச்செயல் எவ்விதமாக நம்முடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது
உங்களுடைய சுற்றுப்புறத்திலுள்ள தெருக்கள் எவ்விதமாக இருக்கின்றன? இரவில் தனியாக வெளியே நடப்பதை நீங்கள் பாதுகாப்பாக உணருகிறீர்களா? அநேக மக்கள், 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்புதானே, தங்களுடைய வீடுகளைப் பூட்டாமல் செல்லவுங்கூட முடிந்தது. ஆனால் காலங்கள் மாறிவிட்டன. இப்பொழுது சில கதவுகள் இரண்டு அல்லது மூன்று பூட்டுகளைக் கொண்டிருக்கின்றன, ஜன்னல்கள் இரும்புக் கம்பிகளினால் மூடப்பட்டிருக்கின்றன.
மக்கள் இன்று தங்களுடைய மிகச்சிறந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் தெருக்களில் அணிந்துசெல்ல பயப்படுகிறார்கள். சில நகர வாசிகள் ஒரு சிறு தோல்சட்டை அல்லது மென்மயிர்த்தோல் மேற்சட்டைக்காகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். மற்றவர்கள் போதைப்பொருள் கும்பல்களுக்கிடையே பல முனைகளிலிருந்து வீசப்படும் குண்டுவீச்சினால் மரித்திருக்கின்றனர். அப்பாவி பார்வையாளர்கள், அநேக குழந்தைகளும் உட்பட, ஏறக்குறைய அனுதினமும் காயப்படுத்தப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். மற்றவர்களின் செலவில் வாழும் திருடர்களைச் செயல்குலைவிக்க முயற்சி செய்வதற்கு, கார்களைச் சில சூழ்திறமிக்க கருவியில்லாமல் தெருக்களில் பாதுகாப்பாக விடமுடியாது. விபரீதமான இந்த உலகச் சூழ்நிலையில் மக்கள் மாறிவிட்டிருக்கின்றனர். நேர்மையும் உத்தமத்தன்மையும் ஏறக்குறைய மறக்கப்பட்ட மதிப்பீடுகளாக இருக்கின்றன. நம்பிக்கை மறைந்துவிட்டிருக்கிறது.
குற்றச்செயலும் வன்முறையும் உலகமறிந்த உண்மையாக இருக்கின்றன. வித்தியாசமான மூலங்களிலிருந்து வருகின்ற பின்வரும் தலைப்புச் செய்திகள் இந்தக் குறிப்பை விளக்குகின்றன: “போலீஸ் துரத்துகின்ற திருடர்கள், கலகக்கும்பல்கள் மற்றும் தீயொழுக்கம்; இவை அனைத்தும் தன்னிடம் இருப்பதாக மாஸ்கோ கண்டுபிடித்திருக்கிறது”; “குற்றச்செயலைத் தொடர்ந்து கொரியாவுக்கு ஒரு புதிய சகாப்தம் வருகிறது”; “தெருக் குற்றச்செயல் செக்கோஸ்லோவாகியாவின் அன்றாட வாழ்க்கையைத் தாக்குகிறது”; “கலகக்கும்பலை ஜப்பான் மேற்கொள்கிறது, கலகக்கும்பல் திருப்பிச் சண்டையிடுகிறது”; “ஆக்டோபஸ்-ன் (இத்தாலியில் உள்ள பயங்கரவாதிகளின் கும்பல்) இரும்புப்பிடி—இத்தாலியில் உள்ள பயங்கரவாதிகளின் கும்பலுக்கெதிராக சண்டையிடும் தலைவர் வெடியினால் கொல்லப்பட்டிருக்கிறார்.” குற்றச்செயல் உலகளாவியப் பிரச்னையாக இருக்கிறது.
இன்றைய குற்றச்செயல் அதிக வன்முறையானதாகவுங்கூட இருக்கிறது. உயிருக்கு மதிப்பே இல்லை. பிரேஸிலிலுள்ள ரியோடி ஜனீரோவில், நகரத்தின் ஓரத்திலுள்ள சேரிகளின் ஒரு பகுதி “உலகத்திலேயே மிக அதிக வன்முறையான இடமாக ஐக்கிய நாடுகளினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படுகின்றனர்.” (உலகப் பத்திரிகைத்துறை விமர்சனம் [World Press Review]) கொலம்பியாவில், போதைப்பொருள் வியாபாரத்தில் வல்லமைவாய்ந்தவர்கள் தங்களுடைய விசேஷித்த விதமான விரைவான மரண தண்டனையைக்கொண்டு போட்டியாளர்களிடமும் கடன்காரர்களிடமும் உள்ள கணக்கைத் தீர்க்க தங்களுடைய வளரிளமைப் பருவத்தினராகிய சீகாரியஸை, அல்லது பணம் கொடுத்தால் கொலைசெய்பவர்களை மோட்டார் பைக்குகளில் அனுப்புகிறார்கள். பெரும்பாலும், ஒரு குற்றத்திற்கு நீங்கள் சாட்சியாக இருப்பீர்களானால்—கொலம்பியாவிலோ அல்லது வேறெங்கேயோ—அதற்காக நீங்கள் வருந்துவீர்கள். நீங்கள் அடுத்த பலியாளாக ஆகலாம்.
