கற்பழிப்பைச் சமாளிப்பது எப்படி
முப்பத்துமூன்று வருடங்களுக்குமுன் மேரி கத்திமுனையில் கற்பழிக்கப்பட்டாள். இன்று, அதை விவரிக்க முயலும்போது மேரியின் இருதயம் வெடிக்கிறது, உள்ளங்கை வியர்க்கிறது. “அது ஒரு பெண் அனுபவிக்கக்கூடிய மிகவும் இழிவுபடுத்தும் ஒரு காரியமாகும்,” அவள் கண்ணீரோடு கூறினாள். “அது வெறுக்கத்தக்க, பயங்கரமான ஒரு காரியம்.”
கற்பழிப்பு ஒரு நபரின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நாசமாக்கும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அதன் பாதிப்புகள் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கக்கூடும். ஓர் ஆராய்ச்சியில், பேட்டி காணப்பட்ட கற்பழிக்கப்பட்டு ஆனால் பிழைத்திருப்பவர்களில் கிட்டத்தட்ட மூன்றிலொரு பகுதியினர் தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருக்கின்றனர்; மேலும் அந்த அனுபவம் தங்களை நிரந்தரமாக மாற்றிவிட்டிருக்கிறது என்பதாக அவர்களில் பெரும்பான்மையினர் கூறினர்.
அந்தப் பெண் தன்னைத் தாக்கியவனை அறிந்திருப்பாளேயானால் அதன் விளைவுகள் குறிப்பாக அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கக்கூடும். அறியப்பட்டவர்களால் கற்பழிக்கப்பட்டோர் மற்றவர்களிடமிருந்து ஆதரவு பெற குறைந்த வாய்ப்புக்களே இருக்கின்றன. ஏனென்றால், என்ன நடந்தது என்பதை அவள் யாரிடமும் சொல்லுவதில்லை, அல்லது அவள் அப்படியே சொன்னாலும் அது கற்பழிப்புதான் என்பதை யாரும் நம்புகிறதில்லை. தான் நம்பிக்கை வைத்திருந்த ஒருவனால் புண்படுத்தப்பட்டதனால், அவள் தன்மீது பழிசுமத்திக்கொள்ளவும், மற்றவர்களை மதிப்பிடுவதற்கான தன்னுடைய திறமையைச் சந்தேகிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
கற்பழிக்கப்பட்டு ஆனால் பிழைத்திருக்கிற அநேகர் முதலில் அதிர்ச்சியுடனும் மறுதலித்தலோடும் பிரதிபலிக்கின்றனர். ஒரு பெண் முக்கியமான ஒரு கல்லூரி தேர்வுக்குச் சற்றுமுன் கற்பழிக்கப்பட்டாள். தனது தேர்வை முடிக்கும்வரை அந்தக் கற்பழிப்பை அவள் தனது மனதில் ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டாள். கற்பழிக்கப்பட்டுப் பிழைத்திருக்கும் மற்றொருவர் இவ்வாறு சொன்னார்: “நான் நம்பிக்கை வைத்துப் பழகியவன் என்னைத் தாக்குபவனாக மாறியதை நான் கண்கூடாகக் கண்டதனால், அதில் எதையும் நினைவுபடுத்த என்னை அனுமதிக்கமுடியவில்லை. நீங்கள் அறிந்திருக்கும் ஒருவரால் நீங்கள் கற்பழிக்கப்படக்கூடும் என்பதை அறியாதிருந்தேன். அது மடத்தனமாகத் தோன்றலாம்; ஆனால் அந்த நம்பிக்கை என்னை எதிர்பார்ப்பற்றுப்போகச் செய்தது. நான் மிகவும் தனிமையாய் உணர்ந்தேன்.”
