உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 2/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • இதே தகவல்
  • கற்பழிப்பைச் சமாளிப்பது எப்படி
    விழித்தெழு!—1993
  • கற்பழிப்பின் உண்மை
    விழித்தெழு!—1993
  • கற்பழிப்பைத் தடுப்பது எப்படி
    விழித்தெழு!—1993
  • கற்பழித்தல் அவள் வாசித்தது அவளைக் காத்தது
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 2/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

கற்பழிக்கப்படும் ஆபத்தில் இருக்கையில் ஒரு நபர் கூக்குரலிட வேண்டும் என்று பைபிள் ஏன் சொல்கிறது?

கற்பழிக்கப்படும் பயங்கரம் ஒருவரின் வாழ்க்கையை எப்படி சுக்குநூறாக உடைத்துப்போடும் என்பதை அனுபவ ரீதியில் பார்த்திராத எவராலும் கண்டிப்பாக புரிந்துகொள்ளவே முடியாது. அந்த அனுபவம் கொடூரமானது, வாழ்நாள் முழுவதும் அந்தப் பெண்ணின் மனதை அது உறுத்திக்கொண்டே இருக்கும்.a சில வருடங்களுக்கு முன்பு கற்பழிப்பவனால் தாக்கப்பட்ட ஒரு இளம் கிறிஸ்தவ பெண் இவ்வாறு கூறுகிறாள்: “அந்த ராத்திரியில் எனக்கு ஏற்பட்ட திகிலையும் அதற்குப்பின் ஏற்பட்ட மன அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக நான் போராடினதையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.” ஆகவே, இந்தப் பயங்கரமான விஷயத்தைப் பற்றி நிறைய பேர் யோசித்துக்கூட பார்க்க விரும்புவதில்லை. இருந்தபோதிலும், இந்தப் பொல்லாத உலகில் கற்பழிக்கப்படும் ஆபத்து இருப்பது நிஜம்தான்.

முற்காலங்களில் நிகழ்ந்த கற்பழிப்பு சம்பவங்களையும் கற்பழிப்பு முயற்சிகளையும் பற்றிய செய்திகளை பைபிள் மூடிமறைப்பதில்லை. (ஆதியாகமம் 19:4-11; 34:1-7; 2 சாமுவேல் 13:1-14) ஆனால் கற்பழிக்கப்படும் ஆபத்தை எதிர்ப்படுகையில் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து ஆலோசனை வழங்குகிறது. இந்த விஷயத்தைப் பற்றி நியாயப்பிரமாணம் என்ன கூறுகிறது என்பது உபாகமம் 22:23-27-⁠ல் காணப்படுகிறது இதில் இரண்டு நிலைமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் சந்தர்ப்பத்தில், ஒரு மனுஷன் ஊருக்குள்ளே ஒரு இளம் பெண்ணைக் கண்டு, அவளைப் பிடித்து அவளோடு உடலுறவு கொள்கிறான். அப்படியிருந்தாலும் அந்தப் பெண் கூப்பாடு போடவோ அல்லது உதவிக்காக கூக்குரலிடவோ இல்லை. இதன் காரணமாக அந்தப் பெண் ‘ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினால்’ குற்றமுள்ளவளாக கருதப்படுகிறாள். அவள் கூக்குரலிட்டு ஊரைக் கூட்டியிருந்தால், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வந்து அவளைக் காப்பாற்றியிருப்பார்கள். இரண்டாவது சந்தர்ப்பத்தில், ஒருவன் ஒரு பெண்ணை வெளியிலே கண்டு “அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே” உடலுறவு கொள்கிறான். அப்போது அந்தப் பெண் “கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற் போயிற்று.” முதல் சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டுள்ள பெண்ணைப் போல் இவள் இல்லை. கற்பழித்தவனின் செயலுக்கு அவள் சிறிதும் உடந்தையாக இருக்கவில்லை. அவள் தொடர்ந்து போராடி, உதவிக்காக கூக்குரலிட்டாள், ஆனால் அவள் தோற்றுப்போனாள். அவள் கூக்குரலிட்டபடியால் அவள் விருப்பமில்லாமல்தான் பலியானாள் என்பது தெளிவாக தெரிகிறது; ஆகவே, நடந்த தவறுக்காக அவளை குற்றம்சாட்ட முடியாது.

கிறிஸ்தவர்கள் இன்று நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாவிட்டாலும், அதிலுள்ள நியமங்கள் அவர்களுக்கு உதவலாம். எதிர்த்துப் போராடுவதும் உதவிக்காக சத்தம் போடுவதும் முக்கியம் என்பது மேற்சொல்லப்பட்ட பதிவிலிருந்து தெரிகிறது. கற்பழிக்கப்படும் ஆபத்து இருக்கும்போது கத்தி கூச்சல் போடுவதே ஞானமான காரியம் என இன்றும் கருதப்படுகிறது. குற்றச்செயல் தடுப்பு நிபுணர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “ஒரு பெண் தாக்கப்படும்போது கத்துவதே அவளுடைய சக்திவாய்ந்த ஆயுதம்.” ஒரு பெண் கத்தினால் மற்றவர்கள் அதைக் கேட்டு உதவிக்கு வரலாம் அல்லது தாக்குபவன் பயந்து ஓடிவிடலாம். கற்பழிப்பவனால் தாக்கப்பட்ட ஓர் இளம் பெண் இவ்வாறு சொன்னாள்: “நான் என்னால் முடிந்த அளவு உரக்க கூச்சல் போட்டேன், அவன் விலகிப் போனான். திரும்பவும் அவன் என்னை நோக்கி வந்தானோ இல்லையோ, உடனே நான் சத்தம் போட்டுக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடியே போனேன். ‘பயில்வான் மாதிரி இருந்த ஒருத்தன் என்னை கெடுத்தே தீரவேண்டுமென்ற வெறியோடு பிடித்து இழுக்கும்போது வெறுமென சத்தம் மட்டும் போட்டால் என்ன பிரயோஜனம்’ என்று முன்பு நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். ஆனால் அப்படி செய்வது எவ்வளவு முக்கியமென்று இப்போது புரிகிறது!”