மற்றொரு பெரிய மாற்றமானது அதிகமதிகமான குற்றவாளிகள் சாவுக்கேதுவான தானியங்கி ஆயுதங்களைத் தாங்கிச்செல்வதும், அதிகமதிகமான பொதுமக்கள் தற்காப்புக்காகக் கைத்துப்பாக்கிகளைக் கொண்டுச்செல்வதுமாக இருக்கிறது. போர்த்தளவாடங்களின் இந்த அதிகரிப்பு மரணங்களும் கடுமையான காயங்களும், குற்றச்செயலின் மூலமாகவோ தற்செயலாகவோ, தானாக அதிகரிப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஜோப்பிலோ வீட்டிலோ உள்ள ஒரு துப்பாக்கி, கொலையாளியாகும் வாய்ப்புடைய ஒரு நபராக ஒருவரை மாற்றக்கூடும் என்பது இப்பொழுது உலகமுழுவதும் யாவரும் அறிந்த உண்மையாக இருக்கிறது.
குற்றச்செயலும் போதைப்பொருட்களும்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, போதைப்பொருட்கள் ஓர் உலகப் பிரச்னையாக ஆகும் என்று கனவிலுங்கூட யார் கண்டிருப்பர்? இப்பொழுது அது குற்றச்செயலுக்கும் வன்முறைக்கும் பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. 1992-க்குப் பிறகு ஐரோப்பாவில் பயங்கரவாதம், போதைப்பொருட்கள் மற்றும் குற்றச்செயல் (Terrorism, Drugs and Crime in Europe After 1992) என்ற தன்னுடைய புத்தகத்தில் “கடைசியாக இந்த மயக்கமருந்து வியாபாரத்தின் வளர்ச்சி மனித நாகரீகத்துக்கு உள்ள எல்லா அச்சுறுத்தல்களிலும் மிகப்பெரியதாக நிரூபிக்கக்கூடும். . . . லாபங்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் வல்லமைவாய்ந்தவர்களுக்கு அதிக பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், [கொலம்பியா ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது] உலகமுழுவதிலுமான குற்றச்செயலின் பயங்கரமான அதிகரிப்பிற்கும் முதலீடு செய்கிறது” என்று ரிச்சர்டு கிளட்டர்பக் முன்னுணருகிறார். அவர் இவ்விதமாகவுங்கூட குறிப்பிடுகிறார்: “பயங்கரவாதத்தையும் குற்ற இயல்புள்ள வன்முறையையும் உலகிலேயே மிகப்பெரியளவில் உண்டுபண்ணுகிறவர்கள், ஐரோப்பா மற்றும் அ.ஐ.மா.-வில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குக் கொலம்பியாவின் கொக்கோ வயல்களிலிருந்து கொக்கைன் வியாபாரம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள்.”
குற்றச்செயல் செய்யும் மனச்சாய்வும், மாறுவதற்கு விருப்பமுமில்லாத மக்களும் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்பதைக் குற்றச்செயல் நடவடிக்கைகளின் அதிகரிப்பும் உலகத்தில் அதிகரித்துவரும் சிறையிலிருக்கும் மக்கட்தொகையும் காட்டுகிறது. குற்றச்செயல் மிகுந்த ஆதாயம் அளிப்பதாக அநேகர் கண்டிருக்கின்றனர். அதன் விளைவாக, நம்முடைய உலகம் மாறிவிட்டிருக்கிறது—மோசமான நிலைக்கு. அது அதிக ஆபத்தானதாக ஆகிவிட்டிருக்கிறது.
எய்ட்ஸ்—அது மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறதா?