சில பெண்கள் தங்களுடைய கற்பழிப்பைப்பற்றி யாரிடமும் சொல்லாததன்மூலம் நடந்ததைத் தொடர்ந்து மறுதலித்துவருகின்றனர். அவர்கள் அந்தத் தாக்குதலை வருடக்கணக்கில் தங்களுக்குள்ளே அடக்கிவைக்கின்றனர். இது அவர்கள் குணமாகுதலைத் தாமதிப்பதோடு உணர்ச்சி சம்பந்தமான மற்ற பிரச்னைகளையும் உண்டாக்குகிறது. இவை கற்பழிப்பிலிருந்துதான் தொடங்குகின்றன என்றே கற்பழிக்கப்பட்டவர் உணராமலிருக்கலாம்.
பொதுவாகவே நீங்கள் மற்றவர்களிடத்தில் பேசினாலொழிய பழையநிலைக்குத் திரும்பிவருதல் தொடங்குவதில்லை. உங்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அது உண்மையிலேயே கற்பழிப்பு, அது உங்களுடைய குற்றமல்ல என்று நீங்கள் காண்பதற்கு, நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவக்கூடும். பழைய பழமொழி ஒன்று கூறுகிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதிமொழிகள் 17:17) மேலும், ஆவிக்குரிய மேய்ப்பர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்,” நிரூபிக்கக்கூடும்.” (ஏசாயா 32:2; 1 தெசலோனிக்கேயர் 5:14) பலியானோரில் சிலருக்கு, கற்பழிப்பு-திருப்பு மையம் (Rape-crisis center) அல்லது ஒரு தேர்ச்சிப்பெற்ற ஆலோசகர் போன்றோரின் தொடர்பு தங்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு கையாளத் தேவைப்படலாம்.
கற்பழிக்கப்பட்டவர்கள், முக்கியமாக தாக்குதலின்போது பாலினசம்பந்தமாகத் தூண்டப்பட்டிருந்தால், பெரும்பாலும் தங்களுடைய கற்பழிப்பைப்பற்றி பேச பயப்படுகின்றனர். இதன் காரணம் அவர்களின் குற்ற உணர்ச்சிகளேயாகும். அவர்கள் கறைபடுத்தப்பட்டவர்களாகவும் பயனற்றவர்களாகவும் உணர்ந்து—வேறு யாருமல்ல ஆனால் கற்பழித்தவனே குற்றத்திற்குப் பொறுப்பாளியாக இருந்தபோதிலும்—கற்பழிப்பிற்குத் தங்களையேக் குற்றப்படுத்திக்கொள்கின்றனர்.
சக கிறிஸ்தவளோடு நம்பிக்கையாய்க் கூறிய மேரி “பேசுவதற்கு ஒரு நல்ல நண்பரைக் கொண்டிருப்பது அவ்வளவு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. அவளிடத்தில் என்னால் பேசமுடிந்தது; கற்பழிக்கப்பட்டதைப்பற்றி மோசமாகவும் ஒரு களங்கமாகவும் நான் உணரவில்லை,” என்பதாகக் கூறினார்.
அவளுக்கு ஆதரவு கொடுங்கள்
மறுபட்சத்தில், “உண்மையிலேயே கற்பழிக்கப்பட்டாள்” என விவரிப்பது அல்லது தங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்வது பலியானவளுடைய நண்பர்களுக்குத் தகுதியற்றதாயும் அன்பற்றதாயும் இருக்கும். அவள் அதை அனுபவித்து மகிழ்ந்தாள் அல்லது அவள் ஒழுக்கங்கெட்டவளாக நடந்துகொண்டாள் என ஒருபோதும் சுட்டிக்காட்டிவிடாதீர்கள். உதவி கேட்கப்படும்போது ஒரு நண்பர் செய்யக்கூடிய மிகமுக்கியமான காரியம் அவளை நம்புவதாகும். அவளுக்கு நம்பிக்கையூட்டுங்கள். அவள் பேசவிரும்பும்போது அவளோடிருந்து கவனியுங்கள். ஆனால் அதிக விவரங்களுக்காக அவளைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.
