கற்பழிப்பைத் தடுப்பது எப்படி
எரிக் உயரமானவன், பார்ப்பதற்கு அழகுவாய்ந்தவன். வசதியுள்ள ஒரு குடும்பத்திலிருந்து வருபவன். லோரி 19 வயதுடையவள்; எரிக்கோடும் அவனுடைய அறைத்தோழனோடும் ஓர் இரட்டைக் காதல் சந்திப்புக்கு (Double date) அழைக்கப்பட்டிருந்தாள். அவள் எரிக் வீட்டில் நடந்த அந்த விருந்துக்கூட்டத்திற்கு வந்தடைந்தாள். ஆனால் அவளுக்குத் தெரியாமல்தானே, அந்த மற்ற ஜோடி தங்களுடைய வருகையை ரத்துச் செய்துவிட்டிருந்தனர். விரைவில் விருந்துக்கு வந்திருந்த மற்றனைவரும் திரும்பிப்போக ஆரம்பித்தனர்.
“‘இதில் ஏதோ தவறு இருக்கிறது, ஏதோ சூழ்ச்சி நடக்கிறது,’ என நான் யோசிக்க ஆரம்பித்தேன், ஆனால் அதை அசட்டை செய்துவிட்டேன்,” என்று அவள் சொன்னாள்.
லோரி தன்னோடு தனிமையாய் இருந்தபோது, எரிக் அவளைக் கற்பழித்தான். லோரி இக்கற்பழிப்பைப்பற்றி காவல்துறைக்குப் புகார் செய்யவில்லை. பிறகு எரிக்கை மீண்டும் பார்ப்பதைத் தவிர்க்க 240 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்திற்குச் சென்றுவிட்டாள். ஒரு வருடத்திற்குப் பிறகு, அவள் இன்னும் காதல்சந்திப்புகள் நடத்துவதற்குப் பயந்தாள்.
கற்பழிப்பு அதிகரித்துவரும் ஒரு பயமுறுத்தலாக இருக்கிறது. எச்சரிப்புடனும், தயாராகவும் இருப்பதே ஒரு பெண்ணின் சிறந்த தற்பாதுகாப்பு. ஒவ்வொரு கற்பழிப்புச் சூழ்நிலையும் எதிர்பார்க்கப்படமுடியாது. ஆனால் கற்பழிப்பவர்கள் எவ்வாறு நினைக்கின்றனர், தங்கள் தாக்குதலுக்குத் திட்டமிடுகின்றனர் என்று அறிந்திருப்பது அவர்களுடைய எச்சரிப்புச் சின்னங்களை அடையாளங்கண்டுகொள்ள உதவலாம்.a பழங்கால பழமொழி ஒன்று சொல்கிறது: “விவேகிகள் வரும் ஆபத்தைக் கண்டு அதைத் தவிர்ப்பார்கள், ஆனால் பேதையோ அதில் நெடுகப்போய் பிறகு மனம் வருந்துகிறான்.”—நீதிமொழிகள் 27:12, டுடேஸ் இங்கிலீஷ் வெர்ஷன்.
கற்பழிப்புச் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி கற்பழிப்பவர்களைத் தவிர்ப்பதுதான். தன்னை ஒரு கற்பழிப்பவனாக அடையாளங்காட்டுகிற ஒரு மனிதனிலுள்ள நடத்தைமுறைகளைப்பற்றி—நீங்கள் நன்கு அறிந்திருக்கிற ஒருவரில் உள்ள நடத்தைமுறையையுங்கூட—நீங்கள் அறிந்திருக்கவேண்டும். (பக்கம் 18-ல் உள்ள பெட்டியைப் பாருங்கள்.) சில ஆண்கள் ஒரு பெண்ணுடைய உடையின் பாணியையும், தன்னோடு தனியாக இருப்பதற்கான விருப்பத்தையும், அவளைக் கற்பழிப்பதற்கான சாக்குப்போக்காக உபயோகிப்பார்கள். ஓர் ஆண் அத்தகைய விபரீதமான நோக்குநிலைகளைக் கொண்டிருந்தால் அதற்கு ஒரு பெண் பொறுப்பாளி அல்ல. இருப்பினும் அப்படிப்பட்ட நோக்குநிலைகளை அடையாளங்கண்டுகொள்வது அவளுக்கு விவேகமாயிருக்கும்.