முக்கியமாக ஓரினப்புணர்ச்சி வகுப்பினரைப் பாதிக்கின்ற வியாதியாக முதலில் தோன்றியது, ஒவ்வொரு இனத்தினரையும், வாழ்க்கை-பாணியான மக்களையும் பாதிக்கின்ற ஒரு கொள்ளைநோயாக ஆகிவிட்டிருக்கிறது. தனிச்சலுகைக்குரியவராக எவரையும் எய்ட்ஸ் இனிமேலும் கொண்டில்லை. ஆப்பிரிக்காவிலுள்ள சில நாடுகளில், இயற்கைபால் இணைவுடைய வகுப்பினர் பெரும்பகுதியினரைக் கொன்றுகொண்டிருக்கிறது. அதன் விளைவாக, முறையற்ற பாலுறவு திடீரென சிலருக்கு வழக்கற்றுப்போனதாகத் தோன்றுகிறது. எந்த ஒழுக்க சம்பந்தமான காரணங்களுக்காகவும் அல்ல, ஆனால் தொற்றுநோய் பயத்தின் காரணமாக. “பாதுகாப்பான பாலுறவு” என்பது இப்பொழுது கோஷமாக இருக்கிறது, ஆணுறைகளின் உபயோகம் தடுக்கக்கூடிய தடையரணாக முக்கியமாய் சிபாரிசு செய்யப்படுகிறது. ஒழுக்கயீனமான பாலுறவுகளிலிருந்து விலகியிருப்பது மிகக்குறைந்த-ஆதரவைப்பெறும் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் சமீபத்திய எதிர்காலத்தில் மனிதகுலத்தை எய்ட்ஸ் எவ்வாறு பாதிக்கும்?
டைம் பத்திரிகை சமீபத்தில் இவ்விதமாக அறிக்கைசெய்தது: “எய்ட்ஸ் 1918-ன் இன்ஃபுளுயென்சா கொள்ளைநோயையும் விஞ்சி, 2000 ஆண்டுக்குள்ளாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளைநோயாக ஆகக்கூடும். அந்தப் பேரழிவு இரண்டு கோடி மக்களைக் கொன்றது, அல்லது உலகத்தின் மக்கட்தொகையில் 1%—முதல் உலகப் போரில் மரித்த படைவீரர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம்.” “இந்தக் கொள்ளைநோய் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அளவைக் கொண்டிருக்கிறது,” என்று ஒரு வல்லுநர் சொன்னார்.
எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு லட்சக்கணக்கான டாலர்களும் பணமும் கொட்டினபோதிலும், எந்தப் பரிகாரமும் தென்படுவதாக இல்லை. நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமில் எய்ட்ஸ் பேரிலான ஒரு சமீபத்திய மாநாடு, இந்தப் பிரச்னையை ஆராய்வதற்கு 11,000 விஞ்ஞானிகளையும் மற்ற வல்லுநர்களையும் ஒன்றாகக் கூட்டியது. “மனநிலை சோர்ந்தும், ஒரு பத்தாண்டின் ஏமாற்றத்தையும், தோல்வியையும் பிரதிபலிப்பதாகவும், அதிகரித்துவரும் அவல நிலையை உணர்த்துவதாகவும் இருந்தது. . . . மனித இனம் எய்ட்ஸை வெல்லுவதற்கு முயற்சி எடுக்கப்பட்ட சமயத்தில் இருந்ததைவிட எவ்வித முன்னேற்றமும் செய்யப்படவில்லை. நோய்த்தடுப்பு அம்மைப்பால் இல்லை, எந்தச் சுகப்படுத்தலும் இல்லை, மறுக்கமுடியாத வண்ணமாக பலன்தரத்தக்க எந்தச் சிகிச்சைமுறையுங்கூட இல்லை.” (டைம்) தற்சமயம் HIV பாசிட்டிவ் உள்ளவர்கள், ஏற்கெனவே எய்ட்ஸ் வியாதிக்கு ஆளாகக்கூடும், எதிர்பார்ப்புகள் மங்கலாக இருக்கின்றன. இங்கும்கூட மாற்றம் மோசமானதாக இருந்திருக்கிறது.
உலக அரசியலில் மாற்றம்
கடந்த நான்கு ஆண்டுகளின் மாறின அரசியல் சூழ்நிலை அநேக தலைவர்கள் எதிர்பார்க்காதபோதிலுங்கூட நடந்திருக்கிறது, ஒருவேளை ஐக்கிய மாகாணங்களைவிட வேறு எங்கும் அவ்வளவு அதிகமாக இல்லை. திடீரென அரசியல் துறையில் ஒரு பொருத்தமான போட்டியாளர் இல்லாமலிருப்பதை அதுதானே காண்கிறது. ஒருவரும் அதற்கெதிராக இனிமேலும் விளையாட விரும்பாததைக் திடீரெனக் காண்கின்ற அதிக செயல்நோக்கமுள்ள, வெல்ல முடியாத கூடைப்பந்தாட்டக் குழுவிற்கு இது ஒப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் குழப்பநிலை அயல்நாட்டுக் கொள்கை (Foreign Policy) என்ற பத்திரிகையில் 1990-ல் ஒரு கட்டுரையில் பதிப்பாளராகிய சார்லஸ் வில்லியம் மேன்ஸ் மூலமாகச் சுருக்கிக் காட்டப்பட்டிருக்கிறது: “இன்று ஐ.மா.-வின் அயல்நாட்டுக் கொள்கையின் பணி நாசகரமான ஒரு யுத்தத்திலிருந்து அந்த நாட்டை விடுவிப்பது என்பது இல்லை, ஆனால் ஐக்கிய மாகாணங்களுக்கும், [முன்னாள்] சோவியத் கூட்டரசுக்குமிடையே திடீரென ஆரம்பித்திருக்கிற எதிர்பாராத சமாதானத்தை அமைப்புமுறைக்குட்பட்டதாக ஆக்குவதாகும்.”