கற்பழிப்புச் சமீபத்தில் சம்பவித்திருந்தால், நண்பர்கள் பலியாளுக்கு மருத்துவ உதவி கிடைக்க உதவவும் தங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அளிப்பதற்கும் உதவக்கூடும். கற்பழிப்பைப் புகார்செய்ய அவளை உற்சாகப்படுத்துங்கள்; ஆனால் அவளே தீர்மானங்களை எடுக்க அனுமதியுங்கள். எல்லா கட்டுப்பாட்டையும் இழந்த ஒரு நிலையை இப்பொழுதுதான் அனுபவித்திருக்கிறாள். அடுத்து என்ன செய்வது என்பதைத் தேர்ந்தெடுக்க அவளை அனுமதிப்பதன் மூலம் தன்னுடைய கட்டுப்பாடுகளில் சிலவற்றை அவள் திரும்பப் பெற அனுமதியுங்கள்.
கற்பழிப்புக்குப் பலியானோரின் குடும்பத்தினர் அந்த நிலைமைக்கு உணர்ச்சி சம்பந்தமாகப் பிரதிபலிக்கும் தூண்டுதலை எதிர்க்கவேண்டும். கற்பழிப்புக்கு யாராவது ஒருவர் மேல் பழிசுமத்தலாமா என அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது கற்பழித்தவர்களைப் பழிவாங்க வகைதேடலாம். இவை இரண்டுமே பலியாளுக்கு உதவப்போவதில்லை. (ரோமர் 12:19) கற்பழித்தவனைத் தவிர மற்றவர் மேல் பழிசுமத்துவது வீண், பழிவாங்க வகைதேடுவதும் ஆபத்தானது. இது கற்பழிக்கப்பட்டவர் தன்னுடைய பழையநிலைக்குத் திரும்பிவருதலில் கவனம் செலுத்துவதைவிட, தனது அன்பார்ந்தவர்களின் பாதுகாப்பைப்பற்றிக் கவலைப்படவைக்கும்.
ஒரு கற்பழிப்புக்குப் பிறகு கற்பழிக்கப்பட்டவர்கள் உடலுறவை வித்தியாசமாகக் கருதுகின்றனர் என்பதைக் குடும்பங்கள் அறிந்திருக்கவேண்டும். அவர்களுடைய மனதில், பாலுறவு ஒரு கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. எனவே அவர்கள் நம்பிக்கை வைத்து சிநேகிக்கும் ஒருவரோடு உடலுறவுகொள்வதையும்கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் கடினமானதாகக் காணலாம். இதன் காரணமாகவே, ஒரு கணவன் தன் மனைவி தயாராகும் வரை பாலுறவு செய்கைகளில் திரும்பவும் ஈடுபட அவளைக் கட்டாயப்படுத்தக்கூடாது. (1 பேதுரு 3:7) ஓர் இளம் பெண்ணின் சுயமதிப்பைக் கட்டுவதன் மூலமும், அவளுக்கு என்னதான் சம்பவித்திருந்தாலும் அவள் இன்னும் நேசிக்கப்படுகிறாள், மதிக்கப்படுகிறாள் என்பதைக் காட்டுவதன் மூலமும் குடும்பங்கள் உதவக்கூடும். கற்பழிக்கப்பட்டவர் உணர்ச்சி சம்பந்தமாக பழையநிலைக்குத் திரும்பிவர சிலசமயங்களில் நீடித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் தொடர்ந்த ஆதரவு தேவைப்படும்.
பயத்தையும் சோர்வையும் சமாளித்தல்
தங்களை அதிகம் மூழ்கடிக்கும் பிரதிபலிப்பு பயம் என்பதாகக் கற்பழிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். கற்பழிப்புக்குப் பலியானோரில் அநேகர் அந்தத் தாக்குதலிலிருந்து தப்பிப்பிழைக்க எதிர்பார்த்ததில்லை. பின்னர் மறுபடியுமாகக் கற்பழிக்கப்படுவதைப்பற்றி அவர்கள் பயப்படலாம் அல்லது கற்பழித்தவனைத் தற்செயலாகக் காண்பதைப்பற்றியும் பயப்படலாம்.
