கற்பழித்தல் அவள் வாசித்தது அவளைக் காத்தது
கற்பழிப்பவனை எதிர்ப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இதன்பேரில் கொடுக்கப்படும் ஆலோசனைகள் முரண்படுகின்றன. எதிர்த்துப்போராடுவது தாக்குபவனின் வற்புறுத்துதலைக் கூட்டுகிறது என்று சிலர் கூறுகின்றனர். என்றபோதிலும் ஒரு பெண் எதிர்த்திடவேண்டும் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (உபாகமம் 22:23–27) எது மிகச் சிறந்த ஆலோசனை?
பொது நல அமெரிக்கப் பத்திரிகை என்ற வெளியீட்டின் ஜனவரி பிரதியில் தோன்றிய ஒரு புதிய ஆய்வு எதிர்த்திடுவதை சிபாரிசு செய்கிறது. அந்தக் கட்டுரை கூறுவதாவது: “ஒரு முக்கிய முடிவை ஆதரிக்கும் வகையில் ஆய்வுகள் ஒரே மையத்தில் குவிகிறது. எதிர்த்துத் தடுக்க முயற்சிப்பது ஒரு தாக்குதல் முற்றுப்பெறும் வாய்ப்பைக் குறைக்கிறது.” கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பானிலிருந்த ஒரு பெண்ணுக்குச் சம்பவித்த காரியம் இதை விளக்குகிறது. அவள் இரவு தாமதமாக அப்பொழுதுதானே வீடு திரும்பினாள். அந்த வீட்டில் அவள் தனிமையில் வாழ்ந்துவருகிறாள். அவள் இப்படியாக விளக்குகிறாள்: “கற்பழிப்பவன் ஒருவன் என்னுடைய வீட்டிற்குள் வந்து கதவைப் பூட்டிக்கொண்டான். நான் எதிர்பார்க்கவில்லையாதலால் பயத்தில் செய்வதறியாது அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டேன். அவன் என்னை படுக்கையறைக்குள் இழுத்துச்செல்ல முயன்றான், ஆனால் நான் ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு அவனை எதிர்த்துப் போரடினேன்.
“அப்பொழுதுதானே உபாகமம் 22-வது அதிகாரத்திலுள்ள வசனம் என் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு பெண் தாக்கப்படும்போது அவள் கூச்சலிடாதிருந்தால், அவள் அந்த மனிதனுக்கு இடங்கொடுக்கிறாள் என்பதைக் குறிக்கும், யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவளாயிருப்பாள் என்று அது குறிப்பிடுகிறது. மேலும் ‘கற்பழித்தல்—உங்களை நீங்கள் எவ்விதம் தற்காத்துக்கொள்ளலாம்?’ என்ற விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் நான் வாசித்தது என் நினைவுக்கு வந்தது.—அக்டோபர் 8, 1980, ஜப்பானிய வெளியீடு; ஜூலை 8, 1980, ஆங்கில வெளியீடு.
“என்றபோதிலும், ‘நான் கூச்சல்போட்டு எதிர்த்துப்போராட வேண்டும்,’ என்று நினைத்தேன். எனவே நான், ‘யெகோவாவே, எனக்கு உதவிசெய்யும்!’ என்று திரும்பத்திரும்ப கூச்சல்போட்டேன். அந்தக் கற்பழிப்பவன் என்னுடைய கைகளை வலது பக்கமாக இழுத்தபோது, நான் இடதுபக்கமாக இழுத்தேன். அவன் என்னை முன்னால் இழுத்தபோது, நான் பின்னாக இழுத்தேன், நான் கூச்சல்போடுவதை நிறுத்துவதற்கு அவன் என் வாயை மூடிய போது, அவனைக் கடித்தேன். நான் தொடர்ந்து எதிர்த்துப்போராடிக்கொண்டேயிருந்தேன்.
“கொஞ்சம் கொஞ்சமாக நான் களைப்படைந்தேன். மூச்சுவிடுவது எனக்குக் கஷ்டமாகிக்கொண்டிருந்தது. என்னுடைய இருதயம் நிற்கப்போவது போல் இருந்தது, ஆனால் அவனை எதிர்த்துப்போராடுவதற்கு என்னால் செய்ய முடிந்ததையெல்லாம் செய்தேன், உதவிக்காக யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன். இதன் பலனாக, அந்தக் கற்பழிப்பவன் தன் முயற்சியைக் கைவிட்டான். அவன் வேகமாகக் கதவிடம் சென்று, வெளியே போய்விட்டான்.
“யெகோவாவின் உதவியாலும், விழித்தெழு! பத்திரிகையில் நான் வாசித்ததைப் பொருத்தியதாலும் நான் கற்பழிக்கப்படுவதைத் தவிர்க்க முடிந்தது என்று நம்புகிறேன். நான் அந்த விழித்தெழு! பத்திரிகையை வாசிக்காமல் இருந்திருந்தால், பயத்தின் காரணமாக நான் அமைதியாக இருந்து அநேகமாக அந்தக் குற்றவாளிச் சொன்னபடியே செய்திருப்பேன். உங்களுக்கு மிக்க நன்றி.” (g89 8/22)