அணுக்கருவினுடைய செய்நுட்ப அறிவின் வேகமான வளர்ச்சி புதிய அச்சுறுத்தல்களைக் கொண்டுவருகிறது, அதே சமயத்தில் உலகின் அணுஆயுதமல்லாத போர்க்கருவிகளோடு யுத்தம் தொடர்ந்து செழித்துக்கொண்டிருக்கிறது—உலகின் ஆயுத வியாபாரிகளின் மகிழ்ச்சிக்கேதுவாக. சமாதானத்திற்காக கூக்குரலிடுகிற ஓர் உலகில், அநேக அரசியல் தலைவர்கள் தங்களுடைய இராணுவங்களையும் போர்க்கருவிகளை அமைத்துருவாக்கும் துறையையும் பலப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய திவாலாகிவிட்ட ஐக்கிய நாடுகள் உலகின் நாட்பட்ட புண்களின்மீது சிறிய ஒட்டுத்துணியைப் போடத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறது.
தேசப்பற்றின் மாறாத சாபம்
கம்யூனிஸம் சிதைவுற ஆரம்பித்தபோது, ஐ.மா.-வின் முன்னாள் ஜனாதிபதி புஷ் “புதிய உலக ஒழுங்குமுறை”யின் கருத்தைப் பிரபலப்படுத்தினார். என்றபோதிலும், அநேக அரசியல் தலைவர்கள் கண்டுபிடித்திருக்கிறபடி, கெட்டிக்காரத்தனமான கோஷங்கள் மலிவாக இருக்கின்றன; உடன்பாடான மாற்றங்கள் நிறைவேற்றுவதற்கு மிக அதிகக் கடினமாக இருக்கின்றன. வீழ்ச்சிக்குப் பிறகு—மத்திய ஐரோப்பாவில் குடியாட்சி நாட்டம் (After the Fall—The Pursuit of Democracy in Central Europe) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜெஃப்ரே கோல்டுஃபார்ப் இவ்விதமாகச் சொல்கிறார்: “‘ஒரு புதிய ஒழுங்குமுறை’யைப் பற்றிய எல்லையற்ற நம்பிக்கையை விரைவாக பின்தொடர்ந்து, மிகப் பூர்வீகமான பிரச்னைகள் இன்னும் நம்மோடும், சிலசமயங்களில் பழிவாங்கும் நோக்குடனும் நிலைத்திருப்பதைப் பற்றிய உணர்வாகும். விடுதலையின் நன்னிலையுணர்வு . . . அரசியல் பதற்றம், தேசீயவாத சண்டை, மதம் சார்ந்த மாறா மரபேற்புக்கோட்பாடு, பொருளாதாரச் சீர்குலைவு ஆகியவற்றினால் ஏற்படும் மனமுறிவினால் அடிக்கடி மறைக்கப்பட்டிருக்கிறது.” யுகோஸ்லாவியாவின் உள்நாட்டுப் போர் அரசியல், மதம், தேசப்பற்று ஆகியவற்றின் பிரிவினை உண்டாக்கும் செல்வாக்குக்கு நிச்சயமாகவே தெளிவான உதாரணமாக இருக்கிறது.
கோல்டுஃபார்ப் தொடர்ந்து சொல்கிறார்: “ஸெனொஃபோபியாவும் [அயல்நாட்டவரைப்பற்றிய பயமும்] தனிப்பட்ட பாதுகாப்பின்மையும் மத்திய ஐரோப்பியர்களின் வாழ்க்கை உண்மைகளாக ஆகிவிட்டிருக்கின்றன. பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டுரீதியாக உறுதியளிக்கப்பட்ட பலன்களைக் குடியாட்சி தானாகவே உண்டுபண்ணுவதில்லை, சந்தை பொருளியல் செல்வங்களை உறுதியளிப்பது மட்டுமல்லாமல், அதை எவ்விதமாகக் கையாளுவது என்று அறியாதவர்களுக்கு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதப் பிரச்னைகளையுங்கூட அது உண்டுபண்ணுகிறது.”