கற்பழிப்பின்போது உணரப்பட்ட பயம் அதேபோல சப்தங்கள், வாசனைகள், இடங்கள் போன்றவற்றால் தூண்டிவிடப்படக்கூடும். ஒரு பெண் சந்து ஒன்றில் கற்பழிக்கப்பட்டிருந்தால் அவள் அந்தச் சந்திற்குள் செல்ல பயப்படலாம். அவள் வீட்டில் கற்பழிக்கப்பட்டிருந்தால், அவள் அங்கு மீண்டும் ஒருபோதும் பாதுகாப்பாக உணராமல் மாறிப்போகக் கட்டாயப்படுத்தப்படலாம். கற்பழித்தவனிடம் இருந்து வந்ததைப்போலுள்ள ஒரு கலோனின் (Cologne) மணமும்கூட அந்த வெறுப்பூட்டும் நினைவுகளைத் தூண்டிவிடக்கூடும்.
சில கற்பழிப்புகளே கருத்தரிப்பில் விளைந்திருந்தாலும், கருத்தரிக்க உள்ள வாய்ப்புகளினால் பலியாட்களில் அநேகர் அச்சுறுத்தப்படுகின்றனர். மேலும் அநேகர் தாங்கள் ஒரு பாலினவியாதியைப் பெற்றுக்கொண்டனரோ என்பதைப்பற்றிய நியாயமான கவலைகொள்கின்றனர். கற்பழிக்கப்பட்டோரில் பாதிக்குமேல் சோர்வு, நம்பிக்கையின்மை, மதிப்பின்மை போன்ற உணர்ச்சிகளை அனுபவிக்கின்றனர். இவை பல வாரங்களிலிருந்து பல மாதங்கள் வரை நீடிக்கக்கூடும். அவர்கள் கவலைகள், பயங்கள், பதற்றத்தின் தாக்குதல்கள் போன்றவற்றோடும்கூட போராடலாம்.
பெண்கள் ஒரு கற்பழிப்பைத் தடுக்கமுடியாமல் போனாலும், நாளடைவில் அந்தத் தாக்குதலைப்பற்றிய அவர்களுடைய எண்ணங்கள், உணர்ச்சிகள், பிரதிபலிப்புகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தமுடியும். எதிர்மறையான எண்ணங்களை, அவர்களைப்பற்றிய நம்பிக்கையான நோக்குநிலைகளைக் கொண்டு மாற்றீடு செய்ய கற்றுக்கொள்ளக்கூடும்.
“நீங்கள் எவ்வளவு பலவீனமானவர், பயனற்றவர், அல்லது உதவியற்றவர் என்று உங்களிடத்திலேயே சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் எவ்வளவு நன்றாகிவருகிறீர்கள், தாக்குதலைத் தொடர்ந்த குழப்பத்திலிருந்து எந்தளவு முன்னேறிவருகிறீர்கள் என்று உங்களோடே சொல்வதற்குப் பழகிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் எதிர்மறையான எண்ணங்களால் ஆழ்த்தப்படுவது குறைந்திருப்பதாக உணருவதனால், ‘நான் பழைய கட்டுப்பாட்டுக்குத் திரும்ப பழகிக்கொண்டிருக்கிறேன்’ என்று உங்களோடு சொல்லுங்கள்,” என்பதாக லின்டா லெட்ரே தனது ரெகவரிங் ஃப்ரம் ரேப் என்ற புத்தகத்தில் கூறினார்.
குறிப்பாக பயத்தை ஏற்படுத்துவது எது என்பதை அடையாளம் கண்டுகொள்வதனாலும், அதைக் கையாளலாம். பலியாள் பயத்தின் தூண்டுதலை அடையாளம் காணும்போது, அந்தப் பயம் எவ்வளவு உண்மையானது? என்று அவர் தன்னையே கேட்டுக்கொள்ளக்கூடும். உதாரணமாக, கற்பழித்தவனைப்போலத் தோன்றுகிற யாராவது ஒருவனை தான் கண்டால், அவன் கற்பழித்தவனல்ல, அவன் தன்னைத் துன்புறுத்தப்போவதில்லை என்று அவர் தனக்குத்தானே நினைவுபடுத்தக்கூடும்.