நீங்கள் நன்கு அறிந்திராத ஒரு மனிதனோடு தனிமைப்படுத்தப்பட உங்களை அனுமதியாதீர்கள். (நீங்கள் நன்கு அறிந்த ஒருவரோடு தனிமையிலிருக்கவும்கூட, பகுத்துணர்வைப் பயன்படுத்துங்கள்.) அறிமுகமற்ற ஒரு கற்பழிப்பவன் ரிப்பேர் செய்யும் ஒருவனாக உங்கள் வீட்டுக்கு வரலாம். அவனை நம்புவதற்கான ஆதாரங்களைக் கேளுங்கள். அறிமுகமுள்ள ஒரு கற்பழிப்பவனாக இருந்தால், இடையில் தன்னுடைய வீட்டில் நிறுத்தத்தைத் தேவைப்படுத்தும் ஒரு வேலையை உண்டாக்குவதாலோ, சந்திக்கவேண்டிய ஏதோவொரு இடத்தில் ஒரு மக்கள் கூட்டம் இருப்பதாகப் பொய் சொல்வதாலோ பலியாட்களை அடிக்கடி தனிமையிலாக்குகின்றனர். அதற்கெல்லாம் ஏமாந்துவிடாதீர்கள்.
எதிர்பாலரோடு பழகுவதற்கான காதல் சந்திப்புச் சூழ்நிலைகளில் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு, கூட்டமாகச் சந்தியுங்கள் அல்லது ஒரு காப்பாளரையும் உடன் கொண்டிருங்கள். நீங்கள் சந்திப்பவரை நன்கு அறிந்திருங்கள். சரீரப்பிரகாரமான நெருக்கம் எதுவும் இருக்குமானால், நீங்கள் அனுமதிக்கும் அளவின் உறுதியான வரம்பை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். மதுபானம் எவ்வளவேனும் குடிப்பதைப்பற்றி எச்சரிக்கையாயிருங்கள்! உங்களுடைய சிந்திக்கும் திறன் மந்தப்படுத்தப்பட்டால் ஆபத்துக்கு விழிப்புள்ளவர்களாக இருக்கமுடியாது. (நீதிமொழிகள் 23:29-35-ஐ ஒத்துப்பாருங்கள்.) உங்கள் இயல்புணர்ச்சிகளை நம்புங்கள். நீங்கள் யாரோ ஒருவரோடு இருக்கும்போது சங்கோஜமாக உணர்வீர்களானால், அவர் தவறான மனநிலையுள்ளவரல்ல என ஊகிக்கவேண்டாம். விலகி ஓடுங்கள்.
விசேஷமாக பருவ வயதினரின் பெற்றோர், கற்பழிப்பைத் தடைசெய்யும்முறைகளையும், அபாயகரமான நிலைமைகளைப் பற்றி குறிப்பாகவும் தங்கள் பிள்ளைகளிடம் கலந்தாலோசிக்கவேண்டும். ஏனென்றால் கற்பழிப்பவர்களிலும், அதற்குப் பலியானோரிலும் பெரும்பாலானோர் இளைஞர்களே.
விரைவாக செயல்படுங்கள்
எல்லா கற்பழிப்புச் சூழ்நிலைகளையும் எதிர்பார்க்கப்படமுடியாது. உங்களையே அறியாமல், உங்களை நீங்கள் தனிமையில் காணலாம். உங்களைவிட பலசாலியான உங்களைப் பாலுறவுக்காகப் பலவந்தப்படுத்த எண்ணங்கொண்டிருக்கிற ஒரு மனிதனை எதிர்ப்படலாம். அப்போது என்ன?