ஆனால், இவையெல்லாம் மத்திய ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் கூட்டரசு குடியாட்சிகளின் பிரச்னைகள் மட்டுமல்ல என்பது தெளிவாக இருக்கின்றன. ஸெனொஃபோபியாவும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையும் உலகமுழுவதும் இருக்கின்றன. மனித குடும்பம் வேதனையையும் மரணத்தையும் அபராதமாகச் செலுத்திக் கொண்டிருக்கிறது. பகைமையையும் வன்முறையையும் உண்டுபண்ணுகிற இந்த ஆழமாக ஸ்தாபிக்கப்பட்ட மனநிலைகளை மாற்றுவதில் சமீபத்திய எதிர்காலம் எந்த நம்பிக்கையையும் கொண்டில்லை. ஏன் அவ்விதமாக? ஏனெனில் அநேகர் பெறுகின்ற கல்வி—பெற்றோரிடமிருந்தோ தேசப்பற்றை ஆதரித்து ஊக்குவிக்கிற பள்ளி அமைப்புகளிலிருந்தோ—பகைமை, சகிப்பற்றத்தன்மை, தேசீயம், இனம் மற்றும் குல மரபுத் தொடக்கம் அல்லது மொழி அடிப்படையிலான உயர்வு மனப்பான்மை ஆகியவற்றை மனதில் பதியவைக்கிறது.
ஏஷியாவீக் என்ற வாராந்தரப் பத்திரிகை தேசப்பற்றை “வெறுக்கத்தக்க கடைசி பற்று” என்று அழைக்கிறது, இது பகைமையையும் இரத்தஞ்சிந்துதலையும் தொடர்ந்து தூண்டுகிற மாறாத காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. அந்தப் பத்திரிகை இவ்விதமாகக் குறிப்பிட்டது: “செர்பியராக இருப்பதன் பெருமை ஒரு குரோவாட்டை வெறுப்பதை அர்த்தப்படுத்துமானால், அர்மேனியனின் விடுதலை ஒரு துருக்கியனைப் பழிவாங்குவதை அர்த்தப்படுத்துமானால், ஸுலூவிற்கு சுதந்திரமானது ஒரு கோசே பேசும் நபரைக் கீழ்ப்படுத்துவதை அர்த்தப்படுத்துமானால், ஒரு ருமேனியனுக்கு குடியாட்சி என்பது ஒரு ஹங்கேரியனை வெளித்தள்ளுவதை அர்த்தப்படுத்துமானால், தேசப்பற்று ஏற்கெனவே அதனுடைய மிகவும் வெறுக்கத்தக்க முகத்தைக் காட்டிவிட்டது.”
ஒருமுறை ஆல்பர்ட் ஐய்ன்ஸ்டின் சொன்னவற்றிற்கு நாம் நினைவுபடுத்தப்படுகிறோம்: “தேசப்பற்று சிறுபிள்ளைத்தனமான மனநிலையாக இருக்கிறது. இது மனிதவர்க்கத்தின் தட்டம்மையாக இருக்கிறது.” ஏறக்குறைய எல்லாரும் ஒரு சமயத்திலோ வேறொரு சமயத்திலோ தேசப்பற்றுள்ளவர்களாக ஆகின்றனர், அது தொடர்ந்து பரவுகிறது. ஆண்டு 1946-க்கு முன்பாக, பிரிட்டிஷ் சரித்திராசிரியன் ஆர்னால்டு டாயன்பீ இவ்விதமாக எழுதினார்: “தேசபக்தி . . . மேற்கத்திய உலகின் மதமாகிய கிறிஸ்தவத்தின் இடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது.”
இந்தத் தற்போதைய சூழ்நிலையில் மனித நடத்தையில் ஏதாவது மாற்றத்திற்கான நம்பிக்கை இருக்கிறதா? கல்வியில் தீவிரமான ஒரு மாற்றத்தினால் மாத்திரமே இது அடையப்படக்கூடும் என்று சிலர் சொல்கின்றனர். பொருளியலர் ஜான் K. கால்பிரெய்த் இவ்விதமாக எழுதினார்: “முன்னேற்றத்தின் அளவை மக்களின் தனிச்சிறப்புப் பண்புகளே தீர்மானிக்கின்றன. ஆகவே . . . திருந்தாத மக்களினால் எந்த முன்னேற்றமும் கூடியகாரியமில்லை, மக்கள் விடுதலையளிக்கப்படுகையிலும் கல்விபுகட்டப்படுகையிலும் முன்னேற்றம் நிச்சயமானதாக இருக்கிறது. . . . படிப்பறிவின்மை மேற்கொள்ளப்படுவது முதலாவது வருகிறது.” உலகத்தின் கல்வி அமைப்புகள் பகைமைக்கும் சந்தேகத்துக்கும் பதிலாக அன்பையும் சகிப்புத்தன்மையையும் எப்பொழுதாவது கற்பிக்கும் என்பதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? நாம் அனைவரும் ஒரே மனித குடும்பம் என்று உணர்வதன் மூலம், ஆழமாக-ஊன்றிய குலமரபு மற்றும் இனம் சார்ந்த விரோதங்கள் நம்பிக்கையாலும் புரிந்துகொள்ளுதலாலும் எப்பொழுது மாற்றப்படும்?