ஒரு பெண் பலமிழந்து பலாத்காரத்திற்கு பலியாகும் அந்தப் பரிதாபமான சமயங்களிலும்கூட, அவள் உதவிக்காக சத்தம் போடுவதும் போராடுவதும் வீண் போகாது. அதற்குப் பதிலாக தாக்குபவனை எதிர்ப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் அவள் செய்துவிட்டாள் என்பதைத்தான் அது தெளிவாக காட்டும். (உபாகமம் 22:26) அவள் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருந்தாலும், அவள் மனசாட்சி சுத்தமாகவே இருக்கலாம், அவள் சுயமரியாதையை இழக்கமாட்டாள், கடவுளின் பார்வையில் இன்னும் சுத்தமுள்ளவள் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். இந்தப் பயங்கரமான அனுபவம் உணர்ச்சிப்பூர்வமான காயங்களை ஏற்படுத்தலாம், ஆனால் அந்தத் தாக்குதலை எதிர்த்து தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த திருப்தி, அவள் படிப்படியாக குணமடைவதற்கு பேருதவி புரியும்.

உபாகமம் 22:23-27-⁠ஐ நடைமுறையில் பொருத்துவதைப் பற்றி புரிந்துகொள்ளும்போது, சுருக்கமான இந்தப் பதிவு சாத்தியமான எல்லா சூழ்நிலைகளையும் விவரிப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும். உதாரணமாக, தாக்கப்படும் பெண் ஊமையாயிருந்தால், உணர்வில்லாதிருந்தால், அல்லது பயத்தில் உறைந்துபோயிருந்தால் அல்லது சத்தம்போட முடியாதபடி கையோ துணியோ வைத்து வாயைப் பொத்தியிருந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றியெல்லாம் அது கூறுவதில்லை. ஆகிலும், யெகோவா எல்லா காரியங்களையும், நம் உள்நோக்கங்கள் உட்பட எல்லாவற்றையும் நன்கு அறிவார். ஆகவே, “அவர் வழிகளெல்லாம் நியாயம்” என்பதால் இதுபோன்ற சூழ்நிலைகளைப் புரிந்து, நியாயமாக நம்மை நடத்துவார். (உபாகமம் 32:4) அங்கு உண்மையில் என்ன நடந்தது, தாக்குபவரை எதிர்க்க அந்தப் பெண் என்ன முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டாள் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே, சத்தம்போட முடியாவிட்டாலும் அந்தச் சூழ்நிலையில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தபின், காரியத்தை யெகோவாவின் கைகளில் விட்டுவிடலாம்.​—⁠சங்கீதம் 55:22; 1 பேதுரு 5:⁠7.

அப்படியிருந்தாலும், தாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்கள் சிலர் எப்போதும் குற்ற உணர்வில் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சம்பவத்தை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம், அது நடந்திராதிருக்க தாங்கள் இன்னும் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்கள். ஆனால், தங்களைத் தாங்களே குற்றப்படுத்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக, இப்படிப்பட்டவர்கள் ஜெபத்தில் யெகோவாவிடம் பேசலாம், அவருடைய உதவிக்காக மன்றாடலாம், அவருடைய அபரிமிதமான அன்புள்ள தயவில் நம்பிக்கையும் வைக்கலாம்.​—⁠யாத்திராகமம் 34:6; சங்கீதம் 86:⁠5.

ஆகவே, கற்பழிப்பு முயற்சிகளால் அல்லது கற்பழிக்கப்பட்ட அனுபவத்தினால் உண்டான உணர்ச்சிப்பூர்வமான காயங்களை தற்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ பெண்கள் அனுபவித்துவரும் வேதனையை யெகோவா முழுவதுமாக புரிந்துகொள்கிறார் என உறுதியாக நம்பலாம். கடவுளுடைய வார்த்தை அவர்களுக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.” (சங்கீதம் 34:18) அதோடு, கிறிஸ்தவ சபையிலுள்ள உடன் விசுவாசிகளின் உண்மையான புரிந்துகொள்ளுதலையும் தயவான ஆதரவையும் ஏற்றுக்கொண்டால் மன அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீளலாம். (யோபு 29:12; 1 தெசலோனிக்கேயர் 5:14) அதோடுகூட, நல்ல காரியங்கள்மீது கவனம் செலுத்த தாங்கள் முயற்சிகள் எடுக்கும்போதும், “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதான”த்தை அவர்களால் அனுபவிக்க முடியும்.​—⁠பிலிப்பியர் 4:6-9.

[அடிக்குறிப்பு]

a கற்பழிக்கப்படும் பெண்களைப் பற்றியே இந்தக் கட்டுரை பேசினாலும், கற்பழிக்கப்படும் ஆபத்தை எதிர்ப்படும் ஆண்களுக்கும் இங்கு சொல்லப்படும் நியமங்கள் பொருந்துகின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்