விரைந்து செயல்படுங்கள். உங்களுடைய குறிக்கோளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்: தப்பியோடுதல். கற்பழிப்பவன் ஒருவன் தான் தாக்குவதற்குத் தீர்மானிக்கும் முன்பு, பெரும்பாலும் தன்னுடைய பலியாளைச் சோதித்துப்பார்க்கிறான். எனவே அவன் செயல்படுவதற்குப் போதுமான நம்பிக்கையைப் பெறுமுன், கூடியசீக்கிரம் அவனுடைய திட்டங்களைத் தகர்த்துவிடுங்கள். கற்பழிப்பு நிபுணர்கள் இரண்டு வழிகளில் செயல்படுவதைச் சிபாரிசு செய்கின்றனர்: சாத்வீக (Passive) எதிர்ப்பு அல்லது தீவிர (Active) எதிர்ப்பு. முதலில் சாத்வீக எதிர்ப்பைக் கையாண்டு பாருங்கள், அது உதவவில்லையானால், தீவிர எதிர்ப்பைக் கையாளுங்கள்.
கற்பழிப்பவனிடத்தில் பேசுவதன் மூலம் காலம் கடத்துவதுமுதல் உங்களுக்குப் பாலின நோய் உள்ளதாக பாவனை செய்வது அல்லது தாக்குபவன்மீது வாந்தி எடுப்பதுவரை உள்ள எதுவும் சாத்வீக எதிர்ப்பில் உள்ளடங்கும். (1 சாமுவேல் 21:12, 13-ஐ ஒப்பிடவும்.) “தந்திரங்கள் ஒருவருடைய கற்பனையில்தான் குறைவானவை,” என்று தன்னுடைய ஸ்ட்ரீட் விஸ்டம் ஃபார் விமன்: எ ஹேன்ட்புக் ஃபார் அர்பன் சர்வைவல் என்ற புத்தகத்தில் எழுதினார் ஜெரார்ட் ஹ்உவிட்மோர்.
சாத்வீக தந்திரங்கள்—கற்பழிப்பவனோடு சரீரப்பிரகாரமாக சண்டைபோடுதலைத் தவிர மற்றெல்லாவற்றையும் உள்ளடக்கும் இது—தெளிவாக சிந்தித்தலையும், தாக்குபவனின் கவனத்தைத் திருப்பும்படியோ அவனைச் சாந்தப்படுத்தும்படியோ அமைக்கப்படவேண்டியதையும் தேவைப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்ப்புத் தாக்குபவனைக் கோபமூட்டி வன்முறையைக் கையாளும்படி செய்யுமானால், வேறு ஏதாவது செய்ய முயற்சியுங்கள். இருப்பினும், நீங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், மிகவும் தனிமையான ஓர் இடத்திற்குக் கொண்டுபோகப்படும்படி உங்களையே அனுமதித்துவிடாதீர்கள். மிகவும் பலன்தரக்கூடிய சாத்வீக எதிர்ப்பு முறைகளில் ஒன்றை நினைவில் வைத்திருங்கள்—கூச்சலிடுதல்.—உபாகமம் 22:23-27-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
இன்னொரு வழியானது எதிர்மாறாகவும் ஆற்றலோடும் எதிர்த்துச் செயல்புரியுங்கள். நீங்கள் அவனுடைய விருப்பத்திற்கு அடிபணியமாட்டீர்கள் என்பதைத் திட்டவட்டமாக அவனிடம் சொல்லுங்கள். காதல் சந்திப்பின்போது கற்பழிக்கப்படும் ஒரு சூழ்நிலையில், அவனது தாக்குதல் எதற்கான தாக்குதல் என்பதை உரக்கச் சொல்லும் அதிர்ச்சியூட்டும் தந்திரங்களை நீங்கள் முயற்சி செய்யலாம். “இது கற்பழிப்பு! நான் போலீஸைக் கூப்பிடுவேன்!” என்று உரக்கக் கத்துவது உங்களைக் கற்பழிக்க இருப்பவன் தொடர்ந்து முன்னேறுவதைத் தீர யோசிக்க வைக்கும்.