தெளிவாகவே, உடன்பாடான மாற்றம் அவசியமாயிருக்கிறது. சாண்ட்ரா போஸ்டல் என்பவர் 1992 உலகின் நிலைமை (State of the World 1992) என்பதில் இவ்விதமாக எழுதுகிறார்: “ஒரு மேம்பட்ட உலகிற்கான உண்மையான நம்பிக்கைகளை நாம் பற்றிக்கொள்ள வேண்டுமானால், இந்தப் பத்தாண்டின் எஞ்சியுள்ள பகுதியில், மிக ஆழ்ந்த, எங்கும் பரவுகின்ற மாற்றங்கள் ஏற்படவேண்டும்.” மேலும் நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்? ரிச்சர்டு கிளட்டர்பக் இவ்விதமாகக் குறிப்பிடுகிறார்: “என்றபோதிலும், இந்த உலகம் நிலையற்றதாகவும் அபாயகரமானதாகவும் இருக்கிறது. தேசீயஞ்சார்ந்த மற்றும் மதசம்பந்தமான வெறியார்வமும் தொடரும். . . . இந்த நூற்றாண்டிலேயே 1990-கள் மிக அதிக அபாயகரமானதாக அல்லது மிக அதிகமாக முன்னேறுகிற பத்தாண்டாக இருக்கக்கூடும்.”—1992-க்குப் பிறகு ஐரோப்பாவில் பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் (Terrorism, Drugs and Crime in Europe After 1992).
மாறிக்கொண்டேயிருக்கும் நம் சுற்றுப்புறச்சூழல்
கடந்த சில பத்தாண்டுகளாக, மனித நடவடிக்கைகள் சுற்றுப்புறச்சூழலின்மீது ஓர் அபாயகரமான பாதிப்பைக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை மனிதவர்க்கம் உணர்வுள்ளதாக ஆகியிருக்கிறது. பெரும் அளவான காடுகள் அழிப்பு எண்ணற்ற மிருக மற்றும் தாவர இனங்களைக் கொன்றிருக்கிறது. காடுகள் கிரகத்திற்கு நுரையீரலைப் போன்று இருப்பதன் காரணமாக, காடுகளை அழிப்பது கரியமில வாயுவை உயிர்-காக்கிற பிராணவாயுவாக மாற்றும் பூமியின் ஆற்றலையுங்கூட குறைத்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு விளைவானது மேற்பரப்பு மண்ணை உரங்குறையச் செய்து கடைசியாக பாலைவனமாக மாற்றுவதுமாகும்.
இந்த விவாதத்தின்பேரில் சில எச்சரிக்கும் குரல்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன, அவற்றுள் ஒன்று ஐ.மா.-வின் அரசியல்வாதி அல் கோர் குரலாகும். பூமி தராசில்—சூழ்நிலையியல் மற்றும் மனித ஆவி (Earth in the Balance—Ecology and the Human Spirit) என்ற தன்னுடைய புத்தகத்தில் அவர் இவ்விதமாக எழுதுகிறார்: “காடுகள் இன்று அழிக்கப்பட்டுவரும் வேகத்தில் அடுத்த நூற்றாண்டினூடே உண்மையிலேயே எல்லா மழைக் காடுகளும் அழிந்துவிட்டிருக்கும். இந்த அழிவு நேரிடும்படியாக நாம் அனுமதிப்போமாகில், கிரகத்தின்மீதுள்ள மிகச் செழிப்புவாய்ந்த பிறப்புமூலத்திற்குரிய பண்டகசாலை தகவல்களையும் அதோடுகூட நம்மைத் தொல்லைப்படுத்துகிற அநேக வியாதிகளைக் குணப்படுத்த சாத்தியமானவற்றையும் இந்த உலகம் இழந்துவிடும். உண்மையில், இப்பொழுது பொது உபயோகத்தில் இருக்கிற நூற்றுக்கணக்கான முக்கிய மருந்துகள் வெப்பமண்டலக் காடுகளின் தாவரங்களிலிருந்தும் விலங்கினங்களிலிருந்தும் பெறப்படுகின்றன.”