பயத்தைக் கையாளுவதற்காக சிபாரிசு செய்யப்படும் மற்றொரு முறை, முறையான உணர்வழிப்பு (Systematic desensitization). பெண் தான் பயப்படக்கூடிய எல்லா செயல்களையும், சூழ்நிலைமைகளையும் அவள் ஒரு பட்டியலிடுகிறாள். அதில் குறைவான பயத்தை உண்டாக்குகிறவை முதல் மிக அதிக பயத்தை உண்டாக்குகிறவை வரை வரிசைப்படுத்தவேண்டும். பிறகு அவள் குறைவான அழுத்தத்தைத் தருகிற சூழ்நிலைமையில் தன்னைக் கற்பனை செய்துபார்த்து, அது பயமாகத் தோன்றாத வரை அவ்வாறு செய்கிறாள். அவ்வாறே ஒவ்வொரு சூழ்நிலைமையிலும் கற்பனை செய்து, பட்டியலிலுள்ள எல்லா சூழ்நிலைமைகளிலும் அவள் பயமின்றி உணரும் வரை அதைச் செய்கிறாள்.
ஒரு நண்பரின் உதவியால், இரவுநேரங்களில் வெளியே செல்வது அல்லது தனிமையிலிருப்பது போன்ற தன்னுடைய உண்மையான வாழ்க்கையின் நடவடிக்கைகளைச் செய்யுமளவிற்கு அவள் முன்னேறக்கூடும். இறுதியில் பயம் தன்னுடைய அனுதின வாழ்க்கையைப் பாதிக்காத அளவுக்கு அவளுடைய பயத்தைக் கட்டுப்படுத்தமுடியும். இருப்பினும்—இருண்ட சந்து ஒன்றினுள் செல்வது போன்ற—சில செயல்களைச் செய்வதற்கான பயம் சாதாரணமானதுதான். எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் மன அமைதியற்று இருப்பதையும்கூட மேற்கொள்ள முயற்சிப்பது பிரயோஜனமற்றது.
கோபத்தைத் திருப்பிவிடுதல்
கற்பழிக்கப்பட்டவர்கள் கோப உணர்வுகளையும் அனுபவிக்கின்றனர். இது முதலில் எல்லா ஆண்கள்மீதும் காண்பிக்கப்படலாம். ஆனால் காலப்போக்கில், வழக்கமாகவே இக்கோபம் கற்பழித்தவன் மீது செலுத்தப்படுகிறது. கோபமாக இருப்பவர்கள் பெரும்பாலும் கோபத்தைக் கண்மூடித்தனமாகக் காண்பிக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் உணர்ச்சிகளைத் தங்களுக்குள் புதைத்துவைப்பதன்மூலம் பிரதிபலிக்கலாம். எனினும், கோபம் சரியான வழிகளில் செலுத்தப்பட்டு, ஒரு பெண் தன்னுடைய கோபத்தைக் கையாளுகிற விதம் தான் பழையநிலைக்குத் திரும்பிவர அவளுக்கு உதவக்கூடும். “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்,” என்று வேத வசனம் சொல்கிறது.—எபேசியர் 4:26.
முதலில், கற்பழிக்கப்பட்டவர்கள் கோபத்தை வெளிக்காட்ட பயப்பட தேவையில்லை. அதைப்பற்றி அவர்கள் மற்றவர்களிடத்தில் பேசலாம். சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளில் அல்லது ஒரு பதிவு ஏற்படுத்தி வைப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது ஒரு போக்கிடமாக இருக்கக்கூடும். டென்னிஸ், ராக்கட் பந்தாட்டம், கை எறிப் பந்தாட்டம், நடத்தல், மென்னோட்டம் (Jogging), மோட்டார் வண்டி ஓட்டுதல் அல்லது நீந்துதல் போன்ற சரீரப்பிரகாரமான நடவடிக்கைகளின் மூலம் தங்கள் கோபத்தைத் தவிர்க்கலாம். இவை சோர்வை எதிர்த்துப் போராட உதவும் கூடுதல் பலனையும் கொண்டிருக்கின்றன.
உங்களுடைய வாழ்க்கையின் கட்டுப்பாட்டுக்குத் திரும்பி செல்லலாம்.
கற்பழிப்பை நிறுத்துவது எது?