எதிர்த்துப் போராடுங்கள்
பேசுவது பிரயோஜனமில்லை என்றால், தீவிர எதிர்ப்பைத் தொடங்க பயப்படாதீர்கள். அது நீங்கள் தீங்கிழைக்கப்பட அல்லது கொல்லப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அர்த்தப்படுத்தாது. நீங்கள் அடிபணிவதும் உங்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறதில்லை. ஆகவே, பெரும்பாலான கற்பழிப்பு நிபுணர்கள் தீவிரமாகப் போராடுவதைச் சிபாரிசு செய்கின்றனர்.
பெண்கள் பிறப்பிலிருந்தே அடக்கத்துடனும், அமைதியாகவும் இருக்கவும், சரீரப்பிரகாரமான பலத்தைக் கொண்டு பயமுறுத்தும்போதும்கூட கீழ்ப்படிந்திருக்கும்படியும் அமைக்கப்பட்டதன் காரணமாக எதிர்த்துப் போராடுவது பெண்களுக்குக் கடினமாக இருக்கக்கூடும். ஆகவே, தாக்குதலின்போது தயங்குவதன் மூலம் விலைமதிப்புள்ள நேரத்தை இழக்காதிருக்க, நீங்கள் எதிர்ப்பதற்கு முன்கூட்டியே தீர்மானிக்கும் தேவையிருக்கிறது.
யாராவது பயமுறுத்தினாலோ அழுத்தங்கொடுத்தாலோ கற்பழிக்கப்பட்டதாக நீங்கள் உணரவேண்டும். இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, கற்பழிப்பவன் நீங்கள் அடிபணியவேண்டும் என்று நம்பியிருக்கிறான் என நீங்கள் உணருங்கள். கோபப்படுங்கள், பயப்படாதீர்கள். “உங்களுடைய பயம் தாக்குபவனுடைய மிகவும் பலம்வாய்ந்த ஆயுதம்,” என்று ஆராய்ச்சியாளர் லிண்டா லெட்ரே கூறினார். நீங்கள் அளவுக்குமீறி எதிர்த்துச் செயல்படுகிறீர்கள் அல்லது பைத்தியக்காரியாகத் தோன்றலாம் என்று கவலைப்படாதீர்கள். ஒரு நிபுணர் சொன்னதுபோல, “கற்பழிக்கப்படுவதைவிட முரட்டுத்தனமாக இருப்பது நலம்.” கற்பழிப்பவர்களை வெற்றிகரமாக எதிர்த்த பெண்கள், வழக்கமாக இதையே தீவிரமாக செய்திருக்கின்றனர். கடித்தல், உதைத்தல், கூக்குரலிடுதல் போன்றவற்றை உட்படுத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட தந்திரங்களை அவர்கள் உபயோகித்திருக்கின்றனர்.
கற்பழிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியவில்லையென்றால், தாக்கியவனைப் பிறகு உங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்த நிலையில் உங்களை வைத்துக்கொள்ளுவதில் கவனம் செலுத்துங்கள். அவனைக் கீறுதல் அவனுடைய துணிகளைக் கிழித்தல் போன்றவற்றைச் செய்ய முடிந்தால், உங்களிடத்தில் இரத்தம் மற்றும் துணி போன்ற தடயங்களைக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அந்த நிலையில், இனியும் உங்களால் எதிர்த்துப் போராடமுடியாமல் இருக்கலாம். அப்படியானால், “அவனைக் கற்பழிக்க ‘அனுமதித்துவிட்டீர்களே’ என்று உங்களையே திட்டிக்கொள்ளாதீர்கள், நீங்கள் கற்பழிக்கப்பட்டீர்கள் என்பதை நிரூபிக்க காயமுறவோ இறக்கவோ தேவையில்லை” என்று ராபின் உவார்ஷா தன்னுடைய ஐ நெவர் கால்ட் இட் ரேப் என்ற புத்தகத்தில் சொன்னார்.