மனிதனின் சுற்றுப்புறச்சூழலின் பேரிலான தாக்குதல் தப்பிப்பிழைப்பதற்கு அண்மையில் நிகழவிருக்கிற ஒரு பயமுறுத்தலைக் குறிக்கிறது என்று கோர் நம்புகிறார். அவர் இவ்விதமாகக் குறிப்பிடுகிறார்: “எண்ணிப்பார்க்கக்கூடிய சுற்றுப்புறத்திற்குரிய ஒவ்வொரு தனியிடத்தை நாம் தொடர்ந்து விரிவுபடுத்துகையில், வலுவற்ற நம்முடைய சொந்த நாகரீகம் அதிக வெளிப்படையாக ஆகிறது. . . . ஒரே சந்ததிக்குள்ளாகவே, சரித்திரத்தில் எந்தவொரு எரிமலை செய்ததைப் பார்க்கிலும் பூகோள வளிமண்டலத்தின் உருவமைப்பைப் பெருமளவில் மாற்றுகிற அபாயத்திலிருப்போம், மேலும் விளைவுகள் வருகிற நூற்றாண்டுகளாகத் தொடர்ந்திருக்கலாம்.”
நம்முடைய வளிமண்டலம் அச்சுறுத்தப்படுவது மட்டுமல்லாமல், கோர் மற்றும் மற்றவர்களின்படி, நம்முடைய இன்றியமையாத தண்ணீர் வழங்கீடும் ஆபத்திலிருக்கிறது, விசேஷமாக வளர்ந்துவருகிற நாடுகளில், “தண்ணீர் தூய்மைக்கேட்டின் பாதிப்புகள் வாந்திபேதி, குடற்காய்ச்சல், சீதபேதி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றிலிருந்து வரக்கூடிய மரணத்தின் உயர்ந்த அளவின் வடிவில் மிகத் தெளிவாகவும் வருந்தத்தக்க முறையிலும் உணரப்பட்டிருக்கிறது.” “பாதுகாப்பான போதிய குடிதண்ணீர் வழங்கீட்டை 170 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டில்லை. முந்நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் சரியான சாக்கடை கழிவுநீக்க வசதிகளைக் [கழிநீர் வசதியும் சாக்கடை வசதியும்] கொண்டில்லை; இவ்விதமாக, தங்களிடம் மாசுபடுத்தப்பட்ட தண்ணீரைக் கொண்டிருக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். உதாரணமாக இந்தியாவில், நூற்றுப்பதினான்கு பட்டணங்களும் நகரங்களும் மனிதக் கழிவுப்பொருளையும் மற்ற செயற்படுத்தப்படாத கழிவுநீரையும் நேரடியாக கங்கையில் விடுகின்றனர்,” என்ற உண்மையைக் கோர் மேற்கோள் காட்டுகிறார். மேலும், இலட்சக்கணக்கானோருக்கு அந்த ஆறு உயிருக்கு அத்தியாவசியமான நீர்ப்பாதையாக இருக்கிறது!
உலக வங்கியின் துணைத் தலைவராகிய கெளதம் S. காஜி என்பவர் “கிழக்கு ஆசியாவிலுள்ள தண்ணீர் வழங்கீடானது பொருத்தமாகவே அடுத்த நூற்றாண்டின் நெருக்கடிநிலையின் விவாதமாக இருக்கலாம். . . . ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனைப் பொருத்தவரையில் பாதுகாப்பான குடிதண்ணீரின் நன்கு அறியப்பட்ட பயன்களின் மத்தியிலும், குடிக்கத்தக்க தண்ணீர் அளிப்பதற்கு பொதுநல அமைப்புகள் தவறுவதைக் கிழக்கு ஆசிய அரசாங்கங்கள் இப்பொழுது எதிர்ப்படுகின்றன. . . . சுற்றுப்புறச்சூழல் பிரகாரமாக நல்ல வளர்ச்சியின் மறக்கப்பட்ட விவாதமாக இது இருக்கிறது,” என்று பாங்காக்கில் ஒரு கூட்டத்தில் எச்சரித்தார். உலகமுழுவதிலுமாக, வாழ்க்கைக்கான அடிப்படை ஆக்கக்கூறுகளில் ஒன்று—சுத்தமான தண்ணீர்—அசட்டைசெய்யப்படுகிறது மற்றும் வீணாக்கப்படுகிறது.
இவையெல்லாம் மாறிக்கொண்டேயிருக்கும் நம் உலகத்தின் அம்சங்களாக இருக்கின்றன. அநேகப் பகுதிகள் அபாயகரமான ஒரு வடிகுட்டையாக மாற்றப்பட்டு மனிதவர்க்கத்தின் எதிர்கால வாழ்வை அச்சுறுத்துகிற ஓர் உலகம். முக்கியத்துவம்வாய்ந்த கேள்வி என்னவெனில், பூமியின் பெரும் அளவான வள ஆதாரங்கள் வெறுமையாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையெடுக்க அரசாங்கங்களும் பெரிய வியாபார நிறுவனங்களும் விருப்பத்தையும் உந்துவித்தலையும் கொண்டிருக்கின்றனவா?
மதம் உலகத்தை மாற்றிக்கொண்டிருக்கிறதா?