கற்பழிப்பை நிறுத்துவதென்பது, பெண்கள் கற்பழிப்பவனிடமிருந்து ஒளிந்துகொள்ளுதல், எதிர்த்துப்போராடுதல் போன்றவற்றைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. “கற்பழிப்பவர்கள் ஆண்களே, எனவே கற்பழிப்பை நிறுத்தும் வல்லமை ஒரு கூட்டமாக ஆண்களிடத்தில்தான் உள்ளது,” என மென் ஆன் ரேப் என்ற தனது புத்தகத்தில் ஆசிரியர் தீமோத்தேயு பெனெகி கூறினார்.
ஆண்கள் பெண்களை வெறும் பாலினத்திற்கான பொருளாக நடத்துவதை நிறுத்தி, வெற்றிகரமான உறவுமுறை வன்முறை ஆதிக்கத்தைச் சார்ந்ததில்லை என்பதைக் கற்றுக்கொள்ளும் வரை கற்பழிப்பு முடிவுக்கு வராது. முதிர்ச்சியடைந்த ஆண்கள் தனிப்பட்ட வகையில் மற்ற ஆண்களிடம் பேசி அவர்களைத் தூண்டவேண்டும். பாலின வேடிக்கைப் பேச்சுகளை அங்கீகரிப்பது, பாலின தாக்குதலைச் சிறப்பித்துக் காட்டும் திரைப்படங்களைக் காண்பது, பொருட்களை விற்பதற்குப் பாலினத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் விளம்பரதாரர்களை ஆதரிப்பது, போன்றவற்றை ஆண்கள் பெண்கள் இருபாலினருமே மறுக்கலாம். “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்,” என பைபிள் அறிவுரை கூறுகிறது.—எபேசியர் 5:3, 4.
பெற்றோர் தங்களுடைய முன்மாதிரியினால் பெண்களுக்கான மரியாதையைக் கற்பிக்கக்கூடும். யெகோவா தேவன் பெண்களை எப்படி கருதுகிறாரோ அதுபோலவே கருதும்படி பெற்றோர் தங்களுடைய மகன்களுக்குப் போதிக்கலாம். கடவுள் பட்சபாதமில்லாதவர். (அப்போஸ்தலர் 10:34) இயேசு செய்ததுபோலவே பெண்களோடு நண்பர்களாக இருக்கவும், அவர்கள் மத்தியில் இருக்கும்போது இயற்கையாக உணரவும் பெற்றோர் தங்களுடைய மகன்களுக்குப் போதிக்கலாம். உடலுறவு என்பது ஒருவருடைய திருமணத் துணைக்கு மட்டுமே தனித்து வைக்கப்பட்ட அன்பின் ஒரு கனிவான செயல், என அவர்கள் தங்களுடைய மகன்களுக்குப் போதிக்கலாம். வன்முறை பொறுத்துக்கொள்ளப்படாது, மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் மதிக்கப்படாது என்பதைப் பெற்றோர் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டலாம். (சங்கீதம் 11:5) பாலின காரியங்களைத் தங்களோடு மனம்திறந்து பேசவும், பாலின அழுத்தத்தை எதிர்த்துநிற்கவும் பெற்றோர் அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
விரைவில் முடிவடையும் ஒரு பிரச்னை
எனினும் உலக சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களில்லாமல் கற்பழிப்பு முடிவடையாது. “கற்பழிப்பு தனிப்பட்டவரின் ஒரு பிரச்னை மட்டுமல்ல, [ஆனால்] இது ஒரு குடும்பப் பிரச்னை, ஒரு சமூகப் பிரச்னை, ஒரு தேசீய பிரச்னை ஆகும்,” என ஆராய்ச்சியாளர் லின்டா லெட்ரே கூறினார்.
வன்முறையில்லாத ஓர் உலகளாவிய சமுதாயத்தை உருவாக்குவதாக பைபிள் வாக்குக் கொடுக்கிறது. இதில் மனுஷன் இனிமேலும் ‘தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற’தில்லை. (பிரசங்கி 8:9; ஏசாயா 60:18) யெகோவா தேவன் இனிமேலும் கற்பழிப்பு உட்பட எந்த அதிகாரத்தின் துர்ப்பிரயோகத்தையும் சகிக்காத காலம் விரைவில் வரும்.—சங்கீதம் 37:9, 20.