[அடிக்குறிப்புகள்]
a எந்த இரண்டு சூழ்நிலைகளும் ஒரேமாதிரி இருப்பதில்லை, ஆகவே தடுப்பதற்கான எந்த அறிவுரையுமே எப்போதும் தவறாததாக இராது. ஒரு தாக்குதலின்போது கற்பழிக்கப்படும் ஒரு பலியாள் எவ்வளவு மற்றும் எவ்வகையில் எதிர்த்துப் போராடவேண்டும் என்பதன்பேரில் வல்லுநர்களும்கூட முரண்பாடான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.
[பக்கம் 18-ன் படம்]
கற்பழிப்பவனாக மாறும் ஒருவனைப்பற்றிய விவரிப்பு
◻ உங்களை அவமானப்படுத்துவதாலும், உங்கள் கருத்துக்களை அசட்டை செய்வதாலும் உங்களை உணர்ச்சி சம்பந்தமாக துர்ப்பிரயோகப்படுத்துகிறான், அல்லது நீங்கள் ஓர் ஆலோசனை கொடுக்கும்போது கோபப்படுகிறான்.
◻ எப்படி உடுத்துகிறீர்கள், உங்களுடைய நண்பர்கள் யாவர் என்பவற்றைப் போன்ற உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறான். காதல் சந்திப்பின்போது, எங்கு சாப்பிடுவது, எந்த சினிமா பார்ப்பது போன்ற எல்லா தீர்மானங்ளையும் தானே எடுக்கிறான்.
◻ காரணமேயில்லாமல் பொறாமைப்படுகிறான்.
◻ பொதுவாகவே பெண்களைச் சிறுமைப்படுத்திப் பேசுகிறான்.
◻ குடிபோதை அல்லது “போதைமருந்து மயக்கத்திலிருக்கிறான்,” உங்களையும் அவற்றையே செய்விக்க முயலுகிறான்.
◻ அவனோடு தனிமையிலிருக்க அல்லது உடலுறவுகொள்ள கட்டாயப்படுத்துகிறான்.
◻ காதல் சந்திப்பின்போது நீங்கள் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறதில்லை, நீங்கள் கொடுக்க முயற்சித்தால் கோபமடைகிறான்.
◻ இறுகப் பிடித்தல், தள்ளுதல் போன்ற சிறிய வழிகளில்கூட வன்முறையாக நடந்துகொள்கிறான்.
◻ மிகவும் நெருங்கி உட்காருவது, உங்கள் வழியைத் தடைசெய்வது, வேண்டாம் என்று சொல்லியிருக்கும்போது தொடுவது, உங்களைப்பற்றி உண்மையில் அறிந்திருப்பதைவிட அதிகம் தெரியும் என்று பேசுவது, போன்றவற்றால் உங்களைப் பயப்படுத்துகிறான்.
◻ கோபப்படாமல் ஏமாற்றத்தை அவனால் கையாளமுடிவதில்லை.
◻ உங்களை ஒரு சமமானவராகக் கருதுவதில்லை.
◻ ஆயுதங்களை வைத்து மகிழ்கிறான், அவனால் கட்டுப்படுத்தமுடிந்த விலங்குகள், குழந்தைகள் அல்லது மக்கள் போன்றோரிடத்தில் கொடுமையாக நடந்துகொள்ள விரும்புகிறான்.
அறிமுகமற்ற ஒரு கற்பழிப்பவன் ரிப்பேர் செய்யும் ஒருவனாக உங்கள் வீட்டுக்கு வரலாம். அவனை நம்புவதற்கான ஆதாரங்களைக் கேளுங்கள்
[பக்கம் 18-ன் படம்]
கற்பழிப்பவர்களை வெற்றிகரமாக எதிர்த்த பெண்கள், வழக்கமாக இதையே தீவிரமாக செய்து ஒன்றுக்கு மேற்பட்ட தந்திரங்களை உபயோகித்திருக்கின்றனர்