மதத்துறையில், ஒருவேளை மனிதவர்க்கத்தின் மிகப்பெரிய தோல்வியை நாம் காண்கிறோம். ஒரு மரமானது அதனுடைய கனிகளினாலே நியாயந்தீர்க்கப்படுமானால், பகைமை, சகிப்பற்றத்தன்மை, அதனுடைய சொந்த அணிவரிசைக்குள்ளேயே செய்யப்படுகிற யுத்தம் ஆகியவற்றின் கனிகளுக்காக மதம் பதிலளிக்கவேண்டும். அநேக மக்களுக்கு மதம் அழகைப்போல்—தோல் அளவு ஆழமே உள்ளது. இனவெறி, தேசப்பற்று, பொருளாதாரப் பாதுகாப்பின்மை போன்ற அழுத்தங்களின்கீழ் சீக்கிரமாக தோலுறிந்துபோகிற மேல்பரப்பிலான பகட்டு மென்பூச்சாக இருக்கிறது.
கிறிஸ்தவம் ‘உன் அயலானையும் உன் சத்துருவையும் நேசி’க்கிற மதமாக இருக்கிற காரணத்தினால், முன்னாள் யுகோஸ்லாவியாவின் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் மதங்களுக்கு என்ன சம்பவித்திருக்கிறது? அவர்களுடைய குருமார்கள் அவர்களை அனைத்து கொலை மற்றும் பகைமையிலிருந்து விடுவிப்பார்களா? நூற்றாண்டுகளான “கிறிஸ்தவத்”தின் போதனை வடக்கு அயர்லாந்தில் பகைமையையும் கொலையையும் மாத்திரமே உண்டுபண்ணியதா? கிறிஸ்தவமல்லாத மதங்களைப் பற்றி என்ன? அவர்கள் ஏதாவது மேம்பட்ட கனிகளைப் பிறப்பித்திருக்கின்றனரா? இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம், இஸ்லாம் மதம், ஷின்டோ மதம் ஆகியவைப் பரஸ்பர சகிப்புத்தன்மைக்கான ஒரு சமாதானப் பதிவைக் குறிப்பிடக்கூடுமா?
மனிதவர்க்கம் நாகரீகப்படுத்துவதை நோக்கி ஓர் உடன்பாடான செல்வாக்காகச் சேவிப்பதற்குப் பதிலாக, இரண்டு உலக யுத்தங்களில் இராணுவங்களை ஆசீர்வதித்தும் இன்னும் மற்ற அநேக சண்டைகளை ஆசீர்வதித்தும் முரட்டுத்தனமான தேசப்பக்தியை ஊக்கப்படுத்துவதில் மதம் அதனுடைய சொந்த வெறியார்ந்த பாகத்தை வகித்திருக்கிறது. மாற்றத்திற்கு முன்னேறக்கூடிய ஒரு சக்தியாக இது இருந்திருக்கவில்லை.
ஆகவே, சமீப எதிர்காலத்தில் மதத்திலிருந்து எதை எதிர்பார்க்கலாம்? உண்மையில், நம்முடைய தற்போதைய உலக ஒழுங்குமுறைக்கு எதை எதிர்காலம் கொண்டிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்—என்ன மாற்றங்கள் அங்கு இருக்கும்? தனித்தன்மைவாய்ந்த ஒரு நோக்குநிலையிலிருந்து இந்தக் கேள்விகளை எங்களுடைய மூன்றாவது கட்டுரை கலந்தாராயும். (g93 1/8)
[பக்கம் 7-ன் படம்]
வன்முறைக் குற்றச்செயலின் திடீர் எழுச்சி மாற்றத்தின் மற்றொரு அறிகுறியாக இருக்கிறது
[பக்கம் 8-ன் படங்கள்]
தேசப்பற்றும் மதப் பகைமையும் இரத்தஞ்சிந்துதலைத் தொடர்ந்து தூண்டிவிடுகின்றன
[படத்திற்கான நன்றி]
Jana Schneider/Sipa
Malcom Linton/Sipa
[பக்கம் 9-ன் படங்கள்]
மனிதன் தன்னுடைய சுற்றுப்புறச்சூழலைத் துர்ப்பிரயோகம் செய்வது உயிரின ஜந்துக்களோடுகூட அதனுடைய சுற்றுப்புறத்தின் நுட்பமான சமநிலையை மாற்றிக்கொண்டிருக்கிறது
[படத்திற்கான நன்றி]
Laif/Sipa
Sipa
[பக்கம் 10-ன் படம்]
போப்பின் வெளிநாட்டு அவைகளிலுள்ள பேராண்மைத் தூதர் பேஸல்லோ டி டோரிகுரோஸாவினால் 1933-ல் ஹிட்லர் வரவேற்கப்பட்டார். சரித்திரப்பூர்வமாக, மதம் அரசியலிலும் தேசப்பற்றிலும் உட்பட்டிருக்கிறது