அந்தப் புதிய உலக சமுதாயத்தில், பாலின, இன, அல்லது தேசீய வித்தியாசங்களின்றி, ஒருவரோடொருவர் அமைதியாய் வாழவும், அன்புகாட்டவும் எல்லா மனிதர்களும் போதிக்கப்படுவர். (ஏசாயா 54:13) அக்காலத்தில், சாந்தகுணமுள்ளவர்கள் நண்பர்களுக்கும் அந்நியர்களுக்கும் பயப்படாமல் வாழ்ந்து, “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11. (g93 3/8)
[பக்கம் 20-ன் பெட்டி/படம்]
நீங்கள் கற்பழிக்கப்பட்டால்
◻ மருத்துவ உதவியை நாடுங்கள்
◻ நீங்கள் விரும்பினால், ஒரு கற்பழிப்பு-பலியாள் ஆலோசகர் கிடைத்தால், மருத்துவ மற்றும் சட்ட செய்முறைகளினூடே உங்களை வழிநடத்தும்படி கேளுங்கள்.
◻ உங்களால் முடிந்தளவு விரைவில் காவல்துறையினரை அழையுங்கள். உங்களுடைய பாதுகாப்பிற்காகவும் மற்ற பெண்களுடைய பாதுகாப்பிற்காகவும், காவல்துறையினருக்கு அறிவிக்கும்படி ஆலோசகர்கள் சிபாரிசு செய்கின்றனர். அறிவித்தல் வழக்குத் தொடர்தலுக்குச் சமமல்ல. ஆனால் பின்னர் வழக்குத் தொடர முடிவு செய்வீர்களானால், உங்களுடைய வழக்குத் தாமதித்த அறிவிப்பின் காரணமாக பலமற்றதாகிவிடும்.
◻ தடயங்களைப் பாதுகாத்து வையுங்கள். குளிக்காமல், உடைமாற்றாமல், கழுவாமல் அல்லது தலைசீவாமல், அல்லது கைரேகைகள் அல்லது காலடித்தடம் போன்றவற்றை அழிக்காமலுமிருங்கள்.
◻ மருத்துவ ஊழியர்கள் தடயத்தைச் சேகரித்து, பாலின நோய்கள் மற்றும் கருத்தரிப்புப் போன்றவற்றிற்கான சோதனைகளை நடத்துவர். அவர்கள் மார்னிங்-ஆஃப்டர் மாத்திரைகள் (Morning-after pill) என்றழைக்கப்படும் கருத்தரிப்புத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்தால், அப்படிப்பட்ட மருந்துகள் உடல் ஒரு கருவுற்ற முட்டையைக் கலைக்கும்படி செய்துவிடும் என்பதைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கவேண்டும்.
◻ நீங்கள் அளவுக்குமீறி செயல்படுவதாகத் தோன்றுகிறதோ இல்லையோ, பாதுகாப்பாக உணர—பூட்டுகளை மாற்றுதல், ஒரு நண்பரோடு தங்கியிருத்தல், உங்களுடைய கதவை அடைத்தல்—போன்று நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் செய்யுங்கள்.
◻ எல்லாவற்றிற்கும் மேலாக, ஆறுதலுக்காக வேத எழுத்துக்களை நாடுங்கள்; தாக்குதலின்போதும் அதற்குப் பிறகும், யெகோவாவின் பெயரை உரக்கக் கூப்பிட்டும்கூட, அவரிடம் ஜெபியுங்கள். ஆதரவுக்காக சபையிலுள்ள மூப்பர்களையும் மற்ற நெருங்கிய நண்பர்களையும் சார்ந்திருங்கள். முடியுமானால் கூட்டங்களில் ஆஜராயிருங்கள்; ஊழியத்தில் உடன் கிறிஸ்தவர்களோடு சகவாசம்கொள்ள நாடுங்கள்.